விஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்

poomani vishnupuram award

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

ஒரு சிறிய தெளிவுக்காக இக்கேள்வி.

நான் இப்போதுதான் ஒரு வேலையில் நுழைந்திருக்கிறேன். மிகவும் சவாலான வேலை. காலையில் 7 மணிக்குக் கிளம்பினால் இரவு 10 மணிக்குத்தான் திரும்பி வருவேன். ஆகவே நீங்கள் கொடுத்துள்ள எந்த எழுத்தாளரையும் வாசிக்கமுடியவில்லை. சீ.முத்துசாமியையாவது வாசிக்கலாமென நினைத்தேன். நேரம் அமையவில்லை.

வாசிக்காமல் எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடாதென்று நீங்கள் ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். ஆகவே விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வரலாமா என்று சந்தேகம். உங்கள் எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்.

எஸ்

c.mu2

அன்புள்ள எஸ்,

நான் சொன்னது தனிப்பட்ட சந்திப்புகள், உரையாடல்களைப்பற்றி. குறிப்பாக வாசிக்கவில்லை என்பதை ஒரு தகுதி போலவோ, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதுபோலவோ பேசுபவர்களை உத்தேசித்து. மற்றபடி இது ஒரு விழா. அனைவருக்கும் அனுமதி உண்டு.

இது பேசுவதற்காக மட்டுமல்ல, கேட்டுக்கொள்வதற்காகவும்தான். பலதரப்பட்ட படைப்பாளிகள் வருகிறார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாலே பலநாட்கள் அமர்ந்து நூல்களை வாசிப்பதற்கு நிகரான செவிவழி அறிதல் ஏற்படும். கற்றலில் கேட்டல்நன்று என முன்பிருந்தோர் உத்தேசித்தது இதுவே.

இலக்கியவிழாக்களை உலகமெங்கும் அரசுகளும் பல்கலைகளும் செலவு செய்து நிகழ்த்துவதும் இதனால்தான். தமிழகத்தில் இன்று தொடர்ச்சியாக நிகழும் இலக்கியவிழா என்பது இதுமட்டுமே. இந்தவாய்ப்பு மிக அரிது. எளியதயக்கங்கள், அதற்கு ஏதேனும் காரணங்கள் கண்டுபிடிப்பதெல்லாம் நமக்குத்தான் இழப்பு. பின்னர் எண்ணி வருந்தவேண்டியிருக்கும்.

இத்தகைய விழாக்களின் முடிந்தவரை அறிமுகங்கள் கொள்வதும் முடிந்தவரை கேட்பதுமே முக்கியமானது. நான் இளமையில் பங்கெடுத்த விழாக்கள் என்னை உருவாக்கின என்று நினைக்கிறேன். இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இசை, நடனம் அனைத்துக்கும் பொருந்தும். ஒரு திரைவிழாவில் நீங்கள் ஒருநாளில் நான்கு சினிமா பார்க்கமுடியும். வீட்டில் அதை நினைக்கக்கூட முடியாது.. ஒருநல்ல இசைவிழாவில் ஓரிருமுறை கலந்துகொண்டாலே இசைக்குச் செவி திறந்துவிடும். அந்த மனநிலை அவ்வாறு நம்மைக் கூர்மைப்படுத்துகிறது.

ஆகவேதான் விழாக்கள் தேவைப்படுகின்றன. கேரளத்தில் ஓர் ஆண்டில் நான்கு இலக்கியவிழாக்கள், சர்வதேசத் திரைவிழா, நாடகவிழா, நாட்டார்க்கலைவிழா, மரபிசைவிழா, கதகளிவிழாதெய்யம் விழா என பத்துவிழாக்கள் நிகழ்கின்றன. அவை உருவாக்கும் ரசனையே பொதுச்சமூகத்தில் நீடிக்கிறது. இத்தகைய விழாக்கள் ஒருவகை கலவையான அனுபவத்தை அளிக்கின்றன. நாம் எதைக்கற்றோம் என்று நம்மால் அப்போது பகுத்துப்பார்க்கவும் முடியாது. ஆனால் நீண்டகால அளவில் அவ்விழாக்களில்  நாம் அடையும் துளியனுபவங்கள் முளைத்து பெருகி நாம் நெடுந்தூரம் சென்றிருப்பதை அறிவோம்

என்ன முக்கியம் என்றால் இத்தகைய விழாக்களில் நம்மை எங்கே அமைப்பது என்பதுதான். மாணவராக நம்மை அமைத்துக்கொண்டால் சிக்கலே இல்லை. நம்மை முக்கியப்படுத்திக்கொள்ள முயல்லாமலிருப்பது, மிகையாக வெளிப்பட முயலாமலிருப்பது ஆகிய இரண்டு கட்டுப்பாடுகள் மட்டும் இருந்தால்போதும்.நமக்குரிய முக்கியத்துவத்தை நாமே உருவகித்துக்கொண்டு அதை எதிர்பார்த்து ஏமாற்றம் கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். திருவிழாவில் தனிமனிதர்கள் இல்லை, திரளாக இருப்பதே அதன் கொண்டாட்டம்.இயல்பாகச் சாம்பார்வாளியைத் தூக்கிக்கொண்டு அதை நடத்துபவர்களில் ஒருவராக ஆகிறவர்களே முழுமையாக அதில் திளைக்கிறார்கள்.

அனைத்துக்கும் மேலாக இது ஒரு மூத்தபடைப்பாளியை கௌரவிப்பதற்கான விழா. அதில் கலந்துகொள்வது என்பது ஒரு இலக்கியவாசகனாக அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை.

ஜெ

***

https://stamp3.co/download/ilaiyarajas-speech-in-vishnupuram-award-function

முந்தைய கட்டுரைகறுப்புக்கண்ணாடி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎதிரொலித்த சொற்கள்