கருத்தியல்,பெண்மை -கடிதங்கள்

anna
அன்னா லாரினா இளமையில்

கருத்தியல்,கருணை,பெண்மை

கருத்தியலில் இருந்து விடுதலை

ஜெமோ,

http://www.jeyamohan.in/104232#.WiFjCctX7R4. உங்களுக்கு வந்த நல்ல கடிதங்களில் ஒன்று.  நீங்கள் புளங்காகிதம் அடைந்திருக்கக் கூடும்.

உங்களின் ஆக்கங்களைப் புரிந்து கொள்ள எவ்வளவு விரிவான மற்றும் ஆழமான வாசிப்பு தேவை என்பதை உணர்த்தியிருக்கிறது AV மணிகண்டனின் இந்தக் கடிதம்.

இக்கடிதத்தில், ஆணியத்தையும் பெண்ணியத்தையும் முறையே நவீனத்துவத்துடனும் பின்நவீனத்துவத்துடனும் ஒப்புநோக்கியிருந்தார் It is very anological.

இந்த ஆணியமும் பெண்ணியமும் ஒருவகையான கருத்தியல்கள் என்றே எண்ணுகிறேன். எல்லாக் கருத்தியல்களுக்கும் உரித்தான தன்னைச் சுருக்கி ஒற்றைப்படையாக தொகுத்துக் கொள்ளும் தன்மை இவற்றிற்கும் ஏற்பட்டது. எல்லாக் கருத்தியல்களும் இப்படிச் சிதைக்கப்படுவது அதைப் பின்பற்றும் அதீத பற்றாளர்களால் தான்.

ஒன்றை ஒற்றைப்படையாக்கியவுடனே அதை நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படுவது ஒரு குறியீடு (symbol). துரதிர்ஷ்டவசமாக ஆணியத்திற்கும் பெண்ணியத்திற்கும் இயல்பான குறியீடாக அமைந்தது மனித உடல்.

ஆண் என்றாலே புரட்சி. புரட்சி என்றாலே தடாலடி. பெண் என்றாலே மென்மை. மென்மை என்றாலே அடங்கியிருப்பது. எளிய மனங்களில் மிக எளிதாக இவை உட்புகுந்து கொள்கின்றன.

இதுவே, பிரபாகரனின் புரட்சிப் போராட்டத்தை ஆண்மைத்தன்மையென போற்றவும்; காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை பெட்டைத்தனமென பரிகாசிக்கவும்  செய்கிறது. அடக்கியாளும் பெண்ணை  திமிர் பிடித்தவள் என்றும்; அடங்கிப் போகும் ஆணை கோழையென்றும் எண்ணவைக்கிறது.

இந்தக் குறியீடுகள் களையப்பட்டாலொழிய இக்கருத்தியல்கள் மறைத்த பன்முகத்தன்மையை உணரமுடியாது.

*

குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு டங்கல் திரைப்படம் பார்க்க நேரிட்டபோது இதே மாதிரியான குழப்பங்கள் மேலெழுந்தன. அதை தெளிவுபடுத்திக் கொள்ள ‘டங்கலும் பெண்ணியமும்’ என்ற பதிவை எழுதினேன். அதை உங்களிடமும் பகிர்ந்திருந்தேன். அதை சற்று மேம்படுத்தி என்னுடைய தளத்திலும் பதிந்துள்ளேன்

https://muthusitharal.wordpress.com/2017/11/18/டங்கலும்-பெண்ணியமும்/?preview=true

முத்துக்குமார்

***

அன்புள்ள முத்துக்குமார்

புளகாங்கிதமெல்லாம் இல்லை. மகிழ்ச்சி. ஏ.வி.மணிகண்டன் கலைத்தேடலை வாழ்க்கையாகக் கொண்ட இளைஞர். புகைப்படம் ஓவியம் கவிதை என அலைபவர். இப்போதுதான் மெல்ல அவருக்கு உரைநடை கைவந்துள்ளது. மேலும் நெடுந்தொலைவுக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவர். மிகப்பெரிய இலக்குகளைக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன். இன்று தமிழில் அவருக்கு நிகரான நுண்ணுணர்வும் வாசிப்பும் பல்துறை ஈடுபாடும் கொண்ட  இளைஞர்கள் மிகச்சிலரே

ஜெ

***

 

anna
அன்னா லாரினா முதுமையில்
சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு
—————————————————————————————-
நண்பா
சித்தாந்தங்களின் மீது
நீ
நம்பிக்கை கொண்ட போது
உன்னை
பலியிட்டேனும்
யாவர்க்குமான நன்மையை
அடைந்து விட
நீ துடித்தாய்
உன்னை பலியாய் கொடுக்க
முனைந்த பின்பு
நீ நினைக்கும் நன்மைக்காக
யாரை வேண்டுமானாலும்
பலி கொடுக்க
முனைந்து விட்டாய்!
ஏன் நண்பா
எந்த சித்தாந்தம் பற்றி
பேசப்பட்டாலும்
கொட்டப்பட்ட குருதி
குறித்து
பேசுகிறோம்?
இன்னும்
குருதி கொட்டித்தான்
இந்த மண்ணில்
நலங்களின் பயிர்
வளர்க்க
முற்படுகிறோமா?
நலங்களின் பயிர்
குருதியால்
வளரும்
என இன்னும் நம்புகிறோமா?
உனது கூர்மையான நக்கல்கள்
உனது பகடிகள்
உனது திசை திருப்பல்கள்
உனது வசைபாடல்கள்
உனது கிண்டல்கள்
இவற்றுக்குப் பின்னால்
மனித சுபாவம் குறித்து
மனித சுயநலம் குறித்து
உனது அறிதல்கள் இருப்பதாய்
நீ நம்பிக் கொண்டிருக்கிறாய்
நண்பனே
நீ அறிந்திருப்பது
அடுத்தவர்களை அல்ல
ஒரு மாயத்தால்
அவ்வாறு
நீ நம்ப வைக்கப்பட்டிருக்கிறாய்
இவ்வுலகில்
நீ ஏதேனும் அறிய முடியுமென்றால்
அது உன்னைப் பற்றித்தான்
நண்பனே
எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
எத்தனை பேர்
அந்த இருள் தெய்வங்களின்
பீடத்தில்
பலியாகிக் கொண்டே
பலி கொடுக்கப்பட்டுக் கொண்டே
இருக்கப் போகிறார்கள்?
நாம்
நமது
அறியாமைகளை
இயலாமைகளை
பேதங்களை
வெறுப்பை
பலி கொடுப்போம்
மரண உறக்கம் கொண்ட
அந்த கடற்கரைக் குழந்தையின்
முகத்தை நீ காணவில்லையா?
ஒஸாமா வா
என அழைத்த
தேவதேவன் கவிதையை
நீ வாசித்ததில்லையா?
உன்னைப் போன்றோரின்
இரும்பு மூளையின்
பரவலுக்கப்பால்
இப்பூமியின் பரப்பின்
பல்லாயிரம் சதுர மைல்கள் இருக்கின்றன
பல கோடி மக்கள் வாழ்கிறார்கள்
அங்கு மலர்கள் மலர்கின்றன
அங்கே கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான்
ஒரு கவிஞன்
பிரபு மயிலாடுதுறை
கருத்தியலில் இருந்து விடுதலை கட்டுரைக்கான எதிர்வினை
முந்தைய கட்டுரைகோவிந்தன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகறுப்புக்கண்ணாடி