எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
இப்போது தான் கறுப்புக்கண்ணாடி பதிவு படித்தேன்.
எனக்கு அதிக வெளிச்சத்தை கண்டால் கண் கூசும் பிரச்சினை உண்டு.
8 வருடங்களாக குளிர் கண்ணாடி அணிகிறேன். நண்பர்கள், உறவினர்கள் பின்னர் மாணவர்கள் என்று எல்லாரும் முதலில், ‘என்ன madras eye’ அ என்று தான் கேட்பார்கள். ‘கண்ணிருக்கிறவன் கண்ணாடி போடுறான், நமக்கென்ன பிரச்சினை’ என்று சமாளிப்பேன்.
பின்னர் எல்லாரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். மாணவிகள் உட்பட உங்களுக்கு கண்ணாடி தான் சார் கெத்து என்று சொல்லும் அளவிற்கு கண்ணாடி ஒரு அடையாளமாக மாறிவிட்டது.
வகுப்பெடுக்கும் போதும், உரையாடலின் போது மட்டும் கழட்டி வைத்து விடுவேன். மற்ற படி உடை போல, காலனி போல கண்ணாடி மிக அவசியமான ஒன்று என்றே உணர்கிறேன்.
யார் என்ன சொன்னால் என்ன? ஒரு வாரத்தில் நமது புது தோற்றத்திற்கு ஊர் பழகி விடும்.
மிக்க அன்புடன்
மருது
***
பிகு திரைப்படத்துணுக்கு இணைப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் தானே.. சமீப காலமாக என்னுடைய கடிதங்களுக்கு தங்களிடம் இருந்து எந்த பதிலுமில்லை. அத்தனை மொக்கையாக எழுதவில்லையே என யோசிப்பேன். உங்களின் சிஷ்யப்பிள்ளை ஆயிற்றே ??
தற்செயல் பெருக்கின் நெறி தான் கடைசி கடிதம்.
இன்று தான் காரணம் புரிந்தது. நீங்கள் கறுப்பு கண்ணாடி அணியாமல் தவறவிட்ட விஷயங்களில் அடியேனின் எளிய கடிதங்களும் போய்விட்டன என்று சமாதானம் செய்து கொள்கிறேன் ( கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டேனோ )
நிற்க.. தொடர்ந்து கணினியிலேயே இயங்குவது கூட உங்களின் கண் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
எந்தவிதமான கட்டுரை என்றாலும் உங்களின் சுயபகடி தான் க்ளாசிக்காக இருக்கும்.
இதிலும் கூட. .இந்த வரிகள் அட்டகாசம்
**** எந்தக்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும் ****
மகிழ்ச்சி. .
நன்றி
அன்புடன்
ரா பிரசன்னா
***
அன்புள்ள பிரசன்னா,
புலிப்பாண்டியன் தெரு
ஜெய்ஹிந்து புரம்
விலாசம் கம்பீரமாக இருக்கிறது. பெயர் அதோடு இணையவில்லை. அதிவீரபாண்டியன் போன்று ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளலாமே.
ஜெ
***
இனிய ஜெயம்,
உங்களுக்கான கண்ணாடியுடன் நீங்கள் திரிவதற்கு நீங்கள் எத்தனை சிக்கலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என எழுதிய பதிவு கண்டேன், ஆறுதல் கொள்ளுங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எனக்கான கண்களுடன் திரிவதற்கு நான் படும் பாடு இருக்கிறதே, சொன்னால் கண்ணாடியும் உருகிவிடும்.
பொதுவாக கடலூரில் பொது ஜனத்துக்கு சற்றே புத்தி மட்டு. தம்பி என விளித்தால் மூளை சூம்பி விடும் அபாயம் உண்டு என்பதால், பெரியோர் டே கண்ணாடி, என்றோ, இந்தா சோடாபுட்டி என்றோதான் என்னை அழைப்பர். உனக்குகூடத்தான் மூளை இல்லை, என்ன முட்டா பயலே என பதிலுக்கு கேட்கட்டுமா என நான் ஒரு பெரியோரை பதிலுக்கு கேட்க, அவர் என்னை சொறிநாயை வெளுப்பதுபோல வெளுத்தார். இது ஒரு குறைபாடுதானே அன்றி ஊனம் அல்ல என அறிவு கொண்டு நான் ஆற்றுப்பட மூணரை கழுதை வயது தேவைப்பட்டது.
முதலில் நான் அறிய வந்தது ஊன்று கோல் எப்படி கால் ஆகாதோ, அது போலவே தான் கண்ணாடியும், அது ஒரு சமரச ஒப்பந்தம்தானே அன்றி தீர்வு அல்ல. கண்களின் நேரும் அடிப்படை சிக்கல் நான்கு. தூரத்தில் இருந்தால் தெரியாது, கிட்டத்தில் இருந்தால் தெரியாது, வெள்ளெழுத்து, பொறை.
ஒரு பெருக்கல் குறி. அதன் மையம் அதுதான் நமது விழி லென்ஸ் இல் காட்சி குவிந்து விழும் புள்ளி. அந்த புள்ளி அதில் சரியாக லென்ஸ் அமைந்து விட்டால் பார்வை துல்லியமாக இருக்கும். அந்த புள்ளி லென்சுக்கு முன்பே விழுந்து விட்டால் [அதாவது கண் லென்ஸ் சற்று பின்னால் உள்ளது ] தூரத்தில் உள்ளது மட்டுமே தெரியும். அந்த புள்ளி லென்ஸை கடந்து விழுந்தால் [அதாவது கண் லென்ஸ் சற்று முன்னால் உள்ளது ] கிட்டத்தில் உள்ளது மட்டுமே தெரியும். கண் லென்ஸ் நகர்ந்திருக்கும் தொலைவு பொறுத்து, ஆற்றல் கொண்ட கண்ணாடிகள், எட்ட உள்ளது மட்டுமே தெரியும் என்றால் குவி ஆடியும், கிட்டத்தில் உள்ளது மட்டுமே தெரிந்தால் குழி ஆடியும் கொண்டு அமையும். குவி அடியினர் கண்டிப்பாக கண்ணாடி இன்றி திரிரியக்கூடாது. மாறாக குழி ஆடி வகையினர், எவ்வளவு கிட்டே வைத்து படித்தால் [கண்ணாடி இன்றி ] வசதியோ அப்படி வாசிக்கலாம், விழி நரம்புகளுக்கு எந்த ஊரும் நேராது. காரணம் மேற்கண்ட உதாரணத்தில் உள்ளது.
வெள்ளெழுத்து என்கையில் மூப்பு காரணமாக, அல்லது கண்ணீர் அழுத்தம் காரணமாக சில நரம்புகள் தளர்ந்து, கண் லென்ஸ் சற்றே, மிக மிக சற்றே தளர்வது. விளைவு, வி ளை வு மூன்று எழுத்தும் ஒன்றன் மேல் ஒன்று ஏறிக் கொள்ளும். பெரும்பாலும் மிக மெல்லிய குவி ஆடி கண்ணாடி வழியே இதை கடந்து விடலாம். பொறை வளர்ந்து அது நீக்கப்பட்ட பின், அது கண் லென்ஸை எந்த எல்லை வரை தள்ளியதோ, லென்ஸ் அங்கேயே நிற்கும். குவி ஆடி கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
பார்வை நரம்பு பாதித்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. அதே போல குளுகோமீயா எனும் கண் நீர் அழுத்தம் அதுவும் சிக்கலே. ரெட்டினா பாதித்தால் ஐம்பது சதம் தப்பலாம், லென்சு கார்னியா இதெல்லாம் இன்று வெறும் உதிரி பாகங்கள் எந்த வயதிலும் கழற்றி மாற்றிக் கொள்ளலாம். கண்கள் சார்ந்த சிகிழ்ச்சை பெரிதும் முன்னேறிக்கொண்டு வருகிறது. முன்பு இறந்த ஒருவரின் இரு விழிகளின் விழித்திரை வழியே, இரு நபர் தலா ஒரு கண்ணில் பார்வை பெற முடியும் எனும் நிலை இன்று மாறி, இறந்து போன ஒருவரின் இரு விழித்திரைகள் வழியே, இருவர் இரு கண்களிலும் பார்வை பெற முடியும் எனும் நிலை வந்திருக்கிறது. ஆம் லேசர் கொண்டு தானம் பெரும் கரு விழியை இரண்டு அடுக்குகளாக பிரித்து எடுக்கிறார்கள்..
சிக்கல் எங்கே துவங்குகிறது என்றால், கண்ணாடி வணிகம் உள்ளே நுழைகையில் துவங்குகிறது. தொடர்ந்து வாசிப்பது, படம் பார்ப்பது, மற்றும் கால்சியம் குறைவு இணைந்து சில இளைஞர்களுக்கு இந்த வெள்ளெழுத்து போல ஒரு சிக்கல் தலை தூக்கும். [அரவிந்தோ ஆஸ்ரமம் இதற்க்கு மிக அருமையான பயன்தரும் கண் பயிர்ச்சி வகுப்பு நடத்துகிறது ] சில பயிர்ச்சிகள், நல்ல ஓய்வு, நல்ல உணவு, வாசிக்கும் முறை படம் பார்க்கும் முறை இதன் பின்னணியில் அமையும் ஒளி அமைப்பை மாற்றுவது வழியே இதிலிருந்து விடுபட முடியும். ஆனால் பெரும்பாலும் உங்களுக்கு கிடைக்கும் பதில் ”உங்க இடது கண்ல கொஞ்சம், பயப்பட ஒன்னும் இல்ல ரொம்ப கொஞ்சம், அதாவது பாய்ண்ட் பைவ், அதெல்லாம் ஒரு பவரே இல்ல. ..அதுகூட ரீட் பண்ணும்போது மட்டும் போட்டுக்கங்க ” என்பதாகவே இருக்கும். போட்டு சரியாக ஒரே மாதத்தில் ஒற்றை தலைவலியை சம்பாதித்த பல இளம் நண்பர்கள் எனக்குண்டு.
நமது பார்வை என்பது விழித்திரையில் தலைகீழாக விழும் ஒன்று என நாமறிவோம். நாமறியாதது நிலவை சுற்றிய ஒளி வட்டம் என்பதை உதாரணமாக கொண்டு, வலது விழி புலன் நிலவை மையம் கொண்டது, இடது விழி புலன் அந்த ஒளி வட்டத்தை மையம் கொண்டது, இரண்டும் இணைந்து மூளை அதை தலைக்கீழாக மாற்றும், ஜலபுலஜங் வழியேதான் நாம் முப்பரிமாணத்தை அனுபவிக்கிறோம். இடது விழியை மட்டும் கொண்டு நோக்கினால் மையம் சற்று கலங்கலாக தெரியும். காரணம் நமது பார்வை அமைப்பில் குருட்டுப் புள்ளியின் செயல்பாடு தடைபடுவதே.
அடுத்த சிக்கல் கண்ணாடி கடையில் துவங்கும் [கடலூர் போன்றதொரு டப்பா நகரத்தை சொல்கிறேன் ] உங்கள் மூக்கை மையமாக கொண்டு அளந்தால், உங்கள் வலது காது, மற்றும் இடது காது இரண்டும் துல்லியமான இடத்தில் அமைந்தது இல்லை. இதை அளந்து கண்ணாடி காது ஆல்டர் செய்யும் பழக்கமே எங்கும் கிடையாது. அடுத்து கண்ணாடி பவர், குழி, குவி எதுவானாலும் அதன் மையம், விழிக்கருமணி மையம் எதுவோ சரியாக அதற்க்கு நேரே வரும் வண்ணம் கண்ணாடி அமைய வேண்டும். காது போலவே நமது கண் லென்ஸ் ஸும். சில சமயம் அது சுவர் போல நேராக இல்லாமல், சற்றே திரும்பியோ, அண்ணாந்தோ, குணிந்தோ இருக்கும், குழி குவி ஆடிகளின் பரப்பு, இந்த சாய்வுக்கு இணையான பாகையில் அமைய வேண்டும். பெரும்பாலான சோடாபுட்டி கடைகள் உண்மையில் புட்டி சோடா விற்கவே லாயக்கு. இதில் எந்த ஆப்டிகலும் கவனம் செலுத்தாது. இத்தனை கவனத்துடன் ஒரு கடை இருந்து அங்கே இன்று ஒரு கண்ணாடி, சாதாரண வெள்ளெழுத்து கண்ணாடி வாங்கினால் அதன் விலை இன்று இருபதாயிரம். நிற்க.
இந்த பயணத்தில் கண்ணாடிகள் அளிக்கும் எல்லா விளையாட்டையும் நான் விளையாடி இருக்கிறேன். குறிப்பாக போலராய்டு சன் கிளாஸ்.
கண்ணாடி வியாபாரிகள் தாங்கள் விற்பதற்கு எது தேவையோ அதை மட்டும் காட்டுவார்கள். மிஷ்கின் போன்றோர் எதை பார்க்க வேண்டுமோ அதை மட்டுமே பார்ப்பவர்கள். இதன் மறுபக்கம் ஒன்றும் உண்டு. இந்த கண்ணாடி வழியே பார்த்தால் வானவில் தெரியாது. காரணம் எளிது புற ஊதா துணை இன்றி வானவில்லை பார்க்க இயலாது. இப்படி பல தெரியாதுக்கள் உண்டு, இது சாம்பிள் மட்டுமே.
எனது கோரஷ்டை தினங்களில் கண்கள் வழியே பல பரிசோதனைகளை செய்திருக்கிறேன். அதில் கண்டடைந்த ஒன்று இது. குறிப்பாக மூன்று மாதம் இரவும் பகலும் கருப்பு கண்ணாடி அணிந்தால் அதன் பின் அழகிய நிலக்காட்சி கனவுகள் எதுவும் வராது. காரணம் நாம் வெறும் கண்ணால் காணும் பல நில காட்சிகளில் குருட்டுப் புள்ளி யின் பங்கும் உண்டு.
நாம் காணும் காட்சி குருட்டுப் புள்ளியின் சொட்டை இல்லாமல் தெரிய காரணம், அந்த சொட்டையில் ஆழ்மனம் இணை காட்சி ஒன்றை இட்டு நிறவுவதே. சரியாக மூன்றே மாதம் மூளையின் இந்த செயல்பாட்டை செய்யும் அமைப்பு வேலை மிச்சம் என்று உறங்க சென்று விடும். அதன் பின் ஆழ்மன கனவின் செல்வம் குறைந்துவிடும். மீண்டெழ ஆறு நாள் தேவைப்படும். ஆம் பலமுறை மீண்டும் மீண்டும் செய்து பார்த்து நான் அறிந்தது இது.
பாத்து செய்யுங்க :))
கடலூர் சீனு
***