எம்.கோவிந்தன் நினைவில்…

M.Govindan

மலையாளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தனின் பெயரை பொதுவாசகர்கள் அனேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைக்கதைகள், கட்டுரைகள். ஆனால் அவர் எதிலுமே ஒரு தேர்ந்த படைப்பாளியாகவோ சிந்தனையாளராகவோ வெளிப்படவில்லை. அவருடைய கவிதைகள் க.நா.சு கவிதைகளைப்போல. கவிதைக்கான எழுச்சி அற்ற வடிவச்சோதனைகள் அவை. நாடகங்கள் மெல்லிய நகைச்சுவைகொண்ட உருவகங்கள். கட்டுரைகள் கூட பெரும்பாலும் குறிப்புகளாகவே நின்றுவிட்டவை. மலையாள சினிமாவின் புதிய திசைமாற்றத்துக்கு வழியமைத்தவை என்றாலும் திரைக்கதைகளும் மிகச்சுமாரானவையே.

ஆனால் தென்னிந்தியாவில் ஓர் இலக்கிய மறுமலர்ச்சியை உருவாக்கிய முன்னோடி அவர். தமிழில் சுந்தர ராமசாமி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன் போன்ற ஒரு தலைமுறையினருக்கு அவர் ஆதர்சம். ஜே.ஜே.சிலகுறிப்புகளில் வரும் எம்.கே.அய்யப்பன் அவர்தான். கன்னடத்தில் ராமச்சந்திர ஷர்மா, யூ.ஆர்.அனந்தமூர்த்தி,சந்திரசேகரக் கம்பார் போன்ற பலரை அவர் பாதித்திருக்கிறார். மலையாளத்தில் ஒரு தலைமுறையின் முக்கியமான எழுத்தாளர்கள், திரைப்படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே அவருடைய தூண்டுதல்கொண்டவர்கள். ஆற்றூர் ரவிவர்மா, பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கங்காதரன், ஓ.வி.விஜயன், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் ஆனந்த் என அப்பட்டியல் மிக நீண்டது.

எம்.கோவிந்தனின் செல்வாக்கு அவருடைய உரையாடல்கள் வழியாகவே நிகழ்ந்தது.  ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் ஹாரீஸ் சாலையில் இருந்த அவருடைய வீட்டில் இருந்து கிளம்பி கேரளத்தின் முக்கியமான நகரங்களில் ஒவ்வொரு வாரம் வீதம் தங்கி சுற்றிவருவார். பெரும்பாலும் அவர் தங்க சிறிய மலிவான விடுதிகள் ஏற்பாடு செய்யப்படும். அங்கே அன்றைய வளரும் எழுத்தாளர்கள் வந்து அவரைச் சந்திப்பார்கள். அவர் பேசிக்கொண்டிருப்பார். “மின்னல் கோர்க்கும் உரையாடல்’ என ஆற்றூர் ரவிவர்மா ஒரு கவிதையில் அதைச் சொல்கிறார். புதியன தேடிவரும் இளையோரை பற்றி எரியவைக்கும் மின்னல் அது.

mg

அவரிடமிருந்து நவீன இலக்கியத்தை, மேலைநாட்டு கலைத்தத்துவங்களை, இந்திய வரலாற்றின் மீதான மாற்றுப்பார்வையை இளைய தலைமுறை பெற்றுக்கொண்டது. அவர்கள் எழுதிய ஆரம்பகாலப் படைப்புகளை கறாராக விமர்சித்து, திருத்தியமைத்து, அவை வெளியாகவும் உதவிசெய்தார். மலையாள எழுத்தாளர் ஆனந்த் அவர் எழுதிய முதல் நாவலான ’மரணசர்ட்டிஃபிகெட்’டின் கைப்பிரதியை கோவிந்தன் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக போட்டுவிட்டு சென்றார் என்று சொல்லியிருக்கிறார். எட்டுமாதம் கழித்து அது அன்றைய முதன்மையான வார இதழில் வெளியாகத் தொடங்கியதும்தான் ஆனந்த் அறிந்தார். ஆனால் சிலநாட்கள் கழித்து அந்நாவல்மீதான கடுமையான விமர்சனம் கோவிந்தனிடமிருந்து வந்தது.

கோவிந்தனை ஆழமாகப் பாதிக்கவேண்டும் என்ற வேகம் எழுந்து ஆனந்த் எழுதிய ஆள்கூட்டம் ஆனந்தின் முதன்மைப்படைப்பாகவும், மலையாளத்தில் ஒரு செவ்வியலாக்கமாகவும் கருதப்படுகிறது. ஆள்கூட்டத்தை வாசித்த கோவிந்தன் ‘மோசமல்ல’ என்று சொன்ன மாபெரும் பாராட்டு ஆனந்தை நிறைவுறச்செய்தது.

மலப்புற மாவட்டத்தில் பொன்னானி அருகே திருக்கண்ணபுரம் ஊரில் பிறந்தவர் மாஞ்சேரத்து தாழேத்தில் கோவிந்தன். 1919 செப்டெம்பர் 18. தந்தை கோதயத்து மனையில் சித்ரன் நம்பூதிரி. அம்மா மாஞ்சேரத்து தாழேத்தில் தேவகியம்மா.கோவிந்தன் 9 ஆம் வகுப்பு படிக்கையில் தந்தை மறைந்தார். தாய் சென்னையில் காவலதிகாரியாக பணியாற்றிய கருணாகரன் நாயரை மறுமணம் புரிந்துகொண்டார். தயுடன் சென்னைக்கு வந்தபின் கோவிந்தனின் ஊர் சென்னையே ஆயிற்று. சென்னையில் தமிழில் மேற்படிப்பைத் தொடர விரும்பாத கோவிந்தன் வீட்டிலிருந்தே ஏராளமாக வாசித்தார். ஆங்கிலம், தமிழ், மலையாளம் மொழிகளில். ஐரோப்பிய சுதந்திர ஜனநாயகச் சிந்தனைகளிலும் ஜெர்மானிய மெய்யியல் தத்துவங்களிலும் ஆழ்ந்த ஆர்வம்கொண்டிருந்தார்

mg1

தென்னிந்தியாவில் ஜாதியும் வர்க்கமும் என்னும் ஆங்கிலக் கட்டுரை இண்டிப்பெண்டண்ட் இதழில் வெளிவரும்போது அவருக்கு வயது 17. இந்திய இடதுசாரிச் சிந்தனைகளின் முன்னோடியாகிய எம்.என்.ராய் நேரடியாகவே எம்.கோவிந்தனுக்குக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார். அவரை தன் ஆசிரியராக கோவிந்தன் ஏற்றுக்கொண்டார். கோவிந்தன் கடைசிக்கணம் வரை ஒரு ‘ராயிஸ்ட்’ ஆகவே தொடர்ந்தார். எம்.என்.ராய் மீதான அவருடைய ஈடுபாடு- அதை குருபக்தி என்றே சொல்லலாம் – இந்திய கல்விமரபில் என்றுமிருக்கும் ஓர் உணர்வுநிலை

இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் பின்னர் கம்யூனிச இயக்கத்திலும் கோவிந்தன் தீவிரமாக ஈடுபட்டார். பொன்னற ஸ்ரீதர் போன்ற இடதுசாரி தீவிரவாதிகளுடன் இணைந்து ‘பயங்கரவாதச்’ செயல்களிலும் ஈடுபட்டார். இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தைத் தொடங்கிய எம்.ராய் ஸ்டாலினிஸ வன்முறைகளால் உளம் மாறுபட்டு கம்யூனிச இயக்கத்தின் ருஷ்ய அடிமைத்தனத்தை கண்டித்து தொடங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் தென்னக ஒருங்கிணைப்பாளராக இருந்தார்

ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியில் கோவிந்தனின் சீடர்களான எழுத்தாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். 1943ல் கோவிந்தன் தீவிர அரசியலை விட்டு விலகினார். 1944 முதல் 12 ஆண்டுக்காலம் சென்னை மாகாண அரசிலும், தமிழக அரசிலும் செய்தித்துறையில் பணியாற்றினார். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட்டின் கடும் விமர்சகராக விளங்கிய அவருக்கு  இ.எம்.எஸுடன் அணுக்கமான நட்பும் இருந்தது. 1956ல் இ.எம்.எஸ் தலைமையில் இடதுசாரிகள் கேரள ஆட்சியைக் கைப்பற்றியபோது அவ்வரசின் செய்தித்தொடர்புத்துறையில் ஊழியராக கோவிந்தன் சேர்ந்தார். 1959ல் இ.எம்.எஸ் அரசு கவிழ்க்கப்பட்டபோது ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்தப்பணியிலும் இருக்கவில்லை.

கோவிந்தனின் அதற்குப்பிந்தைய வாழ்க்கை என்பது சிற்றிதழ்கள் நடத்தியதும் பயணமும் உரையாடலும் மட்டுமே. கோவிந்தனின் மனைவி பத்மாவதி அம்மா ஒரு மருத்துவர். ஆகவே அவருக்குப்பொருளியல் சிக்கல்கள் இருக்கவில்லை. நவசாஹிதி, கோபுரம், சமீக்‌ஷா ஆகியவை கோவிந்தன் நடத்திய சிற்றிதழ்கள். சென்னையில் இருந்து வெளிவந்த சமீக்‌ஷா மலையாள நவீனத்துவத்தின் நாற்றங்கால் என்றே சொல்லப்படுகிறது. கோவிந்தனும் சி.ஜே.தாமஸும் இரட்டையராகவே செயல்பட்டனர். சி.ஜெ.தாமஸ் இளமையிலேயே இறந்தார். சி.ஜெ.யை முன்வடிவாக்கி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே.சிலகுறிப்புகளில் எம்.கே.அய்யப்பன் என்றபேரில் கோவிந்தன் வருகிறார்.

mg3

கோவிந்தன் செயல்பட்ட தளங்கள் மூன்று. ஒன்று மார்க்ஸிய அமைப்புகளுடனான எதிர்உரையாடல். அந்த உரையாடல் மிகத்தீவிரமாக நிகழ்ந்தாலும்கூட கோவிந்தனை மார்க்சிய எதிர்ப்பாளர் என்று சொல்லமுடியாது. அவரை இன்று முன்னெடுப்பவர்களில் மார்க்ஸியர்களே மிகுதி. அவர் மார்க்ஸியத்தின் ‘ஆண்’ தன்மையை எதிர்த்தவர் என்று சொல்லலாம். நிலக்கரி, மின்சாரம், இரும்பு, சிமெண்ட் என்னும் நான்கு ‘ஆண்’ பூதங்களால் ஆனது ஸ்டாலினின் கம்யூனிசம் என அவர் கிண்டலாக ஒருமுறைக் குறிப்பிட்டார்.

மையத்தால் இறுக்கப்படாததும், நெகிழ்வற்ற அமைப்பால் ஆட்சி செய்யப்படாததும், உள்விவாதங்களுக்கு இடமளிப்பதுமான ஒரு மார்க்சியத்துக்காக அவர் வாதிட்டார். சிந்தனையையும் பண்பாட்டையும் பொருளியல் அடிக்கட்டுமானத்தின் மேல்கட்டுமானம் என வரையறைசெய்யும் சம்பிரதாய மார்க்ஸியத்தை எதிர்த்தார். மார்க்ஸிய இலட்சியவாதத்தையும் மார்க்சிய தத்துவநோக்கையும் மார்க்ஸிய வரலாற்று ஆய்வுமுறைமையையும் ஏற்றுக்கொண்ட அவர் அதன் அரசியல் வழிமுறை என்பது ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது, காலாவதியானது என குறிப்பிட்டார். அரசுமைய கம்யூனிசம் என்பது அரசுமுதலாளித்துவமே என்றார்.

கோவிந்தன் பேசிக்கொண்டிருந்தவை வெவ்வேறு வடிவில் ஐரோப்பாவெங்கும் மார்க்ஸிய அறிஞர்கள் பேசியவையே. கிராம்ஷியின் குறிப்பேடுகள் 1970 களில் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அவை கோவிந்தன் எழுதியதுபோல் உள்ளன என்று சொன்னவர்கள் உண்டு. கிராம்ஷி மார்க்ஸியத்தின் பொருளியல்மையவாதம் [economism] சார்ந்தும் பொருண்மைவாதம் [materialism] சார்ந்தும் சொன்னவற்றையே கோவிந்தனும் சொன்னார்.

கோவிந்தனின் இரண்டாவது பங்களிப்பு, இலக்கியத்தில். அவர் உணர்ச்சிகரமான ‘மக்கள் இலக்கியத்திற்கு’ எதிரானவர். இலக்கியம் அதற்குரிய வாசகர்களையே இலக்காக்கவேண்டுமென வாதிட்டவர். ஆகவே குறைத்துச்சொல்லுதல், வடிவ ஒருமை, படிமச்செறிவு கொண்ட கவிதை மற்றும் கதை வெளிப்பாடுகளை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவருடைய அவையிலிருந்து கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் வெடித்துக்கொப்பளிக்கும் ‘மக்கள்கவிதை’ இயக்கமாக வெளிப்பட்டபோது அந்த தன்னிச்சையான எழுச்சியை ஆதரிக்கவும் செய்தார். ஆனால் அவர் முன்வைத்த அறிவார்ந்த கவிதை இயக்கத்தின் சரியான வாரிசு அவருடைய முதன்மை மாணவரான ஆற்றூர் ரவிவர்மாதான்.

மூன்றாவதாக எம்.கோவிந்தன் மலையாளச் சினிமாவிலும் இதழியலிலும் புதுக்குருதி நுழையக் காரணமாக அமைந்தார். தொடர்ந்து நவீன சினிமாவுக்காக பேசிக்கொண்டிருந்தார். அடூர் கோபாலகிருஷ்ணன் 1972ல் சுயம்வரம் என்னும் படம் வழியாக மலையாளக் கலைப்பட இயக்கத்தை ஆரம்பித்ததற்கு கோவிந்தன் முதன்மையான காரணம்.

C_J_Thomas-5
சி.ஜெ.தாமஸ்

எம்.கோவிந்தனை நான் மூன்றுமுறை சந்தித்திருக்கிறேன். 1986-ல் ஒருமுறை ஹாரீஸ் ரோட்டில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். அச்சந்திப்பின்போது அவருடன் மலையாள இதழாளர் என்.ஆர்.எஸ்.பாபுவும், கன்னட இதழாளர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 24 வயதான நான் ஓரமாக நின்று அவருடைய பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடைய மாணவர் ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவன் என்ற நிலையில் நான் அவருடைய மூன்றாம்தலைமுறைத் தொடர்ச்சி.

அவர் இயல்பாக என்னை நோக்கித்திரும்பி புன்னகைத்து இடதுசாரி இயக்கங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பிளவு குறித்த என் கருத்தைக் கேட்டார். இந்துத்துவக்கொள்கை கொண்ட இயக்கங்களில் அத்தகைய தொடர்பிளவுகள் ஏன் நிகழ்வதில்லை என்றார். நான் “அவற்றிலும் நிகழ்கின்றன, ஆனால் அவை பொதுவெளியில் பேசப்படுவதில்லை. ஏனென்றால் இடதுசாரிகள் பிளவுகளை கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் விளக்கமுயல்கிறார்கள். ஆகவே பொதுவெளியில் அவற்றைப்பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அந்தப்பிளவு குறித்து நமக்கு தெரிகிறது” என்றேன்.

அவர் உற்சாகத்துடன் என்னை ஆமோதித்து மேலே பேசினார். அது அவரது இயல்பு. அவரைக்காணவரும் மிக இளையவர்கூட அவரிடம் பேசவைப்பார்.   அவர் அன்று பேசிக்கொண்டிருந்த கருத்து சுவாரசியமானது. ஒரு சமூகத்தில் சிந்தனைச் செயல்பாடுகளுக்கு ஒரு பொதுப்போக்கு அதன் மிகத்தொடக்ககாலம் முதலே உருவாகியிருக்கும். அது அங்கே பின்னர் உருவாகும் அத்தனைச் சிந்தனைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். வேதாந்த மரபுகள், தாந்த்ரீக மரபுகள் , பௌத்த உள்மதங்கள் என இந்தியாவின் எந்த சிந்தனைமரபை எடுத்துக்கொண்டாலும் மையத்தரிசனத்தை பெரும்பாலும் அப்படியே ஏற்றுக்கொள்வதும், நடைமுறை குறித்து மிகச்சிறிய வேறுபாடுகளை முன்வைத்து தொடர்ந்து பூசலிட்டுப்பிளவுகொள்வதுமே இயல்பாக உள்ளது என்றார் கோவிந்தன்.

ems
இ.எம்.எஸ்

பெரும்பாலும் அவை நடைமுறையை ஒருவகையான மாறாத சடங்குகளாக வகுத்துக்கொள்வதன் விளைவாகவே நிகழும் என்றார். தாந்த்ரீக மதங்களில் என்ன நடந்ததோ அதுவே இடதுசாரி இயக்கங்களிலும்  நிகழ்கிறது என அவர் விளக்கியபோது நான் ஒரு மின்னதிர்வை அடைந்தேன். உண்மையில் அது சரியானது என எனக்கு அன்று தோன்றவில்லை .அது சரியானதா என்பதல்ல முக்கியம். அத்தகைய திறப்புகளை வரலாறு, பண்பாடு சார்ந்து அடைவதே எழுத்தாளனின் பணி. கோவிந்தன் ஆய்வுமுடிவுகளை முன்வைப்பதில்லை. அவருடைய கருத்துக்கள் எல்லாமே வெறும் அவதானிப்புகள். ஒரு மின்னல் போல பேச்சினூடே தோன்றுபவை. உடனே அதைச் சொல்லிவிட்டு அப்படியே மறந்து கடந்துவிடுவார். அவை விதைக்கப்பட்ட இளையோர் உள்ளங்களில் நெடுங்காலம் அவை வளர்ந்துகொண்டிருக்கும்

ஆனால் தன் உள்ளறிதலை ஒரு கொள்கையாக ஆக்கி முன்வைத்து, அதை நிரூபிக்கும்பொருட்டு ஆண்டுக்கணக்கில் ஆய்வுசெய்வது எழுத்தாளனுக்குரிய பணி அல்ல. அதைச் சொல்லி ஒரு விவாதத்தை உருவாக்கி, அதனூடாக திரண்டுவருவதே தன் கொடை என எண்ணுவதுதான் அவன் கடைப்பிடிக்கவேண்டிய வழி. பெருங்கோட்பாடுகளின் மையச்சாலையில் அல்ல, உள்ளுணர்வின் ஊடுவழிகளிலேயே அவன் கால்கள் செல்லவேண்டும். அவன் பிழையாகச் சொல்லலாம், கேலிக்குரியவனாகவும் ஆகலாம். ஆனால் தன் உள்ளத்திலெழுவதைச் சொல்ல அவன் அஞ்சவேண்டியதில்லை.

படைப்பாளியை பிழைகள் சொன்னான் என்பதனால், கேலிக்குரியவற்றைச் சொன்னான் என்பதனால் வரலாறு நிராகரிப்பதில்லை. சொல்லப்போனால் அப்படிச் சொல்லாத பெரும்படைப்பாளிகள் எவருமே உலகவரலாற்றில் இதுவரை உருவாகவில்லை. உள்ளுணர்வின் கைவெளிச்சமே அவனை வழிநடத்தவேண்டும். சமகாலத்தின் நெடுஞ்சாலைவிளக்குகள் அல்ல. அது கோவிந்தனின் கொள்கை. அதை வெவ்வேறு சொற்களில் அவர் சொல்லியிருக்கிறார். சுந்தர ராமசாமியும் அதைச் சொல்லியிருக்கிறார்.

1987 ல் சுந்தர ராமசாமிக்கு சென்னையில் ஒரு மலையாள அமைப்பு குமாரனாசான் விருது அளித்தபோது ஆற்றூர் ரவிவர்மா திரிச்சூரில் ஒரு வாழ்த்துக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு வந்த சுந்தர ராமசாமி அருகே திருக்கண்ணபுரத்தில் தன் குடும்பவீட்டில் தங்கியிருந்த கோவிந்தனைச் சென்றுபார்க்க விரும்பினார். கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் உடன்வந்தார். நாங்கள் அன்று கோவிந்தனை அவருடைய இல்லத்தில் சென்றுகண்டபோது முற்றிலும் வேறானவராக இருந்தார். சாய்வுநாற்காலியில் சட்டை இல்லாமல் அமர்ந்திருந்தார். உரக்கச்சிரித்து வெற்றிலைபோட்டு துப்பி மகிழ்ச்சியாகப்பேசினார். அவருடைய மைந்தர் மானவேந்திரநாத் உடனிருந்தார்.

sura

அன்று யூ.ஆர்.அனந்தமூர்த்தி கோட்டயம் பல்கலை துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருந்தார். இடதுசாரிகளால் அவர் அப்பொறுப்புக்கு வந்திருந்தாலும் இடதுசாரித் தொழிற்சங்கங்களின் நெருக்குதல் அவருக்கிருந்தது. அதைப்பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.கோவிந்தன் ’இடதுசாரிக் கலாச்சாரம்’ ஒன்றை உருவாக்குவதில் பிழை நேர்ந்துள்ளது என்றார். ஒருமுக்கியமான கேள்வியை அவர் முன்வைத்தார். ஒரு மார்க்ஸியத் தொண்டர் பொதுமக்களின் விழைவை எதுவரை ஆதரிக்கவேண்டும்?

அவர் போராடுவது பொதுமக்களின் உலகியல் விழைவுகள் நிறைவேறவேண்டும் என்றுதான். ஆனால் அது எதுவரை? உணவு, உடை, உறைவிடம் ஆகியவை இல்லாதிருந்த ஒருகாலகட்டத்தில் அக்கேள்வி எழவில்லை. அவை மட்டுமே அன்று மக்களின் உலகியல்விழைவாக இருந்தன.ஆனால் கேரளத்தில் எண்பதுகளில் அவை பெரும்பாலும் நிறைவேறிவிட்டன. ஆனால் மக்களின் உலகியல்விழைவுகள் முடிவதே இல்லை. மேலும் மேலும் தேவைப்படுகின்றன. அவற்றை முடிவில்லாது பேணுவதுதான் இடதுசாரித் தொண்டனின் பணியா? அவன் அலாவுதீனின் விளக்கிலிருந்து எழுந்த ஜீனியா என்ன?

சுந்தர ராமசாமி அந்த உரையாடலில் எழுந்த வினாவை ஒட்டி மேலும் எழுதியிருக்கிறார். பொன்வளையல்கள் கீழே தழைய கல்லூரி ஆசிரியைகள் கைகளை தூக்கி புரட்சிமுழக்கமிட்டு ஊதிய உயர்வு கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என கூவுவதை அவர் சித்தரித்திருந்தார்.

ஃபோர்டு பவுண்டேஷன் நிதியுதவியுடன் நடக்கும் நாடகப் பரிசோதனைகளைப்பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். நாட்டார்க்கலைகளின் கூறுகளை வலிந்து நாடகங்களுக்குள் கொண்டுவருவதென்பது ஒரு பிழையாக ஆகும் என்றார் கோவிந்தன். படிமங்கள் கோயிற்சிலைகளைப்போல. அவை இருக்கவேண்டிய இடங்களில் இருந்து பெயர்த்தால் வெறும் பொருட்களாக ஆகிவிடும் என்றார். காலப்போக்கில் அவை தங்கள் அசல் குறியீட்டுத்தன்மையை இழக்கலும் கூடும்.

anandamurthi
யு.ஆர்.அனந்தமூர்த்தி

கோவிந்தனின் மகன் மானவேந்திரநாத் அப்போது பின்னாலிருந்து தந்தையை விமர்சித்து கைகளை காட்டினார். அவர் ஒரு நாடக நடிகர். ந.முத்துசாமியின் குழுவில் இருந்தார். அடிப்படையில் கலைஞர். ஆனால் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் அவரை அழித்துக்கொண்டிருந்தது. அதுபற்றி கோவிந்தன் வயதான காலத்தில் மிகுந்த மனவருத்தம் கொண்டிருந்தார். எம்.என்.ராயின் [மானவேந்திரநாத் ராய்] பெயரை தன் மகனுக்கு வைத்தபோது அவர் மிகுந்த கனவுகள் கொண்டிருக்கவேண்டும். சென்ற ஆண்டு மானவேந்திரநாத் மறைந்தார்

கோவிந்தனை அடுத்த ஆண்டு மீண்டும் சந்தித்தேன். காலச்சுவடு இதழை சுந்தர ராமசாமி தொடங்கவிருந்த காலம். எம்.என்.ராய் பற்றி ஒருகட்டுரை அதில் வரவிருந்தது. அதற்கு எம்.என்.ராயின் படத்தின் அச்சுக்கட்டைகள் [பிளாக்குகள்] தேவை என்றார். அன்று கட்டை அச்சு. படங்களை அச்சுக்கட்டை    போடுவது பெரிய செலவு. சமீக்‌ஷாவில்அச்சுக்கட்டைகள் இருந்தன, கேட்டுப்பார் என என்னிடம் சொன்னார். நான் கோவிந்தனின் வீட்டுக்குச் சென்று அவரிடம் கேட்டேன். அவர் அன்று சற்று நோயுற்றிருந்தார். துண்டத்தில் கிருஷ்ணப்பிரசாத் என்ற பழைய நண்பர் எர்ணாகுளத்தில் இருப்பதாகவும் அவரிடம் கேட்கலாம் என்றும் சொன்னார். சுருக்கமான உரையாடல். அங்கிருந்து நான் எர்ணாகுளம் சென்று அந்த அச்சுக்கட்டைகளை வாங்கிக்கொண்டுவந்து நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியிடம் அளித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையின் சோர்வுகளால் கோவிந்தன் தளர்ந்திருக்கிறார் என சுந்தர ராமசாமி சொன்னார்

அடுத்த ஆண்டு 1989 ஜனவரி 13 கோவிந்தன் தன் குருவாயூர் இல்லத்தில் மரணமடைந்தார். அப்போது நான் பாலக்கோட்டில் இருந்தேன். ஒருநாள் கழித்தே செய்தி தெரிந்தது. சுந்தர ராமசாமியிடமும் ஆற்றூர் ரவிவர்மாவிடமும் பேசினேன். அன்று வந்துகொண்டிருந்த சதங்கை சிற்றிதழில் நான் கோவிந்தனைப்பற்றிய குறிப்பு ஒன்றை எழுதினேன்.

ஆற்றூர் ரவிவர்மா
ஆற்றூர் ரவிவர்மா

ஆற்றூர் கோவிந்தனைப்பற்றி இரு கவிதைகள் எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமி உட்பட கோவிந்தனின் மாணவர்கள் அனைவருமே அவரைப்பற்றி நினைவுக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். நினைவுகளினூடாக கோவிந்தன் வாழ்கிறார். ஏ. ராதாகிருஷ்ணன் எழுதிய ‘எம் கோவிந்தன் ஜீவிதமும் ஆசயமும்’ [எம்.கோவிந்தன் வாழ்வும் செய்தியும்] அவருடைய வாழ்க்கை வரலாற்றுநூல்.

பண்பாட்டின் ஒழுக்கு நம்மால் உணரப்படுவதும் ஆனால் வகுத்துரைக்க முடியாததுமான ஒன்று  அதில் ஒவ்வொரு சிந்தனையாளனும், கலைஞனும் தன் பங்களிப்பை ஆற்றுகிறான். பலசமயம் அப்பங்களிப்புகளை மதிப்பிடுவதற்கே மிகப்பெரிய கால இடைவெளி தேவை. கோவிந்தன் வாழ்ந்த காலகட்டத்தில் ஓங்கி ஒலித்த பலகுரல்களின் நினைவுகள் அடங்கிவிட்டன. கோவிந்தன் இன்று ஒரு மிகமுக்கியமான காலச்சுழிப்பாக எழுந்து வந்திருக்கிறார்.

2010ல் எம் கோவிந்தன் நினைவுப்பேருரையை அவருடைய மாணவர் மரபின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் திரிச்சூரில் நிகழ்த்தினேன். எம்.கோவிந்தன் அறக்கட்டளை இப்போது அவருடைய கவிதைகளை தொகுத்து வெளியிடுகிறது. வெளியீட்டுவிழா டிசம்பர் 6 2017 அன்று திருவனந்தபுரத்தில் பிரஸ்கிளப் அரங்கில் மாலை ஐந்துமணிக்கு நிகழ்கிறது. அடூர் கோபாலகிருஷ்ணன், பால் சகரியா கலந்துகொள்கிறார்கள். கோவிந்தனைப்பற்றி நான் பேசுகிறேன்

e10trksh07-govindan.ART_GJ91IGEOL.1+KI11BEEVISDR

M. Govindan remembered

முந்தைய கட்டுரைசீ.முத்துசாமி என்னும் முன்னோடி
அடுத்த கட்டுரையானையுலகம்