கடைசிமுகம் -கடிதம்

siva

கடைசி முகம் – சிறுகதை

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் யட்சி கதைகளையும் தேவதை கதைகளையும் ஒரு வித தயக்கத்துடன்தான் வாசிக்க துவங்குவேன் வாசிக்கும் போது தொற்றிக் கொள்ளும் பதட்டம், கதையின் போக்கில் மேலும் மேலும் பெருகும், முடித்த பின் வரும் பதைபதைப்பு அடங்க நேரமாகும். இந்த வகை புனைகதைகளின் உச்ச தருணங்களை, வாழ்வின் நிகழ்வுகளுக்கு நிகராக பொருத்தி பார்த்து சிந்திக்கும் நேரங்களில், என் நேசத்துக்குறிய பெண்களிடமும், நான் அணுக்கத்துடன் பழகும் பெண்களிடமும், என் ஆழ்மன போர்வைக்குள் மறைத்து என்றுமே நான் அறிந்துணர விரும்பாதவைகளை, வெளியிழுத்து அப்பட்டமாக அழுத்தமாக கோடிட்டு காட்டி விடுகின்றன. என் மனதின் இருண்மை தந்த மருட்சி விலக நாளாகும். அந்த நினைவிலேயே காலமில்லாமல உழலும் போது ஏதோ ஒருகணத்தில், கிணறிலிருந்து நீர் மொண்டு, ததும்பியபடி வரும் வாளி போல இதுநாள் வரை உணர்ந்திடாத எண்ணங்களால் நிரம்பி மேலெழுவது போல பலமுறை தோன்றியிருக்கிறது.

கடைசி முகம் கதையின் தலைப்பிலிருந்து யட்சி கதை என்று முன்னறிய முடியாததால் வாசிக்க துவங்கியவுடன், பொருட்காட்சியில், கட்டணம் கொடுத்து, என் தோற்றத்தை விசித்திரமாக்கி காட்டும் மாயக்கண்ணாடி, நுண்ணோக்கி, தொலைநோக்கி, அதீத அகம் புறம் கொண்ட மனிதர்கள் நிறைந்த விநோத அறைக்குள் செல்கிறேன் என எண்ணி, உள் நுழைந்தபின், பேய்கள் நிறைந்த அறை என அறிந்து கொள்ளும் நொடிக்கு முன், கதவு அடைக்கபட்டது போல இருந்தது. நீடித்த இருளும் அணைந்து அணைந்து ஒளிர்ந்த ஒளியும் மாறி மாறி தந்த திகில் அறையை கடந்து வெளியே வர, இருந்த ஒரே வழியை நோக்கி எத்தனித்து நடந்தேன்.

கதையினுள்தான் எத்தனை அடுக்குகளாக, மேல்படியில் நின்று கீழ் படியில் இருப்பவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தி ஒடுக்குகிறார்கள்? , தன் மீது ஏவல் புரிய முயன்று தோற்ற துளசிமங்கலத்து நம்பூதிரிகள் அதிகாரத்தை பறித்து ஒடுக்குகிறார் திவான் தளவாய் கேசவநாதன். நாட்டில் தெய்வ பயமும் ஒழுக்கமும் நிலவ யட்சியும் பூதங்களும் அவசியம் என்ற எண்ணம் கொண்ட, பிரம்மதத்தன், தன் மகன் விஷ்ணுசர்மனை கொன்ற வன்மத்தால். சுனைக்காவில் யட்சியை அடக்குகிறார். இரவில் குறுக்கு வழியில், கோவில் எல்லை வழி கடந்து செல்லும் மனத்திண்மை குறைந்த மனிதர்களை கவர்ந்திழுத்து, உதிரம் குடித்து உதிர்த்து பலியாக்குகிறாள் சுனைக்காவில் யட்சி.

கதைக்கு வெளியே, திவான் தளவாய் கேசவநாதன் தனக்கு மேலுள்ள திருவிதாங்கூர் மன்னனின் முற்றதிகாரத்திற்கு கட்டுப்பட்டவராக இருக்கலாம். பந்தசுடரின் புகைபோன்ற கூந்தல் கொண்ட, யட்சியின் மாபெரும் பாறை தரும் அழுத்தத்திற்கு எதிராக, அவரவர்களுக்கென கூழாங்கற்கள் அவர்கள் இருப்பில் இருக்கிறது. இதனை உணராத சாமானியர்கள், யட்சியின் முதல் இரண்டு ஆசை வார்த்தையிலேயே, அவளை திரும்பி நேரில் கண்டு பலியாகிறார்கள். அந்த முகமிலா மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தின் கீழிருக்கும், பெண்கள் மீதும், எளியோர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கலாம். இந்த அடுக்கின் சரி நடுவில் இருக்கும் விஷ்ணு நம்பூதிரியும், யட்சியும்தான் எண்ண எண்ண விரிந்து கொண்டே செல்லும் இந்த மாமேன்மையான கதைக்கான உற்ற முதன்மை பாத்திரங்களாகின்றனர்.

யட்சியின் அணுகுமுறையிலும், எத்தனை அடுக்குகள்? மென்மையான சிரிப்பொலி, மோனமும் , கருணையும் கொண்ட காதல் பேச்சு, காம முனகல்கள், நான் தேடும் ஆண்மகன் நீதான் என்கிற சீண்டல் பேச்சு. இவற்றிற்கெல்லாம் மயங்காததால், புலனடக்கம் கொண்டவன் என புகழ்ந்து தான் அந்த கணத்தில் தோற்றுவிட்டதாக பாவனை காட்டுதல், உலகிலேயே முதன்மை பேரழகியை காட்டுகிறேன் என்கிற ஆசை வார்த்தை., கவரப்பட்ட மிகப்பெரும்பாலானவர்கள் இந்த கட்டத்தை தாண்டியிருக்கமாட்டார்கள். கல்லூரி நாட்களில் சிம்ரனை ஒரே ஒரு முறை அணைத்து முத்தமிட்டால் போதும், உடனே இறந்து விடலாம் என எண்ணிய நாட்களுண்டு. இந்த நிலையில் மயங்கி பின் கூழாங்கல்லால் தப்பித்து விலகுகிறான் விஷ்ணுசர்மன். அடுத்த பலவீனமான அன்னை மீதான அன்பு என்னும் வசிய அன்பில் மீண்டும் வீழ்த்தப்பட்டு மீள்கிறான்.. விஷ்ணு நம்பூதிரி என்கிற ஆணை நிறைவு செய்யும் சரிபாதி பெண் எவளென காட்டுகிறேன் என்பது அடுத்த கட்ட வசிய வார்த்தை.

என் நோக்கில், அவன் கண்டது, அவன் ஆற்றலை முழுமையாக அளித்து வாழ்வு முழுவதும் இன்பத்தை பெற எண்ணிய துறையில் வெல்ல நினைக்கும் ஆளுமையாக இருக்கலாம், இந்த கதையின்படி அதர்வண வேதத்தில் சிறந்த நிபுணரான அவன் தந்தை பிரம்மதத்தனின் முகமாக இருக்கலாம், இறுதித் துளியை சுவைக்க எண்ணிய அவன் பலவீனத்தை முழுமையாக அறிந்து கொண்ட யட்சி, குறும்புன்னகையுடன் அந்த கடைசி முகத்தை காட்ட மீண்டும் அதே ஆசைவார்த்தைகளை கூறுகிறாள். ஆம் கடைசி முகமாக அவன் கண்டது தன்னுடைய முகத்தைதான். காலம் முழுவதும் வெல்ல முடியாமல் மானுட புழு போல தன்னை சுமந்து செல்லவேண்டுமா என்ற கேளவியுடன், தான் உணர்ந்து கடந்த அந்த விடையறிந்த யட்சியின் வசிய கேள்விக்கு கட்டுப்பட்டு, யட்சியின் மார்புக்காம்புகளின் கூரிய பார்வை கண்டு பாறைக்கடியில் சிதறி இறக்கிறான் விஷ்ணு நம்பூதரி.

என்றும் அன்புடன்

உங்கள் வாசகன்,

சிவமணியன்

***

கடைசி முகம் -கடிதங்கள்

கடைசிமுகம் -கடிதம்

முந்தைய கட்டுரைவல்லினம்
அடுத்த கட்டுரைஹீரோ