இன்றைய காந்தி – ரா.சங்கர்

sankar

பெரும்பாலானவர்களைப்போல எனக்கும் காந்தி குறித்து பிழையான புரிதல்களே இருந்தன, ஜெயமோகனின் இன்றைய காந்தியை வாசிக்க நேர்ந்தது நல்லுாழ் என்பேன். நம்முன் நிறுத்தப்படும் அத்தனை ஆளுமைகளையும் நம்மைப்போன்று மலினப்படுத்தவே நம் அகம் விருப்பம் கொள்கிறது. தொடரந்து போலிகளைக் கண்டு ஏமாற்றம் கண்டு வரும் நமக்கு அப்பழுக்கற்ற லட்சியவாதிகள் இம்மண்ணில் சாத்தியமே இல்லை என்று நம்புவதுதான் ஆசுவாசமாக இருக்கிறது.

காந்தி என்றதும் என் நினைவில் இருந்த சித்திரம் ”அரிச்சந்திரன் கதையால் ஊக்கம் பெற்றவர், அறிவியல் சாதனைகளை புரிந்துகொள்ள மறுத்த பிற்போக்குவாதி, தாயார் இறக்கும் தருணத்தில் கூட மனைவியோடு கொஞ்சிக்கொண்டிருந்தவர்” என்பவை தான். மேலும் அதிகமாக தன் லட்சியத்திற்காக தன் மனைவியை, மகன்களை பலி இட்டவர் என்பதும். கேட்க நேர்ந்த பெரியவர்கள் அத்தனைபேரும் தவறாமல் காந்தியை பிரிவினை வாதி என்றும், தலித்துக்களுக்கு எதிரானவர், இந்துத்வா என்றும் புகட்டியிருந்தார்கள். மதவாதிகளை அரசியல்வாதிகளை அடித்துநொருக்கிய ஓஷோ காந்தியையும் துாள்துாளாக்கி என் அகங்காரத்தை வீங்கச்செய்திருந்தார். பதின்பருவ விருப்பமாக புரட்சிகரம் மட்டுமே இருந்தது. ஒரு நள்ளிரவில் மகத்தான தலைவன் ஒருவன் துப்பாக்கி நுனிகள் கொண்டு இம்மண்ணில் சொர்க்கத்தை கொண்டுவரக்கூடும் என்று நம்பியிருந்தேன்.

விதிவிலக்கின்றி லட்சியவாதிகளைச் சுற்றித்தான் எப்போதும் அதிகமான அவதுாறுகள்.. காந்தி வரலாற்றால் கைவிடப்பட்டவர். அனைத்தையும் கருப்பு வெள்ளை என்று எளிதாக மதிப்பிடும் சிந்தனைச் சோம்பல் கொண்டவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர். ஆயிரம் நுால்கள் எளிதினாலும் கரைந்துபோகாத தீராப்பலிகளால் களங்கம் சுமத்தப்பட்டவர்.

indraya-gandhi-58909

படைப்புமொழி கைவரப்பெற்ற புனைவெழுத்தாளனின் சொற்கள் ஒன்றே எந்த ஒரு சித்தாந்தத்தையும் மிக எளிதாக விளக்கக்கூடும் என்பதற்கு இந்நூல் மிகச்சிறந்த உதாரணம். ..

பள்ளிப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த சத்திய சோதனை முப்பது ஆண்டுகளாக கையில் இருந்தும் ஒருபோதும் வாசிக்கத் தோன்றியதில்லை. அந்தளவுக்கு வரலாற்றாசிரியர்களால் காந்தி உற்சாகம் தராதவராக கற்பிக்கப்பட்டுள்ளார். படிக்கும் காலத்தில் வள்ளுவரைப்போன்றே மிக நெருக்கமாக காந்தி புழக்கத்தில் இருந்தாலும் வள்ளுவரை அறநெறிக்குள் அடைத்து சிறுமைப்படுத்தியதைப் போன்றே காந்தியையும் கேலிச்சித்திரம் வரைந்து கடந்துவருகிறோம். இளைஞர்களில் காந்தியைப் பற்றிய சரியான புரிதல் உள்ளவர் ஆயிரத்தில் ஒருவராவது இருப்பாரா என்பது ஐயமே.

காந்தியின் வாழ்க்கை, இந்திய அரசியலில் அவரின் பங்களிப்பு, அவர் விட்டுச்சென்ற வழிகாட்டுதல்கள் என்று காந்தியை உருப்பெருக்கி கொண்டு நம்மை நெருங்கிவரச்செய்துள்ளார் ஜெ. வாசிக்கும்தோறும் காந்தி மீது ஐம்தாண்டுகளாக விழுந்துவரும் திரைகள் விலகக்காண்கிறோம். கேள்விப்பதில் வடிவில் உள்ள கட்டுரைகள் என்பதால் சுவராசியமாக வாசிக்கவும் முடிகிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக காந்தியை அறிந்துகொண்ட முறையை விரிவாக எழுதிச்செல்லும் ஜெ இந்நுாலை பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோட்ட வேகத்தோடு இட்டுச்செல்கிறார்.

காந்தி பல்லாயிரம் மரங்கள் கொண்ட காடு போன்றவர். ருசி அறிய அத்தனை மலர்களிலும் அமர்ந்து அருந்த நமக்கு நேரமிருப்பதில்லை. ஜெ அதை சுலபமாக்கி உள்ளார். பத்தாண்டுகளாக அவர் வாசித்துக்கற்ற காந்தியின் சாரத்தை நமது உள்ளங்கையில் வைக்கிறார். நம் அறிவுச்சூழலில் காந்தி மீது தொடரந்து வைக்கப்பட்டு வரும் அவதுாறுகளை மிகவிரிவாக வரலாற்றுத் தகவல்கள் கொண்டு புரியவைக்கிறார்.

இந்நுாலின் பங்களிப்பு என்ன என்பதற்கு அவரின் வார்த்தைகளே போதும்.

”நான் இப்படிச் சொல்வேன். இந்நுால் குறுகிய பிளவுவாத நோக்கில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்துகொள்ளும் முறைக்கு மாற்றாக விரிவான ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் காந்தியையும் காந்தியத்தையும் புரிந்து கொள்ள முயல்கிறது. ஏதேனும் ஒரு அரசியல் தரப்பு அல்லது கொள்ளையை மையமாக்கி காந்தியை மதிப்பிடுவதற்குப் பதிலாக கருத்தியலும் வரலாற்றின் சாத்தியக்கூறுகளும் கொள்ளும் ஊடுபாவுகளில் வைத்து காந்தியை மதிப்பிடுகிறது.

 

gandhi

மூன்று பகுதிகளாக காந்தியன் ஆளுமை, அரசியல், தரிசனம் என இந்நுால் பகுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வெற்றிகளைப்போலவே அவரின் வீழ்ச்சிகளையும் துல்லியமாக ஜெ மதிப்பிட்டுள்ளார். மிக முக்கியமாக இன்றைய காலகட்டத்திற்கு காந்தியின் அவசியம் குறித்து பேசி உள்ளார்.
புரட்சியாளர்களை நம்பும் விடலைப்பருவ ஏக்கம் இன்று காலாவதியாகிவிட்டது. விரிந்த வரலாற்றுப் பார்வை கொண்டவர்களுக்கு காந்தியத்தின் மனிதப்பலிகளற்ற வெற்றியே இன்றைய சிறந்த அரசியல் நெறி என்பது புரிந்திருக்கக்கூடும். உங்களுக்கு உடனே கேட்கத்தோன்றும் கேள்விகளுக்கு இந்நுாலில் பதில் இருக்கிறது என்பதால் வாங்கி வாசித்து அதன்பின் விவாதிக்க வாருங்கள்.

ஓஷோவை புறந்தள்ளி காந்தியை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஓஷோ அளவிற்கு காந்திக்கு இலக்கியம் குறித்து போதிய புரிதல்கள் இல்லை என்ற போதிலும்.

ரா.சங்கர்

***

காந்தியை அறிதல் இன்றைய காந்தி ஜெயமோகன் (கட்டுரைத் தொகுப்பு) தமிழினி வெளியீடு முதல்பதிப்பு டிசம்பர் 2009

 

முந்தைய கட்டுரைஎதிரொலித்த சொற்கள்
அடுத்த கட்டுரைகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்