https://www.facebook.com/SunNewsTamil/videos/1683809978342378/
இனிய ஜெயம்,
சிலநாள் முன்பு கடலூரில் ஒரு நண்பர் ” அவங்களுக்குகாக இந்த பாதிரியாருங்க ஏன் போராட்டத்துல இறங்கணும் ? ” என்றார் பொச்சரிப்புடன் . நான் சொன்னேன் ”நாம அப்டின்னு உங்களால யோசிக்க முடியல பாத்தீங்களா ? ”அவங்க ” எல்லாம் செவ்வா கிரகத்தை சேந்தவங்களா என்ன ? நாம அப்டின்னு இப்போ பாதிரியார்கள் சொல்றாங்க , அப்போ அவங்க பின்னால கூடி தனக்கான உரிமையை கேட்பதில் என்ன தவறு? இன்னொன்னும் யோசிச்சு பாருங்க , குமரி மாவட்டத்தில் பெரும்பான்மை மீனவர் சமுதாயம் . ஆனால் அந்த மாவட்ட ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிப்பது யார் ? உங்க வீட்டு எல்லை காணிக் கல்லை காணாவிட்டால் கூட ஓடி சென்று உங்கள் சாதி அமைச்சரை உங்களால் கண்டுவிட முடியும் . இங்கே நூறு நூறு மனித உயிர்களை காண வில்லை . அவன் எங்கே போக வேண்டும் ,நீதிக்காக யாரை அடிதொழ வேண்டும் என நீங்கள் வகுத்தளிக்கும் பாதையில் அவன் போக வேண்டும் இல்லையா ? கடலில் காணாமல் போவது உங்கள் மகன் என்றாலும் உங்கள் நிலை மாறாது இல்லையா ? ”
நண்பர் மௌனமாக இருந்தார் .
மறுநாள் அதிகாலை எனக்கே எனக்கான கடலூர் துறைமுக கடல் கரை வெளியில் நின்றிருந்தேன் . பொற் குழம்பென நீர்ப்பரப்பை ஒளிரவைத்தபடி உயர்ந்தது நாளவன் . அம்மக்கள் மீண்டெழுவர் என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன் . இன்று காலை செய்திகளில் மீண்டும் மீனவர்கள் இலங்கை அரசால் சிறை பிடிப்பு என்ற வாசகம் காண நேர்ந்தது .
இன்று காலை எனது ஊடக நண்பர் கண்ணதாசன் ,அவரது நண்பர் ராஜா வெங்கடபதி ஜோ டி க்ரூஸ் அவர்களை கண்ட நேர்காணலின் சுட்டியை அனுப்பி இருந்தார் .
கடலின் மகன் இந்தியப்பெருநிலம் ,விவேகானந்தர் ,அன்பு ,சகோதரத்துவம் என மீள மீள வலியுறுத்துகிறார் . இவரது குரல் இன்று தோன்றி நாளை மாயும் அரசியல் மீதான விமர்சனம் அல்ல , என்றென்றும் அரசியல்வாதிகளால் ,அரசாங்க அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் , இந்திய ஆன்மாவின் குரல் .
கடலின் மகன் நான் என எத்தனை பெருமிதத்துடன் சொல்கிறார் இந்த இந்தியன் .
கடலூர் சீனு