எம்.கோவிந்தன் நினைவில்…
ஜெ,
சமீபத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கியமானது எம்.கோவிந்தனைப்பற்றிய அறிமுகம். அவருடைய வாழ்க்கைச்சித்திரம், அவருடைய ஆளுமைபற்றிய ஒருவரைவு, அவர் சிந்திக்கும் முறை, அவருடைய அரசியல் மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பு பற்றிய வரையறை ஆகிய அனைத்துமே அந்த ஒற்றைக்கட்டுரையில் கச்சிதமாக அமைந்திருந்தன. வென்முரசின் இடைவெளியில் நீங்கள் எழுதும் கதைகள், கட்டுரைகள் இப்படி ஒரு அரியபாய்ச்சலைக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.
எம்.கோவிந்தன் முக்கியமான கலைஞர், சிந்தனையாளர். அவரைப்பற்றி சுந்தர ராமசாமி சிறிய குறிப்பு ஒன்றை காலச்சுவடு இதழில் எழுதியிருந்தார். ஒரு பேச்சில் சுகுமாரன் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாதித்தவர்கள், ஆனால் அவர்கள் ஒருவரைப்பற்றி இன்னொருவர் பெரிதாகப்பேசவில்லை என்று சொல்லியிருந்தார். அவர்கள் பெருமதிப்புகொண்டிருந்தனர். அந்த அந்தரங்கத்தன்மையும் எனக்குப்பிடித்திருந்தது
கட்டுரையை வாசித்ததும் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. குறிப்பாக அவர் எதையுமே பெரிதாக எழுதவில்லை, பேச்சுவழியாகவே அவருடைய பங்களிப்பைச்செய்தார் என்பது. நாம் சிந்தித்தாலே போதும் என நினைக்கவைத்தது. கட்டுரை ஒட்டுமொத்தமாகவே ஒரு அரிய மனோவிகாசத்தை அளிப்பதாக இருந்தது. சுந்தர ராமசாமி, கோவிந்தன் இருவரையும் நினைத்துக்கொண்டேன். ஆகவே வாசித்ததுமே இதை எழுத ஆரம்பித்தேன்
மகாதேவன்
***
ஜெ
கோவிந்தனின் இந்தக்கவிதையை நான் முதலில் நீங்கள் மொழியாக்கம் செய்து கனவு வெளியீடாக 1992ல் வெளிவந்த தற்கால மலையாளக்கவிதைகள் என்னும் தொகுதியில் வாசித்தேன். இன்றுவரை என்னை விடாது தொடரும் கவிதை
கோவிந்தன் மலையாளக்கவிதைக்குக் காட்டிய வழி என்ன என்பது அக்கவிதையிலேயே தெளிவாகத்தெரியும்
நானும் சைத்தானும்
தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
“எனக்குரியது எனக்கே” என.
‘யார் நீ” என்றேன்
“தெரியாதோ சைத்தானை?” என்றான்
“அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்”
என்றேன்
‘என்னுடையதை தந்தாய் நன்றி ”
என்று சிரித்து போனான்,
சைத்தான்
– எம் கோவிந்தன் –
இக்கவிதையில் உணர்ச்சி ஒன்றும் இல்லை. நீங்கள் சொன்னதுபோல ஒரு க,நா.சு கவிதை மாதிரித்தான் உள்ளது. ஆனால் ஒரு ஆழமான நையாண்டி உள்ளது. அது வெறும் கேலி அல்ல. ஒரு விஷன் அது
ராஜன்
***