உணவகங்களைப் பற்றி…

eSra

மீட்சி

இனிய ஜெயம்,

உணவகங்களின் தர வீழ்ச்சி குறித்து தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். தமிழ் நிலம் கொண்ட பல சொரணை இன்மைகளில் ஒன்று, ருசி சார்ந்த சொரணை இன்மை. அதன் பயனே இந்த தர வீழ்ச்சி, சுவை அறியாத கூட்டத்துக்கு சுவை உடன் கூடிய உணவை அளிக்கும் உழைப்பு, முதலாளியின் கண்ணோட்டத்தில் வீணான ஒன்றே. எனவே இங்கே பெரும்பாலான உணவகங்களில் சமைத்து தங்கம் விலைக்கு விற்கப்படும் உணவுகளில் முக்கால்பங்கு நேரடியாக குப்பை கூடைக்கு செல்லவேண்டியவையே. தமிழ்நிலத்தில் எந்த உணவகத்திலும் உணவு ஆய்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்பவர்கள் நுழைந்தே மாமாங்கம் ஆகிறது.

இதோ இதுவும் உணவகம் ஒன்றின் வீழ்ச்சி பற்றிய கதைதான். அந்த வீழ்ச்சி எங்கே துவங்குகிறது ? எளிய வடிவில் நேரடியாக சொல்லப்பட்ட கதை, ஆனாலும் தனித்துவமான களத்தில் விழுமியங்களின் சரிவு அளிக்கும் வலியும், மேன்மையான உணர்வுகள் அர்த்தமிழக்கும் துயரமும், கூடிவந்த கதை. எஸ்ராவின் அழகிய கதைகளில் ஒன்று.

http://www.sramakrishnan.com/?p=6605

***

அன்புள்ள ஜெ,

நாகர்கோயில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். உணவகம் நடத்தியவன் என்ற அனுபவத்தில் என்ன நிகழ்ந்தது என சொல்லமுடியும். மளிகைப்பொருட்கள் வாங்குவதை வேறு எவரிடமோ உரிமையாளர் ஒப்படைத்துவிட்டார். சமையலில் 90 சதவீதம் சுவை மளிகைப்பொருட்களால் வருவதுதான். பருப்பு, எண்ணை, மிளகுத்தூள் மூன்றையும் கவனித்தால்கூட சுவையை தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால் இவற்றில்தான் போலிகள் மிக அதிகம். குறிப்பாக எண்ணையில்.

இன்னொன்று என்னவென்றால் சமையற்கட்டுநிர்வாகத்தில் கவனம் இல்லாமல் போவது. ஆப்பம் நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மாவு ஃபெர்மெண்ட் ஆகவில்லை. ஆகவே மைதா சேர்த்துவிட்டார்கள். என்ன பிரச்சினை என்றால் 90 சதவீதமும் ஓட்டல்பற்றிய எந்தப்புகாரும் ஓனரிடம் வந்துசேர்வதில்லை. எவருமே சொல்லமாட்டார்கள். பணம் கொடுத்தால் கெட்டுப்போன உணவாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப்போவதும் தமிழக வழக்கம். ஓட்டல் மக்கள் அதிகமாக புழங்குமிடத்தில் இருந்தால் உடனடியாக விற்பனைச்சரிவும் இருக்காது. ஆகவே குறைகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடிக்கும்போது எல்லாம் மாறிவிட்டிருக்கும்.

ஓட்டல் பற்றி நல்ல அபிப்பிராயம் உருவாவது மிக விரைவில். கெட்ட அபிப்பிராயமும் விரைவாக உருவாகும். ஏனென்றால் நம் மக்கள் ஓட்டல் பற்றி நிறையவே பேசுவார்கள். சாப்பாடு ஒரு முக்கியமான பேச்சு நம்மவருக்கு. அபிப்பிராயம் தீ மாதிரி பரவிவிட்டால் அணைக்கவே முடியாது.

எஸ்.மந்திரமூர்த்தி.

***

முந்தைய கட்டுரைகே.ஜே.அசோக்குமாரின் கதையுலகம்-பாவண்ணன்
அடுத்த கட்டுரைகடற்துயர்