சீ.முத்துசாமி என்னும் முன்னோடி

muthusamy cover

 

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

சீ.முத்துசாமியை ஒரே சொல்லில் எப்படி வரையறுக்கலாம்? நவீன மலேசிய இலக்கியத்தின் முன்னோடி. பொதுவாக இலக்கியம் என்பது உலகியல் நெருக்கடிகளில் இருந்து உருவாவதாகச் சொல்லப்படுகிறது. உலக இலக்கியவரலாறு அது மெய்யென்று காட்டவில்லை. அது பண்பாட்டு நெருக்கடிகளில் இருந்தே உருவாகிறது. பெரும்பாலான உலகியல் நெருக்கடிகள் இலக்கியத்திற்குரிய நுண்மையான உள்ளப்பாங்கை அழிக்கின்றன. பதற்றமும் மிகைவிசையும் கொண்ட சமூகச்சூழலை உருவாக்குகின்றன. இலக்கியத்தை வாசிக்கவும் எவருமில்லாத நிலையே உருவாகிறது. உலகியல் நெருக்கடிகள் கூட பண்பாட்டு நெருக்கடிகளாக மாறும்போதே இலக்கியமாக ஆகின்றன.

 

ஆகவே மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேறிய மக்களிடமிருந்து உயரிலக்கியங்கள் உருவாகாதது இயல்பானதே. அங்கே அவர்கள் தங்கிவாழ்வதற்கே கடும் போராட்டங்களைச் செய்தாகவேண்டியிருக்கிறது. முட்டிமோதி வேரூன்றி கிளைவிரித்து வழித்தோன்றல்களுக்கு விதையாகவேண்டியிருக்கிறது. அது முற்றிலும் உலகியல் களம். அங்கே இலக்கிய அழகியலுக்கு இடமில்லை. அங்கே இலக்கியம் போராட்ட இலக்கியமாக உருவெடுக்கிறது

 

போராட்ட இலக்கியத்தின் தேவைகளே அதன் இயல்பை உருவாக்குகின்றன. அவை பெருவாரியான மக்களைச் சென்றடையும்போதே அவை உத்தேசித்த பயன் நிகழ்கிறது. ஆகவே அவை எளியவையாக, நேரடியானவையாக இருந்தாகவேண்டும். உட்குறிப்புகளும் நுண்மைகளும் அவற்றுக்கு மேலதிகச் சுமைகளே. அவை செயலுக்குத் தூண்டுவனவாக இருக்கவேண்டும். ஆகவே அவை எப்போதும் ஒற்றைப்படையானவை, மிகையுணர்ச்சி கொண்டவை. ஐயங்களும் நடுநிலைநோக்குகளும் அங்கே பிழையானவை.

 

தோட்டச்சூழலில் எழுந்த எழுத்து மலேசியாவிலும் இலங்கை மலையகத்திலும் உருவானது. அவை அடிப்படையில் போராட்ட இலக்கியமாகவே இருந்தன. ஆகவே இன்றுநோக்கும்போது அவற்றின் அழகியல் மிகுந்த குறைபாடுகள் கொண்டது. முதன்மையான குறை பல்வேறு கருத்தியல்களால் திரிபடையச்செய்யப்பட்ட யதார்த்ததையே அவை முன்வைக்கமுடிகிறது என்பது. இரண்டாவது குறை, அவை மீளமீள புறவய யதார்த்ததை மட்டுமே நோக்குகின்றன என்பது

 

ஆனால் மெய்யான கலைஞன் என்பவன் புறச்சூழலால் வழிநடத்தப்படுபவன் அல்ல. எந்த பேரொலிக்கு இடையிலும் அவன் யாழொலியைக் கேட்கக்கூடும். அவனுடைய சொந்த விளக்கு அவனுக்கான உலகைக் காட்டவும் கூடும். அப்படிப்பட்டவர்களையே அந்தக் காலகட்டத்தையும் கடந்த கலைஞர்கள் என்போம். தெளிவத்தை ஜோசப் மலையகத்தமிழுக்கு அத்தகையவர். சீ.முத்துசாமி மலேசியாவுக்கு அத்தகையவர். அதுவே அவருடைய முக்கியத்துவம். பொத்தாம்பொதுவான யதார்த்ததை அரசியல்நோக்குடன் முன்வைத்த சூழலில் அந்தரங்கமான யதார்த்ததை நுண்மையாக முன்வைக்கும் கதைகளை எழுதியவர் அவர். ஆகவே அவர் இன்றைய மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி.

 

மலேசியாவில் நவீன இலக்கியம் உருவாகி வருவது வரை சீ.முத்துசாமி பரவலாக அடையாளம் காணப்படவில்லை. நேற்று எழுதிய போராட்ட இலக்கியவாதிகளின் பட்டியலில் சற்றே கீழே நிற்கும் ஒருவராகவே மதிப்பிடப்பட்டார். அன்று அவருக்கு நிகராக எழுதிக்கொண்டிருந்த முக்கியமான படைப்பிலக்கியவாதிகளான கோ.புண்ணியவான், சை.பீர்முகம்மது, ஷண்முகசிவா போன்றவர்களும் உரிய கவனத்தைப்பெறவில்லை.  தொண்ணூறுகளுக்குப்பின்னர் உருவாகிவந்த நவீன இலக்கிய புத்தெழுச்சிஅலை முத்துசாமியை அடையாளம் கண்டு மேலே கொண்டுவந்தது. அதை அங்கீகரிக்கும்பொருட்டே அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது.

 

2017ல் சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்தச்சிறிய விமர்சனநூல் வெளியிடப்படுகிறது. இது அவருடைய ஆக்கங்கள் மேல் புதிய கவனத்தை உருவாக்கும் என நம்புகிறேன். இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே தீவிர இலக்கியம் நிகழும் களங்களில் மலேசியா முக்கியமானது. ம.நவீன், சு.யுவராஜன், கே.பாலமுருகன் மூவரும் முதன்மையான படைப்பாளிகளாக எழுந்து வந்திருக்கிறார்கள். அதற்கு முதன்மையான பங்களிப்பாற்றியது ம.நவீன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த காதல் , பறை, வல்லினம் முதலிய இதழ்கள்.

 

அந்த அலை பெருகுக என வாழ்த்துகிறோம்

 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

சீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளிவரவிருக்கும் விமர்சனத் தொகைநூலுக்கான முன்னுரை

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஎம்.கோவிந்தன் நினைவில்…