ரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி

ramesh

வெள்ளையானை விவாத நிகழ்வொன்றை பாண்டிச்சேரியில் வே.அலெகஸ் ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்வில்தான் நீண்ட இடைவேளைக்குப்பின் ரமேஷ் பிரேதனைச் சந்தித்தேன். பிரேம்,ரமேஷ், மாலதியுடன் 1997 முதல் குடும்பரீதியாகவே தொடர்பிருந்தது. பத்மநாபபுரத்திலும் பார்வதிபுரத்திலும் என் இல்லத்திற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எழுதிய சிறந்த கதைகளையும் கட்டுரைகளையும் சொல்புதிதில் வெளியிட்டிருக்கிறோம்.

பிரேம் டெல்லி சென்றபின் அவ்வுறவு அறுபட்டுவிட்டது. ரமேஷ் பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்று நான் அறிந்திருக்கவில்லை. அவர் அப்போது ஒருமாதிரி கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். பாண்டிச்சேரி பாரதி நினைவகத்திலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார். தங்க இடமில்லாமல்இரவில் ஏதோ சில பட்டறைகளில் தூங்கி ஓட்டல்களில் உணவுண்டு வாழ்ந்தார். அதை அவர் சொன்னபோது திகைப்பாக இருந்தது. அவருக்கு அவருடைய நண்பர் மனோமோகன் மட்டுமே ஒரே நிழல். மனோமோகன் அப்போது சிறிய பணியில் இருந்தார்.

நண்பர்களின் பண உதவியுடன் அவருக்கு ஓர் இல்லத்தை ஒத்திக்கு எடுத்துக்கொடுத்தோம். அதில்தான் அவர் இப்போது வாழ்கிறார்ஒரு வைப்புத்தொகையும் உருவாக்கப்பட்டது.  அதில் என் பணி சிறியதுதான். ஏனென்றால் என் பங்குக்கு அப்பால் மிகச்சிறிய நட்புவட்டத்திலிருந்து அந்தப் பணம் திரட்டப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி

ஆனால் ரமேஷுக்கு பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. அதையொட்டிய தொடர்ச்சியான மருத்துவச்செலவுகளுக்காக அந்த வைப்புநிதி விரைவிலேயே கரைந்தது. மேலும் பண உதவிகள் செய்திருந்தோம். ஆனால் அவருடைய மருத்துவச்செலவுகளுக்கு அது போதவில்லை. இயற்கையிலேயே எடை மிக்கவரும் இரத்த அழுத்தம் கொண்டவருமான ரமேஷ் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டியவர்

அதன்பின் தொடர்ச்சியாக பலருக்காக நிதிவசூல் செய்துகொண்டே இருக்கவேண்டியிருந்தது. கடைசியாக அலெக்ஸ் சிகிழ்ச்சைக்கு.இவை அனைத்திலுமே எப்போதுமே போதுமான அளவு செய்யமுடியவில்லை என்னும் பெரும் மனக்குறையையே அடைந்திருக்கிறேன். நண்பர்களிடம் கசப்புடன் நடந்துகொண்டதுமுண்டு. என் சொந்தப்பணத்தை அளிக்குமிடத்திற்கு என்னை வைத்திருக்கும் சினிமாவுக்கும் திரும்பத்திரும்ப கேட்டாலும் சலிக்காமல் உதவும் நண்பர்களுக்கும் கடன்பட்டிருக்கிறேன்.

ரமேஷின் நல்லூழ் என்பது பயன்கருதாது அவருக்கு அனைத்து உதவிகளும் செய்து ஒவ்வொருநாளும் வந்து பார்த்துக்கொள்ளும் பிரேமா என்னும் சமூகசேவகிக்கு தமிழ்வாசகர்கள் கடன்பட்டிருக்கிறார்கள். ’பிரேமா என்னும் தெய்வத்திற்கு’ என ரமேஷ் அவருடைய அயோனிகன் என்னும் நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

maamallan
விமலாதித்த மாமல்லன்

இப்போது எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ரமேஷுக்கு ஒரு நிதியை உருவாக்குவதற்காக முழுமூச்சாக களமிறங்கியிருக்கிறார். விரிவாக இணையத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  வெவ்வேறு தளங்களைச் சேர்ந்த நண்பர்கள் அவருக்கு உதவுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கும் தமிழ் இலக்கிய உலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது

இலக்கியவாதி ஒருவர் நோயுற்று உதவிகோரும்போது அதற்கு ஒத்துழைப்பது என்பது மனிதாபிமான உதவி அல்ல. இரக்கத்தின்பாற்பட்டு அந்த உதவி செய்யப்படக்கூடாது. அத்தகைய சொற்களும் மனநிலையும் வெளிப்படக்கூடாதென்பதை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. எந்நிலையிலும் அவன் சமூகத்தின் ஆசிரியனே. ஆகவே மதிப்புடன், பணிவுடன் அந்நிதி அளிக்கப்படவேண்டும். ஆசிரியர்கொடையாக.

இரக்கத்துடன் நோக்கப்படும் நிலையில் எழுத்தாளன் கூச்சம் கொள்கிறான். ஆகவேதான் ரமேஷுக்கான நிதியுதவிகளை மிகச்சிறியவட்டத்தில் அவருடைய படைப்புகளை வாசித்த வாசகர்களும் நானும் மட்டுமே சேர்ந்து அளித்தோம். அவர் எவரெனத் தெரியாதவர்களிடமிருந்து எதுவும் பெறவில்லை. அவருக்கு நிதியுதவிசெய்வதை வெளியே சொல்ல அவர் விரும்பவுமில்லை.

ஆனால் அந்தத் தயக்கம் தேவையற்றது என்பதே என் இன்றைய எண்ணம். இன்று இணையம் வளர்ச்சியடைந்து நல்லவாசகர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளன் யாரெனத்தெரிந்து உதவச் சித்தமாக இருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன். நண்பர்கள், வாசகர்கள் ரமேஷ் அவர்களுக்கு நிதியுதவிசெய்யவேண்டுமென கோருகிறேன்

பிறிதொரு எழுத்தாளர் இதேபோல இக்கட்டான நிலையில் இன்று இருக்கிறார். அவர்பொருட்டு நான் சிலரிடம் நிதிகேட்டும் பெரிதாக எதுவும் சேரவில்லை. விஷ்ணுபுரம் நிகழ்வு முடிந்தபின்னர் முயலவேண்டும் என்றிருக்கிறேன்.

ரமேஷ் வங்கி விவரங்கள்

M. Ramesh
State Bank of India
SB A/c no. 32821202848
IFSC: SBIN0015420
SBI, Muthialpet Branch,
Pondicherry – 605003

ரமேஷ் வீட்டு விலாசம்

M. Ramesh
27, Angalamman Koil Street,
Angalamman Nagar,
Muthialpettai,
Pondicherry 605003

‭+91 86086 10563

முந்தைய கட்டுரைவிருது விழா – இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்