விருது விழா – இருகடிதங்கள்

cmu3
சீ முத்துசாமி

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவை ஒட்டி நிகழும் விரிவான சந்திப்புகள் மற்றும் உரையாடல்களைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கோவையில் இருந்ததே இல்லை. இன்று எவ்வளவு பெரிய ஒரு சந்தர்ப்பம். இதை கோவையிலுள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா? கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு செய்திகள் அறிவிக்கப்படுகின்றனவா? அத்தனை வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் இது உதவியானது என்றாலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஊடகவியல் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என நினைக்கிறேன். உங்கள் குறிப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்வதைப்பற்றிய செய்திகள் அனேகமாக இருப்பதில்லை. ஆகவே இந்தக்கடிதம்

 

ஜெயக்குமார், டெல்லி

 

அன்புள்ள ஜெயக்குமார்,

 

இதெல்லாம் ஒருவகை பொதுப்புரிதல். மாணவர்களை அணுகியறிந்தால் அவர்களின் மனநிலை வேறு என்பதைக் காணமுடியும். அவர்கள் முழுக்கமுழுக்க மதிப்பெண் சார்ந்தே செயல்படும் மனநிலை கொண்டவர்கள். அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். அவர்களின் ஆசிரியர்களும் அவ்வாறே.

 

ஆகவே அவர்களைப்பொறுத்தவரை இந்தவகையான விழாக்களில் கலந்துகொள்வதென்பது ஒருவகையான வகுப்பு, அதாவது வேலை. மதிப்பெண் இல்லாமல் கலந்துகொள்வது வீண். கல்லூரிகளில் இதேபோல விழாக்கள் நிகழ்கின்றன. அவற்றை மாணவர்கள் ஒருவகை வகுப்புகளாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அதில் சிலர் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டவும்கூடும். ஆனால் பொதுவாக ஆசிரியர்கள் ஊக்குவிக்காமல் அவர்கள் எதையும் வாசிப்பதில்லை, அறிந்துகொள்ள முயல்வதுமில்லை

 

கோவையிலும் சூழ்ந்தும் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அனைத்திலும் தமிழ், ஆங்கில இலக்கியத்துறைகளும் ஊடகத்துறையும் உண்டு. அனைத்துக்கும் ஏழண்டுகளாக அழைப்பு அனுப்பப்படுகிறது. நாளிதழ் விளம்பரமும் கொடுக்கப்படுகிறது. இன்றுவரை எந்தக்கல்லூரியிலிருந்தும் ஆசிரியர்களோ மாணவர்களோ கலந்துகொண்டதாக நான் அறியவில்லை.நான் மாணவர்கள், ஆசிரியர்களை அறிவேன் என்பதனால் அந்த எதிர்பார்ப்பும் இல்லை.

 

கோவையில் நிகழும் எந்த இலக்கிய, பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் மாணவர்களைப் பார்க்கமுடியாது. இக்காரணத்தால்தான் நான் பொதுவாக கல்லூரிநிகழ்ச்சிகளைத் தவிர்க்கிறேன். அதைமீறிச் செல்லவேண்டுமென்றால் தமிழகத்தின் நட்சத்திரப்பேச்சாளர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என கோருகிறேன். அது அறக்கட்டளைக்கு. குறைந்தது அந்தப்பணமாவது இலக்கியத்திற்கு உதவட்டுமே.

 

ஆனால் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவர், உதிரிகளாக. அவர்கள்  ‘சாதாரண’ மாணவர்கள் அல்ல. மாணவர்களில் அவர்கள் சற்று மேலானவர்கள். சொந்தமான தேடலும் குழப்பங்களும் கொண்டவர்கள். ஆகவே கல்லூரிச்சூழலில் அவர்கள் ஒருவகை புறனடையாளர்கள். அவர்களை மற்ற ‘நல்ல’ மாணவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இலக்கியம் அவர்களுக்கானது. அவர்களே நாளைய படைப்பாளிகள்

 

ஜெ

 

ஜெ,

 

விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏதாவது நிபந்தனைகள் உண்டா? அதாவது எதையாவது வாசித்திருக்கவேண்டும் என்று?

இதற்கு ஏதேனும் கட்டணங்கள் உண்டா?

 

சிவக்குமார்

 

அன்புள்ள சிவக்குமார்

 

நிபந்தனைகள் உண்டு. ஒன்று, இலக்கிய ஆர்வம் இருக்கவேண்டும். இரண்டு, செவிகொடுத்து கேட்கும் மனநிலை இருக்கவேண்டும். அவ்வளவுதான். பிற அனைத்தும் இலக்கிய உரையாடல்களில் பங்கெடுப்பதன் வழியாகவே அமைந்துவிடும்

விழாவில் கலந்துகொள்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. நன்கொடை உட்பட எந்தக் கட்டாயமும் இல்லை. தங்குமிடமும் உணவும் உண்டு.

 

ஜெ

விஷ்ணுபுரம் விழா குறிப்புகள்

a

விஷ்ணுபுரம் விழா 2010

விஷ்ணுபுரம் விழா 2011

விஷ்ணுபுரம் விழா 2012

விஷ்ணுபுரம் விழா 2013

விஷ்ணுபுரம் விழா 2014

விருதுவிழா, முதல்நாள்

விஷ்ணுபுரம் விழா 2015

விஷ்ணுபுரம் விழா 2016 ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்,

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது உரைகள் 2017
அடுத்த கட்டுரைரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி