லாரல் ஹார்டியும் பொருள்வயப்பேருலகும்

download

நாலைந்து நாட்களாகவே யூ டியூபில் லாரல் ஹார்டி நகைச்சுவைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் சிறுவனாக இருக்கும்போது குலசேகரம் திரையரங்குகளில் சொந்தமாகவே ஓரிரு லாரல் ஹார்டி படத்துண்டுகளை வைத்திருப்பார்கள். அவற்றை மல்லனும் மாதேவனும் என்பார்கள் உள்ளூரில். பலரும் பிறந்ததுமுதல் அவற்றைப் பார்த்துவந்தவர்கள். ஆனாலும் வெடிச்சிரிப்பு.

இரண்டாவது ஆட்டம் சினிமா 11 மணிக்குத்தொடங்கி பின்னிரவு 3மணியளவில் முடியவேண்டும். சந்தையில் வாழைக்குலை கொண்டுசென்று வைத்துவிட்டு படம் பார்க்கச்செல்வோம். நான்கு மணிக்குத்தான் லாரிகள் வரும். ஒரு கடும்சாயா குடித்துவிட்டு சந்தைக்குசெல்வோம். அதுவரை படம் ஓடியாகவேண்டும். நாடோடிமன்னன் எல்லாம் விடியும்வரைக்கூட ஓடும். புதியபடம் என்றால் கோணக்கால் என்னும் சார்லி சாப்ளின், பிறகு மல்லனும் மாதேவனும்.

காத்திருந்து தேடித்தேடி அனுபவித்தவை கையெட்டும் தொலைவில் கொட்டிக்கிடக்கின்றன என்பது இணையம் அளித்த வரம். லாரல் ஹார்டி படங்களை இப்படி நாளுக்கு இரண்டுவீதம் பார்ப்பேன் என எண்ணியதே இல்லை. இப்போதும் சிரித்து மலர்ந்த முகத்துடன் தூங்கச்செல்கிறேன்.

சார்லி சாப்ளினை விட இப்போது லாரல் ஹார்டி பிடித்திருக்கிறது. சாப்ளினில் இருக்கும் கசப்பும், விமர்சனமும். தத்துவமும் இதில் இல்லை. எனக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதனால் பொதுவாக முற்போக்குக்கருத்துக்கள் பிடிப்பதில்லை. சாப்ளின் புத்தகத்தில் எழுதப்பட்டவை உண்மை என நம்பி மோசம்போன   உள்ளூர் இடதுகம்யூனிஸ்டுத் தோழர் போலத் தெரிகிறார். அனுதாபம் கலந்த சிரிப்பே வருகிறது. லாரல் ஹார்டி ஒரு குழந்தைவிளையாட்டு. பெரியவர்களில் எழும் இரு குழந்தைகள்.

இப்போது என்ன தோன்றுகிறதென்றால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நான் பல லாரல் ஹார்டிகளைப் பார்த்திருக்கிறேன் என்று. இதேபோன்ற முகஅமைப்பும் பாவனைகளும் பேச்சுமுறைகளும் கொண்டவர்கள். குறிப்பாக ஹார்டி பொறுமையிழக்கும் முகபாவனையை பெரும்பாலான விமானநிலைய அதிகாரிகள் என்னுடைய இந்திய ஆங்கிலம் [சரி, ஆங்கிலம்மாதிரி ஒன்று] ஒலிக்கக்கேட்கும்போது காட்டுகிறார்கள்.”Well ,now,and,your name is Mr Bahu?”  “No sir, I am jeyamohan”  “Call me Tom” ” Yes Sir” ” Don’t say sir.” ” Yes Tom”  “Come on” “Ok ” “Oh,Come on please…” “What?” “”Well may I know what is your problem Mr Bahu?” “My name is Bahuleyanpillai Jayamohan,sir” ” Oh come on, I said it.. And don’t call me sir”  இந்த எல்லா வரிகளுக்கு முன்னாலும் மூன்றுதாடைகள் கொண்ட துரை ஹார்டி  போலவே முகம் காட்டுவதை கற்பனை செய்யுங்கள்

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்து நாகர்கோயிலில் நின்று “மாஹா -பாலி -பூரம்?” என கேட்கும் துரைகளில் பலசமயம் லாரலின் முகம் எழுகிறது. நெரிசலான ரயிலில் பத்தமடைப்பாயைச் சுருட்டி வைத்த பெரிய முதுகுப்பையை ஒரு சடலத்தை என அவர்கள் திணிக்கிறார்கள். “Is it Cape Comrin?” என்று கேட்டு “ஒக்கே” என பதில் பெற்று அமர்ந்து லாரல் போலவே புருவம் தூக்கி “வெல்” என்கிறார்கள்.

தற்செயல்கள், கைப்பிழைகள், புரிதல்கோளாறுகளின் உலகம் லாரல் ஹார்டி முன்வைப்பது. உண்மையில் அது நாம் நினைப்பதைவிட பெரியது. அன்றாடம் அதில் திகிலுடன் புழங்கிக்கொண்டிருப்பவன் நான். உதாரணமாக நேற்று நான் என் எடையைப்பற்றிய கவலையை அடைந்தேன். நடைசென்றபோது நடக்க நடக்க சிரமமாக இருந்தது. வந்தபின்னர்தான் ஒரு செருப்பு அஜிதனுடையது எனத் தெரிந்தது.

அத்தனை பொருட்களும் என்னுடன் ஒரு விளையாட்டை நடத்திக்கொண்டிருக்கின்றன. நேற்றுமுன்தினம் குடிநீர் வடிகட்டியை திறந்தால் நீர் இல்லை. ஆகவே அதன் சுவிட்சை ஆன் செய்தேன். நீர் ஊறட்டும் என்று விட்டுவிட்டு வந்தேன். கடைத்தெருவுக்குச் சென்று அங்கே ஒருவரைப்பார்த்து ‘ஓகி இப்டி சாச்சுப்போட்டே” என்ற சொற்றொடரையே உரையாடலாக விரித்து விரித்து நீட்டிவிட்டு வீட்டுக்கு வந்தால் சமையலறையும் கூடமும் நீர்நிறைந்திருந்தன. வடிகட்டப்பட்டு உப்புநீக்கம் செய்யப்பட்ட தூயநீர்.

அருண்மொழி இல்லாத ஒருநாளில்  கேட்டை பூட்டி, இரும்புகிரில்லை பூட்டி கதவையும் பூட்டிவிட்டு கொல்லைப்பக்கம் விரியத்திறந்துகிடக்க சென்றுபடுத்து தூங்கி காலை எழுந்து வந்து பார்த்து திடுக்கிட்டேன். உள்ளே வந்து படுத்திருந்த டோராவும் திடுக்கிட்டது. மாறி மாறி குரைத்துக்கொண்டோம். வழக்கமாக நிகழ்வது, அத்தனை துணிகளையும் பதமாக அடுக்கி வைத்திருக்கும் பீரோவிலிருந்து அடியிலுள்ள சட்டையை இதமாக உருவ முனைந்து மொத்தமும் சரியப்பெறுவது. தரையிலிருந்து கந்தலாகப் பொறுக்கி திணிக்கவேண்டும்..

தத்துவார்த்தமாகச் சொல்லப்போனால் நம்மைச்சூழ்ந்து பொருட்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு ஒரு காரியகாரண வலையை உருவாக்கியிருக்கின்றன. அதையே நாம் பொருள்வய உலகம் என்கிறோம். இந்தப்பொருள்வய உலகம் ஒட்டுமொத்தமாகவும் தனித்தனியாகவும் நம்முடன் தொடர்புகொண்டுள்ளது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அவற்றுக்கும் நமக்குமான உறவு நாம் எண்ணியபடி அமைந்துள்ளது என்று. அவற்றுக்கிடையே உள்ள உறவை நாம் முழுமையாக அறிவோம் என்று. அது பொய் என ஒருநாளில் பத்துதடவையாவது எனக்குத் தெரியவருகிறது.

கேஸ்அடுப்பில் டீ போடும்போது அருகே இருக்கும் கரண்டியை நெருப்பு தீண்டுகிறதென்பது நாம் அதை எடுத்து அப்பால்வைக்க முயல்வதுவரை தெரிவதில்லை. கையை உதறி அலறும்போது சரியாக உருண்டு கீழே விழுவதற்காக சீனிடப்பா விளிம்பில் காத்திருக்கிறது. கொல்லைப்பக்கத்தில் ஒரு சிறிய குப்பைக்கூடை. அதை எப்படித்தூக்கி வைத்தாலும் என் காலில் இடறிக்கவிழும். அந்தத் தர்க்கத்தை இன்றுவரை அறிவியல் விளக்கவில்லை.

லாரல் ஹார்டியின் சிக்கல் முதன்மையாகப் பொருள்வய உலகின் விதிகளில் உள்ள ஒழுங்கின்மைதான். கிறிஸ்துமஸ் மரம் விற்கப்போய் கதவைத்தட்டினால் வேண்டாம் என்று மறுத்து வாடிக்கையாளர் கதவைச்சாத்தும்போது ஒவ்வொருமுறையும் ஹார்டியின் சட்டைநுனி மாட்டிக்கொள்கிறது.  அதை இயற்பியலைக்கொண்டு விளக்கமுடியாது. சமணர்கள் அதை ஊழ் என்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு பிழையும் இன்னொரு பிழையை உருவாக்குகின்றது. ஆகவே ஒருபிழை செய்தால்போதும், பிழைகளின் உலகில் வாழலாம். இதை பௌத்தர்கள் பிரதீதசமுத்பாதம் என்கிறார்கள். தத்துவமாக இதற்கு மேலே கூடச்    சொல்லலாம்தான், வேடிக்கை குறைந்துவிடும்.

திரும்பத்திரும்ப லாரல்-ஹார்டி படும் குழப்ப அவஸ்தைகளை மிக அணுக்கமாக உணர்கிறேன். இது என் பள்ளிநாள் முதல் இன்றுவரை தொடர்வது. முழுப்பரீட்சையும் எழுதியபின் எஞ்சிய மை எவ்வளவு என்று பார்க்க பேனாவை திறந்து மொத்த விடைத்தாளையும் நீலவண்ணமாக கொடுத்து தோல்வியடைந்த கண்ணீர்கதை முதல் சொல்லிக்கொண்டே வரமுடியும். பொருள் வய உலகம் நம்மிடம் நீயும் ஒருபொருள்தான் என சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாம் அதை ஒப்புக்கொள்வதில்லை. அது நம் மண்டையில் குட்டிக்கொண்டிருக்கிறது.

ஆகவேதான் இயந்திரங்களின் உலகுடன் அவர்களுக்கு நிரந்தரப்பிரச்சினை இருக்கிறது. இயந்திரங்கள் என்பவை பொருள்வய உலகை சில தேற்றங்களாகப் புரிந்துகொண்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒருசில செயல்பாடுகளாகச் சுருக்கிவிடுபவர்களால் உருவாக்கப்பட்டவை.. குரங்குகளைக்கொண்டு ராணுவம் அமைப்பதுபோல. பொருட்கள் ஒருபோதும் அந்த ஒழுங்குகளுக்குள் நிற்பதில்லை. ஆகவே பழுதுநிகழாத இயந்திரம் இல்லை. ஒவ்வொரு பழுதும் ஒவ்வொரு வகை. எனக்குத்தெரிந்த ஒருவரின் காரில் ஒவ்வொரு முறை கிளப்பும்போதும் ஊளை எழுகிறது. என்னவென்று கண்டுபிடிக்கமுடியாமல் பேய்கூட ஓட்டிப்பார்த்தார்கள்.

இயந்திரங்களாக மாறிநின்றிருக்கும் பொருட்கள் நிபுணனை நோக்கி “நான் சொன்னேனா, இந்தந்த விதிகளின்படித்தான் செயல்படுவேன் என்று? எனக்குத்தோன்றியபடிச் செய்வேன். பொத்திக்கிட்டு போவியா?” என்கின்றன. லாரலும் ஹார்டியும் இயந்திரங்களுடன் முரண்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை அவை கண்ட இடத்தில் முட்டுகின்றன. பிடித்துத் தள்ளுகின்றன. திரும்பிப்பார்த்தால் தேமே என்று இருக்கின்றன ஒரு படத்தில் இயந்திரம் ஹார்டியை உமிழ்ந்துவிடுகிறது.

இன்னொன்று மொழி. பொருளையும் சொல்லையும், மொழியையும் பொருட்களையும் நாம் தோராயமாகவே இணைக்கிறோம் என்று தெரிதா சொல்கிறார். அந்தப்பிரச்சினையின் நடைமுறைதானே லாரல்-ஹார்டி கதைகள்.ஹார்டி சொல்வதை எப்போதும் லாரல் புரிந்துகொள்கிறார், அவருக்குரிய பொருளில். அப்பொருள் செயலாக ஆகும்போது ஹார்டி அதை உடலால் புரிந்துகொள்கிறார்.

அருண்மொழி “ஜெயன், இந்த இதை, அதான் அந்த அது, எடுத்து அந்தா அங்க வச்சிட்டு வா… அதான் இது… சொல்றேன்ல” என்று சொல்வதை என்னைச்சூ ழ்ந்துள்ள பொருள்வய உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? அவள் சொன்னதற்கேற்ப ஊறவைக்கப்பட்ட துணிகள் கொண்ட பாத்திரத்தை நான் அடுப்பில் ஏற்றி வைத்திருக்கிறேன். அடியிலிருந்த துணி கருகி புகைநாற்றம் எழுந்தபோது ஹீரோ பதற்றமடைந்து குரைத்தது. அருண்மொழி “நாய் குரைக்குது போய்பாரு” என்றாள். நான் அங்கே சென்றபோது சமையலறையில் கூச்சல்.

சும்மா பார்க்க ஆரம்பித்தால் ஒவ்வொரு நாளும் லாரலையும் ஹார்டியையும் பார்க்கலாம். இன்று எவரைப்பார்க்கப் போகிறேன் என்று பார்க்கலாம் என்று டீக்கடைக்குச் சென்றேன். ஒருவர் குறுக்கேசெல்லும் கால்வாயில் துணிதுவைத்து பிளாஸ்டிக் வாளியில் அடியில் பாலியெஸ்டர் துணிகளை வைத்து மேலே வந்து நின்றார். துவைத்த போர்வைச்சுருளை மேலே வைத்து வாளியை தூக்கினார். சரிந்து துணி கொட்டியது. லாரல்போல ஒருகணம் திகைத்தபின் போர்வைச்சுருளை மீண்டும் எடுத்துவைத்து  நன்றாக  அழுத்திச்செருகி மீண்டும் தூக்கினார். இப்பக்கம் சரிந்து மொத்த துணியும் மண்ணில் விழுந்தது. மீண்டும் துவைப்பதா என பிரமித்து என்னைப் பார்த்தார். நான் தோளைக் குலுக்கினேன், ஆம் ஹார்டியைப்போல.

ஹார்டி பொறுமையிழந்து ”நீ ஏன் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கக் கூடாது?” என்கிறார். லாரல் புருவத்தை மேலேற்றி உதட்டைப் பிதுக்குகிறார். அதற்கு “என்ன செய்ய? உலகம் இப்படிப் படைக்கப்பட்டிருக்கிறது” என்று பொருள்.

முந்தைய கட்டுரைவெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்
அடுத்த கட்டுரைதூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு