நவம்பர் 29 அன்று கிளம்பி கோவை சென்றேன். நாஞ்சில்நாடன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. அன்னபூர்ணா ஓட்டலில் தங்கியிருந்தேன். கோவை நண்பர்கள் அனைவரும் உடனிருக்க இரண்டுநாட்கள் தொடர் உரையாடல். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன். அந்தியூர் மணி , மணவாளன், பாரி வந்திருந்தார்கள். . பெங்களூரிலிருந்து ஏ.வி. மணிகண்டன் வந்திருந்தார்
கோவையில் இருக்கும்போதே நாகர்கோயில் ஓகி புயல் எழுந்த செய்தி வந்தது. செல்பேசிகள் செயலிழந்தன. அருண்மொழியை தரைத்தொடர்பு தொலைபேசி வழியாகத்தான் தொடர்பு கொள்ள முடிந்தது. இருபதாண்டுகளுக்கு முன்பு சாம் பிட்ரோடா செல்பேசியை அறிமுகம் செய்தபோது சொன்னது ஞாபகம் வந்தது. ஒரு மழைபெய்தால் தரைத்தள தொலைபேசி அறுந்துவிடும். செல்பேசி அலைகளால் தொடர்புகொள்வது. அலையை மழை நனைக்காது, மரம் விழுந்து முறிக்காது. ஆனால் முதல் மழையில் முதல் சில நிமிடங்களிலேயே அத்தனை செல்பேசிகளும் செயலிழக்க மொத்த தொடர்புகளும் தரைவழி தொலைபேசிகளால்தான் நடந்தன
மின்சாரம் நின்றுவிட்டது. ஆகவே குடிநீர் இல்லை. ஒன்றும் செய்யமுடியாமல் வீட்டில் இருப்பது சமீபகாலமாக நமக்குப் பழக்கம் இல்லை. மின்சாரம் இல்லை என்றால் மிகப்பெரிய பிரச்சினையே பொழுதை என்ன செய்வது என்பதுதான் என்றாள். நான் 1 ஆம்தேதி கோவையில் இருந்து கிளம்பி இன்று காலை நாகர்கோயில் வந்தேன். வழியெங்கும் மின்கம்பங்கள் உடைந்திருந்தன. மழைகொட்டிக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்தேன். அடுத்த புயல்வரும் என்றார்கள். காத்திருக்கிறோம். ஒன்றும் பிரச்சினை இல்லை , குடிநீர் சுமந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது என்பதைத்தவிர