வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77

எட்டு : குருதிவிதை – 8

fire-iconயமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது. ஊரைச் சூழ்ந்து முள்மரங்களாலான கோட்டைவேலி. பாறையருகே பிறிதொரு பாறை யமுனைக்குள் நீட்டி நின்றிருக்க அதன் முனையில் படகுத்துறையை அமைத்திருந்தனர். அங்கிருந்து சேற்றுத்தடமாக கிளம்பிச்சென்ற பாதை காட்டுக்குள் புதைந்தது.

படகுகள் ஒவ்வொன்றாகவே கரையணுக முடிந்தது. அர்ஜுனனும் நிர்மித்ரனும் சதானீகனும் இறங்கி அங்கிருந்த சிறிய காவல்மாடத்தின் முன் போடப்பட்ட மூங்கில் மஞ்சத்தில் அமர்ந்து இளைப்பாறினர். அப்போது அந்தியாகிவிட்டிருந்தது. காட்டுக்குள் இருட்டு தேங்கத்தொடங்கியிருந்தது. யமுனையின் நீர் நன்றாக கருமைகொண்டு இரும்பலைகளென தெரிந்தது. புரவிகளும் வண்டிகளும் தேர்களும் இறங்கியதும் “நாம் கிளம்புவோம்” என்று அர்ஜுனன் எழுந்தான். காவலர்தலைவன் “வந்திருப்பது தாங்கள் என ஊர்த்தலைவருக்கு செய்தி அனுப்பினேன். வந்துகொண்டிருக்கிறார்” என்றான். “தேவையில்லை. நான் உடனே கிளம்பவேண்டும்…” என்றான் அர்ஜுனன்.

அவர்கள் காட்டுக்குள் புகுந்த சற்றுநேரத்திலேயே மீன்நெய்ப்பந்தங்களை ஏற்றவேண்டியிருந்தது. அந்த ஒளி காட்டை நிழலுருக்களாக ஆக்கி சூழப்பரப்பியது. ஒளியை நோக்கியபின் வேறெங்கும் நோக்க இயலவில்லை. அதற்கப்பால் நோக்கும் விழிகள் அர்ஜுனனிடம் மட்டுமே இருந்தன. அவன் ஊர்ந்த புரவியின் காலடிகளை மட்டுமே நம்பி அவர்கள் தொடர்ந்தனர். தேர்களின் சகடங்கள் சேற்றுப்பாதையில் புதைந்து அசைவிழக்க ஏவலர் உந்தி மேலேற்றினர். உருளைக்கற்கள்மேல் அத்திரிகளின் குளம்புகள் பட்டு ஒலியெழுந்தது. குளம்போசையையும் சகட ஒலியையும் காடு எதிரொலித்துச் சூழ்ந்தது.

இளைப்பாற எங்கும் நில்லாமல் நடந்து முக்தஜலத்தை அடைந்தபோது நள்ளிரவு கடந்திருந்தது. முக்தஜலத்தின் சிறிய கோட்டை மண்ணாலானது. இரண்டு ஆள் உயரமே இருந்தது. அதன் மீது சுடுமண் ஓடுகள் பரப்பி கூரையிடப்பட்டிருந்தது. கோட்டைமுகப்பில் காவல்மாடம் மட்டும் ஏழு ஆள் உயரத்தில் மரத்தூண்களின்மேல் அமைந்திருந்தது. அங்கே வெளிச்சமிருக்கவில்லை என்றாலும் படைக்கலங்களின் மின் தெரிந்தது. கோட்டைவாயிலில் கல்தூண்மேல் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன.

அவர்கள் அணுகுவதை தொலைவிலேயே தெரிந்துகொண்டு முழவொலி எழுப்பினர். மறுமுழவொலியால் வருகையாளரை ஏவலர் தெரிவித்தனர். அங்கிருந்து இரு புரவிகளில் வந்த வீரர்கள் அவர்களை அணுகி வந்திருப்பது அர்ஜுனன் என்பதை உறுதிசெய்துகொண்டனர். “சற்று முன்னர்தான் அஸ்தினபுரியின் அரசர் நகர்நுழைந்தார், பாண்டவரே” என்றான் காவலர்தலைவன். “இது மிகச் சிறிய ஊர். இங்கே பெரிய இல்லங்கள் இரண்டுதான். தங்களுக்கு ஓர் இல்லத்தில் தங்க இடமொருக்க இயலும். அங்கேயே இளவரசர்களும் தங்கவேண்டும்.”

அர்ஜுனன் “தாழ்வில்லை” என்றான். காவலர்தலைவன் “ஊர்த்தலைவர் மாளிகையில் அரசர் வந்து தங்கியிருக்கிறார். அவருடன் துணைவர் சாத்யகியும் வந்தார். அவர்கள் வந்து ஓரிரவு மட்டுமே ஆகிறது” என்றான். “அருகே வலப்பக்க மாளிகையில் அஸ்தினபுரியின் அரசர். நேற்று இளையவரின் மைந்தர் பிரத்யும்னர் இங்கே வந்தார். அவரை அரசரின் மாளிகையிலேயே தங்கச்செய்தோம். அதில் மூன்றே மஞ்சத்தறைகள்தான். மூன்றும் மூவருக்கும் அளிக்கப்பட்டன. மரவுரிகள் மாற்றாடைகள் என எல்லாமே குறைவாகவே உள்ளன. ஆனால் இவ்வூரின் ஊனுணவு சுவையானது. அதை அவர்கள் விரும்பினார்கள்.”

அவன் வாழ்க்கையில் அத்தனை நிகழ்ச்சிகள் முன்பு நடந்ததில்லை என்று தெரிந்தது. அவன் அதைப்பற்றி பேச விரும்பினான். “இங்கே மக்கள் எவரும் இளையவரை பார்த்ததில்லை. இது நம் நாட்டின் எல்லை. ஆனால் நெடுங்காலமாக ஜலந்தரர்களும் கால்சிகளும் இதை ஆண்டனர். இங்கே யாதவர்கள்தான் மிகுதி. ஆனால் யாதவர்கள் எப்போதும் அடிமைகளே. முன்பு கார்த்தவீரியர் காலத்தில் இந்நாடு யாதவர்களால் ஆளப்பட்டது என்கிறார்கள். அதன்பின் இப்போதுதான். அது இயன்றது இளையவரால். இன்று நம்மை அணுக்கநாடுகள் அஞ்சுகின்றன. யானை வால் சிறிதாக இருந்தாலும் அது யானைக்குரியதல்லவா?”

அவர்களை அவனே ஊரின் மையத்திலிருந்த மாளிகைக்கு முன் கொண்டுசென்றான். இரண்டுஅடுக்கு மரமாளிகைக்கு இரு கைகளைப்போல சற்று சிறிய மாளிகைகள் இருந்தன. பிற ஊர்களில் அவற்றை சற்றே பெரிய வீடுகள் என்றே சொல்வார்கள். மையமாளிகை முன் இரு புரவிகள் நின்றன. வலப்பக்க மாளிகையின் முன் எட்டு புரவிகளும் ஒரு விரைவுத்தேரும் நின்றன. அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி அதன்முன் பறக்க வேலும் வில்லுமேந்திய ஏழு காவலர் முகப்பில் நின்றனர்.

“அஸ்தினபுரியின் அரசர் அங்கேதான் தங்கியிருக்கிறார். அவருடன் வந்த பிற வண்டிகளும் தேர்களும் புரவிகளும் அத்திரிகளும் ஊருக்குப் பின்புறம் காலிகளுக்குரிய பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளன. பட்டியைச்சுற்றி ஆயர் தங்கும் மரக்குடில்கள் உள்ளன. உங்கள் வீரரும் ஏவலரும் அங்கே தங்கலாம்” என்ற காவலர்தலைவன் “தங்கள் வருகையை ஊர்த்தலைவருக்கு அறிவித்திருந்தேன். அதோ வருபவர்தான். வழக்கமாக அவர் தலைப்பாகை அணிவதில்லை. இன்று மும்மடங்கு பெரிதாக சூடியிருக்கிறார்” என்றான்.

ஊர்த்தலைவர் புலத்தியின் துணிப்பொதி போன்ற பெரிய வெண்ணிறத் தலைப்பாகையுடன் அணுகிவந்து வணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் இளைய அரசரை வணங்கி வரவேற்கிறேன். தங்கள் வருகையால் முக்தஜலம் பெருமைகொள்கிறது” என்றார். “இனிய ஊர்” என்றபடி அர்ஜுனன் புரவியிலிருந்து இறங்கினான். “இல்லங்கள் சிறியவை. ஓய்வுகொள்க! இளைய யாதவரும் துணைவரும் துயிலறைக்குச் சென்றுவிட்டனர். இளவரசர் இப்பொழுதுவரை தந்தையுடன் சொல்லாடிக்கொண்டிருந்தார். இப்போதுதான் அவர் தன் அறைக்குச் சென்றார்” என்றார்.

“ஆம், நன்று. நாங்கள் வந்த செய்தி அவரை அடைக!” என்றான் அர்ஜுனன். “ஆணை. நாளை புலரியில் அரசரை தாங்கள் சந்திக்கலாம்” என்றார் ஊர்த்தலைவர். அவன் உள்ளத்திலெழுந்த வினாவை புரிந்துகொண்டு “அஸ்தினபுரியின் அரசரும் இன்னமும் அவரை சந்திக்கவில்லை” என்றார். அர்ஜுனன் புன்னகைத்தான். அவர் திரும்பி அருகே நின்ற ஏவலனிடம் அவர்களை மாளிகைக்குள் அழைத்துச்செல்லும்படி ஆணையிட்டார்.

சிறிய இடைநாழிக்கு இருபக்கமும் மிகச்சிறிய அறைகள். “இங்கே இரு மஞ்சத்தறைகள். ஒன்றில் இளைய அரசர் துயிலட்டும். பிறிதில் இரு இளவரசர்களும் துயில்கொள்ளவேண்டும்” என்றான் ஏவலன். மறுமொழி சொல்லாமல் அர்ஜுனன் தன் மஞ்சத்தறைக்குள் நுழைந்தான். அவனுடைய பொதிகளுடன் உள்ளே வந்த ஏவலன் தொடர்ந்து சென்றான். “வருக!” என அவர்களை அழைத்துச்சென்ற ஏவலன் அறையைக் காட்ட “இதற்குள்ளா? பொந்து போலுள்ளதே” என்றான் நிர்மித்ரன்.

“நீ கானேகுவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தாய்…” என்றான் சதானீகன். “ஆம், ஆனால் காட்டில் பெரிய குகைகள் உண்டு” என்ற நிர்மித்ரன் பொதியை அவிழ்த்து தன் ஆடைகளை எடுக்கத் தொடங்கினான். சதானீகன் “நான் இப்போதே பிரத்யும்னரை சந்திக்கவேண்டும்” என்றான். “ஏன்?” என்றான் நிர்மித்ரன். “அவரை நாளை சந்திக்கமுடியாமலாகலாம்.” நிர்மித்ரன் “எப்படி சொல்கிறீர்கள்?” என்றான். “தோன்றுகிறது” என்ற சதானீகன் “நீ துயில்கொள்க! நான் இதோ வந்துவிடுகிறேன்” என எழுந்தான். தயங்கியபின் நிர்மித்ரன் “நானும் வரவே விழைகிறேன். ஆனால் துயிலை வெல்லமுடியவில்லை” என்றான்.

fire-iconசதானீகன் வெளியே சென்று ஏவலனிடம் “என்னை பிரத்யும்னரிடம் அழைத்துச்செல்” என்றான். “அவர் இந்நேரம் துயில்கொண்டிருப்பாரே?” என்றான் ஏவலன். “இல்லை, விழித்திருப்பார்” என்று சதானீகன் சொன்னான். ஏவலன் அவனை மாளிகைக்குள் அழைத்துச்சென்றான். சிறிய இடைநாழியின் வலப்பக்கம் குனிந்துசெல்லும்படியான அறைமுன் நின்று மும்முறை தட்டினான். பிரத்யும்னனே கதவை திறந்தான். சதானீகனைக் கண்டதும் விழிகள் சற்று விரிந்தன. “தாங்கள் துயில்கொண்டிருக்கமாட்டீர்கள் என நினைத்தேன்” என்றான் சதானீகன். “ஆம், உள்ளே வருக!” என்றான் பிரத்யும்னன்.

உள்ளே மஞ்சத்தில் பிரத்யும்னனின் பயணப்பொதி கட்டி வைக்கப்பட்டிருப்பதை சதானீகன் கண்டான். அவன் அதை நோக்கியதை பிரத்யும்னனும் கண்டான். “ஆம், நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் ஊர் அடங்கும்” என்றான். சதானீகன் அமர்ந்தபடி “சொல்லாமல் செல்வதென்றால்…” என்றான். “மூத்த தந்தையைப்போல” என்றான் பிரத்யும்னன். சதானீகன் புன்னகைத்து “நான் என்றும் கனவுகாண்பது அப்படி ஒரு பயணம்” என்றான். “எங்கிருக்கிறோமோ அங்கிருந்து கிளம்பிச்செல்லுதல். எங்கேனும் சென்று எவ்வகையிலேனும் வாழ்ந்து இதன் நெறியென்ன என்று அறிதல்.”

“நான் ஒருபோதும் விழைந்ததில்லை. சொல்லப்போனால் துவாரகை எனக்கு சலித்ததே இல்லை. அது உலகை நோக்கி திறக்கும் சாளரம். ஒவ்வொருநாளும் வெவ்வேறு தன்மைகொண்ட மானுடர் வந்திறங்குகிறார்கள். அறியா நிலங்கள், திகைப்பூட்டும் பண்பாடுகள், எண்ணித்தீரா மானுட வடிவுகள். நான் எங்கும் செல்லமுடியாது. எங்கு அமர்ந்தாலும் துவாரகையை என்னைச் சூழ பரப்பிக்கொள்வேன்” என்றான் பிரத்யும்னன். “ஆயினும் போக வேண்டியிருக்கிறது. இத்தருணத்தில் வேறுவழியில்லை.”

சதானீகன் “அரசரை சந்தித்தீர்கள் என்று அறிந்தேன்” என்றான். பிரத்யும்னன் “ஆம், அவரிடம் பேசலாகாதென்றிருந்தேன். ஆனால் சாம்பனின் மணச்செய்தியைக் கேட்டபின்னர் பேசிவிடலாமென முடிவெடுத்து கிளம்பினேன். இங்கு வந்துசேர்வதற்குள் பேரன்னையின் ஆணையையும் மூத்த தந்தை கிளம்பிய செய்தியையும் அறிந்தேன்” என்றான்.

சதானீகன் அவன் மேலே சொல்லும்படி காத்து அமர்ந்திருந்தான். “தந்தையிடம் சென்று நானும் வரவிருக்கும் போரில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றேன்” என்றான் பிரத்யும்னன். “எப்பக்கம் நான் நின்றாலும் நான் எதிர்கொள்வது என் முகத்தை. இங்கு நின்று யாதவர்களை எதிர்கொள்ளலாம். எதிர்நின்று தந்தையை எதிர்கொள்ளலாம். இரண்டுமே என் வில்லுக்கு இழுக்கு. எண்ணித் தயங்கியவனுக்கு அன்னையின் ஆணையும் மூத்த தந்தையின் முடிவும் நல்வழி காட்டின. ஆகவே அரசுதுறந்து வடதிசைக்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன் என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.”

சதானீகன் “பிற உபயாதவர்?” என்றான். “அவர் மைந்தர் எவரும் களம் நிற்கப்போவதில்லை, அது மூதன்னையின் ஆணை” என்றான் பிரத்யும்னன். பெருமூச்சுவிட்டு “அது வியப்பூட்டவில்லை, அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையே அறியவிரும்புகிறேன்” என்றான் சதானீகன். “எப்போது திரும்பிவருவாய் என அவர் கேட்பார் என்று நான் எதிர்பார்த்தேன். அதற்கு சொல்லவேண்டிய மறுமொழியாகவே என் தரப்பை உருவாக்கியிருந்தேன். அவர் அதை கேட்கவில்லை. கால்தொட்டு வணங்கி விடைகொள்வதுவரை என் உள்ளம் செவியாக இருந்தது. அவர் அச்சொற்களை எண்ணவேயில்லை என வெளியே வந்ததும் அறிந்தேன்” என்றான் பிரத்யும்னன்.

சதானீகன் “அவர் இவையெதிலும் இல்லை” என்றான். பிரத்யும்னன் “இல்லை, நாவின்மேலும் முகத்தின்மீதும் இறுதி ஆணைகொண்டவர்கள் உண்டு. அவர்கள் மாபெரும் அரசியலாளர்கள். அவர் உணர்வுகள்மேலும் எண்ணத்தின்மீதும் ஆணை கொண்டவர். யோகியாக அமரவேண்டியவர், இங்கமர்ந்து அரசுசூழ்கிறார்” என்றான். “நான் அவரிடம் சொல்லவிரும்பியது இதுவே. சிற்றெறும்புகளின் களிக்களத்தில் பெருங்களிறு நுழையலாகாது. அவர் இங்கே என்ன செய்கிறார்? எதை அடைகிறார்? தன் மாபெரும் ஆற்றல்களைக்கொண்டு இவ்வெளிய மனிதர்களை கலைத்துச் சிதறடித்து சிற்றுவகை கொள்வதற்கா அவர் இங்கு வந்தார்? அவருள் அமைந்துள்ள அந்த மாபெரும் கருவி எளிய படைக்கலம் அல்ல, அது வானை செதுக்குவதற்குரியது.”

“தந்தையே, உற்றோ உவந்தோ ஊழாலோ நீங்கள் பற்றியிருப்பனவற்றை முற்றாக கைவிடுக என சொல்லவிரும்பினேன். எனக்குப்பின் என்னவாகும் என அஞ்சுவது எளிய மானுடரின் முதற்பெரும் மாயை. இப்புவிமேல் கொண்ட காதலையே அவர்கள் குடிமேலும் மைந்தர்மேலும் குமுகம்மேலும் கொண்ட பற்றென்று எண்ணிக்கொள்கிறார்கள். மேலெழுந்தவரும் மிகுதியாக அடைந்தவரும் மேலும் அவ்வாறு அஞ்சுகிறார்கள். அந்த மாயையிலா யோகத்தை அறிந்த எந்தையும் உழல்வது?”

“நான் சொல்லவிரும்பியது இதுதான். நீங்கள் சென்றபின் என்னவானால் உங்களுக்கென்ன? உங்கள் பணி முடிந்தது என்றால் விலகிக்கொள்ளுங்கள். கனிந்தபின் கிளைவிடா கனி அழுகியுதிரும். எது எவ்வாறானால் உங்களுக்கென்ன? இவை உங்களால் நிகழ்ந்தவை என எண்ணும் அறிவின்மையை நீங்களுமா சூடிக்கொள்கிறீர்கள்? எந்த விசை யாதவரைத் தொகுத்ததோ, துவாரகையை அமைத்ததோ அது அதை கையாளட்டும். ஊழை ஆள மானுடரால் இயலாது. மாமனிதர்களோ ஆணவத்தால் ஊழை நோக்கும் பார்வையையே இழந்துவிடுகிறார்கள்.”

“கானேகுங்கள் என்று அவரிடம் சொல்ல விரும்பினேன். இன்று யாதவருக்கும் பாண்டவர்களுக்கும் மட்டுமல்ல, பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும் பலகோடி மாந்தருக்கும் அவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த நற்செயல் விட்டுவிலகுவதே. அணுகி வந்துகொண்டிருக்கிறது பெரும்போர். ஆயிரங்கள் இலக்கங்கள் அழியக்கூடும். குருதிப் பெருக்கும் விழிநீர் பெருக்கும் எஞ்சக்கூடும். அதை நிகழ்த்துவது அஸ்தினபுரியின் நிலவுரிமைப் பூசல் அல்ல. அவர்களிட்ட வஞ்சினமும் அல்ல. மெய்யான ஏது இவர்தான். இவர் மட்டும் இல்லையேல் அப்பூசல் அஸ்தினபுரியின் அவைப்பேச்சிலேயே முடியும். மிஞ்சினால் அவர்களின் எல்லையில் ஒரு சிறுபோரில் தெளியும். இப்போர் நிகழ்வது இவர்பொருட்டே.”

“இன்று பாரதவர்ஷமே திரிந்துள்ளது. பாற்கலத்தில் பிடியுப்பு என அதை திரித்தது இவருடைய இருப்பு. இவர்மேல் அச்சம்கொண்டவர்களே இங்குள்ள அரசர்களனைவரும். அதற்கேற்ப இவர் ஷத்ரியர்களை கைத்தூசு என ஊதி அழித்துள்ளார். பௌண்டரிக வாசுதேவரையும் சிசுபாலனையும் ஜராசந்தனையும் தந்தை கொன்றது அத்தனை தரப்பையும் அவருக்கு எதிரியாக்கியது. மெய், நாலாம்குடிகள் கோல்கொண்டமைவதை அரசகுடியினர் விரும்புவதில்லை. அது அவர்களின் அறமும் கடமையும்கூட. கோல்கொண்டு எழும் எவரும் அரசனால் கொல்லப்பட வேண்டியவர்களே. இல்லையேல் நாடென்றும் அரசென்றும் ஏதுமில்லை. அதுவே ஸ்மிருதிகளின் அறிவுறுத்தல்.”

“ஆனால் ஆற்றல்கொண்டு வென்று நின்று தன் கோலைநாட்டிய அனைவரையும் ஷத்ரியர்கள் ஏற்றுக்கொண்டு அரசனென்றே அவையமர்த்தியும் உள்ளனர். நிஷாதராகிய நளனும் அசுர அன்னையின் மைந்தராகிய ஜராசந்தரும் ஷத்ரியர்களுக்கே தலைவர்களாக ஆனார்கள். அவர்கள் அஞ்சுவது அவர்களையும் கடந்துசெல்லும் பெருங்கனவுகள் கொண்ட நாலாம்வருணத்தவரை மட்டுமே. அவ்வாறு தன்னை காட்டிக்கொண்டவர் தந்தை. துவாரகை அதன் கண்கூடான சான்று.”

“அதுவும்கூட ஷத்ரியர்களால் பொறுத்துக்கொள்ளப்பட்டது. அத்தனையையும் மீறி ஷத்ரியர்களிலேயே பலர் ஆற்றலை வழிபடுபவர்கள் என்றும் நாம் கண்டோம். அவர்களை அச்சுறுத்துவது இவர் சொல்லும் புதிய அரசியலொழுங்கு. அதன் மையமென முன்வைக்கும் புதிய வேதக்கொள்கை. வேதத்தைக் கடந்து கண்டடைந்த மெய்மை என இவர் அதை முன்வைக்கும் தயங்காப் பெருவிசை. நாளை இங்கு ஷத்ரியர்களே இல்லாமலாகிவிடக்கூடும் என்றும் குடித்தலைவர்களெல்லாம் அரசர்களென்றமையக்கூடும் என்றும் அதற்கு வேத ஒப்புதலை அளிக்க அந்தணரும் அமையக்கூடும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். இவையனைத்தும் திரண்டே பேரழிவின் விளிம்பில் நம்மை நிறுத்தியிருக்கிறது.”

“இவர் மட்டும் சற்றே அகன்றால் அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும். ஒவ்வொருவரும் அச்சங்களும் ஐயங்களும் ஒழிந்து மண்ணில் அமைந்து எண்ணத் தலைப்படுவர். யோகியர் வாழவேண்டிய இடம் காடே என வகுத்தவர் மூடர்கள் அல்ல. யோகியர் குடியும் உடைமையும் கொள்வது இழுக்கு என நூல்கள் சொல்வதும் வெறுமனே அல்ல. யோகியர் கோரினால் இவ்வுலகு போதாது. அவர்கள் பெருகினால் இங்கு பிறருக்கு இடமில்லை. ஆகவே விலகுக, அகல்க. இவ்வெளிய மக்களை வாழவிடுக. இதையே அவரிடம் கோர எண்ணினேன்.”

ஓங்கிய தன் குரலை தானே கேட்டவன் என அவன் இடைநின்றான். பின்னர் இயல்பான குரலில் “அவர் கானேகுவாரென்றால் துவாரகையை எவர் ஆட்சி செய்தாலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை என்று சொல்லவே நான் வந்தேன். ஆம், அந்நகரை நான் விரும்புகிறேன். அது என் அன்னைநிலம். ஆனால் நானும் அவர் குருதியே. தென்னகத்தில் விரிந்துள்ளது கைதொடாப் பெருநிலம். அங்கு சென்று எனக்கென ஒரு நகரை நானே அமைத்துக்கொள்கிறேன். கிருஷ்ணப்பிரஸ்தம் என அதற்கு பெயரிடுகிறேன். அவர் ஈட்டிய எதுவும் எனக்குத் தேவையில்லை, அவர் மைந்தன் என நான் என்னை உணர்வதும் பிறர் என்னை அவ்வாறு நோக்குவதுமே போதும். நான் மீண்டுவரவேண்டுமென்றால் அவர் துவாரகையில் இருக்கக் கூடாது. நான் சொல்ல விரும்பியது அதை மட்டுமே” என்றான்.

பெருமூச்சுடன் அவன் தளர்ந்தான். தன் கைநகங்களை நோக்கியபடி மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். “இது பெருங்காடு, இதன் வளர்ச்சியும் இயக்கமும் அழிவும் அதனுள் செடியென்றும் மரமென்றும் நீரென்றும் ஒளியென்றும் திகழும் அதை ஆக்கிய விழைவுகளின் ஆணைப்படியே. இதற்கு தோட்டக்காரர் தேவையில்லை. இதை கேட்கும் அளவுக்கு அவருடைய பெருமை குனிந்து செவிகொடுக்குமா? மாமலைகளால் தங்கள் காலடிகளை நோக்கமுடியாது என கேட்டிருக்கிறேன். மெய்தான் அது.”

“அதை நான் சென்று அவரிடம் சொல்லவேண்டுமென எண்ணுகிறீர்களா?” என்றான் சதானீகன். “என்னால் அதை அவரிடம் சொல்லமுடியுமா?” “ஆம், நீ சொல்லமுடியாது. ஆனால் உன்னால் சொல்லாமலும் இருக்கமுடியாது, ஏனென்றால் இதை நீ அறிந்துவிட்டாய். உன்னிலிருந்து அவர் அறிவார்” என்ற  பிரத்யும்னன் முதல்முறையாக புன்னகைத்தான். “நீ வந்தது நன்று. இல்லையேல் இச்சொற்கள் எனக்குள் இருந்து புளித்து நஞ்சாகிவிட்டிருக்கும்.”

“மீண்டும் அவரை சந்திக்கலாமே?” என்றான் சதானீகன். “இல்லை, நான் செல்லவேண்டுமென்ற உந்துதலை இச்சொற்களை வாயுமிழ்ந்ததுமே உணர்கிறேன். என் நோய் இனி அகலும்” என்றான் பிரத்யும்னன். சதானீகன் “மூத்தவரே, நான் தங்களை சந்திக்க வந்தது ஒன்றை அறியும்பொருட்டே. உங்கள் தந்தையின் பெருமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்று. அணுக்கம்போல் மறைக்கும் திரை பிறிதில்லை என்பதனால் அந்த ஐயத்தை அடைந்தேன்” என்றான். பிரத்யும்னன் விழிகள் சுருங்க அவனை நோக்கினான்.

“பிற உபயாதவர் அனைவருமே தந்தையை சற்றும் அறிந்தவர்களல்ல என்றுதான் நினைக்கிறேன். அவர் ஈட்டிய பேரரசு என்பது அவருடைய ஆற்றலின் முன் சிறு கூழாங்கல். ஆனால் அவர்களோ நல்லூழால் தந்தை கண்டெடுத்த புதையல் அது என எண்ணுகிறார்கள். மூத்த யாதவரோ, பேரரசர் வசுதேவரோகூட இளையவரை உணர்ந்தவர்கள் அல்ல” என்று சதானீகன் சொன்னான்.

“நானும் உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். உணர்வது எளிதும் அல்ல. ஏனென்றால் தந்தையர் தங்கள் மைந்தருக்கு முன் பிற தோற்றங்களைக் களைந்து வெறும் தந்தை மட்டுமே என நின்றிருக்க விரும்புகிறார்கள். அது அவர்களுக்கும் தங்களிலிருந்து தாங்கள் கொள்ளும் இடைவிடுதலை. ஒரு நீராட்டு. ஓர் ஊழ்கம். அதிலிருந்து அவர்களால் வெளிவரவே முடிவதில்லை. முதிரா இளமையில் மைந்தருக்குக் காட்டிய அம்முகம் அவர்களுக்கு பழகிவிடுகிறது. மைந்தருக்கும் அந்த முகம் பழகிவிடுகிறது. பிறிதொரு முகத்தை காட்டினால் மைந்தர் தந்தையை இழந்துவிடுவதாக உணர்கிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து எளிதில் மீள இயலாது. தந்தையரும் மைந்தரை இழக்கக்கூடும், அவர்களும் அதை விரும்புவதில்லை.”

“எந்தையை நான் ஒரு விளையாட்டுத் தோழனாக மட்டுமே அறிந்திருக்கிறேன். அவரைப்பற்றிய கதைகள் சூழவே நான் வளர்ந்தேன். அதையெல்லாம் பிறிதொருவர் என்று எண்ண என் உள்ளம் பழகிக்கொண்டது. அதன் ஆழ்விழைவு அது. எந்தை எளியவராகும்போது எனக்குரியவராகிறார். நான் கையாளத் தக்கவராக இருக்கிறார். ஆகவே அந்தப் பேருருவை நான் விலக்கினேன். அதை வேடிக்கையாக மாற்றிக்கொண்டேன். அதனூடாக அவரை அப்புகழ் தொடாத சிறுவனாக ஆக்கிக்கொண்டேன். கூடவே அவருடைய அப்பேருருவை கேலிக்குரியதாக சமைத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டே என்னிடம் விளையாடினார்.”

“உண்மை, நான் அவரை அறிந்ததே இல்லை. சபராசுரருடன் எதிர்நின்று போரிட்ட களத்திலேயே அவர் எவரென்று என் அகம் உணர்ந்தது. அன்றுவரை இருந்த நான் முற்றிலும் நொறுங்கினேன். மீண்டெழவே இயலாது அயலான் என்றானேன். பின்னர் அவரை நான் அணுகியது பாணருடன் போரிட்ட அக்களத்தில். இன்றும் அவர் எனக்கு அயலவரே. தந்தையைத் துறந்து இளைய யாதவர் என்னும் யோகியை என்னால் சென்றடைய இயலுமா என்று இந்த கானேகலில் முயலவிருக்கிறேன். அகன்று அகன்று அவரை அணுகும் ஒரு பயணம் இது” என்றான் பிரத்யும்னன்.

“நன்று சூழ்க!” என்றான் சதானீகன். “எந்தையரும்கூட பதினான்காண்டுகால கானேகலில்தான் அவருடன் முற்றிணைய முடிந்தது. அது நிகழ்க!” பிரத்யும்னன் புன்னகைத்து “பெருந்தந்தைக்கு மைந்தனாகப் பிறப்பதுபோல் தீயூழ் ஏதுமில்லை. கனவில் கடுகி நடந்து மூச்சிரைக்கத் தளர்ந்தாலும் நின்ற இடத்திலேயே நின்றிருப்போமே, அதைப்போன்றது அது” என்று சொல்லி தன் மூட்டையை எடுத்துக்கொண்டான். விடைபெறாமல் கதவைத் திறந்து வெளியேறினான்.

முந்தைய கட்டுரைகருத்தியலில் இருந்து விடுதலை
அடுத்த கட்டுரைவீரான் குட்டி -கடிதங்கள்