எட்டு : குருதிவிதை – 4
அர்ஜுனனையும் வரிசைக்குழுவையும் வரவேற்க மதுராவின் படித்துறைக்கு பலராமரே நேரில் வந்திருந்தார். படகின் முகப்பில் கரைநோக்கி நின்றிருந்த சதானீகன் ஓரிரு கணங்களுக்குப் பின்னரே காத்து நின்றிருப்பது பலராமர் என்பதை உணர்ந்தான். திகைப்புடன் அவன் விழிகூர்வதற்குள் அருகே நின்றிருந்த நிர்மித்ரன் “மூத்த யாதவர்! மதுராவின் அரசர்!” என்றான். அவன் திரும்பிப் பார்க்காமல் “ஆம்” என்றான். “அரசமுறைமை கடந்து வந்திருக்கிறார்” என்றான் நிர்மித்ரன். சதானீகன் மறுமொழி கூறவில்லை. நிர்மித்ரன் மீண்டும் “முறைப்படி முடிசூடிய பேரரசர்களுக்கு மட்டுமே அரசர்கள் படித்துறைக்கு வந்து வரவேற்கும் வழக்கம் உண்டு” என்றான்.
தன் எண்ணங்களை அவன் அருகில் நின்று சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் அப்போது அது சிறு எரிச்சலை கிளப்பியது. திரும்பி “தந்தையிடம் சென்று சொல், அரசரே துறைமேடைக்கு வந்திருக்கிறாரென்று” என்றான். நிர்மித்ரன் “இதற்குள் அவரே பார்த்திருப்பார், பருந்தின் பார்வையிலிருந்து தப்பி மண்ணில் எந்த அசைவும் நிகழமுடியாது” என்றான். அதற்குள் படகிலிருந்த இரு ஏவலர்கள் சிற்றறைக்குள் ஓடுவதை திரும்பி நோக்கிய சதானீகன் “மெய்தான்” என்றான்.
மதுராவின் துறைமேடை நெய்விளக்குகள் சுடர அணுகி வந்தது. நிர்மித்ரன் “அணிகொள்கிறார். மிக விரைவில் அணி செய்து பிறிதொருவராக எழுவதில் அவருக்கு நிகராக எவரையும் கண்டதில்லை” என்றான். சதானீகன் “பாரதவர்ஷத்தின் முதன்மையான ஒப்பனைக்கலைஞர்களில் ஒருவர் அவர். மாற்றுரு கொள்வதில் அவருக்கு நிகரான எவரும் ஆட்டச்சூதர்களில்கூட இல்லை என்கிறார்கள்” என்றான்.
நிர்மித்ரன் “ஆம், ஒருமுறை அவர் இளவணிகரைப்போல் உடையணிந்து உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பிச் செல்வதை பார்த்தேன். அவர் என்னை கடந்து சென்றபின்னர் அமைச்சர் சுரேசர்தான் அவர் சிறிய தந்தை என்றார். அதன் பின்னரே அவரது விழிகளும் முகமும் என் நினைவிலெழுந்து அவரெனக் காட்டின. அப்போது எண்ணினேன், மாற்றுரு கொள்வதில் அத்தகைய திறனை அவர் ஏன் அடைந்தார் என. பெருவிழைவு கொண்ட ஒன்றையே நாம் முற்றாக பயிலமுடியும். தன் உருவைத் துறந்து பிறிதொன்றை அணிவதற்கான அப்பெருவிழைவு அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது? இவ்வுருவும் இப்பெயரும் இங்கு அவர் சூடும் அனைத்தும் மிக இளமையிலேயே அவருக்கு சலித்துவிட்டிருக்கிறது போலும்” என்றான்.
சதானீகன் புன்னகைத்து “தன்னில் சலிப்பு கொண்டவர்கள் மட்டுமே எதையேனும் தேடிச் செல்கிறார்கள், கண்டடைகிறார்கள்” என்றான். படகு மதுராவின் துறை நோக்கி சென்றபோது முகப்பிலிருந்த குகன் அமரமுனையில் எழுந்து நின்று கொம்பொலி எழுப்பினான். துறைமேடையிலிருந்து மறுமொழி எழுந்தது. தொடர்ந்து அங்கு காவல் மாடங்கள் அனைத்திலிருந்தும் முறைமுரசுகள் அர்ஜுனனை வரவேற்கும் பொருட்டு ஓசையிடத் தொடங்கின.
இருளில் மதுராவின் துறைமேடையில் நின்றிருந்த படகுகள் அனைத்தும் விளக்குகளின் கொத்துகளெனத் தோன்றின. அக்கணமே அதை நிர்மித்ரன் “செம்மலர்ச் செண்டுகள்போல” என்றான். துறைமேடையிலிருந்து பதினெட்டு பாய்களை விரித்துக்கொண்டு அகன்ற கலிங்கப்படகு பிளிறலோசை எழுப்பி அலைகளில் ஏறி அமைந்து மையப் பேரொழுக்கை அடைந்தது. சில சிறிய படகுகள் விலகி அவர்களுக்காக வழிவிட்டன. துறைமேடையில் எழுந்த கொம்போசைகளும் ஆணைக்குரல்களும் யமுனைக்காற்றில் சிதறல்களாக வந்தடைந்தன.
இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடி பறந்த படகுமுகம் அன்னையின் மடி நோக்கி நீளும் கன்றின் மூக்குபோல நீண்டு துறைமேடையை அடைந்தது. காவலர்கள் ஏறிவந்த இரு துணைப்படகுகளும் இருபக்கங்களிலாக வந்து அருகிலிருந்த துறைமேடைகளில் சென்று மூங்கிற்சுருள்வில்கள் மேல் மெல்ல முட்டின. பறக்கும் நாகம் என வடங்கள் வந்து படகில் ஓசையுடன் விழுந்தன. அவற்றை இழுத்தபின் படகிலிருந்து வடங்களை எடுத்து துறைமேடை நோக்கி வீசினார்கள். வடங்கள் பிணைக்கப்பட படித்துறை இரு கைகளையும் நீட்டி படகை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டது. கனிந்த பசுவின் நாவென நடைமேடை நீண்டு வந்து படகை தொட்டது.
சதானீகன் நிர்மித்ரனிடம் “நாம் அரசணிக்கோலம் கொண்டிருக்க வேண்டும். இரவென்பதனால் நான் அதை எண்ணியிருக்கவில்லை” என்றான். “ஆனால் இப்போது அதற்கு பொழுதில்லை. தலைப்பாகைகளை மட்டும் இந்திரப்பிரஸ்தத்தின் பொன்முத்திரைகளுடன் அணிந்துகொள்வோம்.” நிர்மித்ரன் “ஆம், அதையேதான் நானும் எண்ணினேன். இங்கு சமையர் ஒருவரே இருக்கிறார். அவர் தந்தையை அணிகொள்ளச்செய்வதே முறை” என்றான். அவர்களே சிற்றறைக்குள் சென்று ஆடைகளை அணிந்துகொண்டனர். பட்டுத் தலைப்பாகை அணிந்து அதில் முத்திரைகளை பொருத்தியபின் பொற்பின்னல் கொண்ட சால்வைகளை தோளில் சுற்றினர்.
சதானீகன் ஒருகணம் எண்ணியபின் மரப்பெட்டி ஒன்றைத் திறந்து அதிலிருந்து கங்கணங்களையும் கழுத்தணிகளையும் எடுத்து “அணிந்துகொள்” என்றான். “ஒன்றுடன் ஒன்று இயல்புகொள்ள அணி சூடுவது நம்மால் இயலாது, மூத்தவரே. சமையர்கள் உதவி தேவை” என்றான் நிர்மித்ரன். “ஆம், ஆனால் அணிகொள்ளாது அரசர்முன் போவதென்பது எவ்வகையிலோ புறக்கணிப்பாக ஆகலாம். நூல்நெறிகளின்படி அரசர் எங்கிருந்தாலும் அது அவையே ஆகும்” என்றான் சதானீகன். “சரப்பொளியும், வட்டமாலையும் மட்டும் அணிந்துகொள்கிறேன், மூத்தவரே” என்றான் நிர்மித்ரன். “வைரம், பவளம், முத்து. அருமணிகளில் எவையேனும் மூன்றை அணிந்தால் போதும். அவைக்கு எழும் தகுதி பெற்றுவிடுகிறோம்” என்று அவற்றை அணிந்தபடியே சதானீகன் சொன்னான்.
ஏவலன் வந்து வாயிலில் நின்று “இளைய அரசர் நகர் நுழையப்போகிறார் என அறிவிப்பு” என்றான். “இதோ வந்துவிட்டோம்” என்று சதானீகன் முன்னால் செல்ல நிர்மித்ரன் ஒருகணம் தயங்கி பிறிதொரு கங்கணத்தை எடுத்து அணிந்துகொண்டு ஏவலனிடம் “பேழைகளை மூடி வை” என்றபின் அவனைத் தொடர்ந்து சென்றான்.
படகின் முகப்பில் கூப்பிய கைகளுடன் அர்ஜுனன் நின்றிருந்தான். இருவரும் சென்று அவனுக்கு இருபுறமும் நின்றனர். ஏவலன் அவர்களுக்குப் பின்னால் வந்து தாழ்ந்த குரலில் “இடையில் படைக்கலங்களை மறந்துவிட்டீர்கள், இளவரசே” என்றபடி குத்துவாள்களை அளித்தான். “ஆம்” என்றபடி அவற்றை வாங்கி ஒன்றை தன் இடையில் அணிந்தபின் இன்னொன்றை நிர்மித்ரனிடம் அளித்தான் சதானீகன். அவர்கள் அசைவுகளையும் பேச்சையும் அர்ஜுனன் கேட்டதாக தெரியவில்லை. எதையும் நோக்காததுபோல் வடத்தின்மேல் அமர்ந்திருக்கும் நீர்ப்பறவை போலிருந்தான்.
துறைமேடையில் மதுராவின் கொடியேந்திய வீரன் சீர்நடையில் வந்து முகப்பில் நிற்க அணித்தாலங்கள் ஏந்திய ஏழு சேடியர் தொடர்ந்து வந்தனர். மங்கல இசை முழக்கிய சூதர்கள் வந்து இருநிரைகளாக பிரிந்து விலகினர். நடுவே பலராமர் கூப்பிய கையுடன் நடந்து வந்தார். நீட்டி வைத்த சீர்நடையில் நடைபாலத்தின் மீதேறி மதுராவின் நிலத்தை நோக்கி அர்ஜுனன் சென்றான். அவனுக்கு இருபுறமும் அதே நடையில் நிர்மித்ரனும் சதானீகனும் சென்றனர். மங்கலத்தாலங்களை அவர்கள் முன் மும்முறை உழிந்து குலவையிட்டு சேடியர் இரு பட்டுத்திரைகள்போல இரு திசைகளிலும் விலகி அமைந்தனர்.
இரு கைகளையும் நீட்டியபடி அருகே வந்த பலராமர் உரக்க நகைத்து “வருக! வருக! இளையோனே, இது உன் நிலம்!” என்றார். அரசர்களுக்குரிய அனைத்து முறைமைச் சொற்களையும் அவர் மறந்துவிட்டதை உணர்ந்து புன்னகைத்த சதானீகன் “அவற்றை அவர் சொல்லியிருந்தால்தான் வியப்பு” என்று நிர்மித்ரன் மெல்ல முணுமுணுப்பதை கேட்டான். அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி அருகே சென்று “மதுராவின் அரசர் என் தலைவருக்கு தந்தையைப் போன்றவர். எனக்கு விண் திகழும் மூதாதையரின் வடிவம். தாங்கள் நேரில் வந்து என்னை வரவேற்றதன் வழியாக எனது குடி மாண்பு கொள்கிறது. எனது கொடிவழிகள் பெருமை கொள்ளட்டும்” என்றபின் குனிந்து அவர் கால்களைத் தொட்டு தலைசூடினான்.
அவன் தோள்களைப் பற்றித் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்து பெரிய வெண்ணிறக் கைகளால் அவன் தோள்களை அடித்து உரக்க நகைத்த பலராமர் எண்ணியிராத கணத்தில் அவனை இரு கைகளாலும் தூக்கி தலைக்கு மேல் காற்றில் வீசி எறிந்து பிடித்தார். மும்முறை அவ்வாறு பிடித்தபின் அவனை தரையில் நிறுத்தி “முதலில் உன்னைப் பார்த்தபோது இதைத்தான் செய்தேன். அப்போது இளையவன் என்னுடன் இருந்தான். மூத்தவரே மூத்தவரே என்று நீ அலறினாய். நினைவிருக்கிறதா?” என்றார். “ஆம், அரசே” என்றான் அர்ஜுனன்.
“என்னை நீ மூத்தவர் என்றே அழைக்கலாம். இந்த அரியணையில் ஒருபோதும் நான் நிறைவுற்று அமர்ந்ததில்லை. இது என் நகருமல்ல” என்று பலராமர் சொன்னார். பின்னர் திரும்பி சதானீகனையும் நிர்மித்ரனையும் நோக்கி “நகுலனின் மாற்றுருக்கள்… வருக, குழந்தைகளே!” என்றார். சதானீகனும் நிர்மித்ரனும் அவர் கால்களைத் தொட்டு வணங்க இருவரின் தோள்களையும் அணைத்து நெஞ்சோடு இறுக்கிக்கொண்டு “இனிய நறுமணம் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்” என்றார். அவர்களின் தலையை முகர்ந்து “விளையாட்டுச் சிறுவர்களின் மணம். எந்த நாட்டில் இருந்தாலும் காலையில் நான் அவைக்களத்திற்கு செல்ல மறப்பதே இல்லை. அங்கு பயில வரும் மைந்தரின் நறுமணமே அந்த நாள் முழுக்க என் மூக்கில் திகழவேண்டுமென்று விரும்புவேன்” என்றார். அர்ஜுனன் புன்னகைத்தான்.
“வருக, மைந்தரே” என்று அவர்களை தழுவியபடியே அழைத்துச் சென்றார். அவருடைய கைகள் எடைமிகுந்து அவர்களை தள்ளாடச் செய்தன. வியர்வையில் மெல்லிய கந்தகநெடி இருந்தது. அவருக்குப்பின் இருநிரைகளாக வந்த சிற்றமைச்சர்கள் தலைவணங்கி முகமன்களை முணுமுணுத்தனர். “நீங்கள் இங்கு வருவீர்கள் என்று எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ஆகவே கிளம்பிவிட்டீர்கள் என்ற செய்தி எனக்கு திகைப்பை அளித்தது. ஆனால் அரசி சொன்னாள், நீங்கள் இங்கு வந்துதான் ஆகவேண்டுமென்று. நீங்கள் இங்கு வருவதில் அவளுக்கு மகிழ்ச்சியும்கூட. உங்கள் மூத்தவன் வருவான் என்றுதான் அவள் எதிர்பார்த்தாள். பின்னர் இங்கு என் இளையவன் வரக்கூடும் என்று எதிர்பார்த்துதான் உன்னை அனுப்பியிருக்கிறார்கள் என்று அவள் சொன்னாள்” என்று பலராமர் பேசிக்கொண்டே சென்றார்.
அரசத்தேர் சுங்கமாளிகையின் முகப்பில் புரவிகள் ஒருங்க நின்றிருந்தது. அதன் பின்னால் மேலும் நான்கு தேர்கள் புரவிபூட்டப்பட்டு நின்றன. இரண்டாவது தேர் அருகே நின்றிருந்த அமைச்சர் “இந்திரப்பிரஸ்த இளவரசருக்கு நல்வருகை வாழ்த்து” என்றார். பலராமர் அதனருகே சென்று “ஏறிக்கொள்க!” என்று அர்ஜுனனிடம் உரைத்தார். அர்ஜுனன் ஏறியதும் அவரும் ஏறப்போனார். அமைச்சர் பின்னால் வந்து “அரசே, அது அவருக்கான தேர்” என்றார். “ஏன், இதில் நான் வந்தாலென்ன?” என்று பலராமர் சொன்னார். “அது மரபல்ல. மதுராவின் வெண்கொற்றக்குடை அத்தேரில்தான் உள்ளது” என்றார் அமைச்சர்.
பலராமர் ஒருகணம் குழம்பியபின் அர்ஜுனனிடம் திரும்பி “இவர்களின் மரபுகளை கடைபிடிப்பதைப்போல எரிச்சலூட்டுவது வேறில்லை” என்றார். அர்ஜுனன் “பட்டத்து யானைதான் மிகுதியாக சங்கிலிகளையும் அணிந்திருக்கிறது, அரசே” என்றான். அவன் சொன்னது தெளிவாக புரியாமலேயே உரக்க நகைத்தபடி “நன்று, நாம் அரண்மனைக்குச் சென்றபின் பேசுவோம்” என்று தன்னுடைய தேர் நோக்கி அவர் சென்றார்.
நிர்மித்ரன் அமைச்சர்களிடம் வரிசைப்பொருட்களை முறைப்படி வண்டிகளில் ஏற்றி அரண்மனைக்கு கொண்டு வரும்படி ஆணையிட்டான். அர்ஜுனன் ஏறிக்கொண்ட தேர் பாகன் ஏறியமர்ந்ததும் அசைவு கொண்டது. சிற்றமைச்சர் சதானீகனிடம் “தங்களுக்கான தேர் இதோ” என்றார். சதானீகன் அதில் ஏறி அமர்ந்ததும் அவனருகே நின்ற நிர்மித்ரன் “மதுராவுக்கு நான் இதுவரையில் வந்ததில்லை, மூத்தவரே” என்றான். சதானீகன் “ஆம், நெய்யின் நகர். பன்னிரு ஆக்னேயபதங்களால் இணைக்கப்பட்டது. யமுனைக்கன்னி ஏந்திய அகல்விளக்கு என்று கவிஞர்கூற்று” என்றான்.
நிர்மித்ரன் “கம்சரால் ஆளப்பட்டது, முதிரா மைந்தர் குருதியால் ஏழுமுறை கழுவப்பட்டது” என்றான். உண்மையில் அச்சொற்களையே சதானீகன் உள்ளூர எண்ணினான். அந்த மங்கல நாளில் அதை சொல்லவேண்டாமென்றுதான் தாவிக்கடந்து அடுத்த சொற்றொடரை எடுத்திருந்தான். ஆனால் அதை ஒலியெனக் கேட்டதும் உடல்நடுக்கு கொண்டான்.
தேர் கிளம்பியதும் சதானீகன் “இரவில் நகரங்கள் வேறு தோற்றம் கொள்கின்றன. காலையில் வந்து பார்த்தால் முந்தைய நாள் கண்ட நகர் இதுதானா என்றே ஐயம் கொள்வேன்” என்றான். நிர்மித்ரன் “அரசர் என்றிருந்தாலும் எந்த முறைமையும் அவருக்கு தெரியவில்லை. அதாவது தாழ்வில்லை எனலாம், மந்தண அறைசூழ்தலில் நிகழ்ந்த அனைத்தையுமே வாய்மிகையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருடன் தேரில் அரண்மனை வரை செல்ல முடிந்தால் இங்கு மதுராவில் நிகழும் அரசுசூழ்தல் அனைத்தையும் அவரே சொல்லிவிடுவார்” என்றான். சதானீகன் நகைத்து “ஆம், அவருக்குத் தெரிந்ததை சொல்லக்கூடும். ஆனால் அது மிகக்குறைவாகவே இருக்கும்” என்றான்.
மதுராவின் தெருக்கள் ஆளொழிந்து வானிலிருந்து உதிர்ந்து பரவியவை போலிருந்தன. உறங்கும் இல்லங்கள் முச்சந்திகளில் கற்தூண்களின் மேல் எரிந்த நெய்ப்பந்தங்களின் செவ்வொளியில் நனைந்தவையாகத் தெரிந்தன. அங்காடித் தெருக்களில் மட்டுமே வணிகர்களின் கூச்சல்களும் பொதிவண்டிகளிலிருந்து மூட்டைகளை இறக்கும் ஊழியர்களின் குரல்களும் வண்டிகளின் சகடஓசைகளும் கேட்டன. அவர்களின் தேர்கள் கடந்து சென்றபோது அங்கு நின்றிருந்த அத்திரிகள் சில குரலெழுப்பின.
நகரெங்கும் நெய்யால் பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. “மதுரா ஒரு மாபெரும் அடுமனைபோல நெய்மணம் எழுப்புவது என்று சூதர் பாடல் உள்ளது” என்றான் நிர்மித்ரன். அச்சொல் சதானீகனின் நெஞ்சை அறைய அப்போது தான் எண்ணிக்கொண்டிருந்ததை அவன் சொல்வானா என எண்ணி, சொல்லக்கூடாதென்று விழைந்தான். அப்போதே அதை நிர்மித்ரன் சொன்னான் “இந்நகரை இளைய யாதவர் நெய்யூற்றி எரித்தாரென்று சிறுவயதில் கதை கேட்டிருக்கிறேன், மூத்தவரே.”
பிந்தி வந்து துயிலத் தொடங்கியிருந்தாலும் மிக முன்னதாகவே சதானீகன் விழிப்பு கொண்டான். அது அவன் வழக்கமாக எழும் பொழுதைவிடவும் ஒரு நாழிகை முன்பு என்பதை படுக்கையில் அமர்ந்து கைகளை விரித்து நோக்கியபோதே சூழ ஒலித்த ரீங்காரத்திலிருந்து உணர்ந்தான். பறவைக்குரல்கள் எழத் தொடங்கியிருக்கவில்லை என்பதே அவ்வோசை மாறுபாட்டிற்கு அடிப்படை என்பதை அதன் பின்னரே அவன் சித்தம் வகுத்தறிந்தது. ஒளியால் அல்ல ஒலிகளாலானவை பொழுதுகள்.
எழுந்து குறடுகளைத் தேடி அணிந்துகொண்டபோது அவ்வோசை கேட்டு கதவை மெல்லத் திறந்து மஞ்சத்தறைக் காவலன் தலைவணங்கினான். “நீராட்டறை ஒருங்கட்டும்” என்று சதானீகன் சொன்னான். சற்று திகைப்புடன் “பிரம்மபொழுதிற்கு இன்னும் நெடுநேரம் உள்ளது, இளவரசே” என்றான் ஏவலன். “தாழ்வில்லை, நான் முன்னரே அணிசெய்துகொள்ள அமரவேண்டும்” என்றான் சதானீகன்.
தலைவணங்கி அவன் சென்றபிறகு மெல்ல வெளியே நடந்து மாளிகையின் உப்பரிகைக்குச் சென்று நின்று கைப்பிடியைப் பற்றி சற்று குனிந்து நகரை பார்த்தான். நகர்நுழைந்தபோதிருந்த அதே கணம் அப்படியே நீள்வதுபோல் தெரிந்தது. நெய்ப்பந்தங்கள் யமுனையின் காற்றில் குழைந்தாடிக்கொண்டிருக்க செவ்வொளியின் அலையில் தெருக்கள் ஓவியத் திரைச்சீலைபோல் ஆடின. ஒளியை ஒருபுறம் பெற்று மறுபுறம் நிழல் சூடி நின்றிருந்தன மரங்கள். தழலுருக்கொண்ட இலைகள்.
புலரிக்கு முன் உருவாகும் அந்த விந்தையான அமைதியை அவன் பலமுறை உணர்ந்திருந்தான். இந்திரப்பிரஸ்தத்திலும் உபப்பிலாவ்யத்திலும் அந்த அமைதி புலரிக்கான தவம் என்று தோன்றும். இலைகள் அனைத்தும் ஓய்ந்து சொல்லின்றி மலர்ந்து நின்றிருக்கும். வாகையும் நெல்லியும் தொழுது கூம்பியிருக்கும். புவியிலுள்ள அனைத்தும் ஊழ்கம் கொண்டு விழி மூடியது போலிருக்கும். முதல் ஒலி என்பது ஏதோ அறியாப்பறவையின் “எந்தாய்!” பின் மிகமெல்ல “என்னிறையே!”
அவ்வொலி கேட்டு எங்கோ ஏழு கடல்களுக்கு மறுபக்கம் சூரியன் தன் பாகன் அருணனிடம் “கிளம்புக!” என்பான். “ஆணை” என்று சொல்லி இரு கைகளையும் அருணன் விரிக்கையில் ஏழு புரவிகள் அவன் இரு உள்ளங்கைகளிலிருந்து பிடரி கிளர்ந்தெழும். கன்னங்கரிய புரவிகள். அவற்றின் விழிகள் மட்டுமே ஒளித்துகள்கள். அவை கனலென்றாகி சுடர்கொண்டு பற்றி எழ அவற்றின் பிடரி மயிர்கள் தழல் வடிவாகும். பின்னர் அவை செந்தழல் அலைகளென்றாகி குளம்புகள் பறக்க வானில் எழும். அனல்முடி சூடி அருணன் அமர ஆயிரங்கோடி கைகள் ஒவ்வொன்றாக விரிந்து சூழ நாளவன் தன் பீடத்தில் ஏறி அமர்வான்.
புலரி நிகழ்வதை அத்தனை பறவைகளும் தங்கள் உள்ளத்தால் உணர்கின்றன. “எழுகாலை!” என்று கரிச்சான் கூவும். “ஒளியே!” என காகம். பலநூறுமுறை மண்ணிலுள்ள ஒவ்வொரு உள்ளத்திலும் நிகழ்ந்த பின்னரே அது வானில் நிகழ்கிறது. புலரி எனும் சொல். புலர்க! புலர்க! ஊழ்க நுண்சொல்லில் முதன்மை அதுவே. தெய்வங்களின் புன்னகையே சாவித்ரி. அவள் ஒலிவடிவத் தோழியே காயத்ரி. ஒவ்வொரு நுண்ணுயிரும் பறவைகளும் விலங்குகளும் பாறைகளும் மலைமுடிகளும் பெருங்கடல்களும் கொள்ளும் இறையறிதல். ஒவ்வொரு நாளும் இங்குள்ள ஒவ்வொன்றுக்கும் பிரம்மம் அளிக்கும் ஒரு சொல்லுறுதி. புலரிக்கு முந்தைய இருளில் சதானீகன் அறிந்த பேரமைதியை வேறெங்கும் அறிந்ததில்லை. இருள் ஒளியின் பீடமென்றாகும் நிலை. சொல்லில் பொருளென இருளுக்குள் ஒளி எழுவதை உணரும் தருணம்.
ஆனால் அப்போது மதுராவின் கருக்கிருள் அமைதியின்மையை உருவாக்கியது. அரக்கு போன்ற கரிய கொழுஞ்சாந்து என அது நகரை மூடியிருப்பது போல. அவன் இடைநாழியில் நடந்தபோது ஒட்டடைபோல இருள் அவன் முகத்திலும் கைகளிலும் படிந்தது. விரலால் அதை கிழித்து விலக்கி முன்னகர வேண்டியிருந்தது. படிகளில் கொழுவிய இருளில் கால் வழுக்குமென்று தோன்றியது. இருள்விழுதில் சிவந்த புழுக்கள்போல நின்று நெளிந்தன கூடத்தின் நெய்விளக்குச் சுடர்கள். முற்றத்தில் வானிலிருந்து பிசின் என இறங்கி அலைகளாக நெளிந்து நெளிந்து குவிந்து கிடந்தது. வாய் திறந்தால் உள் நுழையும், உடல் நிறைக்கும். அதன் சுவை கசப்பு. அதற்கு முடிகருகும் வீச்சம்.
அவன் முற்றத்திலிறங்கி நடந்தான். சால்வையை நன்கு போர்த்தி தலைக்குமேல் எடுத்து சுற்றிக்கொண்டான். சாலையில் மென்புழுதி மீது ஓரிரு வண்டித்தடங்களும் குளம்புச்சுவடுகளும் மட்டுமே இருந்தன. இரவில் வீசிய காற்று புழுதியை அள்ளி சுவரோரங்களில் மென்மையாக படியவைத்திருந்தது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று அத்திரிகள் கால்களில் ஒன்றை சற்றே தூக்கி அரைத்துயிலில் இருந்தன. அவன் காலடியோசை அவற்றின் உடலில் மெல்லிய அசைவென வெளிப்பட்டது. அவன் மணம் அவற்றின் கனவுக்குள் செல்ல செவிகள் சற்றே திரும்பின. அத்திரிகளில் ஒன்று நீள்மூச்சுவிட்டது.
அவன் மீண்டும் அரண்மனைக்கு திரும்பிச் செல்லவேண்டுமென்று விரும்பினான். ஆனால் நூறுமுறை அவ்வாறு உள்ளூர திரும்பிச் சென்றபின்னும்கூட அவன் கால்கள் முன் சென்றுகொண்டிருந்தன. பின்னி விரிந்த தெருக்களினூடாக நெடுந்தொலைவு வந்திருப்பதுபோல் தோன்றியது. கிளம்பி சற்று நேரமே ஆயிற்று என்றும். அவன் திரும்பிச் சென்ற பின்னரும்கூட அவன் கால்கள் முன்னேதான் சென்றுகொண்டிருந்தன. நகரெங்கும் மக்கள் ஆழ்ந்து துயின்றுகொண்டிருந்தனர். எந்த ஓசையுமில்லை. அத்தகைய ஆழ்ந்த துயிலை மனித உடல் உள்ளத்திற்கு அளிக்கமுடியாது. உடலுக்கு அப்பால் உள்ளத்தை வந்து பற்றும் பிறிதேதோ அளிக்கும் துயில் அது.
பிரம்ம முகூர்த்தத்திற்கு முந்தைய பொழுதுகள் வானோர்க்கும் கீழோர்க்கும் உரியவை. முதற்பொழுது கந்தர்வர்களுக்கு, இரண்டாம் பொழுது தேவர்களுக்கு, மூன்றாம் பொழுது நாகர்களுக்கு, நான்காம் பொழுது பாதாள மூர்த்திகளுக்கு, ஐந்தாம் பொழுது மூதாதையருக்கு. அம்மூதாதையரில் ஒருவர் மூச்சுவடிவாக அருகணைந்து குனிந்து துயில்பவர்களின் இமைமீது தன் நெஞ்சின் வெம்மைக்காற்று படிய முகர்ந்து செல்கையில் முதல் விழிப்பு நிகழ்கிறது. முதல் பறவையின் குரல். முதல் எண்ணம். இது நாகர்களின் பொழுது முடிந்து பாதாள தெய்வங்கள் எழும் பொழுது.
நாகங்கள் நிழல்நெளிவுகளென இழுபட்டு வளைகளுக்குள் மறைகின்றன. இருள்களுக்குள் பாதாளவடிவர்கள் நின்றிருக்கின்றனர். மனிதர்களின் அனைத்து தீமைகளையும் அறிந்தவை. மனிதர்களை ஒவ்வொரு கணமும் அருகே நின்று நோக்கிக்கொண்டிருப்பவை. வாய்க்குள் மூக்குக்குள் செவிக்குள் குடிகொள்ளும் இருளில் வாழ்பவை. மச்சம் என வடு என உடலில் ஒட்டியிருப்பவை. நிழல்களில் பின்தொடர்பவை. கனவுகளில் தோன்றுபவை. சொல்லிடைவெளிகளில் வாழ்பவை.
இந்த இருள் இத்தனை செறிவு கொள்வது அவற்றால்தான். இந்நகரில் துயிலும் அனைவர் மேலும் ஈர மரவுரி என மூடி மண்ணோடு மண்ணாக பதித்து வைத்திருப்பவை அவைதான். இதோ என்னை நோக்கிக்கொண்டிருக்கின்றன அவை. நான் அவற்றை நோக்கிக்கொண்டிருக்கிறேன். இந்தச் சுவருக்கு அப்பால் நூறு விழிகள். அந்தக் கட்டட மடிப்புக்குள் மேலும் நூறு விழிகள். அந்த மரநிழலில், அந்த சிறுபொந்துக்குள் பல்லாயிரம் விழிகள்.
அண்ணாந்து அவன் வானை பார்த்தான். விண்மீன்கள் இல்லாது முற்றிலும் இருள் மூடியிருந்தது. மதுராவுக்கு அது மழை மாதமல்ல. ஆயினும் வானம் முகில்திரை கொண்டிருந்தது. முகிலென எழுந்து வானத்தை மூடிய ஆழத்து தெய்வங்களே போலும். எங்கோ ஓரிடத்தில் தான் வழிதவறிப் போயிருக்கிறோமோ என்ற உணர்வு அவனை நிறுத்தியது. அஞ்சியவன்போல உடல் திகைத்து நின்றபின் அவன் திரும்பி நடந்தான். உளம் கலைந்த அப்போதே வழி துலங்கத் தொடங்கியது. மதுராவின் தெருக்கள் மிகச் சிறியவை என்றும் அரண்மனையிலிருந்து அவன் வந்த தொலைவு மிக குறுகியதே என்றும் அவன் உள்ளம் கண்டடைந்தது.
மீண்டும் அரண்மனைக்கோட்டையின் முகப்பை அடைந்தான். வந்து விட்டேன் என்ற உணர்வு அனைத்து புலன்களையும் எச்சரிக்கையிழக்கச் செய்தது. உடல்தசைகள் தொய்வடைய நீள்மூச்சுடன் சால்வையை எடுத்து மீண்டும் போர்த்தியபோது கோட்டை முகப்பின் குற்றாலமரத்தினடியில் நின்றிருந்த மூன்று குழந்தைகளை பார்த்தான். இருமுறை விழிகூர்ந்த பின்னரே அவை குழந்தைகள் என்றுணர்ந்தான். மெல்ல அருகணைந்து மேலும் விழிசெலுத்தினான். எண்ணியதுபோல அருகே சென்று நோக்கும்தோறும் அவர்கள் உரு கலையவில்லை. மேலும் வடிவக்கூர் கொண்டன. விழியொளியும் முகஉணர்வும் துலங்கலாயின.
ஓராண்டு அகவை கொண்டவை. குழவித்தசைக் கொழுமை மறையாதவை. எவையுமே ஆடை அணிந்திருக்கவில்லை. அவற்றின் அன்னையர் கைவிட்டிருப்பார்களோ? அருகே எங்கோ அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்களா? அவ்வெண்ணங்களின் பொருளின்மையை அவன் உணர்ந்தும்கூட தான் அறிந்து புழங்கும் மெய்மைக்குள் அவற்றை கொண்டுவந்து நிறுத்தவே அவன் அகம் மீண்டும் மீண்டும் முயன்றது. குற்றாலமரத்தின் அடியில் சென்று நின்றபோது அதன் கிளைகள் அனைத்திலும் குழந்தைகளை பார்த்தான். அண்ணாந்து பார்த்தபோது அனைத்து கிளைகளிலும் செறிந்து பல நூறு குழந்தைகள் கீழே நோக்கிக்கொண்டிருப்பதை கண்டான்.
கால் தடுமாறி விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. விழுந்தால் மண்ணில் உடல் அறையும் வலி எழுமென்றும் மதுராவின் மஞ்சத்தில் விழித்தெழக்கூடுமென்றும் தோன்றியது. கனவல்ல, நேர்நனவு. பருவடிவு கொண்ட புறநிகழ்வு. அவர்கள் எவரென்று அறிந்திருந்தான். அவர்களிடம் கேட்க ஒரு வினா அவனுள் எழுந்தது. மிக அருகே நின்று எவரோ அதை சொல்லென்றாக்கி கேட்பதுபோல. நிர்மித்ரனின் அருகமைவை உணர்ந்து திரும்பிப்பார்க்கையில் அவன் அங்கு இல்லையென்று அறிந்தான். ஆனால் அவன் கேட்ட சொற்கள் தெளிவாக ஒலித்தன. “நீங்கள் யார்? மூதாதையரா? இருளுலத்து தெய்வங்களா?”
இது எந்த பொழுது? இப்போது மண்ணிலெழுபவர் எவர்? ஒரு குழந்தை இரண்டடி எடுத்து அவனருகே வந்தது. முதிய குரலில் “இது பொழுது மயங்கும் வேளை, மைந்தா” என்றது. நடுங்கி கால் மடிந்து சதானீகன் தரையில் விழுந்தான். இரு கைகளையும் தரையில் ஊன்றி குழல் கற்றைகள் தொங்கி ஆட கண்மூடி அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது, அருவி பொழியும் மரக்கிளை போல. பின்னர் எழுந்து ஓடி முற்றத்தை அடைந்தான். இரு காவலர் அவனை திரும்பிப் பார்த்தபின் அருகே வந்தனர். அவன் நின்று மூச்சிரைக்க அவர்களை விலக்கிவிட்டு மேலே நடந்தான்.
அரண்மனை முகப்பை அடைந்து படிகளிலேறி கூடத்தை கடந்தான். மாடிப்படிகளில் ஏறுகையில் தன் உள்ளத்தின் எடையை தசைகளில் உணர்ந்தான். ஒவ்வொரு படியிலும் கால்வைத்து நின்று கைப்பிடியைப் பற்றியபடி முழு விசையாலும் உடலை உந்தி மேலே கொண்டு சென்றான். இருமுறை விழுந்து உருண்டு கீழே சென்று விடுவோம் என்று அஞ்சி இரு கைகளாலும் கைப்பிடியை பற்றிக்கொண்டு கால்பதித்து நின்றான். மீண்டும் மேலேறி இடைநாழியை அடைந்து தூணைப் பற்றியபடி நின்றபோது கண்களில் நீராவி அலையடிக்க செவிகளில் தொலைதூர ரீங்காரம் ஒன்று ஒலிக்க நெஞ்சை நிறைத்து தொண்டையை கனல வைத்த பெருவிடாயை உணர்ந்தான்.
மறு எல்லையிலிருந்து அவனை நோக்கி வந்த நிர்மித்ரன் மூச்சிரைக்க பதைக்கும் குரலில் “மூத்தவரே, எங்கு சென்றீர்கள்? தங்களை தங்கள் அறையிலும் கீழேயும் தேடினேன்” என்றான். அருகே வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு “ஒரு கொடுங்கனவு, மூத்தவரே” என்றான்.