பகுதி இரண்டு : பெருநோன்பு – 1
அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான தேர்ச்சாலைக்கு இரு பக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் பிரிந்து சென்ற சிறுபாதையில் ஏழு சேடியரும் காவலுக்கு பதினெட்டு வில்லவர்களும் கரிய ஆடையணிந்த நிமித்திகர்குலத்துப் பூசகர் மூவரும் சூழ கையில் பூசனைத் தட்டுகளுடன் பானுமதியும் அசலையும் நடந்தனர். முதலில் சென்ற காவலன் ஒரு சிறுமேட்டின்மேல் ஏறி நின்று கொம்பொலி எழுப்பினான். செவிகூர்ந்த பின் வருக என பிறருக்கு கைகாட்டினான். அவர்கள் நடந்தபோது சருகுகள் நொறுங்கும் ஒலியும் கற்கள் கால்பட்டு உருளும் ஒலியும் எழுந்து காட்டின் காற்றுமுழக்கத்துடன் இணையாமல் தனித்து ஒலித்தன.
ஓசையென்று தெரிந்து கரிய பாறைகளில் ஒளியுடன் விழுந்து வளைந்து அணுகிய ஓடையின் கரையில் கற்களை அடுக்கியும் சரிந்த மண்ணில் தடம்வெட்டி மரத்தடிகளை பதித்தும் அவர்கள் மேலே செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராகவே அந்தப் பாதையில் அவர்கள் செல்லமுடிந்தது. தொலைவில் கரிய கற்களாலான சிற்றாலயம் தெரிந்ததும் காவலர்தலைவன் கைகாட்டிவிட்டு வேலை நீட்டியபடி முன்னால் சென்றான். ஆலயமுகப்பில் நின்று வேல்முனையை மூன்றுமுறை நிலத்தில் முட்டியபோது அவ்வதிர்வால் சினம்கொண்டு சீறியபடி மண்செந்நிறமான அன்னை நரி ஒன்று வெளிவந்தது.
அன்னை நரி மூக்கை நீட்டி தலை தாழ்த்தி பழுப்புக் கற்கள் போன்ற கண்களுடன் பிடரி குலைத்து வால் சுழற்றியது. அதைத் தொடர்ந்து அதன் இரண்டு மைந்தர்களும் மயிர் சிலிர்த்த உடலும் இதழ்விரிந்து கோட்டி அசைந்த செவிகளுமாக வெளிவந்தன. அன்னை மெல்ல உறுமியது. ஒருவன் வில்லில் அம்புதொடுத்த ஒலி கேட்டு தலைவன் வேண்டாம் என கையசைத்தான். அவன் தன் வேலால் தரையைத் தட்டியபோது அத்தனை வீரர்களும் அதேபோல தரையில் வேல்தண்டுகளாலும் மிதியடிக்கால்களாலும் முட்டி ஓசையெழுப்பினர்.
நரிகள் வெருண்ட நோக்குடன் அவர்களை மாறிமாறி பார்த்தபின் கால்களைத் தூக்கி பின்னால் வைத்து பதுங்குவதுபோல பின்னடைந்தன. புதர்களில் மூழ்கியதும் காற்று செல்வதுபோல இலைத்தழைப்பில் தடம் எழ விரைந்து ஓடி அகன்றன. காவலர்தலைவன் கைகாட்ட பூசகர்கள் சென்று ஆலயத்திற்குள் நுழைந்து உள்ளே கிடந்த நரிகளின் மட்கிய முடியையும் உணவு எச்சங்களான எலும்புகளையும் வால்மயிர்களையும் கொண்டுவந்து அப்பாலிட்டு ஆலயத்தை தூய்மைசெய்தார்கள். அதுவரை பானுமதியும் அசலையும் சற்று அப்பால் காவலர் வெட்டி விரித்து அமைத்த தழைப்பரப்பின்மேல் அமர்ந்தனர்.
இரு வீரர்கள் மரக்குடுவையுடன் சென்று ஓடையிலிருந்து நீர் அள்ளிவந்து அளிக்க பூசகர்கள் அதை வாங்கி ஆலயத்திற்குள் வீசி கழுவி தூய்மை செய்தனர். ஒருவர் அங்கிருந்த கல்விளக்குகளில் நெய் ஊற்றி திரியிட்டு சுடரேற்றினார். கருவறை மட்டுமேயான ஆலயத்தின் இருளுக்குள் இருந்து கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இரு விழிகள் தெளிந்து வந்தன. நோக்கியிருக்கவே அத்தெய்வம் பார்வையும் இருப்பும் கொண்டது. பூசகர் தலைவணங்கி முடிந்துவிட்டதென அறிவிக்க பானுமதியும் அசலையும் எழுந்து ஆலயத்தருகே சென்றனர்.
கைகூப்பியபடி பானுமதி ஆலயத்தின் முன் நிற்க அவளருகே அசலை நின்றாள். பூசகர்களில் ஒருவன் தன் தோள்பையிலிருந்து உடுக்கை எடுத்து கொட்டத்தொடங்கினான். தாளம் முறுகி எழுந்தோறும் ஆலயச்சூழல் அறியாமல் மாற்றம் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் சூழ்ந்து நின்று தங்களை நோக்கிக்கொண்டிருக்கும் உணர்வை அசலை அடைந்தாள். பூசகர் மூங்கில் பேழையிலிருந்து நீலத்தாமரையும் குவளையும் நீலச்செண்பகமும் சேர்த்துத் தொடுத்த மலர்மாலையை எடுத்து கலிதேவனுக்கு சூட்டினார். அருகே சிறிய நீளுருளைக் கல்லாக அமர்ந்திருந்த கபாலனுக்கு இன்னொரு நீலமாலையை சூட்டினார்.
அசலை கபாலனையே நோக்கிக்கொண்டிருந்தாள். கலியின் படைக்கலமான கபாலதண்டின் உருவம் அது என்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. முன்பு அந்தத் தெய்வம் அங்கிருக்கவில்லை. எப்படி வந்ததென்று தெரியாமல் அங்கே அது வந்தமைந்தது. அதற்கான கதை உருவானது. “அஸ்தினபுரியில் மானுடரைவிட கூடுதலாகவே தெய்வங்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன” என்று அரண்மனை விறலி சந்திரிகை அவளிடம் சொன்னாள். கலியின் காவலன். கலியின்பொருட்டு இருளையும் கெடுமணத்தையும் சுமந்துசெல்பவன். காகமாகவும் நரியாகவும் வௌவாலாகவும் உருக்கொண்டு நகர்களுக்குள் நுழைபவன்.
இளம்பூசகர் கொண்டுவந்த அனற்கலங்களை இரு பக்கமும் வைத்து தூபம் எழுப்பினார் பூசகர். இன்னொரு பூசகர் சங்கொலி எழுப்ப உள்ளிருந்து கைமணி ஒலித்து கலிக்கு சுடராட்டு காட்டினார். பானுமதி சுடர்தொட்டு வணங்கி பூசகர் அளித்த கரிப்பொடியைத் தொட்டு நெற்றியிலணிந்துகொண்டாள். அசலை வணங்கி வந்ததும் பூசகர் “நீங்கள் செல்லலாம் அரசி, நாங்கள் தேவனுக்கு குருதிபலி கொடுத்து மீள்வோம்” என்றர். பானுமதி தலையசைத்துவிட்டு தாழ்ந்த விழிகளுடன் நடக்க அசலை உடன்சென்றாள். காவலர் அவர்களைச் சூழ்ந்து அழைத்துச்சென்றார்கள்.
அசலை கால்தளர்ந்து சற்று நின்றாள். பானுமதி திரும்பிநோக்கி “இன்று பேரரசியை சந்திக்கச் செல்லவேண்டும். பிந்திக்கொண்டிருக்கிறது” என்றாள். அசலை கூந்தலை சீர்செய்தபடி அவளருகே வந்து “இந்தத் தெய்வங்களைப்பற்றி அஸ்தினபுரியின் குலவரலாறுகளில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. இதைப் பூசனை செய்யவேண்டுமென்ற வழக்கம் எப்போது உருவானது?” என்றாள். பானுமதி “இது அரசரின் அடையாளதெய்வம்” என்றாள். “ஆம், அதை நானும் அறிவேன். அதை சொன்னது யார்?” பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “அரசர் பிறந்தபோதுதான் இந்த தெய்வத்தைப்பற்றிய பேச்சுக்கள் எழுந்தன” என்றாள் அசலை.
“ஆம், ஆனால் இது அப்போது நிறுவப்பட்ட ஆலயம் அல்ல. அதற்கு பல தலைமுறைகளுக்கு முன்னரே இது இங்கிருந்திருக்கிறது” என்றாள் பானுமதி. “அப்படி நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் இந்த நகரைச் சுற்றிய காட்டுக்குள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆலயம் ஏன் கண்டடைந்து அரசருக்குரியதென்று ஆக்கப்பட்டது?” என்றாள் அசலை. “இங்கே அனைத்தையும் முடிவுசெய்பவர்கள் நிமித்திகர்கள்” என்றாள் பானுமதி. “நிமித்திகர்களை எவரேனும் செலுத்தியிருக்கக் கூடுமா? பேரரசி அவ்வாறுதான் நம்புகிறார்கள்.”
பானுமதி “அரசர் பிறந்தபோது நடந்தவை பதிவாகியிருக்கின்றன. முதலில் அவர் மதங்ககர்ப்பம் கொண்டு மண்நிகழ்ந்தார். அது அசுரர்களுக்குரிய பிறப்பு. அரசர்களில் கார்த்தவீரியர் மட்டுமே அவ்வாறு பிறந்தார் என்கிறார்கள். அவரை கருவுற்றநாள் முதல் தான் கண்ட கொடுங்கனவுகளை அரசியே முறையாக சொல்லி அரண்மனை நிமித்திகர் பதிவுசெய்திருக்கிறார்கள். அது அவர் கண்ட கனவு மட்டும் அல்ல. இந்நகரமே அக்கனவுக்குள் அன்றிருந்தது. பெருங்கோடையால் நகரைச் சூழ்ந்துள்ள காடுகள் காய்ந்து தீப்பற்றிக்கொண்டன. புகை மூடி நகர் கருகியது. நகருக்குள் நடுப்பகலிலும் நரிகள் ஊளையிட்டன. பல்லாயிரக்கணக்கான காகங்கள் நகருக்குள் நுழைந்து இங்கிருந்த காற்றே கருமைகொண்டது என்கிறார்கள்” என்றாள் பானுமதி.
“அவர் மண்நிகழ்ந்ததை ஒட்டிய நிகழ்வுகளில் உபாலன் என்னும் யானை உயிர்விட்டது. தீர்க்கசியாமர் என்னும் விழியிழந்த நிமித்திகர் எதையோ கண்டு அஞ்சி உயிரிழந்தார்” என்று பானுமதி தொடர்ந்தாள். “அனைத்தையும் எவரும் அமைக்கமுடியாது. நம்மைச் சூழ்ந்தவற்றில் நம்மைப்பற்றிய மந்தணம் ஒன்று பொதிந்திருக்கிறது. இந்த மரம் எவ்வகையிலோ நாம் இங்கு வந்ததை அறிந்திருக்கிறது. அந்தப் பறவை அக்கிளையில் அமர்ந்திருப்பதற்கும் நாம் இப்போது அதை கடந்துசெல்வதற்கும் தொடர்பிருக்கிறது. இவையனைத்தும் வெறும் தற்செயல்களே என்றால் இப்புவிமேல் நிகழ்வன எதற்கும் எப்பொருளும் இல்லை என்றே பொருள்.”
“அவர் கலியின் வடிவமென நினைக்கிறீர்களா? பேரழிவை கொண்டுவருவார் என எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள் அசலை. பானுமதி “நான் எண்ணுவதை நிறுத்தி நெடுநாட்களாகின்றன. என் எண்ணங்களுக்கு அப்பால் அகன்று விரிந்து சென்றுவிட்டன அனைத்தும். எண்ணிச்சலிப்பதன்றி பயன் ஒன்றும் இல்லை” என்றாள். அசலை “ஆனால்…” என்றபின் உதடுகளை அழுத்திக்கொண்டாள். “என்னடி?” என்றாள் பானுமதி. அசலை மறுமொழி சொல்லவில்லை. “என்னடி?” என்று பானுமதி நின்றாள். அசலையிடமிருந்து விசும்பலோசை கேட்டது. அவள் நின்று மேலாடையால் முகத்தை மூடி தலைகுனிந்திருந்தாள்.
பானுமதி அவள் அருகே சென்று தோளைப்பற்றி “என்னடி? என்ன இது, ஏவலர் காண பாதையில் நின்று?” என்றாள். “கண்களை துடை. ஓசையெழலாகாது” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னாள். அசலை விம்மல்களை விழுங்கி முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு உடன்வந்தாள். “என்னடி?” என்றாள் பானுமதி. “கலிவடிவமாகிய தமையன், கொலைப்படைக்கலத்தின் வடிவமாகிய இளையோன். இங்கு வந்தநாள் முதல் கேட்ட கதை. அவற்றை அள்ளி ஒதுக்கி நெஞ்சை விலக்கித்தான் இதுவரை வாழ்ந்தேன். ஆனால்…” பானுமதி “என்ன?” என்றாள். “அச்சமெழுகிறது” என்றாள் அசலை.
பானுமதி அதற்கு மறுமொழி சொல்லவில்லை. இருவரும் பேசாமல் நடந்தனர். “அக்கையே, இதெல்லாம் பேரரசி சொல்வதுபோல வெறும் சூழ்ச்சியென்றே இருக்குமோ? இங்கு வந்து வழிபட்டுச் செல்வதனூடாக நாம் அச்சூழ்ச்சியை ஏற்று பெருக்குகிறோமா?” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “நாமறிவோம் இருவரையும். மூத்தவர் பெரும்போக்கும் நெறிநிலையும் கொண்டவர். அளி நிறைந்தவர். இளையவர் மூத்தவரை இறைவடிவெனக் காணும் எளிய உள்ளம் கொண்டவர். அவர்களை குருதிவிடாய் கொண்ட கொடுந்தெய்வங்களெனக் காண நம்மால் இயலுமா என்ன?” பானுமதி பெருமூச்சுவிட்டாள். “சொல்லுங்கள், மூத்தவளே” என்றாள் அசலை.
“ஒருமுகம் கொண்ட தெய்வம் ஏதுமில்லை” என்று பானுமதி சொன்னாள். “அவர்கள் நமக்கு இனியவர்கள். அந்த முகத்தையே நாம் கொழுநர்களெனக் கொண்டோம். மைந்தரைப் பெற்றோம்.” அசலை நின்று அச்சம் தெரிந்த குரலில் “அவ்வாறென்றால் இக்கதைகளனைத்தும் மெய்யென்றே நினைக்கிறீர்களா? குலமழிக்கும் கொடியவராக எழுவாரா அரசர்?” என்றாள். “குலம் அழிவதோ குருதி பெருகுவதோ மானுடர் எவர் கையிலும் இல்லை. அது ஊழ். ஊழ் தனக்குரிய மானுடரை தெரிவு செய்கிறது” என்றாள் பானுமதி. “நம் அரசரும் இளையோருமா?” என்றாள் அசலை. “அவர்கள் அத்தகையவர்களா?”
“அல்ல” என்று பானுமதி சொன்னாள். “அவர்களில் நல்லியல்புகள் மட்டுமே நிறைந்துள்ளன என நாம் அறிவோம். இப்புவியில் இன்று வாழ்பவர்களில் என் கொழுநருக்கு நிகரான பேரன்பும் அறப்பற்றும் கொண்ட பிறிதொரு அரசர் இல்லை.” அசலை அவளை நோக்கியபடி நடந்தாள். “ஆனால், மாவலிச் சக்ரவர்த்தியும் அத்தகையவரே. கார்த்தவீரியரும் அவ்வாறே வழுத்தப்பட்டார்” என்றாள் பானுமதி. “என்னால் நடக்கமுடியவில்லை, மூத்தவளே” என்றாள் அசலை. “சரி, நாம் இப்பேச்சை விட்டுவிடுவோம்” என்றாள் பானுமதி. “இல்லை, சொல்லுங்கள். இதை பேசாமலிருந்தால் என் உள்ளம் எண்ணி எண்ணிப் பெருகும்” என்றாள் அசலை.
“இளையவளே, மானுடரில் முழுமையாகவே தீமை உறைவதில்லை. தெய்வங்கள் எவரையும் அவ்வாறு முழுக்க கைவிடுவதில்லை. இருட்தெய்வங்கள் குடியேற ஓர் ஊசிமுனையளவுக்கு பழுது போதும்” என்றாள் பானுமதி. “இருட்தெய்வங்களின் படைக்கலங்கள் எவை என்று அறிவாயா? நல்லியல்புகள் என்கின்றனர் அறிவோர். கொடுந்தெய்வமான கலியை வழுத்தும் கலிதசகத்தில் பாவனர் பாடுகிறார், அன்பு, இரக்கம், அறம், குடிப்பிறப்பு, பண்பு, இன்சொல், பணிவு, வீரம் என்னும் எட்டு படைக்கலங்களை கைகளில் ஏந்தி அமர்ந்திருப்பவர் அவர் என்று.”
“எண்ணிப்பார், அரசர் இத்தனை துணைவர்களை எப்படி தனக்கென சேர்த்துக்கொண்டார்? அவருடைய நல்லியல்புகளால் அணுகி ஆட்பட்டவர்கள் அவர்கள். அழிவிலும் இழிவிலும் அவர்கள் அவரை விட்டு நீங்குவதில்லை. அவருள் எழுந்த இருட்தெய்வம் அவர்கள் மேலேறி பேருருக்கொள்கிறது” என்றாள் பானுமதி. அசலை பெருமூச்சுவிட்டபடி அவளை தொடர்ந்து நடந்தாள். பின்னர் “அந்தச் சிறுபழுது எதுவென எண்ணுகிறீர்கள், அரசி?” என்றாள். “மண்விழைவுதான்” என்றாள் பானுமதி. “தெய்வங்களே வந்து எதிர்நின்றாலும் அவரிலிருந்து அதை அகற்றவியலாது.”
“ஆம்” என்று அசலை சொன்னாள். “ஒவ்வொருவருக்கும் ஒன்றில் நிறைவும் மீட்பும் உள்ளது. அரசரென அமைந்து நாடாள்கையிலேயே முழுதும் நிகழ்பவர் அரசர். ஆகவே ஆளும் மண்மேல் அழியாப் பற்று கொண்டிருக்கிறார். பிறிதொருவர் பாரதவர்ஷத்தை ஆள்வதை அவரால் ஏற்கமுடியாது” என்றாள் பானுமதி. “ஆம், மெய்” என்று சொன்ன அசலை “அவள் மட்டும் மும்முடிசூடி அரசமரவில்லை என்றால் இவையெதுவுமே நிகழ்ந்திருக்காது” என்றாள். “அவளும் இவருக்கு நிகரான உள்ளம் கொண்டவள். மண்ணாளவென்றே பிறந்தவள்” என்றாள் பானுமதி.
அசலை “போரை எவராலும் தவிர்க்கமுடியாதென்று ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். நான் என் ஆழத்தில் போர் நிகழாதென்ற நம்பிக்கையை அணையாது பேணி அதன் வெளிச்சத்தில் வாழ்கிறேன். நீங்கள் சொல்வதைக் கண்டால் போர் நிகழ்ந்தே தீரும் என்று தோன்றுகிறது” என்றாள். “நிகழ்ந்தாகவேண்டும்” என்றாள் பானுமதி. “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் அசலை. “அவள் அவைநின்று வஞ்சினமுரைத்தாள். அது நிகழவேண்டாமா என்ன?” அசலை திகைத்து “மூத்தவளே…” என்றாள்.
பானுமதி சிவந்த முகத்துடன் “அன்று நிகழ்ந்த அவைச்சிறுமையில் நீ என்னவாக இருந்தாய்?” என்றாள். அசலை “நான்…” என்றாள். “சொல்லடி, நீ என்னவாக இருந்தாய்?” அசலை “நான் திரௌபதியாக அவைநடுவே நின்று சிறுத்தேன். அவள் அனல்கொண்டு எழுந்தபோது நானும் உடன்கனன்றேன்” என்றாள். “ஆம், நீயும் நானும் அங்கிருந்த அத்தனை பெண்களும் அவ்வாறே அன்று எரிந்தோம். அந்த வஞ்சினம் அவள் உரைத்ததா என்ன? நானும் நீயும் உரைத்தது, பாரதவர்ஷத்து மகளிர் அனைவரும் அதை ஒருகணமேனும் தாங்களும் சொல்லியிருப்பார்கள். அது தோற்கலாகாது” என்றாள் பானுமதி.
அவள் முகம் குருதிகொண்டிருந்தது. கண்கள் சிவந்து நீர்படிந்திருந்தன. மூச்சு எழுந்தமைய “பெண்பழி நிகர் செய்யப்படவேண்டும். அது தோற்றதென்றால் விண்ணமைந்த மூதன்னையர் சீற்றம்கொள்வார்கள். நம் கொடிவழிகளென எழுந்துவரும் பெண்கள் பழிதூற்றுவார்கள்” என்றாள். “நம் கொழுநர் அவர்கள்” என்று நிலம்நோக்கி அசலை சொன்னாள். “ஆம், ஆயினும் ஆண்கள்” என்றாள் பானுமதி. அவளில் பிறிதொன்று குடியேறுவதை அசலை கண்டாள். வெண்ணிற வட்ட முகத்தில் நீல நரம்புகள் எழுந்தன. கழுத்தில் குருதிநாளங்கள் புடைத்தன. பற்கள் கிட்டித்து மூச்சொலி எழுந்தது.
“நீங்கள் மண்ணாளுங்கள். மண்ணுக்கென போரிட்டு நெஞ்சுபிளந்து உயிர்விடுங்கள். வீரப்பேருலகு சென்று அங்கும் நிறைந்திருங்கள். ஆனால் பெண்பழி கொண்டமைக்கு ஈடுசெய்தே ஆகவேண்டும். நெஞ்சுபிளந்து மண்ணில் கிடந்தாகவேண்டும். அதுதான் மூதன்னையர் விரும்பும் முடிவு” என்றாள் பானுமதி. மெல்ல மூச்சு தணிய உடலில் இருந்து ஒன்று எழுந்து அகன்றது. பெருமூச்சுடன் நடக்கத் தொடங்கினாள். “நாம் அவ்வாறு எண்ணலாகாது, மூத்தவளே” என்றாள் அசலை. “கொழுநன் தொழுதெழுவதே நம் அறம் என்றுதான் கற்று வளர்ந்திருக்கிறோம்.”
“ஆம், அவ்வாறுதான் நானும் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். இவையெவற்றையும் எனக்குள்கூட எண்ணிக்கொண்டதில்லை. அனைத்தையும் கடந்து இத்தனை ஆண்டுகளை கழித்திருக்கிறேன். ஆனால்…” என்றபின் திரும்பி “நீ கங்கைப் படித்துறைக்கு சென்றிருக்கிறாயா?” என்றாள். “ஆம்” என்றாள் அசலை. “அங்கே அம்பையன்னையின் ஆலயம் இருக்கிறது, அறிவாயா?” என்றாள் பானுமதி. “ஆம், ஒருமுறை சென்று தொழுதிருக்கிறேன்.” பானுமதி “நம் குடியின் மூதன்னை அவர்” என்றாள். “ஊழின் எந்த ஆடலால் இக்குடிக்கே நாம் மருமகள்கள் என வந்தோம்? நம்மால் எண்ணிச் சென்று தொட்டுவிட முடியாது அதை.”
“நான் அவர் ஆலயத்திற்கே சென்றதில்லை. பதினெட்டுமுறை அப்படித்துறையிலிருந்து படகு ஏறியிருக்கிறேன், ஒருமுறைகூட திரும்பி அவரை நோக்கியதில்லை. அவர் இங்கில்லை என்று எண்ணியே இத்தனை ஆண்டுகளை இங்கு கழித்தேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. என் கனவில் வந்தார்.” அசலை “எப்போது?” என்றாள். “அவள் கானேகல் முடித்து உபப்பிலாவ்யத்திற்கு வந்த நாளில். அவள் அங்கு வந்த செய்தியை இரண்டு நாட்களுக்குப் பின்னர் பறவைச்செய்தியினூடாகவே அவையும் அரசரும் அறிந்தனர். நானும் அப்போதே அறிந்தேன். ஆனால் அன்னை அறிந்திருந்தார்” என்றாள் பானுமதி.
“ஐம்புரிக் குழலில் குருதி சொட்ட விழிகள் செங்கனல்துண்டுகளென எரிய என் முன் எழுந்தார். வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றார். குழல்நுனியில் இருந்து குருதி சொட்டும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்னையே என்றேன். அவர் விழிகள் என்னை பார்த்தனவென்றாலும் அறிந்திருக்கவில்லை. அன்னையே, நான் உங்கள் சிறுமகள் என்றேன். அருகே ஓர் ஓசை கேட்டது. விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்தேன். அன்று தோன்றியது, நான் எதையும் கடந்துசெல்லமுடியாதென்று. நான் என் மூதன்னையரின் தொடர்ச்சியென்று மட்டுமே இங்கே இருக்கமுடியும். இவர்கள் எவரும் எனக்கு அணுக்கர் அல்ல. தந்தையோ கொழுநரோ மைந்தரோ அல்ல. நான் வேறு” என்றாள் பானுமதி.
“அந்தக் குருதிசொட்டும் ஐம்புரிக் குழலை நான் முதல்முறை கனவில் கண்டது அவையில் குலச்சிறுமை நிகழ்ந்த அந்நாள் இரவில். எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு விழிநீர் உகுத்தேன். அந்நாளுக்குப் பின் நான் அவர் என்னைத் தொட ஒப்பியதில்லை. பதினெட்டாம் நாள் என் மஞ்சத்தறைக்கு வந்தார். உள்ளே அழைத்து நான் சொன்னேன். என்னை தொடுக, ஆனால் என்னுள் ஐங்குழல் விரித்து அவள்தான் இருப்பாள் என்று. அஞ்சியவர்போல பின்னடைந்தார். ஒரு சொல் இன்றி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பிச்சென்றார். அதன்பின் இன்றுவரை நாங்கள் விழிநோக்கிக்கொண்டதில்லை” என்று பானுமதி சொன்னாள்.
“என்னை இளையவர் அந்நாளுக்குப்பின் அணுகியதே இல்லை” என்றாள் அசலை. “நானும் அதை விரும்பவில்லை என்பதனால் அவரை தேடிச் சென்றதுமில்லை. பதினான்காண்டுகளில் இருமுறை அவையில் அருகே நின்றிருக்கிறேன். ஒருமுறைகூட முகம்நோக்கவோ சொல்லாடவோ செய்யவில்லை.” தலையை அசைத்து எண்ணங்களை கலைத்தபின் “நான் சேடியர் வழியாக உசாவினேன். அவர் அதன்பின் எந்தப் பெண்ணையும் அணுகவில்லை. அவருக்கு பணிசெய்யும் பெண்களையும் விலக்கிவிட்டார். பெண்களை விழிநோக்கவே அவரால் இயலவில்லை என்றனர். ஆம், அது அவ்வாறே என நானும் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.
பானுமதி “ஆம், வஞ்சத்தின் விசையால் அன்று அதை செய்தனர். அதிலிருந்து எவர் அகன்றாலும் அவர்களால் அகலமுடியாது. ஏனென்றால் அவர்கள் கீழ்மைகொண்டவர்கள் அல்ல. பேரறத்தாராகிய திருதராஷ்டிரருக்கும் பெருங்கற்பினள் காந்தாரிக்கும் பிறந்தவர்கள் அவர்கள். அன்னையின் முன் இன்றுவரை அவர்கள் வந்ததில்லை” என்றாள். அசலை “அன்னை மைந்தரை மெல்ல மன்னித்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது” என்றாள். “ஆம், அவர் மன்னித்துவிட்டார். ஆனால் உள்ளே அனல் இருப்பதை மைந்தர் அறிவர். ஆகவேதான் ஒருமுறைகூட அவர்கள் அவர் முன் வந்ததில்லை” என்றாள் பானுமதி.
அவர்கள் அதன்பின்னர் பேசிக்கொள்ளவில்லை. தலைகுனிந்து தங்கள் உள்ளோட்டங்களில் சுழித்தவர்களாக நடந்தனர். தேர்ச்சாலையில் நின்ற மூடுதேரில் ஏறிக்கொண்டனர். பானுமதி தலைகுனிந்து அமர்ந்திருக்க அசலை சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டைக்குள் நுழைந்து ஏரிக்கரையின்மேல் சென்ற பாதையில் வந்து நகருக்குள் நுழைந்தனர். பானுமதி மேற்கு மாளிகையின் சாளரத்தருகே இரு வண்ண ஆடையசைவை கண்டாள். மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும். அவர்களை அவள் பார்த்தும் நினைவுகூர்ந்தும் நெடுநாட்களாகின்றன என்று வியப்புடன் எண்ணிக்கொண்டாள்.
பேரரசியின் அரண்மனையில் வழக்கம்போல சடங்குபோலவே ஒவ்வொன்றும் நிகழ்ந்தன. கௌரவர்களின் அரசியர் அனைவரும் முறைப்படி அரச ஆடையணிந்து வந்திருந்தனர். ஐவரும் அறுவருமாக காந்தாரியின் அறைக்குள் சென்று அவளை வணங்கி சூழ்ந்து அமர்ந்தனர். அவள் ஒவ்வொருவரையாகத் தொட்டு நோக்கி அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைத்து நலம் உசாவினாள். இரைதேடும் மலைப்பாம்புகள் என அவளுடைய பெரிய வெண்ணிறக் கைகள் மகளிரின் கன்னங்களையும் தோள்களையும் தழுவி வருடி அலைந்துகொண்டே இருந்தன. அவர்களில் எவர் துயருற்றிருக்கிறார்கள், எவர் சோர்வுகொண்டிருக்கிறார்கள் என அத்தொடுகையாலேயே அவள் அறிந்தாள். அவர்களை மட்டும் அருகணைத்து தோளுடன் தழுவிக்கொண்டாள்.
ஒவ்வொருவரின் மணத்தையும் அவள் நினைவில் வைத்திருந்தாள். தைலங்கள், மலர்கள், சுண்ணம், செங்குழம்பு என அவர்கள் அணிந்திருந்த அத்தனை நறுமணங்களையும் அகற்றி அவர்களின் மணத்தை பிரித்தெடுக்க அவளால் இயன்றது. அதனாலேயே அவள் மருகியர் அவளை விரும்பினர். அவளுடன் தங்களுக்கு மிக ஆழ்ந்த தனிப்பட்ட தொடர்பு ஒன்று இருப்பதாக நம்பினர். தங்களுக்கே உரிய மணமே தாங்கள் என்பதுபோல, அதை அறிபவர் தங்களுள் கரந்துள்ள அனைத்தையும் தொட்டுவிட்டார் என்பதுபோல.
காந்தாரியின் முகம் மலர்ந்து சிவந்த உதடுகள் இழுபட்டு நீண்டிருந்தன. மெல்லிய பறவையொலி போன்ற சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. மகளிர் அவளருகே வந்ததுமே அனைத்தையும் மறந்து தாங்களும் சிரித்து களியாடத் தொடங்கினர். அகவையை இழந்து மணம்முடித்து அங்கு வந்துசேர்ந்த சிறிய பெண்களாக மாறினர். பானுமதி அரசியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவரைப்பற்றியும் காந்தாரி அவளிடம் ஒருசில சொற்களை உரைத்தாள். சிலரை அன்புடன் கடிந்துகொண்டாள். அவள் முன் பெண்களை நிரையாக அனுப்பியபடி அறைவாயிலில் அசலை நின்றிருந்தாள்.
“இவள் ஸ்வாதா அல்லவா? என்னடி மெலிந்துவிட்டாய்?” என்றாள் காந்தாரி. ஸ்வாதா “சற்று மெலியவேண்டும் என்றனர் மருத்துவர். அன்னையே, எடைமிகுந்து என் கால்கள் வலிகொண்டுவிட்டன” என்றாள். “எடைமிகுந்தால் வலியெழும் என எவர் சொன்னது? என்னளவு எடைகொண்ட எவருள்ளனர் இங்கே?” என்றாள் காந்தாரி. “நீ ஸ்வாகை அல்லவா? உன் உடன்பிறந்தாள் ஸதி எங்கே?” என்றாள். பானுமதி “அனைவர் பெயரும் எனக்கே தெரியாது, அன்னையே” என்றாள்.
“தெரியாதா? இவ்வரண்மனையில்தானே அவர்கள் வாழ்கிறார்கள்? இதோ இவள் ஸ்வாதா, அவள் துஷ்டி, அவள் உடன்பிறந்தவள் புஷ்டி. ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா என அவர்கள் காந்தாரத்திலிருந்து சேர்ந்தே வந்த இளவரசிகள். இவர்களை நீ அறியவில்லை என்றால் எவர் அறிவார்கள்?” என்றாள் காந்தாரி. பானுமதி அப்பெண்களை நோக்கி புன்னகை புரிந்தாள்.
அசலை விழிகாட்ட பெண்கள் எழுந்து “நாங்கள் மீண்டும் வருகிறோம், அன்னையே. அடுத்த நிரை வெளியே காத்திருக்கின்றது” என்றனர். வெளியே இருந்து அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் ஒரு குழுவாக உள்ளே வந்து காந்தாரியை வணங்கினர். “வாடி, நீ சிவை அல்லவா? வித்யை… என்னடி தாழம்பூ சூடியிருக்கிறாய்?” ஒரு பெண்ணின் கன்னத்தை வருடி “சுகிர்தை… நேற்றுதான் உன்னை தொட்டதுபோல் உணர்கிறேன். உன் தோழி கிருதை எங்கே?” என்றாள். கிருதை “இங்கிருக்கிறேன், அன்னையே” என்றாள்.
மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் அசலையின் அருகே வந்து காத்து நின்றனர். அவர்கள் முகங்கள் ஆலயம் தொழும் அடியார் என மலர்ந்திருந்தன. “அந்தியாகிவிடும் போலிருக்கிறதே? அன்னை ஓய்வெடுக்க வேண்டாமா?” என்றாள் மங்கலை. “அன்னைக்கு இதுவே பெரிய ஓய்வு” என்றாள் அசலை. “என் கணவர் கேட்டார், அங்கே என்னதான் செய்வீர்கள் என்று. மகிழ்ச்சியாக இருப்போம் என்றேன். அது அவருக்கு புரியவில்லை” என்றாள் கமலை. “உணவுண்பதுபோன்ற ஒரு நிலை என்று சொல்லவேண்டியதுதானே?” என்றாள் பாடலை. அவர்கள் சிரித்தனர்.
ருத்ராணி “அவருக்கும் வர விருப்பம்தான்” என்றாள். “இங்கு ஆண்களுக்கு ஒப்புதலில்லை. ருதுபங்கம் நிகழ்ந்தபின் அன்னை ஜீவசுத்தி நோன்பு கொள்கிறார். ஆண்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் அதற்கு” என்றாள் அசலை. “ஆம், அறிவேன். ஆனால் அதை காட்டில் சென்றுதான் செய்வார்கள் என்று என் சேடி சொன்னாள்” என்றாள் கமலை. “காடென்பது என்ன? உலகை விலக்கிக்கொண்டால் அனைத்துமே காடுதான்” என்றாள் உல்பலாக்ஷி. “எத்தனை நேரம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்?” என்று கமலை உள்ளே நோக்கினாள். “அவர்களுக்கு இன்னும் பொழுதிருக்கிறது. அனைவருக்கும் ஒரே நேரம்தான்” என்றாள் அசலை.
“மாத்ருபிரஸ்தான விழா வருகிறது. அன்னை அதற்கு செல்லும்போது நாங்களும் உடன்செல்வோம் அல்லவா?” என்றாள் கமலை. “இல்லை, அது நோன்புகொண்டவர்களுக்கு மட்டும்.” கமலை “என்ன நோன்பு?” என்றாள். “முன்னும் பின்னும் காமவிலக்கு நாட்கள் உண்டு” என்றாள் ருத்ராணி. “நாம்தான் ஆண்டுக்கணக்காக காமவிலக்கு கொண்டிருக்கிறோமே?” என்றாள் கமலை. அசலை திகைப்புடன் அவளை நோக்கியபின் பிறரை பார்த்தாள். “காமவிலக்கா?” என்றாள். கமலை தலைகுனிந்து “ஆம், அவையில் அது நிகழ்ந்தபின் நாங்கள் அவர்களை அணுகவிடவில்லை. அவர்களுக்கும் எங்களை அணுகுவதில் தயக்கமிருக்கிறது” என்றாள். “அனைவருமா?” என்றாள் அசலை. “ஆம், ஆண்டுகள் கடந்தபோது அதுவே வழக்கமென்றாகிவிட்டது” என்றாள் பாடலை. அசலை பெருமூச்சுவிட்டாள்.
பானுமதி கையசைக்கக் கண்டு “செல்க!” என்றாள். மறுபக்க வாயில் வழியாக உள்ளிருந்தவர்கள் வெளியே செல்ல அவர்கள் உள்ளே சென்றனர். காந்தாரி நெடுங்காலம் காத்திருந்து அவர்களை சந்தித்தவள்போல கூச்சலிட்டு நகைத்தபடி கைவிரித்து அவர்களை இழுத்து அணைத்துக்கொண்டாள். சிரிப்போசையும் கூச்சல்களும் எழுந்தன.
உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் வந்து நின்றனர். அசலை அவர்களை சற்றுநேரம் நோக்கிவிட்டு “நான் ஒன்று கேட்கிறேன், மெய் சொல்க!” என்றாள். அவர்கள் ஏறிட்டுநோக்க “காமவிலக்கு நோன்பு கொண்டவர்கள் உள்ளீர்களா உங்களுள்?” என்றாள். சந்திரை தலைகுனிந்து “நாங்கள் அனைவருமே” என்றாள். லம்பை “அகத்தளத்தின் அரசியர் அனைவருமே அவ்வாறுதான்… அவர்கள் எவரும் இங்கு வருவதில்லை” என்றாள். அசலை பெருமூச்சுவிட்டாள்.