காடும் குறிஞ்சியும்

kadu2

ஆசிரியருக்கு..,

நான் தங்கள் தளத்தினை தொடர்ந்து மூன்று வருடமாக படித்து(பயின்று) வருகிறேன், உங்களின் 90 சதவிகிதம் எழுத்துக்களை, உரைகளை,காணொளிகளை கேட்டு படித்து வருகிறேன்.கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே வசித்து வருகிறேன்.தங்களின் காடு நாவல் எனக்கு அணுக்கமாக இருந்தது,சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் உங்களை  சந்தித்து காடு நாவலை வாங்கி உங்களிடம் கையெழுத்து பெற்று கொண்டேன், மலை அடிவாரத்தில் வாழும் நான் மலையில் நிறையவே பயணம் செய்து அனுபவங்களை பெற்றுள்ளேன். மூங்கில் வெட்ட,மாட்டுக்கு புல்லறுக்க,விளக்குமாறு   ஈச்சம்ப்புல் வெட்ட ,ஏர் கலப்பை செய்ய மரம் வெட்ட,தேன் அழிக்க, ஆட்டுக்கு தழை (இலை) வெட்ட இன்னும் பற்பல காரணங்களுக்காக எங்களுரின் மலையை சுற்றி  மலையிலேயே தங்கிகூட மாடு மேயத்திருகிறேன்.அப்பொழுது அந்த மலையை நான் உணரவில்லை அதனுடன் பெரும் மோகம் இல்லை. காரணம் நான் சென்ற பயணங்கள் என் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே. மலைக்கு சென்று ஒரு மூட்டை நெல்லிக்காய் கொண்டு வந்து அதை அடுத்தநாள் காலையில் முதல் பேருந்தில் கோவை டவுன்ஹால் கொண்டு போய் விற்றால் ரூபாய் நூற்றைம்பது.ஆனால் அதை இடைவெளியிலேயே வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள்.அது ஒரு காலம்.

download

இனி காடு நாவல் பற்றி :-

கிரிதரன் செல்லலும் பயணம் அவன் காட்டுக்குள் வழிதவறி மீண்ட பிறகு குட்டப்பன் சொல்லும் சொல். என்னை தேடவில்லையா என்றதற்கு எங்கே தொலைந்திருப்பாய் கொஞ்சம் அலைந்து வரட்டுமே  எண்டுதாம் விட்டோம் நானே பதினைந்து நாள் அலைஞ்சில்லா வந்திருக்கோம்.

நான் ரெசாலம் எல்லாருமே வழிதவறி மாட்டிண்டு கெடந்து வந்திருக்கோம்.இந்த இடம் நான் அறியாதது அல்ல.எங்கள் ஊர் மலையில் குருசில்பாறை  சோலை என்ற காட்டில் நான் ஒருமுறை வழி தவறியுள்ளேன் ஒரு அருகம்புல்கூட நான்கு அடி வளர்ந்து சூரியனை காணும் பொருட்டு அந்த சோலையில் வளர்ந்திருப்பதை கண்டேன் . சரி மரத்தின் உச்சியில் நின்று வழியை கண்போம் என்று ஏறி பார்த்தேன்.எங்கும் பச்சை போர்வை கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அந்த பச்சை போர்வையில் துளையே இல்லை. அதனின்று மீண்டு வந்தது மாபெரும் அனுபவம் என்பதை காடு நாவலில் கண்டுகொண்டேன்.

இளையராஜா இளவரசுக்கு நரம்பு வாதம் தனிய காஞ்சிரம் கட்டில் செய்ய மகாராஜா உத்தரவிடுவது எட்டி மரத்திற்கு இவ்வளவு மருத்துவகுணமா என்ற அதிர்ச்சி என் விரல்களில் இப்பொழுதும் உறைகிறது.ஏனெனில் நான் எட்டி மரத்தில் ஏறி விளையாடியவன்.காஞ்சிரம் என்பது எட்டி மரம் என கோவை சொலவடை (எட்டிமடை) என்ற ஊர் உண்டு.

ரெசாலம் பிடித்து வந்த தேவாங்கு சித்தரிப்பு அதை குரிசு வளர்க்கும் அன்பு ,தேவனுக்கு வார்த்தை அடங்கிய புத்தகம் இதை கேட்க போன ஜென்மத்தில் புண்ணியம் செய்யனும்ல்லா,அவர், இயேசு கையில் இருக்கையில் தூரம் ஏன் செல்லனும்.உங்கள் குலதெய்வம் நீலி இந்த காடு நாவலிலும் அயனி மரத்தில் அறையப்பட்டிருக்கிறாள். அவளின் இன்னொரு தரிசனமாக சுண்டன் மகளாக அருவியில் காட்சி தருகிறாள்.

தேவாங்கு மரத்தில் ஏறி விடுதலை பெருகிறது.கிரிதரனுக்கு குறிஞ்சி பாடல்கள் நினைவு வருகின்றன.

நாவல் முழுக்கவே அவனுக்கு சங்க இலக்கியம் தொட்டுவிடுகிறது,பேச்சிபாறை ஏரி அணைக்கரையில் ஏறி அய்யரிடம் கேட்கும் அனுபவம் உங்களது சிறுகதை படுகையில் மனம் சென்று விடுகிறது எவ்வளவு தொடர்பு ஒரு சிறுகதை நாவலாக வருவது. மலையத்தியிடம் கிரிதரன் உரையாடும் இடம் நுட்பமாக இருப்பினும் கற்பனை மூலம் விரியகூடியது.தமிழ் இலக்கியத்தில் ஞ முதல் ஞோ வரை, பயன்படுத்தி ஒரு உரையாடல்.இன்றும் எங்கள் ஊர் பக்கத்துக்கு பழங்குடிகள் வெறகு என்பதை விறகு என்றும், கொடத்தை குடம் என்று செந்தமிழில் பேசுவர்.

அக்காலத்துக்கே உரிய காலரா,வைசூரி, பிளேக் எதோ ஒரு வியாதி மூலம் புலம்பெயர்தல் உண்டு கிரதரன் எவ்வளவு முயன்றும் நீலியை இழக்கிறான்.குறிஞ்சி தரிசனம்.அதை நினைவில்தான் நிறுத்தமுடியும் கையில் கொண்டுவரமுடியாது.கூடாது.

இதுதானா குறிஞ்சிமலர்.பன்னிரண்டு ஆண்டுகொருமுறை பூக்கும் ஒன்றைத்தவிர ஒன்னுமில்லையா?

என்னும்பொழுது கண்ணதாசனின்

மலரே குறிஞ்சி மலரே,

தலைவன் சூட நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை நீ அடைந்தாய்.

பாடல் ஊடுபாவுகிறது தன்னையறியாமல்.

தங்களின் நாவலலில் என்னை மிகவும் கவர்ந்தது காடு நாவல்.காட்டையும் தாண்டி இழந்துபோன பழங்குடி வாழ்க்கை அதில் ஒரு இந்திய மரபு.மறுபடி அந்த வாழ்வுக்காக மனம் ஏங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வாழும் எனக்கு இப்பொழுது இருபத்தெட்டு வயது. இன்று கணிப்பொறி முன்னால். அனால் என் பதின்பருவம் முழுக்க என் மலையில் என் காலடி படாத இடமேயில்லாமல் சுற்றி அலைந்திருக்கிறேன்.அதை கண்முன்னாடி கொண்டுவந்து போட்டதற்கு என்ன சொல்ல…

அன்புடன்

குமரவேல் (கோவை)

***

முந்தைய கட்டுரைதூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைநிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்