ரமேஷ் பிரேதன் அமேசானில்

B1PoC3tzZDS._UY200_

ரமேஷ்பிரேதனின் நாவல் ஐந்தவித்தான் மின்னூலாக அவருடைய நண்பர் விமலாதித்த மாமல்லனால் அமேஸான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

*

ரமேஷ் பிரேதன் தமிழில் முக்கியமான மீபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். ஓர் உதாரணம் மூலம் அவருடைய புனைவுலகின் அடிப்படை இயல்பை விளக்கலாம். ராஜராஜ சோழன் தமிழ் வரலாற்றில் ஒளிமிக்க மன்னர். ஆனால் குமரிமாவட்டத்தைப் பொறுத்தவரை இங்கே அவர் படையெடுப்பாளர். இங்கிருந்த அரசகுலங்களை அழித்தவர். தனிப்பண்பாடுமேல் தாக்குதல் நடத்தியவர்

அப்படியென்றால் வரலாறு என்பது என்ன? அதற்கு ஓர் ஒற்றைப்படை வடிவம் இருக்கமுடியுமா? பண்பாடு, ஒழுக்கம் என நாம் சொல்லும் அனைத்துமே ஒற்றைப்படையாகவே அன்றாட வாழ்க்கையில் பொருள்படுகின்றன. ஆனால் ஓர் உயர்நிலையில் அவற்றைச் சிதறடித்தாலொழிய மெய்மை நோக்கிச் செல்லமுடியாது

பின்நவீனத்துவ எழுத்தின் பணிகளில் ஒன்று இவ்வாறு ஒற்றைப்படையாக அமைந்த அனைத்தையும் சிதறடிப்பது. இந்தச்சிதறடிப்பை அவர்கள் மொழியையும், கதைசொல்லும் முறையையும் சிதறடிப்பதுவழியாகச் சாதிக்கிறார்கள். சீரான ஒழுங்கான வடிவமுள்ள புனைவுகளுக்கு மாற்றாக ஒன்றை ஒன்று ஊடுருவும் பல்வேறு கதைகளை உருவாக்கி மோதவிடுகிறார்கள். அதாவது கல்கி உருவாக்கிய ராஜராஜசோழனின் கதையுடன்  குமரிமாவட்ட ராஜராஜசோழனின் கதையையும் எதிராக ஊடுருவ விடுவதுபோல. கூடவே நாட்டுப்புறக் கதைகளையும் ஊடாடவிடுவதுபோல

இப்படி உண்மையான வரலாற்றையும் புனைவையும், தரவுகளையும் கற்பனையையும் ஒன்றுகலக்கவிட்டு ஒரு விளையாட்டாக இவர்கள் புனைவை ஆக்குகிறார்கள். அன்றாட  உணர்வுகளையும் மிகையுணர்வுகளியும் கனவுகளையும் கட்டற்ற மொழியையும் ஒன்றாகக் கலக்கிறார்கள்.  இத்தகைய எழுத்து தமிழில் உருவாகி வருவதற்கான தொடக்கமாக அமைந்தவர்களில் ஒருவர் ரமேஷ் பிரேதன்.

இந்த எளிமையான அறிமுகம் அவருடைய ஆக்கங்களுக்குள் நுழைவதற்கு முன் உருவாகும் தயக்கங்களை கடப்பதற்கே. அவ்வடிவமே எஞ்சியதை வாசகர்களுக்குக் கற்றுத்தரும். இது ஒரு மனிதனில் சமூகம் சார்ந்த வெளியடையாளமும், தன் உள்ளே அவன் பலகூறுகளாக பிரிந்து சிதறியிருப்பதும்  ஒரேசமயம்  இலங்குவதைக் காட்டும் படைப்பு

https://www.amazon.com/-/e/B077SLWP8H

அமேசான் இணைப்பு 

ஐந்தவித்தான் -வாமு கோமு விமர்சனம்51tYUtB2R6L