கடிதங்கள்

1
சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை
அன்புள்ள ஜெ

நீங்கள் அடிக்கடி கூறும் உதாரணம் தான் . ஐந்து நட்சத்ர உணவு விடுதியில் ரசம் என்ற பெயரில் வழங்கப்படும் வஸ்து .அது போலத்தான் காலனிய கால கட்டத்தில் அவர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்ட சமய நெறிகளும் .ஆனால் அந்த ஆய்வாளர்களை அப்படியே புறக்கணிக்கவோ , முழுமையாக குற்றம் சொல்லவோ முடியாது தான் .அதற்கான தகுதியை இந்தியர்கள் இன்னும் அடையவில்லை .கடந்த 300 வருடங்களில் அவர்கள் அளவிற்கு கடுமையாக இத்துறையில் உழைத்தவர்கள் நம்மிடையே அதிகம் இல்லை .மேலை நாட்டு ஆய்வாளர்களில் பலருக்கு மத , காலனிய ஆதிக்க நோக்கங்கள் இருந்தது .ஆனால் ஒரு சில ஆய்வாளர்கள் இத்தகைய நோக்கங்கள் இல்லாமல் ஆய்வு செய்துள்ளனர் . நீங்கள் சுட்டி காட்டியது போல அவர்கள் தங்கள் வசம் இருந்த அளவு கோல்களால் ஹிந்து மதத்தை புரிந்து கொள்ள முயன்றார்கள் .இன்று நம்மவர்களும் அதே அளவு கோல்கலை கையில் வைத்துக் கொண்டு திரிவது தான் வருத்தத்திற்கு உரியது
பி.கு : பிக்ஷுவின் பெயர் அநகாரிக தர்ம பாலர் .ஒரே இடத்தில் தங்காதவர் என்று பொருள் என எண்ணுகிறேன். பிழை திருத்தம் மென்பொருள் / ஊக மென்பொருள் உங்கள் கட்டுரையில் அநாகரிக தர்ம பாலர் என்று மாற்றி விட்டது என்று எண்ணுகிறேன் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர் 

 

அன்புள்ள ஜெயமோகன்,

தினமும் பத்திரிகைகளில் வரும் புராதனச் சிலைத் திருட்டுச் செய்திகள் பெரும் ஆயாசத்தை அளிக்கின்றன. இவற்றில் கடந்த இருநாட்களாக பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் செய்தி, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நிகழ்ந்திருக்கும் சிலை திருட்டு, இதை சிலைத் திருட்டு என்று சொல்வதை விட, திட்டமிட்ட கலாசார அழிப்பு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

திருச்சி அருகேயுள்ள எங்கள் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர், உங்கள் கோவிலில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளது என்று சொல்லி எங்கள் ஊரின் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவித் தாயார் ஐம்பொன் விக்ரஹங்களை எவ்வித அறிவிப்புமின்றி ஒருநாள் வந்து அறநிலையத்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். இது போல எடுத்துச் செல்லப்படும் விக்ரஹங்கள் அனைத்தும் ஒரு கோடவுனில் பூட்டி வைக்கப்படுகிறது. அவ்வாறாக பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலிலுள்ள, 39 ஆண்டுகளாக எவ்வித பூஜைகளும் அற்று, பூட்டிக் கிடந்த கிடங்கிலிருந்து 7 புராதன விக்ரஹங்கள் திருடி போயுள்ளன, இது தவிர, 900 ஆண்டுகள் பழைமையான மாணிக்கவாசகர் சிலைக்குப் பதிலாக புதிதாக செய்யப்பட்ட சிலை ஒன்று மாற்றாக வைக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிடங்கிலிருந்து திருடு போகும் இவற்றிற்கு யார் பொறுப்பேற்பது? அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோவில்களுக்கு தக்க பாதுகாப்பை ஏற்படுத்துவது யார் பொறுப்பு? இதற்கெல்லாம் என்ன தீர்வு? கற்சிற்பங்களைக் காயப்படுத்துவதும், கல்வெட்டுகளை அழிப்பதும், உலோக சிற்பங்களைக் களவு கொடுப்பதுமே அறநிலையத்துறையின் பணியாகவல்லவா இருக்கிறது?

அன்புடன்,

பாஷ்யம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்
அடுத்த கட்டுரைசீ.முத்துசாமி என்னும் முன்னோடி