விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

1

விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு கிளம்பும் மனநிலை வந்துவிட்டது. ஆச்சரியமென்னவென்றால் இப்போது நான் என்னை விஷ்ணுபுரம் விருதுவிழாவை நடத்துபவனாக அல்ல, செல்பவனாகவே உணர்கிறேன். அனேகமாக எந்தப்பொறுப்பும் எனக்கு இல்லை. நண்பர்களே முழுமையாகச் செய்து முடித்துவிட்டார்கள்.

இப்போது இது ஒரு திருமணநிகழ்வு அளவுக்குச் சிக்கலான வேலையாகிவிட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்கள் மட்டுமல்ல விழாவுக்கு வரும் எழுத்தாளர்களும் எங்கள் விருந்தினர்களாக தனியாக உபசரிக்கப்பட்டாகவேண்டும். இதில் ஏகப்பட்ட தனிப்பட்ட விண்ணப்பங்கள். பாவண்ணனைத் தனியாகச் சந்திக்கமுடியுமா, சு.வேணுகோபாலிடம் பேசவேண்டும் என. அனைவருக்கும் இடமளித்து ஆற்றுப்படுத்தவேண்டியிருக்கிறது

இத்தனைபேருக்கும் சாப்பாடு தங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டும். ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொருவராக ஏற்றுக்கொண்டால்தான் விழாவை நடத்தமுடியும். கடைசியில் நான் செய்வது பதிவுகள் போடும் வேலையை மட்டும்தான்

2

 

முதலாண்டு விழாவிலிருந்தே என் பொறுப்புக்கள் மெல்லமெல்லக் குறைந்துவந்தன. இப்போதெல்லாம் விழாவன்று காலை விருந்தினர்களுடன் நானும் சென்று இறங்குவதே வழக்கம்.விழா பெரிதாகும்தோறும் அதன் சுமை குறைவதென்பது மிகச்சிறந்த விஷயம்தான்

விஷ்ணுபுரம் விருதைப்பற்றி யோசிக்கும்போது என் உள்ளத்திலிருந்ததெல்லாம் நான் கலந்துகொண்ட இலக்கிய விழாக்கள்தான். கேரளத்திலும் டெல்லியிலும் நான் கலந்துகொண்ட விழாக்கள் அவற்றின் அத்தனை களேபரங்களையும் கடந்து இருபத்தைந்தாண்டுகளாக என் நினைவில் நீடிக்கின்றன. குற்றாலம் பதிவுகள் சந்திப்பு உருவாக்கிய அலைகளை இன்றும் நினைத்துக்கொள்கிறேன். நூல்களோ இலக்கியக்கூட்டங்களோ அந்த அலையை உருவாக்கமுடியாது. அதற்கு விழாமனநிலை கிடையாது

ஆகவே மூத்தபடைப்பாளியை இளம்படைப்பாளிகள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டுமல்ல இது. அதற்கும் அப்பால் என முடிவுசெய்தேன். ஆகவேதான் இத்தனை விரிவான ஏற்பாடுகள். இன்று தமிழகத்தில் நிகழும் பெரிய இலக்கியவிழா என்பது இதுவே. நண்பர்கள் இன்னுமொருநாள் நீட்டிப்பதைப்பற்றிக்கூட எண்ணிப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கொஞ்சம் அதிகப்படிதான் அது

3

இதுவரை நிகழ்ந்த விழாக்களை நினைவில் மீட்டிக்கொள்வதென்பது ஒவ்வொரு டிசம்பரிலும் ஒர் இனிய அனுபவம். முதலாண்டு விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார். பிரியத்திற்குரிய இக்கா [புனத்தில் குஞ்ஞப்துல்லா] இருந்தார். வேதசகாயகுமார் பங்கெடுத்தார். ஆ.மாதவனுக்கு அது முதல் விருது

இனிய உற்சாகமான சிறிய சூழல். பிஎஸ்ஜி கலைக்கல்லூரிக்குள் வளாகம். இரண்டே இரண்டு வாடகை அறைகள். அதற்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு விஐபி வந்தால் அவரை நாற்காலியில் அமரச்செய்வதற்காக முன்னரே அமர்ந்திருந்தவரை எழச்சொல்வோம். அடுத்தவர் வரும்போது இவர் எழுந்தாகவேண்டும். ஆ. மாதவன் வந்தபோது மணிரத்னம் சிரித்துக்கொண்டு அவரே எழுந்துவிட்டார். அவருக்கு மட்டும் ஓர் உபரி நாற்காலியைத் தேடிக்கண்டடைந்தோம்.

VP Invitation 2013

மனநிறைவுடன் அந்த நாள் இரவு பேசிக்கொண்டிருந்தோம். விழாவை எப்படியெல்லாம் முன்னெடுப்பதென்று. கனவுகள் மிகப்பெரிதாக அன்று தெரிந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னர் அவை மிகச்சிறிதாகத்தெரியுமளவுக்குக் கடந்துவந்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.

பூமணி விழா எதிர்பார்த்ததை விடப் பெரிதாக ஆகியது. முதல்முறை ஒரேநாளில் விழாமுடிந்தது. இரண்டாம்முறை முந்தையநாளே நண்பர்கள் வந்துகூடிவிட்டதனால் அமர்ந்துபேசிக்கொண்டே இருந்தோம். அது மெல்ல ஒரு வகையான ஒழுங்கமைக்கப்படாத உரையாடலாக மாறியது. விருதுபெறும் எழுத்தாளருடன் உரையாடலுக்கு வழியமைக்க அதைப் பயன்படுத்தலாமென்று தோன்றியது.

unnamed

அடுத்தடுத்த ஆண்டுகளில் விழாவுக்கு வருகைதரும் அத்தனை எழுத்தாளர்களுடனும் உரையாடுவதற்கான வெளியாக அது மாறியது. சென்ற ஆண்டு மேலும் பெரிதாகி கிட்டத்தட்ட முழுமையான இரண்டுநாள் கருத்தரங்காகவே ஆகியது. ஆகவே இம்முறை கருத்தரங்காகவே ஒருங்கமைத்திருக்கிறோம். நூறுபேருக்குமேல் வெளியூரிலிருந்து வந்து தங்குகிறார்கள் என்பதனால் கருத்தரங்குகளுக்கு வழக்கமாக இருக்கும் செவிப்பற்றாக்குறை இருப்பதில்லை.

 

அன்றுமுதல் இன்றுவரை இனிதாக இருப்பது சேர்ந்து அமர்ந்து உணவுண்பது. அது இந்த அமைப்பையும் நண்பர்களையும் ஒரு மாபெரும் குடும்பமாகக் காட்டுகிறது. கிட்டத்தட்ட கல்யாணப்பந்தி. இலக்கிய அரட்டைகள் முதல் கேலிகிண்டல்கள்வரை.

 

5

இப்படி ஆழ்ந்த தனிநட்புகள் உருவாகும்போது அதுவே சிறுகுழுவாக இறுகி புதியவர்கள் உள்ளே நுழைய தடை உருவாகுமென்று தோன்றியமையால் புதுவாசகர்களுக்கான சந்திப்புகள் சென்ற ஆண்டு ஒழுங்கைமைக்கப்பட்டன. ஆகவே சென்ற ஆண்டு பங்கேற்றவர்களில் நேர்ப்பாதியினர் புதிய வாசகர்கள். மொத்த சூழலுமே இளைஞர்களுக்குரியதாக இன்று ஆகிவிட்டிருக்கிறது

எங்கள் சிறப்பு விருந்தினர்களின் நினைவுகள் இனிய சுவையாக எழுந்தெழுந்து வருகின்றன. மணிரத்னம் முதல் சென்ற ஆண்டு பங்கேற்ற நாசர் வரை. இளையராஜா வருகைதந்தது போதிய ஏற்பாடுகள் செய்யாததனால் ஒரு பதற்றத்தை உருவாக்கியது. ஆனால் இனிதாகவும் சுருக்கமாகவும் அவர் பேசியது அந்த அரங்கை நிறைவுகொள்ளச்செய்தது. பாரதிராஜா, பாலா, வசந்தபாலன்,  வெற்றிமாறன் என ஒவ்வொருவரும் எங்கள் விழாக்களை கொண்டாட்டமாக ஆக்கியிருக்கிறார்கள்.

vishnupuram elakiyavattam_AW02

விழாவில் மாற்றுமொழி எழுத்தாளர்களை எப்போதுமே அழைத்துவந்துகொண்டிருக்கிறோம். இக்கா முதல்விருந்தினர். இம்முறை ஜெனிஸ் பரியத். மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன், கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமார் , எச்.எஸ்சிவப்பிரகாஷ் என பலர். அவர்களுடனான உரையாடல்களும் அரங்கை செழுமைசெய்துள்ளன.எங்கள் விழாவில் கலந்துகொண்டவர்களில் ஞானக்கூத்தனும் நண்பர் வே.அலெக்ஸும் இன்று நினைவுகள்.

தமிழ் எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதியுடனான உரையாடல்கள் இப்போது எண்ணினாலும் முகம் மலரச்செய்பவை. முதுமையிலும் சலிக்காமல் உரையாடிக்கொண்டிருந்தார். இலக்கிய அவதானிப்புகள், நினைவுகள், விமர்சனங்கள், நையாண்டிகள் என கொப்பளித்துக்கொண்டே இருந்த உரையாடல் அது. புவியரசு, நாஞ்சில்நாடன். யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன், சுகா, ரவி சுப்ரமணியன், லட்சுமி மணிவண்ணன் , இசை ,சுரேஷ்குமார இந்திரஜித் என  பலர் கலந்துகொண்ட விவாத அரங்குகள் விரிவான நினைவுப்பதிவுகளாக வந்துள்ளன.

6

இவ்விருதுவிழாவை தொடங்கியபோது எழுந்த பலகுற்றச்சாட்டுக்களுக்கு விரிவாக பதில்களைச் சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் அவற்றை எழுதியிருக்கிறேன். இன்று இவ்விழா அந்த விமர்சனங்கள் அனைத்தையும் கடந்துவிட்டது. இப்போது எந்தக்குரல்களும் எழுவதில்லை

இவ்விருதுவிழாவை முன்மாதிரியாகக் கொண்டு இலக்கியவாதிகளால் ஒருங்கிணைக்கப்படும் பல்வேறு விருதுகள் உருவாகிவருகின்றன. அந்த இயக்கம் மேலும் பெருகவேண்டும். பல விருதுகள் இங்கே உருவாகி வரவேண்டும். எழுத்தாளர்கள் தன் வாழ்நாளில் இருபது விருதுகளேனும் பெறும்போதுதான் அவரை சமூகம் அங்கீகரித்துள்ளது என்று பொருள். அது நிகழட்டும்.

நினைவுகளைப் பெருக்கிக்கொண்டே இருப்பதுதான் விழாக்களின் இயல்பு. விழாக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு சூழலை உருவாக்குகின்றன. இலக்கியமன்றி எதையும் எண்ணாமல் செல்லும் இருநாட்கள். இலக்கியவாதிகள், வாசகர்கள் என எங்கும் இலக்கியம் நிறைந்திருக்கும் ஒரு சூழல் இலக்கியமென்னும் இயக்கம் மீதான நமது நம்பிக்கையை புதுப்பிக்கிறது. ஒரு பெரிய பிரவாகத்தில் நாமும் ஒரு சிறுதுளி என்று எண்ணச்செய்கிறது.

========================================================

விஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்

விஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்

விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

========================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை

விருதுவிழா வழக்கமான வினாக்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி பெரியபாண்டியன்