மீட்சி

எம்.எஸ். [நன்றி மின்னம்பலம்]
எம்.எஸ். [நன்றி மின்னம்பலம்]

எழுதழல் முடிந்ததும் சிலநாட்களிலேயே அடுத்த நாவலை ஆரம்பித்துவிட்டால் பதினேழாம் தேதி சரியாக வெளியிடத் தொடங்கிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எம்.எஸ்.அவர்களின் மரணம் பலவற்றையும் குலைத்துப்போட்டுவிட்டது. இறப்புச்செய்திகளின்போது பொதுவாக பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. எம்.எஸ்.நிறைவாழ்க்கை வாழ்ந்தவரும்கூட. ஆனால் இறப்புக்குப்பின் ஆழத்தில் ஒரு கலங்கல் நிகழ்கிறது. இரவுகளில் விழிப்பு வந்து நினைவுகள் அறுத்துக்கொள்கின்றன. முகபாவங்களும் சொற்களுமாக காட்சிகள் ஓடுகின்றன.

எம்.எஸ் மறைந்த அன்றுமாலை நிலைகொள்ளாமலிருந்தேன். அன்று திருக்கார்த்திகை வேறு. அருண்மொழியும் அஜிதனுமாக ஒரு மாலைநடை சென்றுவந்தேன். மறுநாள் மனநிலை மாறிவிடுமென எதிர்பார்த்தேன். நிகழவில்லை. அன்று முழுக்க அதே மெல்லிய பதற்றம்போன்ற ஒரு நிலை. மாலை கோட்டாறு சவேரியார் ஆலயத்திருவிழா. நான் வழக்கமாகச் செல்லும் விழா அது. அருண்மொழியும் நானும் அஜிதனும் கோட்டாறு சென்றோம்

செட்டிகுளத்தில் இறங்கி கூட்டத்தில் நசுங்கியபடி நடந்து கோட்டாறு ஆலயத்திற்குச் சென்றோம். பொன்னொளி மின்னும் ஆல்தாரையில் தெரிந்த தேவனிடம் எம்.எஸ் அவர்களுக்காக வேண்டிக்கொண்டேன். நானும் அவரும் மூன்றுமுறை சேர்ந்து இந்த ஆலயத்திருவிழாவுக்கு வந்திருக்கிறோம். எம்.எஸை அங்குள்ள திருத்தந்தையே அடையாளம் கண்டுகொள்வார்

sav

சவேரியார் திருவிழாவில் இன்னமும் மரஉருட்டுச் செப்புகளும் கல்லிரும்பு வாணலிகளும் தோசைக்கற்களும் கிழங்குமாவில் மாச்சக்கரை சேர்த்த் ரத்தச்சிவப்பு மிட்டாய்களும் கிடைக்கின்றன. ஒருகாலத்தில் பேரீச்சம்பழமெல்லாம் திருவிழாவில் மட்டும்தான் கிடைக்கும். விழாவின் சிறப்பு இனிப்புச்சேவு. உளுந்தமாவை பொரித்து சீனிஜீராவில் போட்டு ஊறவைத்து எடுப்பது. அந்தக்காலத்தில் எனக்குப்பிடித்த தின்பண்டம்

அன்று மாலை வழக்கமான ஓட்டலுக்குச் சென்றேன். நாகர்கோயிலில் சுவையான சைவ உணவுக்கு அந்த ஓட்டல்தான். நாகர்கோயில் வருகையில் இங்குள்ள இனிய அனுபவங்களில் ஒன்று அங்கே செல்வது. அன்று உணவு சகிக்கவில்லை. ரப்பர் போல ஆப்பம். நாற்றமடிக்கத் தொடங்கிய குருமா. நம்பவே முடியாத அளவுக்கு கீழ்த்தரமான உணவு. அந்த உரிமையாளர் வீட்டு விலங்குகள் அதை உண்ணாது. இவ்வளவுக்கும் ஒரு சாதாரண ஓட்டலைவிட இருமடங்கு விலைகொண்டது புகார்செய்தபின் எழுந்துவந்தேன்.

இதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஓட்டல்கள் சிறப்பாக நடந்துகொண்டே இருக்கும். அதற்குப் பெரும்பாலும் உரிமையாளரின் கவனமே காரணமாக இருக்கும். புகழ் வந்ததும் உரிமையாளர் சற்று கவனம் இழக்கத் தொடங்குவார். ஊழியர்கள் திருட ஆரம்பிப்பார்கள். ஓட்டல் விழத்தொடங்கும். சென்ற இருபதாண்டுகளில் நாகர்கோயிலில் அப்படி வீழ்ச்சி அடைந்த நான்கு நல்ல ஓட்டல்கள் என் நினைவிலெழுகின்றன

 

IMG_20171206_165910

ஊழியர்கள் என்றால் திருடவேண்டும் என்பது இந்தியப் பண்பாடு. நாம் அதிலெல்லாம் சமரசமே செய்துகொள்வதில்லை. இருவர் வேலைபார்க்க ஒருவர் மேஸ்திரிவேலை செய்வது நம் தொழில்மரபு. அவரை மேலே இன்னொருவர் மேற்பார்வை செய்யவேண்டும். அவரை அவருக்குமேலே இன்னொருவர். ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் முடிந்தவரை திருடமுயன்றபடியே இருக்கும் செயலூக்கம் கொண்ட களம் நம் தொழில்,வணிகத்துறை. நோய் எதிர்ப்புசக்தி குறைந்ததும் பாக்டீரியா வல்லமை கொள்வதுபோல கண்காணிப்பு ஒர் அணு தளர்ந்தால் திருட்டு ஓர் அணு மேலேறும் என்பது இங்குள்ள சமவாக்கியம்.

சமீபத்தில் சாப்பிட்ட மிகமோசமான உணவு துபாய் சரவணபவன் ஓட்டலில். நேரடியாக குப்பைக்கூடையில் கைவிட்டு எடுத்துக் கொண்டுவந்ததுபோன்ற உணவு. அதற்குப்பின் இது. உணவுசமைப்பவர்களுக்கும் வீடுகட்டியவர்களுக்கும் தெரியும், உணவு கட்டிடம் இரண்டிலும் தரத்தை மட்டும் குறைத்து மூன்றில் ஒருபங்குவரை திருடிக்கொள்ளமுடியும். அந்த மாலையில் சவேரியார் ஆலயம் சென்று மீட்டுக்கொண்ட மனநிலையை முழுமையாகவே இழந்தேன்.

ஆறாம்தேதி எம்.கோவிந்தனின் கவிதைநூல் வெளியீடு திருவனந்தபுரத்தில். நாகர்கோயிலில் இருந்து ரயிலில் சென்றிருந்தேன். சுகதகுமாரியைச் சந்தித்து அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள வெண்முரசு ‘மாமலர்’ நாவலை அளிக்கவேண்டுமென நினைத்தேன். ரயிலடியில் மலையாள இயக்குநர் மதுபால் வந்து என்னைக் கூட்டிக்கொண்டார். சுகதகுமாரியை பாளையம் பகுதியில் இருந்த அவருடைய இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன்

Bodheswaran
போதேஸ்வரன்

சுகதகுமாரியிடம் அவரைப் பார்க்க வருவதாகச் சொன்னேன். ”வேறு எங்கும் சாப்பிட்டுவிடாதே. உனக்காக சிறப்பாகச் சமைக்கச் சொல்லிவிட்டேன். உனக்கு என்ன பிடிக்கும்?” என்றார் சுகத குமாரி. அவர் வீட்டில் அசைவம் கிடையாது என அறிருந்தமையால் நான் சைவ உணவுக்காரன் என்று சொன்னேன். ’உன்னைப்பார்க்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசை…” என்றார்.

சுகதகுமாரி மறைந்த கவிஞர் போதேஸ்வரனின் மகள். 1902- ல் நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள நெய்யாற்றின்கரை என்ற ஊரில் பிறந்தார். தந்தை குஞ்ஞன் பிள்ளை. தாய் ஜானகிப்பிள்ளை. இயற்பெயர் கேசவபிள்ளை. ஆரியசமாஜத்தில் சேர்ந்து போதேஸ்வரன் என்று பெயர்ச் சூட்டிக்கொண்டார். பின்னர் நாராயணகுருவின் தோழரான சட்டம்பி சாமிகளின் சீடராக ஆனார்.  சுதந்திரப்போராட்ட வீரர். சர்வோதயப் பணியாளர். நாராயணகுருவின் வைக்கம்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர். மலையாளத்தின் ஆரம்பகால மக்கள் கவிஞர்களில் ஒருவர்

அன்றைய தேசியக் கவிஞர்கள்தான் மொழிவழிப் பண்பாட்டையும் வரையறுத்து முன்னிறுத்தினார்கள் என்பது இந்தியப் பண்பாட்டு- இலக்கிய மரபின் விந்தைகளில் ஒன்று. ஜனகணமன என்னும் தேசியகீதம் எழுதிய தாகூர்தான் வங்கத்தைப் புகழும் அமர் சோனார் பங்க்ளா பாடலை எழுதியவர். அது வங்கதேசத்தின் தேசியகீதம் இன்று. குவெம்பு தேசியக்கவிஞர், கன்னடத்தின் மாநிலப்பாடலை எழுதியவரும் அவரே. மலையாளத் தேசியகவிஞரான வள்ளத்தோள்தான் கேரள மொழித்தேசியத்தின் தொடக்கப்புள்ளி. இந்தியதேசியத்தின் கவிஞரான பாரதியே ‘செந்தமிழ்நாடென்னும் போதினிலே’ என்று பாடியவர்.

 

hru-2
ஹ்ருதயகுமாரி தங்கை சுஜாதாவுடன் பழையபடம்

போதேஸ்வரன் எழுதிய ’ஜயஜய கேரள கோமள தரணி’ என்ற பாடல் கேரளகீதம் என அழைக்கப்படுகிறது. 1951ல் வெளியான யாசகன் என்ற திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று மேலும் புகழ்பெற்றது. 2014ல் இப்பாடல் கேரளத்தின் கலாச்சாரப் பாடல் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.போதேஸ்வரன் 1990ல் மறைந்தார்..

ஆரம்பத்தில் துறவியாக இருந்த போதேஸ்வரன் பின்னர் திருமணம் செய்துகொண்டார். மனைவி வி.கே.கார்த்தியாயினி அம்மா. அவர்களுக்கு மூன்று மகள்கள். முதல் மகள் ஹ்ருதயகுமாரி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றார். திருவனந்தபுரம் பல்கலையில் ஆசிரியராக பணியாற்றினார். மகளிர்க் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வுபெற்றார். இலக்கியவிமர்சகராகவும் கல்வியாளராகவும் புகழ்பெற்றவர். கால்பனிகத [கற்பனாவாதம்] என்னும் நூலுக்காக கேரளசாகித்ய அக்காதமி விருது பெற்றார். 1930 ல் பிறந்தவர் 2014ல் மறைந்தார்.

இரண்டாவது மகள் சுகதகுமாரி மலையாளத்தின் முதன்மைக்கவிஞர்களில் ஒருவர். 1934ல் பிறந்தவர். தத்துவத்தில் முதுகலைப் பட்டம்பெற்று கல்லூரி ஆசிரியையாகப் பணியாற்றினார். கவிஞர் என்பதோடு சூழியல் போராளி, மானுட உரிமைப்போராளி என்றும் புகழ்பெற்றவர். அமைதிப்பள்ளத்தாக்கை காப்பதற்காக 1970களில் நடந்த போராட்டம் வழியாகத்தான் சூழியல்பிரக்ஞை கேரளத்தில் உருவானது. அந்தபோராட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்தவர் சுகதகுமாரி.

அபய என்னும் அமைப்பை உருவாக்கி ஆதரவற்ற பெண்களுக்கான அடைக்கலநிலையமாக ஆக்கினார். பல்வேறு மானுட உரிமைப்போராட்டங்களில் பங்குபெற்றிருக்கிறார். கடுஞ்சொற்கள் இல்லாத, ஆனால் தீர்வுவரை விடாப்பிடியாகப் போராடும் காந்தியவழி அவருடையது. கேரளத்தின் பெண்மனசாட்சி என்று கருதப்பட்டார்.

சட்டம்பி சுவாமிகளும் போதேஸ்வரனும், பழைய படம்
சட்டம்பி சுவாமிகளும் போதேஸ்வரனும், பழைய படம்

1961ல் தன் 27 வயதில் முத்துச்சிப்பி என்னும் கவிதைத்தொகுதியை வெளியிட்டார். சுகதகுமாரியின் கவிதைகள் உணர்ச்சிகரமானவை. இசைத்தன்மைகொண்டவை. மரபான இலக்கண அமைப்பு உடையவை. மேடைகளில் பாடப்படுகையில் இன்றும் பெருந்திரளால் உணர்வுபூர்வமாக வரவேற்கப்படுபவை சரஸ்வதி சம்மான் முதலிய முக்கியமான விருதுகளை வென்றிருக்கிறார்.

சுஜாதாதேவி மூன்றாமர். ஆங்கில இலக்கியம் பயின்று கல்லூரி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கவிஞர். சூழியல் போராட்டங்களிலும் மானுட உரிமைப்போராட்டங்களிலும் ஈடுபட்டவர். பயணக்கட்டுரைக்காக கேரள சாகித்ய அக்காதமி விருதுபெற்றார்.

நான் ஹ்ருத்யகுமாரியிடம் ஒருமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்குமுன்பு நான் மேலாங்கோடு யக்ஷியைப்பற்றி எழுதிய மலையாளக் கட்டுரையை பாஷாபோஷிணி இதழில் வாசித்துவிட்டு என்னை அழைத்தார். அவர்களுக்கும் அது குடும்பதெய்வம். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.நேரில் பார்த்ததில்லை.

08-hridayakumari
ஹ்ருதயகுமாரி

சுஜாதாதேவியை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். அட்டப்பாடியில் பழங்குடிகளின் நிலவுரிமைக்கான போராட்டத்திற்காக அவர் திரிச்சூரில் இருந்து கிளம்பிச்செல்கையில் வழியனுப்பச்சென்ற ஒரு சிறுகுழுவுடன் சென்றேன். அதன்பின் சாகித்ய அக்காதமியின் ஒரு கருத்தரங்கில், டெல்லியில். சுகத குமாரியை பலமுறை அரங்கில் பார்வையாளனாக அமர்ந்து பார்த்திருக்கிறேன், பேசியதில்லை.

சுகதகுமாரி நோயுற்றிருக்கிறார். மருத்துவமனையில் இருந்து இரண்டுநாட்களுக்கு முன்னர்தான் வந்திருந்தார். சுஜாதாவும் சுகதகுமாரியும் மட்டும் தனியாகத் தங்கியிருக்கிறார்கள். சமையலுக்கு ஒரு பெண்மணி இருக்கிறார். “அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே நானும் உடன் வந்து தங்கிவிட்டேன். சில ஆண்டுகளாக இருவரும்தான் சேர்ந்து வாழ்கிறோம்” என்றார் சுஜாதா. மற்ற ஊர்களில் எப்படியோ, கேரளத்தில் சகோதரிகள் அவ்வாறு முதுமையில் இணைந்து வாழ்வதும், முதுமைவரை மாறாத அன்புடன் இருப்பதும்தான் பொதுவான போக்கு.

பிரதமன் பாயசத்துடன் விருந்துச்சாப்பாடு. சுகதகுமாரியிடம் இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். மாமலரை அவரிடம் அளித்தேன். வெண்முரசின் பொதுவான கரு, அதன் தத்துவ அடிப்படை ஆகியவற்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். கிளம்பும்போது கால்களைத் தொட்டு வணங்கி ஆசிபெற்றேன்.

Sugathakumari_Teacher
சுகதகுமாரி

சுகதகுமாரியின் கவிதையாக நான் முதலில் அறிந்தது அவர் எழுதிய ராஜலட்சுமியோடு என்னும் கவிதை. அதை தற்கொலைசெய்துகொண்ட தோழிக்கு என நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். என் அம்மா அதை பாடி கேட்டிருக்கிறேன். அம்மாவின் நினைவும் சென்றுமறைந்துகொண்டிருக்கும் இலட்சியவாதக் காலகட்டம் ஒன்றின் நினைவும் நிறைந்த ஒருநாள். சிறகுகள் உலர மீண்டும் பறக்கவேண்டுமென தோன்றியது.

அன்னையின் சொல்

முந்தைய கட்டுரைஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்
அடுத்த கட்டுரைஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்