ஒரு நிலத்தில் வாழ முடியாமல் பிற நிலங்களை நோக்கிச் செல்லும் மக்கள் காலந்தோறும் இருக்கிறார்கள். அத்தகைய புலப்பெயர்வுக்கு போரோ பஞ்சமோ பின்புலமாக இருந்திருக்கிறது.
பிரித்தானிய காலனிய ஆட்சி காலத்தில் கூலிகளாக இந்தியர்கள் உலகம் முழுக்க கொண்டு செல்லப் பட்டார்கள். தோட்டங்களிலும் சுரங்கங்களிலும் உடல் உழைப்பினால் செல்வங்களை தங்கள் முதலாளிகளுக்கு பெருக்கித் தந்தார்கள். ஒரு கால கட்டத்தில் அத்தகைய தொழில்கள் லாபம் குறைந்தவையாய் மாறும்போது
கூலிகளாய் அழைத்து வரப்பட்டவர்கள் கைவிடப் பட்டார்கள்..அதற்குள் பல பத்து ஆண்டுகள் கடந்து அங்கு அவரகளுக்கான ஒரு வாழ்க்கையும் அமைந்திருக்கும். பூர்வீகத்துடன் இருக்கும் தொடர்புகள் அறுந்து. சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாமல் வந்த நாட்டிலும் வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் வாழ்க்கை சீ.முத்துசாமியின் அகதிகள் நாவலில் நிறைந்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு அழைத்துச் செல்லைப்பட்டதோட்டக் கூலிகள் அந்தந்த தோட்டங்களில் தங்க வைக்கப் படுவார்கள். பெரிய அளவில் அடிப்படை வசதிகள் ஏதுமற்று எதோ வாழ்வதற்காக அவர்களுக்கென ஒதுக்கப் படும் பகுதிகளில் அம்மக்களுக்கென ஒரு வாழ்க்கை உருவாகி வருகிறது. நீண்ட காலங்களுக்கு பின் அவை நிலைகொண்டும் விடுகின்றன. வாழ்க்கை தன் போக்கில் இன்பங்களையும் துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு என அரசு எடுக்கும் முடிவு குடியுரிமையற்ற தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்குகின்றன. அதுவரை இயல்பாக உருவாகி வந்த சமூக அமைபப்பு மெல்ல மெல்ல வலுவிழக்க ஆரம்பிக்கிறது. மக்களின் மனங்களில் எதிர்காலம் பற்றிய நிலையின்மை முகத்தில் அறைய தங்களின் இயல்பான கொண்டாட்டங்களில் இருந்து மெல்ல வெளியேற்றப் படுகின்றனர். ஒருவிதமான சோகம் நிரம்பிய அமைதி தோட்ட மக்களிடம் வந்து விடுகிறது. அதோடு சேர்த்து லாபம் இன்னமையால் ரப்பர் தோட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலை வாய்ப்பை இல்லாமல் ஆக்குவதும் அவர்களின் வாழ்வில் பெரும் துயரத்தை உண்டு செய்கிறது. சிதைவின் வேகத்தை அதிகப் படுத்துகிறது. சிலர் சொந்த நாட்டிற்கு திரும்ப நினைக்கின்றனர். வேறு வழியில்லாத மக்கள் முற்றிலும் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
நாவலில் மூன்று பெண்களின் சித்திரம் அழுத்தமாக பதிந்திருக்கின்றது. பாப்பம்மாள், லட்சுமி, மாரியாயி
கணவனின் கால் துண்டிக்கப் பட்டதும் குடும்ப பாரத்தை தாங்கிக் கொள்ளும் பாப்பம்மாள் தன் வயது வந்த பெண்களின் காதலோடு போராடி தோற்றுப் போகிறாள். மூத்த பெண் ஒருவனை காதலித்து கர்ப்பமானதை கலைக்க அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இளைய பெண் காதலில் விழுவது, அவள் காதலனோடு ஓடிப்போவது , அதைக்கண்டு படித்துக் கொண்டிருக்கும் மகன் தன அம்மா அக்காக்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என நினைத்து வீட்டை விட்டு கிளம்பிச் செல்லவது எதையும் தடுக்க முடியாமல் சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் காலை இழந்த அவளது கணவன் சாமிக்கண்ணு. ஒரு குடும்பம் சிதைந்து போவதில் இருக்கும் துயரம் ஒரு பேரழிவின் துயரத்தை போல தான்.
இரண்டு பிள்ளைகளோடு கணவனை இழந்த லட்சுமி. அவளிடம் தன் காதலை சொல்லும் கிருஷ்ணன். அவளின் நிலைமையை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கண்காணி. இவற்றையெல்லாம் தவிர்த்து எவ்வளவு துயரத்தை அனுபவித்தாலும் சொந்த ஊருக்கு வைராக்கியத்தோடு திரும்ப நினைக்கும் லட்சுமி.
மூன்று குழந்தைகளுக்குப் பின் கணவன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பின் நான்கவதாக கர்ப்பமாகும் மாரியாயி. அதன்காரணமாக அவளை விட்டுச் செல்லும் கணவன். கணவன் எங்கிருக்கிறான் என்று தெரியாத நிலையில் ராஜமாணிக்கத்தின் அழைப்பை ஏற்று அவனுடன் வாழத் தொடங்குகிறாள்.
நாடுகடந்து சென்ற பின்னும் அங்கும் ஜாதியின் இறுக்கம் பேனப்படுவதை ஆங்காங்கே காட்டிச் செல்கிறார்.
தொப்புரவு தொழிலாளி அம்மாவசி, சாமிக்கண்ணு, அவரை போலவே கால்களை இழந்த ஆனால் நம்பிக்கையை இழக்காத டீக்கடை நாயர் போன்றோர் சற்று பாதித்த ஆண் கதா பாத்திரங்கள்.
ஏற்கனவே சயாம் மரண ரயில் திட்டத்தில் தமிழ் தோட்ட தொழிலார்கள் பெருமளவில் சாகடிக்கப் பட்டதையும், அதைப்பற்றி தமிழில் பெரிய அளவில் எதுவும் ஆய்வு செய்யப் படவில்லை என்ன்பதைப் பற்றியும் வாசித்திருக்கிறேன். இந்த நாவலில் சயாம் பற்றிய ஒரு சித்திரம் மெல்லிய அளவில் வந்து செல்கிறது.
யிரம் ஆண்டுகளுக்கு கடாரத்தின் மீது கொண்ட வெற்றியின் சின்னமாக சோழராஜன் முதலாம் ராஜேந்திரனால் கட்டப் பட்ட கோவில் தற்போது சிதில மடைந்து கிடக்கும் கோவிலைப் போல தமிழக தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைந்து கிடக்கிறது நாவலில். மனிதர்கள் வாழ்க்கையில் தாங்கள் வாழ்ந்த மண்ணும் இரண்டற கலந்து விடுகிறது. அங்கிருந்து வேறு பகுதிக்கு புலம் பெயர்தல் என்பது நன்கு வேர்கொண்ட மரத்தை வேரோடு பிடுங்கி முற்றிலும் வேறு நிலத்தில் நடுவதைப் போலத்தான். ஆழமாக ஊடுருவிய வேர்கள் நெடுங்காலம் உயிர்த்திருக்கும். தமிழகத்திலும் ஈழ அகதிகள் வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு இங்கும் குடியுரிமை இல்லை இலங்கைக்கும் திரும்பி செல்வதும் பயனற்றதுமான ஒரு சூழலில் அவர்கள் எதிர்காலம் பற்றிய இதே நிலையின்மையுடன் தான் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டேன்
முத்துசாமி நூல்கள் வாங்க
சீ.முத்துசாமி குறுநாவல்கள் பிரசுரம்
*
இருளில் அலைதல் -கணேஷ்
சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!
சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்
சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்