கண்புரை கொஞ்சம் தொடங்கியிருக்கலாம் என்று கண்மருத்துவர் சொன்னார். போகன் கூர்ந்து நோக்கிவிட்டு பெரிய அளவிலெல்லாம் இல்லை என்றார். இன்னொரு கண்மருத்துவர் அதிகமாக புறஊதாக்கதிர்கள் படாமல் இருந்தாலே போதும் என்றார். வெயிலில் அலைகையில் கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்ளலாம் என்றார்.
நான் கறுப்புக்கண்ணாடி போடுவதில்லை. முக்கியமான காரணம் நான் வழக்கமாகக் கண்ணாடி போடுபவன் என்பது. கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டால் வழக்கமான கண்ணாடியைக் கழற்றவேண்டியிருக்கும். கழற்றினால் எனக்கு புறவுலகம் சற்று நீர்பட்டுக் கலங்கியதுபோலிருக்கும்.
ஆனால் லடாக் பயணத்தின்போது கறுப்புக்கண்ணாடி இல்லாமலாகாது என்னும் நிலை வந்தது. இமையமலைச் சரிவுகள் வான்நோக்கி வைக்கப்பட்ட மாபெரும் ஆடிப்பரப்புகள் போல ஒளிவிட்டன. பனிப்பாளங்கள் குழல்விளக்கு போல வெண்ணிற நெருப்பாக எரிந்தன. கண்களைச் சுருக்காமல் எதையும் பார்க்கமுடியாது . எத்தனை சுருக்கினாலும் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.
ஆகவே வழக்கமான கண்ணாடிக்குமேல் கறுப்புக்கண்ணாடியை போட்டுக்கொண்டேன். அது ஒன்றன்மேல் ஒன்று சரியாக நிற்காமல் சரிந்துகொண்டே இருந்தது. அத்துடன் நான்குபேர் பார்த்தால் வேடிக்கையாகவும் தெரிந்தது. ஆனால் லடாக்கில் அரசியல்கூட்டங்களை தவிர்த்து நான்குபேர் கூடும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை.
அதன்பின்னர் மலேசியா சென்றபோது கண்ஒவ்வாமை ஏற்பட்டு கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டேன். என் சிங்கப்பூர் நண்பர் கணேஷ் அளித்தது. அப்போது கண்ணில் இருந்த கூச்சத்தை குறைக்க அது உதவியது. கறுப்புக் கண்ணாடியுடன் கூட்டங்களில் கலந்துகொண்டேன். புகைப்படங்கள் வெளியானபோது அனுதாப அலை எழுந்தது
சமீபத்தில் மத்தியப்பிரதேசப் பயணம் சென்றபோதுதான் மீண்டும் கறுப்புக்கண்ணாடியின் தேவையை உணர்ந்தேன். விரிந்த நிலவெளி. அதை பதினைந்து நிமிடம் நோக்குவதற்குள் கண்கள் கூசத்தொடங்கிவிட்டன. சிறிதுநேரம் பார்ப்பதும் பின் கண்களை மூடிக்கொள்வதுமாக இடர்பட்டேன். இந்த அளவுக்கு முன்பு இருந்ததில்லை.
சமீபத்தில் சென்னையில் தங்கியிருந்தபோது என் நண்பர் முத்துவிடம் புதிய கண்ணாடி வாங்குவதைப்பற்றிப் பேசினேன். அவரது வணிகப்பங்காளர் ஆரிஃப் வந்து கிரீன்பார்க் அருகே உள்ள தன் கடைக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கறுப்புக்கண்ணாடி பற்றிச் சொன்னார்.
“உங்களுக்கு மெல்லிய கண்கூச்சம் இருக்கும், வெளிச்சத்திற்கு கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்ளலாம்” என்றார் ஆரிஃப். . நான் என் பிரச்சினையைச் சொன்னதும் வழக்கமாகப்போடும் அதே விழித்திருத்த அளவுகள் கொண்ட கறுப்புக்கண்ணாடியை செய்துகொள்ளலாம் என்றார். உண்மையில் நான் கறுப்புக்கண்ணாடியின் அப்படி ஒரு வசதி உண்டு என்பதை எண்ணியிருக்கவே இல்லை. அவர் சொன்னபோதுதான் ’அட, அப்படி இல்லாமல் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் எப்படி கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்ளமுடியும்? இதைக்கூட யோசிக்கவில்லையே’ என வியந்தேன்.
என் அளவுகளுக்கு ஏற்ப கறுப்புக்கண்ணாடி ஒன்றை செய்துதந்தார். ரேபேன் கண்ணாடி,சற்று பச்சைகலந்த கருமை. அதைப்போட்டுக்கொண்டு அங்கிருந்த ஆடியில் பார்த்துக்கொண்டபோது யாரது என ஓர் உருவம் உள்ளிருந்து என்னை நோக்கி திகைத்தது.
அங்கே ஒர் ஓவியம் இருந்தது. அதை வெறும்கண்ணாடியால் நோக்கும்படி ஆரிஃப் சொன்னார். பின்னர் கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு நோக்கும்படிச் சொன்னார். கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டபோது சில புதிய உருவங்கள் தெரிந்தன. “அவை அங்கே சற்று புடைப்புருவாக உள்ள உருவங்கள். மேல்தளப்பிரதிபலிப்பு காரணமாக அவை உங்கள் வழக்கமான நோக்கிலிருந்து மறைந்துவிட்டன” என்றார்.
மூக்குக்கண்ணாடிச் சட்டகங்கள் அடுக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டியை காட்டி வெறும்கண்ணாடியாலும் கறுப்புக்கண்ணாடியாலும் அதைப் பார்க்கும்படிச் சொன்னார். வெறும்கண்ணாடியுடன் பார்த்தபோது கண்ணாடிப்பரப்பின்மேல் விளக்கொளி பிரதிபலித்தமையால் உள்ளிருந்தவை மறைந்துவிட்டிருந்தன. கறுப்புக்கண்ணாடி போட்டதும் உள்ளிருந்தவை தெளிவாகத்தெரிந்தன
“நம் வெறும் விழிகள் சரியான பார்வையைத் தரும் என்பது ஒரு மாயை சார்” என்றார் நண்பர். “புகைப்படம் எடுப்பவர்களுக்குத்தெரியும் காலை, மாலையின் மங்கல் ஒளியில்தான் நல்ல படங்கள் எடுக்கமுடியும். எஞ்சியவேளைகளில் ஒளிச்சலிப்பான் போட்டுத்தான் படங்களை எடுப்பார்கள். நம் பார்வையின் இயல்பு என்பது குறைந்த வெளிச்சம் போலவே அதிகவெளிச்சத்திலும் அவை எதையும் பார்ப்பதில்லை என்பதுதான். அதிகவெளிச்சம் இருந்தால் நாம் கண்களை இடுக்கி குறைவான ஒளி உள்ளே செல்லும்படி கண்களை அமைக்கிறோம். விளைவாக அதிகநேரம் நாம் எதையும் பார்ப்பதில்லை. கண்கள் சலித்துவிடுகின்றன. நாம் ரசித்து நினைவில்கொண்டிருக்கும் இயற்கைக்காட்சிகள் அனைத்துமே விடியற்காலைகளிலும் மாலைகளிலும் பார்த்தவை. எஞ்சிய இயற்கைக்காட்சிகள் அனைத்தையும் நாம் உண்மையில் தவறவிட்டிருக்கிறோம். மேலும் இரண்டு அம்சங்கள் உண்டு. மேற்தளப்பிரதிபலிப்பு என்பது நம் பார்வையிலிருந்து ஏராளமான நுண்காட்சிகளை மறைத்துவிடுகிறது. இன்னொன்று, ஒரு காட்சியில் அதிகவெளிச்சத்தில் உள்ள பொருளை நம் விழி குவியப்படுத்துவதனால் எஞ்சியவை காட்சிப்புலத்தில் பின்னகர்ந்துவிடுகின்றன”
உண்மையாகவே அரண்டுவிட்டேன். ஏனென்றால் அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றே உணர்ந்தேன். “நான் ஏராளமான ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் பெரும்பாலான காட்சிகளைத் தவறவிட்டுவிட்டேனா என்ன?” என்றேன். “சந்தேகமே இல்லாமல். நம்முடையது வெயில்நாடு. இங்கே கறுப்புக்கண்ணாடி மிக அவசியம்”
ஆனால் இங்கே கறுப்புக்கண்ணாடி என்பது ஒரு வகை ஆடம்பரமாக, ‘ஷோ காட்டலாக’ கருதப்படுகிறது. நான் கண்களில் ஒவ்வாமை வந்து கறுப்புக்கண்ணாடி போட்டிருந்தபோது ’அண்டர்வேல்ட் டான் மாதிரி இருக்கிறீர்கள்”, “ஒவ்வொரு பூக்களுமேன்னு பாட ஆரம்பிச்சிருவீங்களோன்னு தோணிச்சு”, “அப்டியே அரசியலிலே பூந்திடுங்க” “தெலுங்குசினிமாக்களிலே கூப்பிட்டு சான்ஸ் குடுப்பாங்க சார்” என்பதுபோன்ற விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன. கண் உறுத்தினாலும் பரவாயில்லை, அதைப்போடாதீர்கள் என பல மன்றாட்டுக்கள். கொஞ்சம் பிரச்சினை சரியானதுமே கழற்றிவிட்டேன்
அதோடு இங்கே கறுப்புக்கண்ணாடி என்பது பெண்களை ரகசியமாகப் பார்ப்பதற்கான சாதனமாகக் கருதப்படுவதனால் அது ஒருவகை பொறுக்கித்தனம் என்றுமதிப்பிடப்படுகிறது.. 1991ல் அருண்மொழியை நான் மதுரை வேளாண்கல்லூரிக்குச் சென்று பார்த்தேன். அப்போது வெயிலுக்கு நிறம்மாறும் கண்ணாடி அணிந்திருந்தேன். அது பெரியவேறுபாடு எதையும் உண்மையில் அளிக்காது. ஆனால் பின்னர் அருண்மொழி சொன்னாள் ”முதல்ல பாத்தப்போ என்ன இது கறுப்புக்கண்ணாடி எல்லாம்போட்டு பொறுக்கி மாதிரி இருக்கார்னு நினைச்சேன்”
மிஷ்கின் கறுப்புக்கண்ணாடி போடுவதைப்பற்றி ஏகப்பட்ட கிண்டல்கள் இங்கே உண்டு. சும்மா இணையத்தை துழாவினாலே அதைக் காணமுடிகிறது. ஒருமுறை அவரிடம் அதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன். “நான் சினிமாக்காரன். எனக்கு பாக்கிறதுதான் முக்கியம். சரியா பாக்கிறதுக்காக சரியான கண்ணாடி போட்டிருக்கேன். இந்தியாவிலே இது இல்லாமல் எதையும் நல்லா பாக்கமுடியாது. யார் என்ன சொன்னால் என்ன?” என்றார்
அவர் அறைகளுக்குள்ளும், இரவிலும் கறுப்புக்கண்ணாடி போட்டிருப்பதைப்பற்றி பேச்சுவந்தது. “வெளிநாட்டிலே போடமாட்டாங்க. ஏன்னா சரியான லைட்டிங் அவங்களுக்குத்தெரியும். ரொம்ப சாதாரணமான ரெஸ்டாரெண்டிலே கூட சரியான விளக்கு இருக்கும். பெரும்பாலும் பொன்னிற வெளிச்சம்தான். ஆனா இங்க எங்கபாத்தாலும் டியூப் லைட். வெயில்மாதிரி வெள்ளை வெளிச்சம். மின்னிட்டே இருக்கிற வெளிச்சம். காட்சின்னு ஒண்ணைப்பத்தி யாருமே கவலைப்படுறதில்லை. எனக்கு சரியாத்தெரியறதுதான் எனக்கு முக்கியம்” என்றார்நான் முன்பு போட்டிருந்த வெள்ளைக்கண்ணாடி மிஷ்கின் வாங்கி அன்பளிப்பாக அளித்ததுதான்.
நான் கண்ணாடி வாங்கிக்கொண்டுவந்து அறையில் காட்டியதுமே நண்பர்கள் “வேண்டாம் சார், சீப்பா இருக்கு” என்றனர். கிருஷ்ணன் வழக்கம்போல “நெறைய ஃபீஸ் தர்ர ஃபினான்ஸியல் அக்கூஸ்டு மாதிரி இருக்கீங்க!” என்றார். ஆகவே கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்வதென்பது நம்மை அறிந்த நாலுபேர் நடுவே சாத்தியமே இல்லை.
ஆனால் என் காட்சியுலகை முழுமையாகவே மாற்றிவிட்டிருக்கிறது இது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்று நிலத்தைப் பார்ப்பது. நான் எழுதுவதிலும் பெரும்பகுதி நிலக்காட்சியே. நிலத்தை விழிவிரிய மெய்மறந்து மணிக்கணக்காகப் பார்க்க கறுப்புக்கண்ணாடிபோல உதவக்கூடியது வேறேதுமில்லை. இத்தனைநாட்கள் இதை தவறவிட்டிருக்கக்கூடாது
ஆனால் நாகர்கோயிலில் போடமுடியாது. ஏன் தமிழகத்திலேயே போட்டுக்கொள்ளமுடியாது. எங்காவது பயணம் செல்லும்போது போடலாம். உடன்வருபவர்களை பேசிச் சம்மதிக்கவைக்கவேண்டும். அவர்கள் அடையும் பதற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக்குறைக்கவேண்டும். பார்ப்போம். எந்தக்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
***