அஞ்சலி: எம்.எஸ்

em eS

 

எம்.எஸ்.என்று அழைக்கப்பட்ட எம்.சிவசுப்ரமணியம் அவர்களின் முதன்மைத்தகுதி அவர் சுந்தர ராமசாமியின் நண்பராக ஐம்பதாண்டுக்காலம் திகழ்ந்தார் என்பதுதான். சென்ற நூற்றாண்டுக்குரிய அற்புதமான நட்பு அது. மிக இளமைக்காலத்தில் அந்நட்பு உருவானது. சேர்ந்து இலக்கியம்வாசித்து பூசலிட்டு சினிமாபார்த்து மெல்ல கனிந்து ஒருசொல்லும் பேசத்தேவையற்றதாக ஆகியது. ஆனால் அனேகமாகத் தினமும் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள்

சுந்தர ராமசாமியின் படைப்புகளை மெய்ப்புநோக்கிச் சீரமைத்திருக்கிறார் எம்.எஸ். தமிழில் வெளியான பல படைப்புக்களை அவர் பிரதிமேம்படுத்தியிருக்கிறார். லா.ச.ரா நாகர்கோயிலில் தங்கி அபிதாவை எழுதியபோது அதைச் செம்மைப்படுத்த உதவினார். தி.ஜானகிராமன், நீல பத்மநாபன், தோப்பில் முகமதுமீரான் உட்பட ஏராளமான படைப்புகளை செம்மைசெய்திருக்கிறார். விஷ்ணுபுரத்திலும் அவருடைய பங்களிப்பு உண்டு

மொழியாக்கத்தில் அவருக்கு ஆர்வமிருந்தாலும் பெரிய தூண்டுதல் அற்றவராக இருந்தார். சொல்புதிது மும்மாத இதழை நாங்கள் ஆரம்பிக்கும்போது அவரை வற்புறுத்தி கதைகள் தெரிவுசெய்துகொடுத்து மொழியாக்கம் செய்யவைத்தேன். அனேகமாக எல்லா இதழிலும் அவருடைய மொழியாக்கக் கதைகள் வெளிவந்தன. அதன்பின்னர் என் முயற்சியில் அவை தமிழினி பதிப்பகத்தால் நூலாக்கம் செய்யப்பட்டன

em eS

அந்நூல்களுக்கு அருண்மொழிநங்கை செலவில் நாகர்கோயிலில் 2003 ல் ஒரு விழா ஏற்பாடுசெய்தோம். வேதசகாயகுமார் உடனிருந்தார். அவ்விழாவில் குமரிமைந்தன், பொன்னீலன் போன்றவர்கள் பங்கெடுத்தார்க்ள். அது எம்.எஸ் அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிப்பதாக இருந்தது. பின்னர் ஏராளமான மொழியாக்கங்களைசெய்தார்

எம்.எஸ்.  அவர்களுடையது ஒரு முன்னுதாரண மொழியாக்கம் என்று சொல்லமுடியும். சொல் சொல்லாக மொழியாக்கம் செய்வார். ஆனால் ஒட்டுமொத்தமாக முழுமையான தமிழ்த்தன்மையுடன் சரளமாக அமைந்திருக்கும். பிரதிமேம்படுத்தும்போது அருந்தினான், குடித்தான் என்னும் சொற்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை கருத்தில்கொண்டு அவர் மாற்றம்செய்ததைக் கண்டிருக்கிறேன்

எம் எஸுக்கு மெய்ப்பு நோக்குதல் ஒரு தவம்போல. என் குழந்தைகளைப்பார்க்க வாரந்தோறும் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். சிறிய இடைவெளி அமைந்தால்கூட உடனே மெய்ப்பு நோக்க ஆரம்பித்துவிடுவார். விடியற்காலை நான்குமணிக்கு எழுந்து மெய்ப்புநோக்குவது அவர் உள்ளத்திற்கு இனிதாக இருந்தது என்று சொல்வார்.

222

சினம், கொந்தளிப்பு ஏதுமற்றவர் எம்.எஸ்.. மிக இயல்பானவர். எவரையும் எதிர்த்துப்பேசமாட்டார். விமர்சனங்கள் சொல்லமாட்டார். பாராட்டும் மிதமாகவே. குழந்தைகளுக்கு மிகமிக அணுக்கமானவர். நுட்பமானவற்றை நோக்கிச்செல்லும் உளநிலை கொண்டவர். ஆனால் சரியாக அமையாத ஒரு படைப்பைப்பற்றி அவரிடம் புகார்களே இருக்காது

திருவெண்பரிசாரம் என்னும் திருப்பதிச்சாரத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ். அவருடைய தம்பிதான் மறைந்த மா.அரங்கநாதன். 1929ல் பிறந்தவர் எம்.எஸ். தான் விரும்பும்படி அதிராது வாழ்ந்து மறைந்த முழுமையான வாழ்க்கை அவருடையது.

எம்.எஸ்.  அவர்களுக்கு அஞ்சலி

 

எம்.எஸ்.அவர்களின் நூல்கள்

சகரியா கதைகள் – தமிழினி

அமைதியான மாலைப்பொழுதில்- தமிழினி

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை – காலச்சுவடு

கிழவனும் கடலும்  –காலச்சுவடு

 

எம்.எஸ் – பாராட்டுவிழா. 2003

முந்தைய கட்டுரைஹீரோ
அடுத்த கட்டுரைதூயன் சிறுகதைகள்