வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5

பகுதி ஒன்று : பாலைமகள் – 5

blதேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை வாங்கி கூர்ந்து நோக்கியபின் குழப்பம் விலகாமலேயே தலையசைத்தான். தேர் நகருக்குள் நுழைந்தபோதுதான் அத்தனை சிறிய ஊர் அது என தேவிகை உணர்ந்தாள். ஒரு சிறிய பெட்டிக்குள் நுழைந்ததுபோலத் தோன்றியது. பெரிய சகடங்கள் கொண்ட தொலைபயணத் தேரில் இருந்து நோக்கியபோது அத்தனை கட்டடங்களும் சற்று கீழே எனத் தெரிந்தன.

இடுங்கலான தெருக்களில் இருந்த நெரிசல்கூட அங்கே பாண்டவர்கள் இருப்பதனால் மிக அண்மையில் உருவானதென்று தெரிந்தது. கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ணம்பூசப்பட்டிருந்தன. “இளைய மைந்தர் அபிமன்யூவின் திருமணத்தின்பொருட்டு செப்பனிடப்பட்டிருக்கலாம்” என்றாள் பூர்ணை. தேவிகை தலையசைத்தாள். “இது நகரமே அல்ல, எல்லைப்புற காவல்கோட்டை. நகரமாகிக்கொண்டிருக்கிறது” என்றாள் சுரபி.

அரண்மனை முகப்பில் சுரேசர் அவர்களை எதிர்கொண்டார். “தாங்கள் வந்துகொண்டிருக்கும் செய்தி நேற்றுதான் இங்கே வந்தது, அரசி. நெடுந்தொலைவுப்பயணம்… உரிய ஏற்பாடுகளுமின்றி” என்றார். “ஆம், உடனே வரவேண்டியிருந்தது” என்றாள். “அரசர் இளையவர்களுடன் அருகே உள்ள சம்புகம் என்னும் சோலைக்கு சென்றிருக்கிறார்… இங்கே நாட்கணக்காக நிகழ்ந்த அரசுசூழ்தல்களால் சலிப்புற்றுவிட்டார். சிலநாட்கள் நூலாய்ந்துவிட்டு வரலாமென்று கிளம்பினார். இளையவர்கள் நகுலனும் சகதேவனும் உடன் சென்றனர்.”

அவள் கேளாமலேயே “பீமசேனரும் பார்த்தரும் நகரில் இல்லை. பீமசேனர் மகதத்திற்கு சென்றிருக்கக் கூடும். அங்கே ஜரர்களில் நமக்கு ஆதரவாக சிலர் உள்ளனர் என்கிறார்கள். பார்த்தர் காம்பில்யம் சென்றிருக்கிறார்” தேவிகை “அரசி இருக்கிறார்களா?” என்றாள். உடனே அவள் வந்த நோக்கத்தை உணர்ந்துகொண்டு “ஆம் ஆரசி, இருக்கிறார்கள்” என்றார் சுரேசர். “தாங்கள் நீராடி சற்று ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். நான் சந்திப்புக்கு ஒழுங்குசெய்கிறேன்.” திரும்பி அருகே நின்றிருந்த ஏவலனிடம் “அரசியருக்கான மாளிகைக்கு அழைத்துச் செல்க! நீண்டபயணம். உடல்நீவும் விறலியரை வரச்சொல்” என்றதும் தேவிகை “தேவையில்லை” என்றாள். சுரேசர் தலைவணங்கினார்.

ஏவலனைத் தொடர்ந்து மகளிர்மாளிகை நோக்கி செல்லும்போது பூர்ணை “அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை முன்னரே சொல்வகுத்துக்கொள்வது நன்று” என்றாள். “ஆம்” என்றாள் தேவிகை. “அரசி, அவர் உங்கள் இணைமனைவி என்பதை மறக்கவேண்டியதில்லை. எந்நிலையிலும் அதை பெண்ணுள்ளம் மறப்பதில்லை. அத்துடன் அவர் இந்திரப்பிரஸ்தத்தில் மும்முடிசூடி அமர்ந்தவர். அனலில் இருந்து பிறந்தவர் என்று சூதர்களால் பாடப்படுபவர். அனைத்தும் நம் உள்ளத்தில் இருக்கவேண்டும்.”

தேவிகை “நான் அன்னையென அவளிடம் பேசப்போகிறேன்” என்றாள். “ஆம், ஆனால் மானுடருக்கு அப்படி நிலையான அடையாளமேதும் இல்லை, அரசி” என்றாள் சுரபி. “அவர்கள் அந்தந்த தருணங்களில் அதற்குரியதை சூடிக்கொள்கிறார்கள். அதை முடிவுசெய்வது அச்சூழலில் எதிர்நிற்போர், அங்கு ஒலிக்கும் சொற்கள், அதற்கு முந்தைய கணத்தில் அவர்களிருந்த நிலை, அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வருசூழல். அரசி, மானுடர் எண்ணத்தாலோ உணர்வாலோ முடிவுகளை எடுப்பதில்லை. பெரும்பாலும் தன்முனைப்பாலேயே முடிவுகளை எடுக்கிறார்கள்.”

தேவிகை “இப்படி ஆராய்ந்துசெல்வதனால் என்ன பயன்? நான் பேசப்போவது மிகமிக எளிய செய்தி. ஓர் அன்னையென எண்ணிநோக்கும்படி கோருகிறேன்” என்றாள். பூர்ணை “ஆம், அரசி. ஆனால் அதை பாஞ்சாலத்தரசியின் ஆணவம் உரசாதபடி உரிய சொற்களில் சொல்லவேண்டும். அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் அவர்கள் விரும்புவதில்லை” என்றாள். தேவிகை தளர்ந்து “நான் என்னடி சொல்வது?” என்றாள். “எளிய முகமன்களில் தொடங்குங்கள். சிபிநாட்டிலிருந்து வந்தது உங்கள் மைந்தன் யௌதேயனையும் பிறமைந்தரையும் பார்ப்பதற்காக என்று சொல்லுங்கள். போர் குறித்து இயல்பாகவே பேச்சு வரும். அப்போது உங்கள் மைந்தரைப்பற்றி சொல்லுங்கள். அவரைப்பற்றிய உங்கள் அச்சங்களைப் பற்றி சொல்லி அழத்தொடங்குங்கள். எண்ணிக்கொள்க, உங்கள் மைந்தரைப்பற்றி மட்டும் பேசுங்கள். பேச்சினூடாக அனைத்து மைந்தருக்கும் உயிரிடர் இருப்பதைப்பற்றி சொல்லுங்கள். அவர்களை எச்சரிக்கவேண்டாம். அவர் தன் மைந்தரைப்பற்றி எண்ணவேண்டுமென்று கோரவும் வேண்டாம்.”

தேவிகை “ஆனால் அவர் மிகவும் கனிந்துவிட்டார் என்றார்கள்…” என்றாள். பூர்ணை “கனியலாம். மிளகும் கனியே” என்றாள். சுரபி “அரசி, அத்தனை எண்ணிச்சூழ வேண்டியதில்லை. நீங்கள் சந்திக்கச்சென்றதுமே அரசி அனைத்தையும் உணர்ந்துகொள்வார்கள். அவர்களின் நுண்ணுள்ளம் அத்தகையது. நேரடியாகவே உங்கள் துயர்களையும் அச்சங்களையும் சொல்லி அடைக்கலம் கோருங்கள். போரைத் தவிர்க்க ஆவனசெய்யவேண்டுமென்று சொல்லுங்கள். ஆம் என ஒரு சொல்லை அவர் சொன்னார் என்றால் நாம் வென்றோம்” என்றாள்.

தேவிகை பெருமூச்சுடன் “என்னவென்றே தெரியவில்லை. என் உள்ளம் அச்சத்தில் தவித்துக்கொண்டே இருக்கிறது” என்றபின் தனக்குள் என “அவளிடம் சென்று கையேந்தும் நிலை அமைந்துவிட்டதே” என்றாள். பூர்ணை “அரசி, இவ்வெண்ணம் உங்கள் உள்ளத்தில் துளியேனும் இருந்தால்கூட அரசி அதை அறிந்துகொள்வார்கள். நான் அஞ்சியது அதையே” என்றாள். தேவிகை “நான் அவளுக்கு எவ்வகையில் குறைந்தவள்? நானும் அரசியே” என்றாள். “ஆம் அரசி, ஆனால் நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லை” என்றாள் பூர்ணை.

சுரபி “ஏன் நாம் பொய்மொழி பேசிக்கொள்ளவேண்டும்? அரசி, நீங்கள் அரசி. அவர்கள் அரசியலாளர். அவர்களே இன்று பாரதவர்ஷத்தின் இரு மையங்களில் ஒன்று. இப்போரைத் தவிர்க்க இருவராலேயே இயலும். இளைய யாதவர் எண்ணவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி உளமிளகவேண்டும். நாம் அதன்பொருட்டே வந்துள்ளோம். போரைத்தவிர்க்க விழைபவர்கள் அனைவரும் அவர்களின் காலடிகளில் பணிந்தேயாகவேண்டும்” என்றாள். தேவிகை சினத்துடன் திரும்பி அவளை நோக்கியபோது காதில் குழைகள் ஆட நிழல் கன்னத்திலும் கழுத்திலுமாக ஊசலாடியது. அவள் விழிகளை இமைக்காமல் நோக்கி நின்றாள் சுரபி. விழிவிலக்கி தேவிகை பெருமூச்சுவிட்டாள்.

blதிரௌபதியின் சேடியான சலஃபை “உள்ளே செல்லலாம், அரசி” என்றாள். தேவிகை உள்ளே சென்றபோது திரௌபதி உயரமற்ற பீடத்தில் அமர்ந்து மடிமேல் பலகையை வைத்து எழுதிக்கொண்டிருந்தாள். எழுதப்பட்ட ஓலைகள் அருகே ஒரு மரப்பேழையில் இருந்தன. புதிய ஓலைநறுக்குகள் பிறிதொன்றில் காத்திருந்தன. விழிதூக்கி “வருக!” என்றாள். தேவிகை அவளை நோக்கியபடி அசையாமல் நின்றாள். அவளிலெழுந்த முதல் எண்ணம் திரௌபதி மேலும் பலமடங்கு அழகுகொண்டிருக்கிறாள் என்பதுதான். முதுமையின் சாயல்களாலேயே அழகுமிகுவதும் இயல்வதுதான் போலும்.

காதோரமயிரில் ஓரிரு நரையிழைகள் இருந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தம்கொண்டிருந்தன. கண்களுக்குக் கீழே மெல்லியநிழல். கழுத்தின் தசை சற்று தளர்ந்திருந்தது. தோள்களில் மென்மணல் என மின்னிய வரிகள்.

திரௌபதி எழுந்து வந்து அவள் முன் நின்றாள். அவள் தோள்களுக்குக் கீழே தேவிகையின் தலை இருந்தது. அண்ணாந்து நோக்கியபோது அவள் முகம் உயரத்திலென தெரிந்தது. அவள் ஆடை சீரமைப்பதுபோல சற்று விலகி தூணில் முட்டி அதை பற்றிக்கொண்டு சாய்ந்து நின்றாள். திரௌபதி புன்னகையுடன் “வருக, அரசி. பார்த்து நெடுநாளாகிறது” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பும்போது பார்த்தது” என்றாள்.

அச்சொல் அவள் விழிகளுக்குள் மெல்லிய மாறுதலொன்றை உருவாக்குவதைக் கண்டதும் அவளுக்குள் கூர்மை ஒன்று விழித்தெழுந்தது. “அஸ்தினபுரியில் நிகழ்ந்தவற்றை சூதர்சொல் வழியாகவே அறிந்தேன். இன்றும் என்னை பதறச்செய்கிறது அது” என்றாள். ஆனால் அவள் எண்ணியதுபோல அச்சொற்கள் திரௌபதியை மேலும் துன்புறுத்தவில்லை. அவள் புன்னகை ஒன்றை அணிந்துகொண்டு அதை தவிர்த்தாள். “ஆம், அதெல்லாம் ஊழ். இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருந்தீர்களா?” என்றாள். தேவிகை “இல்லை, அரசர்கள் நீங்கியதுமே நான் சிபிநாட்டுக்கு சென்றுவிட்டேன்.”

அதைச்சொன்னதுமே அவள் வென்றுவிட்டாளென்பதை தேவிகை உணர்ந்தாள். “இளவரசர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தது நன்று. துரியோதனர் தந்தையென நின்று அவர்களை வளர்த்தார் என அறிந்தேன்.” தேவிகை சொல்லிழந்து வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “ஆம், சிபிநாட்டில் இங்கிருக்கும் ஆசிரியர்கள் இல்லை. மேலும் அவன் தன் உடன்பிறந்தாருடன் இருப்பதே நன்று என்றும் தோன்றியது” என்றாள். “அன்னையர் மைந்தருடன் இல்லாமலிருப்பதே நன்று என்றும் ஆசிரியர் சொல்வதுண்டு” என்றாள் திரௌபதி.

முழுமையாக தோற்கடிக்கப்பட்டவளாக தேவிகை நின்றாள். இவளை என்னால் வெல்லவே முடியாதென நூறுமுறை உணர்ந்தபின்னரும் ஏன் இதை செய்கிறேன்? என்னிலிருந்து ஆட்டுவிப்பதை எப்படி கடப்பேன்? தன்னிரக்கத்தால் அவள் உள்ளம் துயர்கொண்டது. கண்களில் நீர் திரள தொண்டை ஏறியிறங்கியது. “என் மகன்…” என்றாள். அச்சொல்லால் அத்துயரை மடைமாற்றி மைந்தனுக்கானதாக ஆக்கிக் கொண்டாள். “போர் அணுகுகிறது, அரசி… போரில் என் மைந்தன் படுவான் என நிமித்திகர் சொன்னார்கள்.”

“யார்?” என்று திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் சுருங்கியிருந்தன. “சிபிநாட்டில் பீதகிரி என்னும் மலை உள்ளது. அங்கிருக்கும் நாகசூதர்கள் வருபொருள் உரைப்பதில் வல்லவர்கள். அவர்களில் ஒருவர் நெய்க்கலம் நோக்கி சொன்னார்.” திரௌபதி சில கணங்களுக்குப்பின் “அது வருவது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?” என்றாள். “நாம் கைகட்டி நிற்கமுடியுமா? ஊழ் என்றால் அதன் முன் சென்று பாய்ந்து உயிர்விடவேண்டாமா? சாவித்ரி கொழுநனுக்காக யமனை வென்றதை நானும் கேட்டிருக்கிறேன்” என்றாள். திரௌபதி “ஆம், ஆனால் போரில் இறக்கும் அத்தனை மைந்தரின் அன்னையரும் உணர்வது இது” என்றாள்.

தேவிகை சீற்றத்துடன் “எவர் உணர்கிறார்கள் என்று நான் அறியேன். நான் உணர்வது இது. என் மைந்தன் களம்படலாகாது. அவனை நான் காத்தாகவேண்டும்” என்றாள். திரௌபதி “போரிலிருந்து உங்கள் மைந்தருக்கு மட்டும் விடுதல் கோருகிறீர்களா?” என்றாள். தேவிகை கடும் சினத்துடன் பற்களை இறுகக் கடித்து “விளையாடுகிறீர்களா? எவருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியுமா? என்னைப்போன்றவர்களை பூனை எலியை என வைத்தாடும் வல்லமை உங்கள் உகிர்களுக்கு உண்டு. ஆனால் ஊழ் உங்களை வைத்து விளையாடும்” என்று கூவினாள்.

அவள் கொண்ட கட்டுகள் அனைத்தும் சிதறின. “அறிக, நான் கோருவது என் மைந்தனுக்காக மட்டும் அல்ல. உங்கள் மைந்தர் ஐவருக்காகவும்தான்” என்று இருகைகளையும் இறுகப்பற்றி தொண்டையில் நரம்புகள் புடைக்க விழிகள் ஈரமாக வெறித்திருக்க அவள் கூச்சலிட்டாள். “நான் கண்டேன். இறந்துகிடந்தவர்கள் உபபாண்டவர்கள் அனைவரும்தான்… ஒன்பதின்மரும் ஒருவர்கூட எஞ்சாமல் அழிவதைக் கண்டேன். நீங்கள் அன்னைப்பெரும்புலி. பெற்ற குருளைகளை உண்டு பசியாறப்போகும் குருதிவிலங்கு, அதில் என் மைந்தனும் சேரக்கூடாதென்று சொல்லவே வந்தேன்…”

“நீங்கள் அனல்மகளாக இருக்கலாம். பெருநகர் அமைத்து மும்முடிசூடி அமர்ந்த சத்ராஜித்தாக இருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு, நீங்களும் மானுடப் பெண்ணே. மிஞ்சிவிளையாட எவரையும் ஊழ் ஒப்புவதில்லை. உங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது அது. மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்க அது காத்திருக்கிறது. அதைச் சொல்லவே வந்தேன்” என்றாள் தேவிகை. “இந்தப் போர் எவர் பொருட்டு? உங்கள் வஞ்சத்தின் பொருட்டு. உங்கள் ஒரு சொல்லுக்காகவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்கள் படைக்கலமெடுக்கிறார்கள். உங்களுக்காகவே இன்று பாரதவர்ஷம் இரண்டெனப்பிரிந்து போர்முகம் கொண்டுள்ளது.”

“உங்கள் வஞ்சம் வெல்லக்கூடும். ஆனால் நீங்கள் வெல்லமாட்டீர்கள். வஞ்சத்தின் பயனின்மையை உலகுக்கு உணர்த்துவதாக உங்கள் விழிநீர் என்றும் இம்மண்ணில் இருக்கும். இதைச்சொல்பவள் அரசியல்ல, பெண்ணல்ல, வெறும் அன்னை” அவள் சொல்லிழந்து தணிந்தாள். “எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை. வெற்றுணர்ச்சிகளால் ஆளப்படும் வெறும்பெண் நான். நான் எதைச்சொன்னேன் என்றே எனக்குத்தெரியவில்லை” என்று விம்மலுடன் சொல்லி மேலாடையை இழுத்து முகத்தின்மேல் போட்டுக்கொண்டாள்.

“நம் மைந்தருக்காகவே நான் கோருகிறேன். அவர்கள் இளையோர், இன்னும் இவ்வுலகில் எதையும் அறியாதவர். வாழ்ந்தோரின் வஞ்சத்தின்பொருட்டு வாழவேண்டியவர்களை ஒறுப்பதுபோல இழிவு பிறிதில்லை” என்றாள். மீண்டும் அவளிடம் சொற்கள் எழுந்தன. “மைந்தரை இழந்து எதை அடைந்து என்ன? வெல்வது நம் வீரமா அன்றி ஆணவமா? நாம் கொள்வது நிலமா அன்றி பெரும்பழியா?” அவள் பெருமூச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழ சொல்லொழுக்கு முறிந்து தவித்தாள். ஆடையைப் பற்றி முறுக்கியபடி “நான் கெஞ்சி கால்பற்றி கண்ணீர்விடவே வந்தேன். நான் அரசியல்ல, இணைமனைவியும் அல்ல. அடைக்கலம் கோரி வந்த எளியவள் என்றே கொள்க!”

திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை. அவள் மூச்சொலிகூட கேட்கவில்லை. அவள் முற்றிலும் அங்கில்லை என புலன்கள் சொல்ல தேவிகை அவளை நிமிர்ந்து நோக்கினாள். பெரிய இமைகள் சரிய அவள் தலைகுனிந்திருந்தாள். நெற்றிமயிர்க்கற்றை முகத்தில் சரிந்திருந்தது. அந்த அமைதி தேவிகையையும் அமைதிப்படுத்தியது, “எண்ணிநோக்குக, அரசி! நான் உங்களுக்கு எதையும் சொல்லத்தகுதியற்றவள். நூலாய்ந்ததில்லை, அவையமர்ந்து அரசு சூழ்ந்ததுமில்லை. அதெல்லாம் இல்லாதவளென்பதனால் நான் அறிந்த சிலவற்றை நீங்கள் அறியாமலுமிருக்கக் கூடுமல்லவா?” என்றாள்.

சற்று அருகே சென்று “இந்தப்போர் நிகழ்வதே அரசுரிமைக்காக. இது தொடங்கி இருதலைமுறைக்காலமாகிறது. அடுத்த தலைமுறையிலும் இது நீடிக்கக்கூடாது. தன் கொடிவழியினர் பிறரின்றி நாடாளவேண்டும் என்றே அரசர்கள் இருதரப்பிலும் எண்ணுவார்கள். ஆகவே இப்போரில் முதல் அம்புகள் மைந்தர் நெஞ்சுக்காகவே குறிக்கப்படும். குறிபிழைக்காத பெருவில்லவர்களே இருதரப்பிலும் உள்ளனர். போர்தொடங்கியதுமே மைந்தர்பலிகள் நிகழத்தொடங்கும். ஐயமே வேண்டியதில்லை” என்றாள்.

திரௌபதியின் கைகளை பற்றிக்கொள்ள நீண்ட தன் கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு “அவர்கள் களம்படுவதே ஊழ் என்று இருந்தால்கூட நாம் ஒன்றும் செய்யவில்லை என்று இருக்கலாகாது. அரசி, அது நம்மால் நிகழ்ந்தது என்று ஒருபோதும் அமையக்கூடாது. இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது அதை மட்டுமே” என்றாள். திரௌபதி மெல்ல கலைந்து திரும்பிச்சென்று தன் பீடத்தில் அமர்ந்தாள். பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றாள். “நான் இதை எண்ணவில்லை என்றல்ல. ஆனால் இவையனைத்தையும் ஏனோ ஒதுக்கிவைத்து பிறிதொரு உலகில் வாழ்ந்தேன்” என்றாள்.

சுவடிகளை எடுத்துக்காட்டி “முதற்புலவர் எழுதிய சீதையின் கதை. அதையே படித்துக்கொண்டிருந்தேன். உளம் அதில் அமையவில்லை என்று கண்டபோது அதை சுவடியில் திருப்பி எழுதத் தொடங்கினேன். மெல்ல மெல்ல உள்ளிழுத்துக்கொண்டது. இத்தனைநாட்களாக பிறிதில்லாமல் அவள் கதைக்குள்தான் இருக்கிறேன்” என்றாள். “என்னை இழுத்து தரையிலிட்டுவிட்டீர்கள். நான் செய்வதற்குரியவை பல உள்ளன என்று உணர்கிறேன். ஆனால்…” அவள் முகத்தில் தெரிந்த வலி தேவிகையை துயர்கொள்ளச்செய்தது. “அனைத்தும் மிக அப்பால் சென்றுவிட்டன என்று தோன்றுகிறது, தேவிகை” என்றாள்.

“இல்லை, அப்படி தோன்றும். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்களை நாம் செலுத்த முடியும். முதலில் நம் கொழுநர் அவைநின்று உரைத்த வஞ்சம்தான் அவர்களை பின்னகர முடியாமலாக்குகிறது. அந்த வஞ்சத்திலிருந்து அவர்களை நாம் விடுவிக்க முடியும். முதலில் அவ்வஞ்சத்தை நாம் கைவிட்டால்போதும். அது பொருளிழந்துவிடும். அவர்கள் அதைப்பற்றி நின்று எதையும் செய்யவியலாது. அரசி, இன்று அவர்களை சவுக்கென பின்நின்று சொடுக்கி விசைகூட்டுவது உங்கள் வஞ்சினமே” என்றாள் தேவிகை.

“அது நிகழ்ந்தால் அவர்களுக்குமுன் பல வழிகள் திறந்து கிடக்கின்றன. இன்னமும் அங்கே பிதாமகரும் முதலாசிரியரும் முதுதந்தையும் இருக்கிறார்கள் என்பதே நல்லூழ். மைந்தர் அவர்கள் முன் தோள்தழுவிக்கொண்டு வஞ்சம் மறந்தார்கள் என்றால் எவரும் எவரையும் கோழையென்றும் தன்னலத்தான் என்றும் சொல்லப்போவதில்லை” என தொடர்ந்தாள். “இருகுலத்து மைந்தரும் அதேபோல இப்பால் நின்று அவர்களை இணைக்கமுடியும்.”

“.ஆயிரம்தான் போர்வஞ்சம் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு அரசரும் உள்ளூர அஞ்சிக்கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருகுடிப்பிறந்தார் முடிப்பூசலிட்டு போர்முகம் நிற்பது இதுவே பாரதவர்ஷத்தில் முதல்முறை. இந்த முன்நிகழ்வு தொடர்ந்தால் அவர்கள் ஒவ்வொரு குடிக்கும் அது பேரிடராக நாளை வந்துவிழும் என்று அவர்களும் உள்ளறிந்திருப்பார்கள். போர் தவிர்க்கப்படுமென்றால் அது முன்னிகழ்வாகும். அதை எண்ணி அரசர்கள் அனைவரும் ஆறுதலே கொள்வார்கள்” என்றாள் தேவிகை.

திரௌபதி அவள் சொற்களை சரிந்த விழிகளும் சற்றே விலகிய உலர்ந்த உதடுகளுமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலின் கருமைக்குள் அனல்கொண்டதுபோன்றதோர் செம்மை ஓடுவதை தேவிகை கண்டிருந்தாள். அவளை அழகியாக்குவது அது. அனல் மேலும் மேலும் வெம்மைகொண்டு வருவதுபோலத் தோன்றியது. “நாம் என்ன செய்யவேண்டுமென்று தௌம்யரை அழைத்து கேட்போம். இப்போது நாம் செய்யவேண்டியது நீங்கள் வஞ்சமின்றி இருக்கிறீர்கள் என அவர்கள் அறியவேண்டும். அதன்பின் உலகறியவேண்டும்” என்று தேவிகை தொடர்ந்தாள்.

“அதற்கு ஒரே வழி நீங்கள் எந்த முறைமையும் இல்லாமல் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான். எளியபெண்ணாகச் சென்று அஸ்தினபுரியின் அரசியரை தழுவிக்கொள்ளுங்கள். அங்கிருக்கும் மைந்தர் ஆயிரத்தவரை நெஞ்சோடணையுங்கள். அவர்களுடன் விளையாடுங்கள். பிதாமகரையும் முதுதந்தையையும் கால்பணிந்து வணங்குங்கள். அதன்பின் துரியோதனரின் அவையில் நின்று நீங்கள் அவர்மேல் கொண்ட வஞ்சத்தை முற்றாக மறந்துவிட்டதாக அறிவியுங்கள்.”

“முழுமையாகத் தோற்று, அடிபணிந்து, ஒன்றும் எஞ்சாதவளாக அந்நகர்விட்டு விலகி வாருங்கள். நீங்கள் அனைத்தையும் வென்றவர் ஆவீர்கள். ஆணை, அதன்பின் இப்பாரதவர்ஷமே உங்களை பேரன்னை என வணங்கும். அரசரவைகள் உங்களை என்ன சொன்னாலென்ன? அன்னையர் நாவில் அருந்ததிபோல அனுசூயைபோல சாவித்ரிபோல மைத்ரேயிபோல அழியாது வாழ்வீர்கள்” என்றாள் தேவிகை.

“அரசமுடியை கண்டுவிட்டீர்கள். கானகவாழ்விலும் உழன்றுவிட்டீர்கள். இனி உங்களுக்கு எஞ்சுவது என்ன? நம் மைந்தரை நாம் நம்புவோம். அபிமன்யூ மட்டும் போதும். கிழக்கோ தெற்கோ செல்வோம். வென்றெடுக்க மண்ணும் குலங்களும் அங்குள்ளன. நம் மைந்தர் அங்கு அரசு அமைத்து முடிசூடட்டும். அவர்கள் பிறப்பால் இளவரசர்களல்ல அரசி, தோள்வல்லமையால் இளவரசர்கள். ஷத்ரியர்களுக்கு தந்தைவழி நிலம் உகந்தது. குலவழிநிலம் மேலும் உகந்தது. வென்றடக்கிய நிலமோ விண்ணகத்திலும் புகழ்சேர்ப்பது என்கின்றன நூல்கள்.”

திரௌபதி அருகிருந்த நூலை இழுக்க வெளியே மணியோசை எழுந்தது. கதவைத்திறந்து உள்ளே வந்த சலஃபையிடம் “தௌம்யரை அழைத்துவருக!” என்றாள். பின்னர் “அமர்க, அரசி!” என்றாள். தேவிகை ஆடையை ஒதுக்கியபடி அமர்ந்துகொண்டாள். மேலும் சொல்வதற்கேதுமில்லை என்று தோன்றியது. பெருமூச்சுடன் அங்கிருந்த ஓலையை எடுத்துப்பார்த்தாள். அது தொன்மையான ஓலை, பழுப்பேறியிருந்தது. அதிலிருந்த எழுத்துக்களை அவளால் படிக்கமுடியவில்லை. “மிகத்தொன்மையானது. அன்றிருந்த எழுத்துவடிவம்” என்றாள் திரௌபதி. தேவிகை ஓலையை கீழே வைத்தாள்.

திரௌபதி ஓலைகளை ஒவ்வொன்றாக நோக்கி அடுக்கி வைத்தாள். பின்னர் பட்டுநூல்கொண்டு கட்டினாள். அவ்வாறு வெளியே ஒன்றை திருத்துவதென்பது அகம்திருத்துவதே என அறிந்திருந்தாள். அவள் தன் அணிப்பேழையை அவ்வாறு திருத்துவதுண்டு. அவள் அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். தொன்மையான ஓலைகள். தொன்மையான சொற்கள். கல்வி என்பது தொன்மையானவற்றை அறிவது மட்டுமே. வருவனவற்றுக்கு ஏதேனும் ஒழுங்குள்ளதா என்று அறிய வந்தவற்றை அறிவது. வருவனகுறித்த விழைவேதுமின்றி வந்தவற்றை அறிய எவருக்கேனும் இயலுமா என்ன? அவள் கண்டவர்களிலேயே நூலறிந்தவர் யுதிஷ்டிரர். அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் அவள் உள்ளம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது. சொற்களில் விழைவுகளை கண்டடையும் பயிற்சியன்றி அவர் கற்றது ஏதுமில்லை.

அவள் அசைந்தமர்ந்தபோது ஏறிட்டு நோக்கிவிட்டு திரௌபதி மீண்டும் சுவடிகளை அடுக்கிவைத்தாள். சலஃபை வந்து தௌம்யரின் வரவை அறிவித்தபோது அவள் மிக விலகிவந்துவிட்டிருந்தாள், அவர் ஏன் வருகிறார் என்பதுகூட உள்ளத்தில் உறைக்காத அளவுக்கு. திரௌபதி தலையசைக்க சலஃபை சென்று தௌம்யரை உள்ளே அனுப்பினாள். அவர் வந்து வணங்கி முகமன் உரைத்து அமர்ந்தார். அவள் சுவடிக்கட்டை அப்பால் வைத்துவிட்டு நேரடியாக “தௌம்யரே, நான் அஸ்தினபுரிக்கு செல்ல விழைகிறேன்” என்றாள்.

அவர் வாய்திறந்து சொல்லெழாது அமைந்தார். “பானுமதியையும் அசலையையும் பிற பெண்டிரையும் சந்திக்கவேண்டும். முதன்மையாக பேரரசி காந்தாரியை சந்திக்கவேண்டும்” என்றாள். தௌம்யர் “ஆனால்…” என்றார். “நான் என் வஞ்சத்தை கைவிட்டுவிட்டேன் என்று அவர்கள் அறிவதற்காகத்தான் செல்கிறேன். நம் அரசர்களும் குடிகளும் அறியவேண்டும். பாரதவர்ஷமே அறியவேண்டும். என் மைந்தருக்கு உடன்குருதியரான மைந்தர் ஆயிரவர் அங்கிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு தழுவி மீளவிரும்புகிறேன்.”

தௌம்யர் புரிந்துகொண்டார். ஆனால் அவர் உள்ளம் அதை முழுதும் வாங்கிக்கொள்ளவில்லை. “அரசர்களின் எண்ணம்…” என தொடர்ந்தார். திரௌபதி மறித்து “இது என் எண்ணம்” என்றாள். “ஆம், அது நன்று” என்றார் தௌம்யர். “நான் செல்வதற்குரிய தருணம் உடனே ஏதேனுமுள்ளதா? அதை ஆராய்ந்துசொல்லவே அழைத்தேன்” என்றார். “தருணம் என்றால்…” என குழம்பிய தௌம்யர் முகம் மலர்ந்து “ஆம், உள்ளது. உடனடியாகவே உள்ளது. மாத்ருபிரஸ்தானநாள்… பேரரசி சத்யவதியும் அரசியர் அம்பிகையும் அம்பாலிகையும் கானேகியது அன்றுதான். இது அறுபதாம் ஆண்டு. அதை அவர்கள் அங்கே அரசமுறைப்படி கொண்டாடுகிறார்கள். முறைப்படி நமக்கும் அழைப்பு வந்துள்ளது” என்றார்.

தேவிகை “மிகப்பொருத்தமான நாள்” என்றாள். “ஆம், அரசி. அன்னையருக்குரிய நாள் இது. மூதன்னையர் இந்நாளில் தர்ப்பைப்புல் ஏந்தி நெறியுறுதி ஏற்று குடிகளிடமிருந்து முற்றிலும் விலகி புறநோன்பு வாழ்க்கைக்கு செல்வார்கள். கானேகலுக்கு நிகரானது அது. அவர்கள் கங்கைக்கரையில் புற்குடில் அமைத்து அங்கே சென்று வாழ்வார்கள். அவர்களை அவர்களின் குடியினரும் குருதியினரும் சென்று சந்திக்கக்கூடாது. குடியின் எந்த நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்பதுமில்லை. அவர்கள் மண்நீங்கினால்கூட குருதிவழிவந்தவர்கள் அனற்கடனோ நீர்க்கடனோ செய்யக்கூடாது. இதே நோன்புகொண்ட பிறர்தான் அவற்றை செய்யவேண்டும். ஆண்டுதோறும் அளிக்கப்படும் அன்னமும் நீரும்கூட அவர்களுக்கு வேண்டியதில்லை என்பது மரபு” என்றார்  தௌம்யர்.

“அப்பூசனைக்கு நாம் செல்வோம்” என்றாள் திரௌபதி. தௌம்யர் “நீங்கள் செல்வதாக முறைப்படி அறிவித்துவிடுகிறேன்” என்றாள். “தேவையில்லை. நாளை புலரியில் நானும் இவளும் இங்கிருந்தே கிளம்புகிறோம். அச்சடங்குக்குரிய முறைமைகள் ஏதேனுமுண்டா? முன்பு சிலமுறை சென்றது நினைவிலுள்ளது” என்றாள். “மூவன்னையர் ஆலயம் கங்கையின் தெற்குக்காட்டில் உள்ளது. மிகச்சிறிய ஆலயம். மூன்று கிடைக்கற்கள் மட்டும்தான் அங்கே நிறுவப்பட்டுள்ளன. புறநோன்பு கொள்ளும் அன்னையர் ஈன்று மறைந்த குழந்தைகளின் உருவை பச்சரிசியில் அப்பம்போல் செய்து இறைவடிவாக அமைந்திருக்கும் மூன்று அன்னையருக்கும் படைப்பார்கள். பிறர் பச்சரிசியில் செய்த முகங்களை அப்பங்களாக்கி படைத்து அனைவருக்கும் அளிப்பர். வழக்கமான நீராட்டும் பூசனைகளும் மட்டுமே” என்றார் தௌம்யர்.

திரௌபதி “நன்று” என்றாள். தௌம்யர் “பூசனைக்கு ஏழுநாட்களுக்கு முன்பிருந்தே ஆண்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும் என்பதே நெறி. பூசனையில் பூசகர் உட்பட அனைவரும் பெண்களே. தெற்குக் காட்டுக்குள்ளேயே அன்று ஆண்கள் செல்ல ஒப்புதலில்லை” என்றார். திரௌபதி “அதுவும் நன்று” என்றபின் “நான் கிளம்புவதற்குரிய ஒருக்கங்களைச் செய்ய சுரேசருக்கு ஆணையிடுக!” என்றாள். தௌம்யர் தலைவணங்கி “அவ்வண்ணமே” என எழுந்துகொண்டார்.

அவர் சென்றதும் தேவிகை “நான் இத்தனை எளிதாக அனைத்தும் முடியுமென எண்ணவே இல்லை, அரசி” என்றாள் “நெஞ்சிலிருந்து பேரெடை ஒன்று இறங்கியதாகவே உணர்கிறேன்.” திரௌபதி “பார்ப்போம், என் நெஞ்சு எடை இழக்கவேயில்லை” என்றாள். “வஞ்சத்தை மறக்க முடிவெடுப்பது முதல் அடிவைப்பு. வஞ்சத்தை மறப்பது அடுத்தது. அங்குசென்று அம்மைந்தரையும் அன்னையரையும் கண்டு தழுவிக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல, அவர்களும் நம்மவரும் அனைவருமே விடுதலைகொள்வோம்” என்றாள் தேவிகை.

திரௌபதியின் முகம் குனிந்து சொட்டப்போகும் துளி எனத் திரண்டு இருப்பதைக் கண்டு அவள் மேலும் தொடர்ந்தாள் “ஒருவேளை இது இங்ஙனம் நிகழவேண்டுமென்பதற்காகவே இப்படி கூர்கொண்டிருக்கக்கூடும். இது அன்னையர் சொல்லால் நிறைவுற்றாகவேண்டிய ஆடல்போலும்.” திரௌபதி வெறுமனே தலையசைத்தாள். “இன்று முழுக்க இதை நெஞ்சில் ஓட்டிக்கொண்டே இருங்கள், அரசி. எண்ண எண்ண இது விரிவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக கடந்துசெல்வீர்கள்” என்றாள்.

“மெய்யாகவே நீங்கள் இத்தனை எளிதில் வஞ்சத்திலிருந்து விலகுவீர்கள் என நான் எண்ணவில்லை. ஆனால் இப்போது பிறிதென்ன நிகழக்கூடும் என்ற வியப்பே எழுகிறது. நீங்கள் எழுந்த உயரத்திலிருந்து இவர்களை எல்லாம் குனிந்து நோக்கி பொறுத்துக்கொள்வதுதான் இயல்பானது. கானேகி நீங்கள் கனிந்துவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அதற்கு முன் மும்முடிசூடியதுமே அக்கனிதல் தொடங்கிவிட்டிருக்கும் என்று நான் இப்போது எண்ணுகிறேன். எந்தப்பெண்ணும் இவ்வுலகின் வெற்றிகள்மேல் அமர்ந்து நிறைவுகொள்ள மாட்டாள். எய்தியதுமே வெறுமையை கண்டடைவாள். அதிலிருந்தே நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள்.”

“மெய்தான்” என்றாள். திரௌபதி. “நான் கிளம்புகிறேன். இன்றிரவு நான் நன்கு துயில்வேன் என எண்ணுகிறேன்” என்றாள் தேவிகை. அவள் எழுந்தபோது திரௌபதியும் எழுந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள். “நன்று சொன்னீர்கள், அரசி. எனக்குத் தேவையாக இருந்த சொல்” என்றாள். “நம் மைந்தருக்காக” என்றபின் பெருமூச்சுடன் தேவிகை விடைபெற்றாள். கதவைத்திறந்து வெளியே சென்றதும் மெல்லிய ஏமாற்றம்தான் தன்னுள் இருக்கிறதென்று உணர்ந்தாள். அதனுடன் கலந்த அதைவிடமெல்லிய எரிச்சல். அது ஏன் என வியந்தபடி நடந்தாள்.

முந்தைய கட்டுரைஇலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3