வாடிக்கையாளர்கள்
புதுக்கவிதை சுருக்கமான வரலாறு
அன்பள்ள ஜெ….வணக்கம்.
நான் பணி ஓய்வு பெற்ற பிறகு வலைத்தளத்திற்குள் வந்தவன். எனவே 2008 ன் மறு பிரசுரமான “இலக்கிய விருதுகள்” பற்றிய உங்களது கட்டுரையை இன்றைய தேதிக்கான உங்களது பதிவின் மூலமாகத்தான் கண்டேன். வரி வரியாய்ப் படித்து ரசித்தேன். இம்மாதிரிப் பலமாகப் பகடி செய்வதற்கும் ஒரு தகுதியும் திறமையும் வேண்டும். அப்படியானால்தான் அது நிற்கும். அங்கங்கே சில மறுப்புகள் இருந்தாலும் அதையும மறந்து, ஒதுக்கி ஏற்றுக்கொள்ள மனம் விழையும். இதை ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அவ்வப்போது படித்து ரசிக்கத்தக்க அபாரமான பதிவு இது.
தாங்கமாட்டாமல் முகநூலின் என் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளேன். நிறைய நண்பர்கள் கடிப்பார்கள். ஃபோனில் திட்டுவார்கள். அதுபற்றிக் கவலையில்லை. உங்களோடு இருப்பதுதான் சந்தோஷம். நிறைவு..தினமும் உங்களது இரண்டு உரைகளையாவது தியானத்திற்குச் சமமாகக் கேட்டு ரசித்துவிட்டு(யூ.ட்யூப்பில்)ப் படுக்கைக்குச் செல்பவன் நான். அப்படி நான் கேட்ட கடைசிப் பேச்சு நவீன இலக்கியம்பற்றிய உங்களின் அபாரமான ஆழமான உரை. உங்களின் எழுத்தால்,பேச்சால் என் பொழுதுகள் பயனுள்ளதாகின்றன.
நன்றி
உஷாதீபன்
அன்பு ஜெ,
‘வாடிக்கையாளர்கள்’ பதிவு படித்தேன்.
பதிவின் உச்சமான ‘முட்டுச்சந்து தீர்வு முறைமை’ அற்புதம்.
திரு.அ.முத்துலிங்கம் அவர்களின் “0.23 சதம்” சிறுகதையும் இந்த பதிவோடு சேர்ந்து படிக்கச் சிறந்தது.
http://amuttu.net/viewArticle/getArticle/19
இதையொட்டி என் அனுபவம் பகிர நினைக்கிறேன்.
நான் மத்தியகிழக்கில் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தச்சிக்கல்.மத்தியகிழக்கு ஒப்பந்தங்கள் அனைத்திலும் காணப்படும் பொது அம்சம் ஒன்றுண்டு.ஒப்பந்தம் ஆங்கிலத்திலும் அரபியிலும் இருக்கும்.ஒரு சிக்கல் தருணத்தில் அல்லது இறுதியாக என்றும் அரபியில் எழுதினதே இறுதி வாதத்திற்கு முன் நிற்கும்.பொதுவாக சிக்கல் வராதவாறே திட்டமிடப்பட்டிருக்கும். திட்ட பங்கெடுப்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் லாப வரம்புகள் மிகத் தெளிவாகவும் மற்ற தென் கிழக்கு நாடுகளில்/இந்தியாவில் உள்ளது போல கைக்கும் வாய்க்குமாக இருக்காது.
முன் விவரம் போதும் ..சிக்கல் இப்போது
என் நிறுவனம் ஒரு பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் உருவானது.திட்ட பொறியியல் ஆலோசகர் – ஒரு ஆங்கிலேய நிறுவனம்.திட்ட செயல்படுத்துனர்-ஒரு ஜப்பானிய ‘கே(ய்)ரட்ஸு'(keiretsu) நிறுவனம். திட்ட துணை ஒப்பந்தக்காரர் – ஒரு தென்கொரிய நிறுவனம்.
கடந்த 2 ஆண்டுகளாய் நடக்கும் நிதி நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளில் எங்கள் அனுபவம் மிகுந்த வயதான ஆங்கிலேய திட்ட இயக்குனர் வெளியேறி, அனுபவம் குறைந்த பெல்ஜியர் ஒருவர் அதே இடத்தில்.
நிறுவன ‘கொதிக்கலனில்’ வடிவமைப்புச் சிக்கல். நிறுவனமோ தற்போது வணிக ஓட்ட காலத்தில் (commercial operation period). ஒன்றுக்கு எட்டாக கொதிக்கலன்கள்.கொதிகலன் சரிசெய்யப்படவேண்டும் சில விட்டுக்கொடுத்தல்கள் + நிபந்தனைகளின் கீழ் என்று சொன்னது ‘ஒப்பந்த சிக்கல் தீர்வு’ கடிதம் (side letter).
திட்ட பங்கேற்பாளர் அனைவரும் தங்களிடையேயான ‘ஒப்பந்த உத்திரவாதம்’ சரிபார்த்தலில் ஒரு பொது நிறுவனத்தை நடுவே வைத்திருப்பர்.
தென் கொரியனுக்கு சொன்னால் சொன்ன தேதிக்கு நடக்க வேண்டும்.ஆங்கிலேயனுக்கு ஒப்பந்தமும் சட்ட வரிகளும் முக்கியம்.அரபிக்கு பெயரும், ஜப்பானியனுக்கு பெயரும் காசும் முக்கியம்.
திட்ட சரிபார்த்தலில் வேலை செய்யும் எனக்கு ஒட்டுமொத்தப் பார்வையில் திட்டம் மேலதிக இடியாப்ப சிக்கலாகிவிடுவதை விட முடிந்தவரை சமரசத்தோடு திட்டம் முடிந்தால் அதுவே போதும்,சரியும் கூட என்ற நினைப்பு. (இது ஒரு பொதுபடுத்தலே,முடிந்த வரை இதை அவ்வப்பொழுது சரிபார்த்தும்,தவறு இருப்பின் சரிசெய்தும் கொள்கிறேன்).
இச்சூழ்நிலையில் தீர்வை செயல்படுத்தவேண்டி நடக்கும் கடிதப் பரிமாற்றங்கள், கூட்டங்கள் பற்றி எழுத இக்கடிதம் போதாது.ஆகையால் இத்துடன் நின்றுவிடுகிறேன்.
உங்களின் ‘முட்டுச்சந்து தீர்வு முறைமை’ எனக்கு ஆங்கிலேய வேலை பாணியாகத் தெரிகிறது.
அடிக்க வராதீர்கள் :-)
ரமணா சந்துரு
அன்புள்ள உஷாதீபன்
இது விமர்சனம் ஒன்றுமில்லை, சும்மா பகடிதான். சிரித்துவைத்தால் கடந்துபோவது எளிது
ஜெ