பகுதி ஒன்று : பாலைமகள் – 6
தன் அறைக்குத் திரும்பியதுமே பூர்ணையிடம் நடந்ததை சொல்லிவிட்டு தேவிகை மஞ்சத்தில் படுத்தாள். துயில் வராதென்றே உள்ளத்தின் அலைக்கழிப்பு காட்டியது. அறைக்குள் நின்றிருந்த பூர்ணையிடம் “நானும் உடன்செல்கிறேன். நெடுநாட்களுக்குப்பின் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான் என்னை அலைக்கழிக்கிறதா?” என்றாள். “ஆம், அரசி” என்று பூர்ணை சொன்னாள்.
சுரபி உள்ளே வந்து “பயணத்திற்கான அனைத்தையும் ஒருக்கிவிட்டேன், அரசி” என்றாள். “நீ என்னடி நினைக்கிறாய்?” என்றாள் தேவிகை. “எதைப் பற்றி?” என்றாள் சுரபி. “நான் ஏன் அமைதிகொள்ளாமலிருக்கிறேன்?” அவள் பேசாமல் நின்றாள். “சொல், ஏன்?” என்றாள் தேவிகை. “நீ வாளால் அறுத்துச்சொல்லும் இரக்கமற்ற நெஞ்சுகொண்டவளாயிற்றே.” சுரபி “அவர்கள் ஒருதுளி விழிநீர் விட்டிருந்தால் நீங்கள் அமைதிகொண்டிருப்பீர்கள், அரசி” என்றாள். “அவ்வளவுதானா?” என தேவிகை புன்னகைத்துக்கொண்டு கேட்டாள்.
“அவர்களை நீங்கள் வெறுத்தீர்கள். அவ்வெறுப்புக்குரியவர்களாக அவர்கள் இல்லை என்பதன் ஏமாற்றம்” என்றாள் சுரபி. “மேலும் ஏதேனும் சொல்” என்றாள் தேவிகை. சுரபி பேசாமல் நின்றாள். “நீ சொன்ன இரண்டும் அல்ல” என்ற தேவிகை புரண்டுபடுத்து “பிறிதொன்று. நான் அதை தெளிவாகவே இப்போது உணர்கிறேன்” என்றாள். சுரபி புன்னகைத்து “ஆம், அரசி. சில ஆழங்கள் பொதுமைக்கு அப்பாற்பட்டவை” என்றாள். “துயில்க!” என்றபின் பூர்ணை சுரபியை தோளில் தொட்டு அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
தேவிகை திரௌபதியை எண்ணியபடி கண்மூடிக்கிடந்தாள். அவள் முகம், அதில் மாறா இளமையை நிறுத்துவது எது? கண்களில் வந்துசெல்லும் சிறுமியருக்குரிய சிரிப்பு. அதற்குமப்பால் ஒன்று. அவள் மீண்டும் மீண்டும் தேடினாள். சிறிய மூக்கும் குமிழுதடும் அளிக்கும் குழந்தைமை அல்ல, அதற்கப்பால். அவள் துயிலில் இருந்து எழுந்தபோது அப்பால் என்னும் சொல் நெஞ்சில் பொருளின்றி எஞ்சியிருந்தது. பூர்ணை அவளை எழுப்பிக்கொண்டிருந்தாள். “அரசி, அரசர் அரண்மனை மீண்டுவிட்டார்” என்றாள். “எப்போது?” என்றாள். “சற்று முன்பு…” தேவிகை “அவர் எப்போது அங்கிருந்து கிளம்பினார்?” என்றாள். “நாம் இங்கு வருவதற்கு முன்னரே கிளம்பியிருக்கவேண்டும்” என்றாள் பூர்ணை.
மெல்ல அனைத்தையும் உளம்வாங்கியபின் “நாங்கள் அவரறியாமல் நாளை கிளம்புவதாக இருந்தோம்” என்றாள் தேவிகை. “அரசி, இனி அது இயலாது. நீங்கள் சென்று அவரிடம் தெரிவிப்பதே முறையாகும்.” தேவிகை “அவர் ஏன் இப்போது வந்தார்?” என்றாள். “அரசியின் உளமாற்றமோ நாம் கிளம்புவதோ அவரை சென்றுசேரப் பொழுதில்லை. அவர் அங்கிருந்து வரவே ஒருநாள் ஆகும்” என்றாள் பூர்ணை. “இது வேறேதோ செய்தியால் நிகழ்ந்தது. ஆகவே ஊழ் என்றே கொள்ளவேண்டும்” என்றாள்.
தேவிகை தன் எண்ணங்களில் தொலைவுசென்று மீண்டுவந்து “அவர் அரசி அஸ்தினபுரி செல்வதை விரும்பமாட்டார்” என்றாள். “ஏன்? அவர் போரை விழைவார் என நான் எண்ணவில்லை” என்றாள் பூர்ணை. “அவர் போரை அஞ்சுகிறார். அஞ்சுபவர்கள் ஆவலுடன் அச்சமூட்டுவதை எதிர்பார்க்கவும் செய்வார்கள். அதையே எண்ணியிருப்பார்கள். போர் நிகழாதுபோனால் மிகப் பெரிய ஏமாற்றம் கொள்பவர் அவராகவே இருப்பார்.”
பூர்ணை சற்றுநேரம் அவளை நோக்கியபின் “எவ்வாறாயினும் அவரால் தடுக்கமுடியாது” என்றாள். “அரசி வஞ்சம் தவிர்த்ததை அவர் வரவேற்றாகவேண்டும். வெறுமனே அல்ல, உளம்நெகிழவேண்டும், விழிநீர் நனைய தழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். தேவிகை “அதெல்லாம் நிகழும். ஆனால் பிறிதொன்றும் நிகழும். அதைத்தான் என்னால் இப்போது கணிக்கமுடியவில்லை” என்றபின் “இதை எதிர்பார்த்திருந்தேனா? இத்தனை எளிதல்ல என்று என் அகம் அறிந்திருந்ததா?” என்றாள். “ஏனிந்த வீண் எண்ணச்சுழல்? நேராகச்சென்று அரசரை பாருங்கள். அங்கு நிகழ்வது நிகழட்டும்” என்றாள் பூர்ணை. “ஆம், நான் உடனே கிளம்பவேண்டும்” என்றாள் தேவிகை.
தேவிகை நீராடி உடைமாற்றி வந்தபோது ஏவலன் அரசரின் அழைப்புடன் வந்திருந்தான். அவள் அவனுடன் சென்றபோது உள்ளம் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதை உணர்ந்தாள். ஒரு சொல்லும் இல்லாது ஒழிந்திருந்தது நெஞ்சு. படியேறி இடைநாழியில் நடந்து அரசரின் அறைவாயிலில் நின்றாள். வாயிற்காவலனிடம் தலையசைக்க அவன் உள்ளே சென்று அவள் வருகையை அறிவித்தான். உள்ளே நகுலனும் சகதேவனும் இருப்பார்கள் என அவள் எண்ணியிருந்தாள். ஆனால் யுதிஷ்டிரரின் தோற்றத்தைக் கண்டதும் திகைத்து நின்றுவிட்டாள்.
அவள் சற்றுமறியாத முதியவர் போலிருந்தார் யுதிஷ்டிரர். முனிவரைப்போல நீண்ட நரைத்த தாடியும் தோளில் புரண்ட குழலும் தொய்ந்த தோள்களும் கூன்விழுந்த முதுகுமாக. ஆனால் சிலகணங்களுக்குள்ளேயே அவள் யௌதேயனின் முகத்தை அதில் கண்டடைந்தாள். அது மேலும் கசப்பை கொடுக்க அவள் விழிகளை திருப்பிக்கொண்டாள். நகுலனும் சகதேவனும்கூட முதுமையெய்தியிருந்தனர். அவள் பூரிசிரவஸை நினைத்துக்கொண்டாள். முகத்தின்மேல் ஆடையை இழுத்துவிடும் அசைவால் அவ்வெண்ணத்தை ஒதுக்கினாள்.
“அரசரையும் இளையோரையும் வணங்குகிறேன்” என்றாள். யுதிஷ்டிரர் “நலன் திகழ்க!” என வாழ்த்தி அமரும்படி பீடத்தை காட்டினார். அவள் இல்லை என தலையசைத்து சாளரத்தருகே சென்று ஒளி மறைக்காமல் நின்றாள். வெளியே அந்தியெழத் தொடங்கிவிட்டிருந்தது. பறவைகள் கலைந்தெழுப்பிய குரல்களால் தோட்டம் உயிர்கொண்டிருந்தது. யுதிஷ்டிரர் தலைகுனிந்து தாடியை நீவிக்கொண்டிருந்தார். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் என அவள் நினைத்தாள். ஆனால் அந்த எச்சத்தை அவர்களின் முகங்களில் காணமுடியவில்லை.
ஏவலன் வந்து திரௌபதியின் வரவை அறிவித்தான். தேவிகை பெருமூச்சுடன் நிமிர்ந்து நின்றாள். திரௌபதி உள்ளே வந்து முகமன் ஏதுமில்லாமல் யுதிஷ்டிரரை வணங்கி பீடத்தில் அமர்ந்தாள். “நாங்கள் உடனே திரும்பிவரவேண்டியிருந்தது. இரு செய்திகள். அஸ்தினபுரியிலிருந்து திருதராஷ்டிரரின் தனித்தூதனாக சஞ்சயன் கிளம்பி வந்துகொண்டிருக்கிறான்” என்றார். “அதோடு இளைய யாதவன் நாளை இங்கு வருவான் என்றும் செய்தி வந்துள்ளது.” திரௌபதி தலையசைத்தாள். அவள் மேலே பேசுவதற்காக காத்தபின் யுதிஷ்டிரர் “சஞ்சயன் தூதின் உள்ளடக்கம் என்ன என்று அறியக்கூடவில்லை. நிலம் அளிக்கமுடியாதென்று முற்றாக மறுத்தபின் எதை பேசமுடியும்? நன்று என்னவென்றால் நாளை சஞ்சயன் அவைநிற்கையில் இளைய யாதவனும் இருப்பான் என்பதே” என்றார்.
திரௌபதி “நான் நாளை புலரியில் கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்கிறேன்” என்றாள். “ஆம், தௌம்யர் சொன்னார்” என்றார் யுதிஷ்டிரர். “நான் அங்குள்ள அரசியரிடம் என் வஞ்சினத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லவிருக்கிறேன். அந்த மைந்தரைத் தழுவி அவர்களின் அன்னை நான் என்று சொல்லிவர விழைகிறேன். வரும் மூன்றாம் வளர்நிலவில் மாத்ருப்பிரஸ்தான நோன்பு அஸ்தினபுரியில் நிகழ்கிறது. அதற்கு எனக்கும் அழைப்புள்ளது. அதன்பொருட்டு செல்வதுபோல செல்லலாமென்றிருக்கிறேன்” என்றாள்.
அவளுடைய இயல்பான குரலும் நேர்நோக்கும் அவரை நிலையழியச் செய்தன. குனிந்து மடியிலிருந்த தன் கைகளை நோக்கியபடி “ஆனால் இம்முடிவை நீ ஏன் உடனடியாக எடுத்தாய் என்றுதான் என் உள்ளம் ஐயம்கொள்கிறது. எங்கள் ஆற்றல்மேல் ஐயம்கொண்டாயா?” என்றார். “இல்லை” என்று அவள் சொன்னாள். அவள் மேலும் சொல்ல காத்திருந்து பின்னர் நிமிர்ந்து “இல்லையென்றாலும் அவ்வாறே அது பொருள் கொள்ளப்படும். இளையோர் இருவருக்கும் அது இழுக்கென்றே ஆகும்” என்றார்.
“இளையவர்களைப்பற்றி நான் அறிவேன். மாருதர் என் உளமறிவார். பார்த்தருக்கு நான் ஒரு பொருட்டல்ல” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரரின் முகத்தில் ஒரு சுளிப்பு உருவாகியது. “நீ அவர்களை முற்றாகப் பொறுத்து கடந்துவிட்டாய் என்பதை நான் நம்பவில்லை. கான்வாழ்க்கையில் நீ இருந்த நிலையை நான் கண்டிருக்கிறேன். ஆண்டுக்கணக்கில் கந்தமாதனம்போல கனன்றுகொண்டிருந்தாய். எத்தனை இரவுகளில் துயில்நீத்திருப்பாய் என நான் சொல்லமுடியும். துயிலில்லாது உளம்வெந்து நான் எழுந்துவந்து உன் அறைக்கு வெளியே நின்றிருப்பேன். இரவெல்லாம் நீ புரண்டுபடுப்பதை, பெருமூச்சுவிட்டுக்கொண்டிப்பதை கேட்பேன். எத்தனையோ முறை உளமுருகி விழிநீர் சிந்தியிருக்கிறேன். நான் கற்றவற்றை எல்லாம் முற்றிலும் மறந்து பெருவஞ்சம் கொண்டு வானோக்கி சீறியிருக்கிறேன். எத்தனையோ முறை நெஞ்சிலறைந்து தீச்சொல்லும் இட்டிருக்கிறேன். அதையெல்லாம் கடந்துசெல்லமுடியுமா என்ன?”
“அரசே, கானேகிய நீங்களும் திரும்பிவந்த நீங்களும் ஒன்றா என்ன?” என்றாள் தேவிகை. “இல்லை, நான் சென்ற வழி நீண்டது” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், இளையவர் இருவரும் அதைப்போலவே நெடுவழி சென்று கண்டடைந்து மீண்டனர். நாங்கள் மூவரும் எங்கும் செல்லவில்லை. சிறியவர் எதையும் புதிதாக தெரிந்துகொள்ளவேண்டிய தேவையற்றவர். அவருக்கு இணையர் புரவிகளுடன் ஓடியே தொலைவுகளை கடந்தவர்” என்று திரௌபதி சொன்னாள். “அவர் கால்களால் சென்ற தொலைவை எல்லாம் நெஞ்சால் சென்றுகொண்டு நான் இருந்தேன். அரசே, ஊஞ்சலும் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறது.”
யுதிஷ்டிரர் தம்பியர் இருவரையும் நோக்கிவிட்டு “நீ எப்படி அவ்வஞ்சத்தை கடந்தாய்? என்னால் எண்ணிநோக்கவே இயலவில்லை” என்றார். திரௌபதி “நான் அகவை முதிர்ந்தேன், வேறேதும் செய்யவில்லை. வஞ்சத்தைக் கடப்பதைவிட கடினமாக இருந்தது மண்விழைவை கடப்பதுதான். அதற்கு நான் புற்குடில்களிலும் மலைக்குகைகளிலும் மரத்தடிகளிலும் துயிலவேண்டியிருந்தது. இன்று இளையவர் வந்து என்னிடம் பேசிமீண்டபின் நான் என்னை நோக்கி மீளமீள கேட்டுக்கொண்டேன். நான் கடந்துவிட்டேனா என்று. ஆம், கடந்துவிட்டேன் என்றே என் உள்ளம் உறுதிசொன்னது” என்றாள்.
மேலும் என்ன பேசுவதென்றறியாமல் அங்கே அமைதி உருவாகியது. தேவிகை “நீங்கள் இதை மகிழ்ந்து வரவேற்பீர்கள் என நினைத்தேன்” என்றாள். அவளை நிமிர்ந்து நோக்கிய யுதிஷ்டிரர் “இல்லை, என்னால் முடியவில்லை. ஆனால் நான் போரையும் விரும்பவில்லை. எனக்கு உளக்குழப்பமே எஞ்சுகிறது. அங்கே திரண்டிருப்பவர்கள் என் உடன்பிறந்தார், என் மைந்தர். மண்ணின்பொருட்டு அவர்களுடன் போரிட நான் விரும்பவில்லை. போர் எந்நிலையிலும் தவிர்க்கப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால்…” என்ற யுதிஷ்டிரர் தலையை அசைத்தார். அவர் நாவில் எழுந்த ஒன்று தயங்கியது.
பின்னர் குரல் மேலெழ விழிதூக்கி “உண்மையில் நம் நிலவுரிமையை முற்றாக விட்டுக்கொடுத்து கிழக்குநோக்கி சென்றாலென்ன என்று உசாவும்பொருட்டே சம்புகச் சோலைக்கு சென்றோம். அங்கு அமர்ந்து நாம் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களைப்பற்றிய செய்திகளை தொகுத்தோம். செல்வதெப்படி என்று வகுத்தோம். இளையோரிடம் அதைச் சொல்லி ஏற்கவைப்பதைப்பற்றிக்கூட பேசிவிட்டோம். அது பின்னடைவதுதான். கோழைகளென நம்மை இளிவரல்செய்ய வழிவகுக்கும் என்பதும் உண்மை. இளையோர் இருவருக்கும் அதில் உடன்பாடில்லை என்றும் தெரிந்தது. ஆயினும் அதில் உயர்ந்தது என ஒன்று இருந்ததாகவே உணர்ந்தேன்” என்றார்.
“என் கோழைத்தனமா அது என எண்ணி எண்ணி நோக்கினேன். எங்கோ சிறுதுளி அச்சம் இருக்கலாம். ஆனால் எனைச்சார்ந்தோர் நன்மைக்கே அதை செய்கிறேன் என உறுதியடைந்தேன். இன்று எப்பழி சூழ்ந்தாலும் சரி சில தலைமுறைகள் கழித்தேனும் என் நன்னோக்கத்தை உலகம் உணரும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அரசி சென்று பணிவது என்று கேட்டபோது என் உளம் கூசுகிறது. பெண் என நின்று அவள் கொண்ட வஞ்சத்தை உதறுகிறாள் என்றால் ஆணென்று சொல்லி உடனமர எனக்கும் தம்பியருக்கும் தகுதியில்லை என்று அகம் கசப்புகொள்கிறது” என்றார்.
“நான் வஞ்சத்தை தவிர்க்கவில்லை அரசே, மெய்யாகவே என்னுள்ளத்தில் இன்று வஞ்சம் இல்லை” என்றாள் திரௌபதி. “நான் இவையனைத்திலும் ஈடுபடாமல் முற்றிலும் விலகி ஏன் இருந்தேன் என்று கேட்டுக்கொண்டபோதுதான் அது எனக்குத் தெரிந்தது. வஞ்சம் இல்லை என்பதனால் வஞ்சமொழிவதன் நெகிழ்ச்சியும் மீண்டுவிட்டேன் என்னும் பெருமிதமும்கூட என்னில் இல்லை. வஞ்சமுரைத்து அவையில் நின்று கனன்ற அவள் இன்று என்னுள் இல்லை. எனக்கு அவை பிறர்வாழ்வென்றே தோன்றுகிறது.”
“இல்லை, இவள் எதன்பொருட்டு வந்தாள் என நான் அறிவேன். தன் மகனுக்காக உன்னிடம் இரந்தாள். நீ அவளுக்கு அடைக்கலம் அளித்தாய். அரசியென உன்னால் அதை செய்யாமலிருக்க இயலாது” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அது உண்மை. ஆனால் அவர் வந்து பேசியபோதுதான் நான் எத்தனை விலகி எங்கோ நின்றிருக்கிறேன் என்று உணர்ந்தேன். நான் அவ்வாறு விலகி நின்றிருந்தமையால் அவர் ஏமாற்றமும் எரிச்சலும் கொண்டார் என்பதையும் உணர்ந்தேன். நான் விலகி நிற்க இயலாதென்று அவர் சொற்களிலிருந்து தெரிந்துகொண்டேன். வஞ்சத்தை என் உள்ளத்திலிருந்து விலக்கிவிட்டேன், அதை என் வாழ்விலிருந்தும் விலக்காவிட்டால் அதன் பழியை சுமக்கவேண்டியிருக்கும் என்று தெளிந்ததும் இம்முடிவை எடுத்தேன்.”
“தேவி, நான் நேரடியாகவே கேட்கிறேன். உன் மைந்தருக்காகவா அஞ்சுகிறாய்?” என்றார் யுதிஷ்டிரர். அவள் அவர் விழிகளை நோக்கி “இல்லை என்று சொல்லமாட்டேன். சிபிநாட்டரசி வந்து சொன்ன கணம் முதல் அஞ்சத்தொடங்கிவிட்டேன். என் மைந்தருக்காக மட்டுமல்ல, மைந்தர் அனைவருக்காகவும். இங்குள்ள மைந்தரை எண்ணி மட்டுமல்ல, அங்குள்ள மைந்தரையும் எண்ணித்தான்” என்றாள் திரௌபதி. “மைந்தரை வாள்தந்து களமனுப்பும் பேரன்னையின் கதைகளை கேட்டுவளர்ந்தவள்தான் நான். கானேகாமலிருந்தால் அந்தக் கதைகளுக்குள்ளேயே வாழ்ந்திருப்பேன்.”
யுதிஷ்டிரர் “என்னால் எதுவுமே எண்ண முடியவில்லை. ஆம், மைந்தருக்காக நாம் முற்றொழிவோம் என்றே எண்ணுகிறேன். ஆனால் அது நீ எடுக்கும் முடிவாக இருக்கலாகாது” என்றார். “நான் விலகிவிட்டேன். அதற்கப்பால் சொல்வதற்கேதுமில்லை” என்றாள் திரௌபதி. “நீ எண்ணுவதென்ன, இளையோனே?” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் “இப்போதுதான் என்னிடம் இதை கேட்கிறீர்கள், மூத்தவரே” என்றான். அதை அப்போதுதான் உணர்ந்த யுதிஷ்டிரர் “ஆம், கேட்கவில்லை… ஏனென்றே அறியேன். இதுவே தருணம்போலும்” என்றார்.
“மூத்தவரே, அங்கே அவையில் நிகழ்ந்தது ஓர் நெறியழிவு. அந்த வஞ்சினம் மானுடரில் தெய்வமிறங்கி வந்து உரைப்பது. அதில் ஒரு நிறைவு இருந்தது. இன்று அரசி அதை கைவிடுகையில் அம்முழுமை அழிகிறது. அந்த நெறியழிதலுக்கு அளிக்கப்படும் ஒப்புதல் அது” என்றான் சகதேவன். “ஒவ்வொரு பிழையும் தண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கப்படாத பிழை என்பது மீண்டும் முளைத்தெழுந்து ஒன்றுநூறு ஆயிரமென தழைக்கும். நெறிநூல்கள் மீண்டும் மீண்டும் சொல்வது அதையே.”
“அரசி, அவைநடுவே பெண்ணை சிறுமைசெய்தல் எளிதாகக் கடந்துசெல்லப்பட்டதென்றால் இந்நிலத்தில் வேறு எதுதான் பிழையெனக் கொள்ளப்படும்? அரசி, நாம் அரசர்கள். எப்போதும் இன்றும் நாளையும் எதிர்காலம் முழுக்கவும் நிறைந்திருக்கும் பெருந்திரள் முன் நின்றிருக்கிறோம். நாம் செய்வன அனைத்தும் முன்நிகழ்வுகள், வழிகாட்டல்கள். எண்ணிப்பார், நாளை பிறிதொரு சிறுபிழைக்காக ஒருவனை அரசனின் கோல் தண்டிக்குமென்றால் அவன் கேட்கமாட்டானா, அவைநடுவே பெண்ணை ஆடைகளைதலைவிடவா பெரிய பிழையை நான் செய்துவிட்டேன் என்று?”
“குற்றம் குற்றமேதான், எச்சொல்லால் சொல்லப்பட்டாலும் எங்கு நின்று நோக்கினாலும் எதைக்கொண்டு நிகர்செய்தாலும். அது பருப்பொருட்களைப் போன்று நாமில்லை என்றாலும் நின்றிருப்பது” என்றான் சகதேவன். “தேவி, நெறிநூல்கள் சொல்லும் முதல் வரி ஒன்றே. குற்றமென்பது அதனால் பாதிக்கபட்டவருக்கு எதிரானது அல்ல. மானுடருக்கு எதிரானதும் அல்ல. விராடவடிவென நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரியற்கைக்கு எதிரானதுகூட அல்ல. இங்கே வாழ்வையும், வானில் அறிவையும், கடுவெளியில் அறியமுடியாமையையும் நிரப்பிவைத்திருக்கும் முதல்முழுமைக்கு எதிரானது.”
“எனவேதான் குற்றம் பொறுக்க எவருக்கும் உரிமை இல்லை என்று நூல்கள் சொல்கின்றன. தெய்வங்கள்கூட குற்றத்தைப் பொறுத்தருளியதாக நம் தொல்கதைகள் சொல்லவில்லை. ஒருவருக்கு ஒன்றின்பொருட்டு தண்டனை விலக்கப்படுமென்றால் தண்டிக்கப்பட்ட அனைவருமே நெறிமறுக்கப்பட்டவர்களாகிறார்கள்.” தேவிகை “அப்படியென்றால் இரக்கத்திற்கு இப்புவியில் இடமே இல்லையா?” என்றாள். “உண்டு. தனிமனித உறவுகளில். இது உறவுக்குள் நிகழவில்லை, அவையில் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் பல்லாயிரம் பேரால் அறியப்பட்டிருக்கிறது.”
“அன்று நிகழ்ந்தது என்ன என்று நீங்கள் முழுதறியவில்லை, தேவி. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்று ஓராயிரமென உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே நிகழ்வை அவை கொள்ளும் விரிவையும் கருத்தில்கொண்டே அணுகவேண்டும். அன்று நீங்கள் ஓர் அரசி என அவைநடுவே சிறுமைகொள்ளவில்லை, அங்கு நின்றவள் பெண். இங்கே இல்லந்தோறும் பெண் இருக்கிறாள். அவளை இழித்துநடத்தும் கீழ்மக்களும் இருக்கிறார்கள். அன்றுரைத்த வஞ்சினம் அவர்கள் அனைவருக்கும் எதிராகவே. கைகட்டி அமர்ந்திருந்த மூத்தோரும் கற்றோரும்கூட அதற்கு ஈடு அளித்தாகவேண்டும்.”
“நாளை ஒருவன் பெண்ணை சிறுமைசெய்ய கையெடுத்தான் என்றால் அந்தக் கை அச்சத்தில் குளிர்ந்தமைய வேண்டாமா? அவன் கால்கள் கல்லாக வேண்டாமா? பெண்சிறுமைசெய்வதென்றால் என்ன விளைவென்று பாரதம் அறியவேண்டும். துலாவின் இத்தட்டில் வைக்கப்பட்டது குலமகளின் விழிநீர் என்றால் மறுதட்டில் நூறாயிரம் தலைகள் வைக்கப்பட்டு அது நிகர் செய்யப்படட்டும். அரசி பொறுத்தருளலாம், அவள் அன்னை. நாங்கள் பொறுத்துக்கொள்ளமுடியாது. நாங்கள் இங்கு அவள் மைந்தரின் தந்தையென நின்றிருக்கிறோம்” என்றான் சகதேவன்.
“பழிவாங்குதல் குறித்து சொல்கிறீர்கள்” என்றாள் தேவிகை சலிப்புடன். “ஆண்களின் உள்ளம் அதிலிருந்து விலகவே முடியாதா என்ன?” சகதேவன் “பழிவாங்குதல் என்றால் இழிவா என்ன? நெறியின் வரலாற்றை அறிந்தோர் அதை சொல்லமாட்டார்கள். விலங்குகள் பழி வாங்குவதில்லை. ஏனென்றால் அவை ஒன்றுடனொன்று இயற்கையின் நெறியாலன்றி எந்த அறத்தாலும் கட்டுண்டிருக்கவில்லை. மானுடன் தனக்கென அறத்தை உருவாக்கி அதற்கு ஒப்புக்கொண்டதனால்தான் பழிவாங்குகிறான். தன் குருதியினனுக்காக, தன் குலத்தோனுக்காக பழிவாங்க வஞ்சினம் உரைப்பவன் முன்வைப்பது எதை? வஞ்சமெனும் கீழ்மையை அல்ல. அவன் கொண்டிருக்கும் அறப்பற்று எனும் மேன்மையை. அவன் தன் நலத்திற்காக வாளேந்தவில்லை, தன்னை ஆளும் பெருநெறி ஒன்றுக்காகவே தன்னை அழிக்கவும் சித்தமாகிறான்” என்றான்.
“அரசி, மானுடத்தில் நீதி என்பது பழிவாங்குதல் வழியாகவே நிலைகொண்டது என்று உணர்க! இன்று நீதி என்றும் நெறி என்றும் அறம் என்றும் நாம் எதைப் பேசினாலும் ஆழத்தில் உறைவது பழிக்குப்பழி என்னும் முறையே. பழிதீர்ப்பதை தன்னிடமிருந்து தன் குலத்திற்கு அளிக்கிறான் மானுடன். குலம் அதை அரசனுக்கு அளிக்கிறது. அறத்தில் கனிந்தோர் அதை தெய்வத்திற்கு அளித்து அகல்கிறார்கள். வேறுபாடு அவ்வளவே. நீதி என்பது பாகுபாடில்லாமல், நலம்நாடிச் செய்யப்படும் பழிவாங்குதல்” என்றான் சகதேவன்.
மீண்டும் ஆழ்ந்த அமைதி நிலவியது. “இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான் நகுலன். தேவிகை சீற்றத்துடன் “அப்படியென்றால் இங்கே போர்தவிர்த்தல் என்று பேசிக்கொள்கிறீர்களே அதற்கு என்ன பொருள்?” என்றாள். “போரைத்தவிர்ப்பது குறித்தே பேசுகிறோம், வஞ்சம் தவிர்ப்பது குறித்து அல்ல. நாம் நிலத்தை கைவிட்டோமென்றால் போர் தவிர்க்கப்படுகிறது. ஆனால் துரியோதனன் தொடை பிளக்கவும் கர்ணனின் தலைகொய்யவும் துச்சாதனின் குருதியருந்தவும் தடையேதுமில்லை. அரசர்களை தனிப்போருக்கு அழைக்க ஷத்ரியர் எவருக்கும் உரிமை உண்டு” என்று நகுலன் சொன்னான்.
தேவிகை “அது எப்படி?” என்றாள். “நம் வஞ்சம் நீடிக்கட்டும். நம் மைந்தருக்கு நிலமும் கொடியும் அமைத்துக்கொடுப்போம். இந்த வஞ்சம் நம்முடையது, நம் மைந்தருக்குரியது அல்ல. அவர்களின் மைந்தருக்கும் இதில் இடமில்லை. இருபுறமும் திரண்டுள்ள அரசர்களும் படைகளும் இதில் ஆடவேண்டியதில்லை” என்று நகுலன் தொடர்ந்து சொன்னான். யுதிஷ்டிரர் “அவன் சொல்லும்போது அதுவே சரியென்று தோன்றுகிறது. ஆனால் உள்ளம் எதையோ எண்ணி அலைக்கழிகிறது” என்றார்.
தேவிகை “இது நன்று. நான் இதையே வலியுறுத்துகிறேன். அரசே, அரசி தன் வஞ்சினத்தை களையவேண்டியதில்லை. அதனூடாக நீங்கள் அடையும் இழிவும் தேவையில்லை. இளையவர் சொன்னபடி இங்கே நெறி நிலைகொள்ளட்டும். வஞ்சம் நம்முடையது. நாமே அதை எதிர்கொள்வதே முறை” என்றாள். திரும்பி திரௌபதியிடம் “எண்ணிப்பாருங்கள் அரசி, எவரும் எங்கும் தாழவேண்டியதில்லை. ஆனால் போர் தவிர்க்கப்படுகிறது. நம் மைந்தர் நீடுவாழவும் வழி உருவாகிறது” என்றாள்.
“நான் வஞ்சினத்தைத் தவிர்த்தது எதையும் எண்ணி அல்ல, வஞ்சமிழந்தமையால் மட்டுமே. நான் வஞ்சினம் உரைத்தது அவர்களின் அவையில். ஆகவே அவர்களின் அவையில்தான் அவ்வஞ்சினத்தை நான் விலக்கிக்கொண்டதையும் அறிவிக்கவேண்டும். எண்ணி எடுத்த முடிவு, நாளை காலை கிளம்புவதென்பது. அதை அறிவிக்கிறேன்” என்றாள். யுதிஷ்டிரர் “சகதேவன் சொன்னவற்றை நீ எண்ணவே இல்லை, அரசி” என்றார். “ஆம், எண்ணினேன். நீங்கள் வஞ்சினமொழியவேண்டும் என்று நான் சொல்லவில்லை. போரிடுவதோ தவிர்ப்பதோ தனிப்போர் செய்வதோ அதையும் கைவிடுவதோ உங்கள் விருப்பப்படி. நான் என்னைப்பற்றி மட்டுமே சொல்லமுடியும். நான் இப்போர்க்களத்தில் இனி இல்லை” என்றாள் திரௌபதி.
மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு “மைந்தரின் குருதி விழுமென்றால் அதில் எனக்கு பொறுப்பில்லை என்று அறிவிக்கவே செல்கிறேன். என் மைந்தர், அவர் மைந்தர். படைக்கலமேந்தி களம்புகவிருக்கும் அனைவரும் என் மைந்தரே” என்றாள். “பொறு, அரசி” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்தார். “நீ கிளம்புவதற்கு முன் இரண்டு செய்திகளை தெளிவுபடுத்திவிட்டு செல். சஞ்சயனிடம் அனுப்பப்பட்ட செய்தி என்ன என நீ அறிந்தாகவேண்டும்.” திரௌபதி “அது எவ்வகையிலும் என்னை மாற்றப்போவதில்லை” என்றாள்.
“ஆம், ஆனால் நீ அறிவது நன்று. அத்துடன் இளைய யாதவன் இங்கு வரவிருக்கிறான். அவனிடம் நீ செல்வதை சொல்லிவிட்டு செல்” என்றார் யுதிஷ்டிரர். “நான் எவரிடமும் சொல்லுசாவ வேண்டியதில்லை. இது என் உளம்கொண்ட மெய்” என்றாள் திரௌபதி. “ஆம், அதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போர் இங்கு நிகழ இரண்டு தூண்டுதல்கள். அதில் ஒன்றுதான் உன் வஞ்சினம். பிறிதொன்று அவன் கொண்டுள்ள வேதமுடிபுக் கொள்கை. நீ விலகிக்கொண்டாய் என்று முதலில் அறியவேண்டியவன் அவன். இப்போர் உன்பொருட்டு நிகழ்கிறது என்னும் நடிப்பு இனித் தேவையில்லை என்று அவனிடம் சொல். இதற்கு மேலும் அது நிகழுமென்றால் அது அவன்கொண்ட கொள்கையின் பொருட்டே என அவன் அறியட்டும். அதன் முழுப் பொறுப்பையும் அவனே ஏற்கவேண்டும்.”
திரௌபதி எண்ணியபடி சிலகணங்கள் நின்றாள். “எப்போது வருகிறார்?” என்றாள். “நேற்றுமுன்னாளே கிளம்பிவிட்டான். பெரும்பாலும் நாளைமாலை இங்கிருப்பான்.” திரௌபதி தனக்குத்தானே என தலையசைத்தாள். “சரி, அவரை பார்த்துவிட்டுச் செல்கிறேன்” என வெளியே சென்றாள். அதுவரை அங்குமிங்கும் பறந்து முட்டிக்கொண்டிருந்த உள்ளம் அசைவிழந்து மெல்ல படியத் தொடங்குவதை தேவிகை உணர்ந்தாள். எவரிடமென்றில்லாமல் கடும்சினம் எழுந்து அவள் கைவிரல்நுனிகள் நடுங்கின.
யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் கால்நீட்டி உடல்தளர்த்தி சாய்ந்து “இளையோனே, நாம் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம்?” என்றார். சகதேவன் எழுந்துகொண்டு “மூத்தவரே, நிலநடுக்கம் வருவதற்கு முன்பு விலங்குகள் அலைக்கழிந்து முட்டிமோதுவதை கண்டிருக்கிறீர்களா?” என்றான். யுதிஷ்டிரர் வெறுமனே நோக்கினார். “ஒருமுறை தொட்டிமீன்கள் நிலநடுக்கை உணர்ந்து நிலையழிந்து துள்ளுவதைக் கண்டேன்” என்றபின் புன்னகைத்து தலைவணங்கி வெளியே சென்றான்.