அன்புள்ள திரு ஜெயமோகன்
வாட்ஸ் அப்பில் உலவும் இந்தப் படங்களை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முதல் படத்தில் குழியில் விழுந்த யானைக்குட்டியைக் காப்பாற்றுகிறார்கள். இரண்டாவது படத்தில் யானைக்கூட்டம் குட்டியைப் பாசத்துடன் அழைத்துச் செல்கிறது. அதில் ஒரு யானை காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்கிறது. தங்களின் யானை டாக்டர் கதையும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த விலங்குகளின் உணர்வுகள் குறித்த விவாதமும் மறுபடியும் நினைவுகளை நிரப்பிவிட்டன.
ஏ. நிக்கோடிமஸ்
கோயம்பத்தூர்
***
அன்புள்ள நிக்கோடிமஸ் அவர்களுக்கு,
மனிதவரலாற்றில் எப்போதுமே இன்றிருந்ததுபோல புறவுலகைப் பார்க்கும் வசதி இருந்ததில்லை. நம் காமிராக்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரம் கண்களுக்குச் சமம். நம் ஒவ்வொருவரின் கையிலும் காமிரா உள்ளது. உலகமெங்கும் பலகோடிக் காமிராக்கள் ஒவ்வொரு கணமும் விழித்திருக்கின்றன.
இது விலங்குலகைப்பற்றிய பழைய உளப்பதிவுகளை தலைகீழாக்கிக் கொண்டிருக்கிறது. விலங்குகளின் அன்பு முதலிய உணர்வுகள், நினைவாற்றல், அறிவுத்திறன் அவற்றின் வாழ்க்கைப் போராட்டங்கள், தகவமைவுகள் குறித்த பழைய அறிஞர்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டுவிட்டன.
அவர்களில் பெரும்பாலானவர்கள் விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்ற பழைய செமிட்டிக் மதநம்பிக்கையை முன்முடிவாகக்கொண்டு விலங்குலகை நோக்கியவர்கள். புறவயமான சான்றுகள் தேவை என்று சொல்லி இலக்கியப்பதிவுகளையும் அனுபவக்குறிப்புகளையும் நிராகரித்துவந்தனர். இன்று புறவயச் சான்றுகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. ஆயினும் அவர்களில் பலர் பழைய பிடிவாதங்களுடனேயே இருப்பதையும் பார்க்கமுடிகிறது. அவர்களுக்கு அறிவியலைவிடவும் ஆழ்மனதின் மதமே சிந்தனைகளில் மேலாதிக்கம் செலுத்துகிறது என்பது சமகால ஆச்சரியங்களில் ஒன்று
ஜெ