நத்தை -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
‘எழுத்தாளர்’ என்று எழுத்து என்றால் என்ன என்று சற்றேனும் அறிந்து கொண்டுவிட்டவர்களால் அறியப்படும் உங்களுக்கு அநேக வணக்கங்கள். விகடன் ‘தடம்’ இதழில் நத்தையின் பாதை என்ற தலைப்பில் 6 -வது கட்டுரையாக குருவியின் வால் என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களைக் கண்டு எதிர்வினையாக ஒரு அன்பர் கடிதம் வாயிலாக தன் கருத்துக்களைத் தந்துள்ளார். அக்கடிதம் எனக்கு சில உண்மைகளை உணர்த்தியதாக கருதுகிறேன். சில திறப்புகள். உங்களிடமும் அவரிடமும் கூற ஆசை.
அந்தக் கட்டுரையில் நிறைவுப் பகுதியில் வரும் “இரட்டைவால் குருவியின் ஆட்டுவிப்பு” தர்க்கம் தங்களுக்கு பொருத்தமானதே என்று நானும் கருதுகிறேன். ஒரு சிறு வேறுபாடு “தங்களுக்கு மட்டும்” அல்லது “தங்களைப் போன்றவர்களுக்கு மட்டும்” என்று கருதுகிறேன். உலகை ஒருவரும் ஆட்டுவித்து விட முடியாது என்பது உங்கள் கருத்தாயினும், உங்களால் உலகிற்கு தீங்கில்லை என்று எடுத்துக் கொள்கிறேன்.
“இலக்கியம் செய்வதே தான் எக்காலத்தாலும் நினைவுக்கூரப்பட வேண்டும் என்பதனாது இலக்கியம் எழுதுவதை ஒரு தொழிலாகக் கொண்டு இயங்கும் ‘கார்ப்பரேட்’ வணிக எழுத்தாளர்களின் சிந்தையில் உதித்த புத்தி என்பது இங்கே தெற்றென விளங்கிற்று.” – அன்பரின் இந்த கருத்து உண்மையே. முன்னதாக தன் தொழிலை நேசித்து மேற்கொள்ளும் எவரும் ‘கார்ப்பரேட்’ என்பதையும் தன் தொழிலை வெறுத்துத் தூற்றிக் கொண்டே மேற்கொள்ளும் எவரும் ‘கார்ப்பரேட் அல்லாதவர்’ என்ற தற்கால உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தன் கடையில் தான் வைக்கும் சாம்பாரின் சுவை எக்காலத்தும் நினைவுக்கூரப்பட வேண்டும் என்று கருதுபவர் ‘கார்ப்பரேட்’ சமையல்காரர். அருகே கடிகாரம் ரிப்பேர் செய்யும் தாத்தா ஒருவர் கூட அப்படி கருதுகிறார். எதிர்காலத்தில் கடிகாரம் பார்த்தால் கூட அவர் நினைவு எழ வேண்டுமாம், அதற்காக தொழில் நேர்த்தி நம்பத்தகுந்த கட்டணம் என்று ஆணவம் கொண்டுள்ளார். அவர் கூட ஒரு ‘கார்ப்பரேட்’-டோ என்று சந்தேகம் எழுகிறது. எக்காலத்திலும் நினைவுகூறப்படாதவாறு செயல்கள் இருக்க வேண்டும் அப்போதுதான் கார்ப்பரேட் அல்லாதவர்.
“இவ்வுலகை எவரேனும் எவ்வகையிலேனும் ஆட்டுவிக்க முடியுமென்றால், அது அப்படித்தான் இயலும்”..
“உண்மைதான்… ஹிட்லரும், முசோலினியும் எப்படியேனும் இவ்வுலகை ஆட்டுவிக்க நினைத்தவர்கள்தானே!” – ஹிட்லரும், முசோலினியும் பற்றி என் அறிவு மிகக் குறைவு எனினும் மாசேதுங் ….அல்ல..அவரைவிட ஸ்டாலின் இங்கு அதிகம் பொருந்துவார் என்று எண்ணுகிறேன். ஹிட்லரும், முசோலினியும் குருவியை தங்களுக்கு போட்டியாக கருதினார்களா என்று தெரியவில்லை. தன் வாலை ஆட்டி, தலையை ஆட்டி, எதிரில் இருக்கும் தென்னை மரம் ஆடுவதாகவும் அதன் மேல் வானில் வெண் முகில் நீல வெளியில் ஆடுவதாகவும் கருதும் குருவி உலகை ஆட்டுவிக்க எண்ணும் தங்களுக்குப் போட்டி என்று கருதி குருவி வேட்டையாட – இலக்கியவாதிகளை வதை முகாம்களுக்கு அனுப்ப அவர் போன்றோரால் முடியும். நிஜத்திலேயே ஆட்டிவைப்பவர்களால் தான் சும்மா யாரேனும் அப்படி சொன்னாலும் சீரியசாக எடுத்துக் கொண்டு ஒடுக்க முடியும், சிலுவையில் அறைய முடியும்.
‘எப்படியேனும்’, என்ற சொல்லாடலில், வரலாற்றின் தொடக்கப்புள்ளியிலிருந்து நேற்று வரை, ஆட்டுவிப்புக்காக ‘சிந்தப்பட்ட கடைசி மனிதனின் இரத்தமும் சதையும் கலந்த முடைநாற்றத்தின்’ மீதுதான் உங்களது ‘நான் எனும் அகங்காரம்’ (இது உங்களது வார்த்தை என்பதை நினைவில் கொள்க..) கட்டமைக்கப்பட்டது, படுகிறது, படும்..” – இதில் ஒன்றை மட்டும் முதலில் சேர்க்க விரும்புகிறேன் “படுகிறது, படும், டும், ம்” (நன்றி: இரா. பார்த்திபன் அவர்கள்). “வரலாற்றின் தொடக்கப்புள்ளியிலிருந்து நேற்று வரை………சிந்தப்பட்ட கடைசி மனிதனின் இரத்தமும் சதையும்” – இது அநியாயம் இவ்வளவு பெரிய பாறையை சின்ன குருவியின் தலையில் வைக்கக்கூடாது. மேரு மலைக்கு அப்பால் மா-சேத-துக்கங்களை மானுடர்க்கு அளித்து மானுட பிணக்குவியலின் மீது நின்று மட்டுமே அத்தகைய ஒரு அகங்காரம் தன்னைத் தானே கட்டி எழுப்பிகொள்ள முடியும்.
”எந்த இலக்கிய உண்மையும், அதற்கு நிகரான பிறவற்றால் சமன்செய்யப்பட்டுத்தான் முழுமை நோக்கிச் செல்ல முடியும்” என்று ஒரு உண்மையைக்கூறி அதன் மீது புத்தி பேதலிக்க வைக்கும் அனுமானங்களை முன் வைக்கும் சாதுரியத்தை கைக்கொண்டீர்…”
– ஆனால் புத்தி பேதலிக்க வைக்கும் அனுமானங்களை முன் வைக்கும் உங்கள் சாதுரியம் செல்லுபடியாகாது மேன்மை பொருந்தியவரே! ஏன்னென்றால் ஏற்கனவே இங்கு பலருக்கும் புத்தி பேதலித்தே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
“உண்மைக்கு மாற்று உலகில் இல்லை”, மேன்மை பொருந்தியவரே!” – ஆம் இதையும் நீங்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். உங்களுக்கு முழுமையாக உண்மை தெரியாது என்று உண்மை கூறுவதனால் தான் ”எந்த இலக்கிய உண்மையும், அதற்கு நிகரான பிறவற்றால் சமன்செய்யப்பட்டுத்தான் முழுமை நோக்கிச் செல்ல முடியும்” என்று சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாத உண்மை என்று எதுவுமே எங்குமே இல்லை என்று பொய் கூறத் துணிவீர் ஆயின் “உண்மைக்கு மாற்று உலகில் இல்லை.”
“நான் என்னும் அகங்காரம் இல்லையேல் இலக்கியம் இல்லை” என்பது உங்களுக்கான உண்மை. அதை அனைவருக்குமான உண்மையாக மாற்றுவது தவறு. – இதுவும் சரியே. “நான் என்னும் அகங்காரம் இல்லையேல் வாசிப்பு இல்லை” என்பது எனக்கான உண்மை. ஒருவேளை “ஆத்ம ஞானம் இல்லையேல் இலக்கியம் இல்லை” என்று அல்லது “கடவுள் இல்லையேல் இலக்கியம் இல்லை” என்று கூறி இருந்தால் அனைவருக்குமான உண்மையாக ஆனாலும் ஆகலாம். …….இங்கே தான் குழப்பம் அடைகிறேன் நீங்கள் அராஜகங்களுக்கு பக்கபலமாக கடவுளை உங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளவில்லையே? அகங்காரம் என்றல்லவா சொல்கிறீர்கள்? “கடவுளை புறந்தள்ளிவிட்டு, அதை உங்களால் செய்ய முடியும் என்றால், உங்களை ஆகச்சிறந்த மனிதனாக இந்த உலகில் தோள்களில் ஏற்றி கொண்டாடலாம்” – அப்படியென்றால் கடவுளை புறந்தள்ளிவிட்டு அகங்காரம் தான் காரணம் என்று செய்து வரும் நீங்கள், அவரது கூற்றுப்படியே, ஆகச்சிறந்த மனிதனாக இந்த உலகில் தோள்களில் ஏற்றி கொண்டாடப்படத்தக்கவர் ஆகிறீர். நான் புரிந்து கொண்டது சரியா தவறா என்று குழப்பம் உண்டாக்கும் பள்ளங்களைத் தாண்டிவிடுகிறேன்.
‘உங்களை கடவுள் குனிந்து பார்த்து புன்னகைப்பார்’ தான்…குனிந்து பார்த்து புன்னகை செய்கிறார் என்றால், அவர் மேலே விதானத்தில் தொங்கி கொண்டிருப்பாரோ!
வேண்டியதில்லை. குருவி மரக்கிளையில் உட்கார்ந்து இருந்தது. கடவுள் அம்மரத்தின் அருகே அம்மரத்தை விட உயரமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் நின்றிருந்தார். அதனால் தான் குனிந்து பார்த்தார். மரத்தருகே கீழே நின்றிருந்தால் அண்ணாந்து மேலே பார்த்து இருப்பார். விண்ணில் தொங்க வேண்டியது இல்லை. தொங்கிகொண்டே பார்ப்பது சிரமம், அத்துடன் அந்நிலையில் புன்னகைக்கவும் முடியாது.
“உலகில் படைக்கப்படும் எந்த உயிரினமும், தான் இறந்த பிறகு என்னவாக அடையாளம் காணப்பட வேண்டும், என்று சிந்திப்பதுமில்லை, செய்வதுமில்லை….மனிதன் ஒரு அற்ப ஆசைக்காரன். தான் இறந்த பிறகும் தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும், என ஆசைப்படும் அற்பன்.” – உண்மைதான். தனக்குப் பிறகும் தன் உழைப்பு யாருக்காவது எவ்வகையிலாவது பயன்பட வேண்டும் என்று எண்ணுவது அற்பத்தனம் தான்.
அறிவை பெருக்கிக் கொண்டே செல்வது வழிவழியாக அவற்றைக் கடத்துவது, கலை, இலக்கியம், அறிவியல் என்று இவ்வளவு தேவையில்லைதான். பேசாமல் குரங்குகளாகவே இருந்திருக்கலாம். அற்ப ஆசையினால் எவ்வளவு தூரம் வந்து விட்டார்கள்? இறந்த பிறகு ஏன் யாரையும் அடையாளப்படுத்தப்பட வேண்டும் ? அடையாளப்படுத்தப்பட காரணமான கல்வி முதலில் ஓழிக்கப்பட வேண்டும்.
தயவு செய்து பூமியின் விட்டம் தெரிந்த ஞானசூனியங்களின் கருத்துக்களை மதித்துப் போற்ற தெரிந்து கொள்ளுங்கள். எப்போதும் புனைவில் வாழும் உங்களுக்கு நிஜத்தில் ஒரே ஒரு வானதியை மட்டுமே தெரியும். எப்போதும் நிஜத்தில் வாழும் அவர்களுக்கோ தங்கள் புனைவில் ஏராளமான வானதிகளைத் தெரியும். தானும் தான் வாழும் வீடும் தான் காண்பதும் மட்டுமே பிரபஞ்சம் என்று நினைத்துக் கொள்ளும் தகுதி கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே – இது எளிய வானியல் கணக்கு. புரிந்து கொள்ளுங்கள்.
“ஒளியின் மீது ஏறி ஒருநூறு ஆண்டு பயணம் செய்தாலும், இந்த ‘வெடித்த விண்வெளியை’ கடந்து விடலாமோ!அத்துணை தூரத்துக்கும் நீங்கள் அடையாளமாமோ!’என்றுமிருக்க வேண்டும்’ என்ற நினைப்பில் இலக்கியம் செய்வது எதற்கு? எப்படி முடிகிறது?”
– மேற்படி கருத்தில் எனக்கு உங்களிடம் ஒன்று மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா. “இலக்கியம் செய்வது எப்படி முடிகிறது?”. அதற்குத்தான் நான் முயன்று கொண்டே இருக்கிறேன் உங்களுக்கு மட்டும் எப்படி முடிகிறது? எனக்கு ஏன் இதுவரை முடியவில்லை?
“வயிறு நிரம்பியன் வாதம் செய்கிறான்”. உங்களுக்கு மலமும், சிறுநீரும் கழிக்கும் அவசரத்தில் ஒருவன் இலக்கியத்தைச் செய்வானா?”
தவறு. மலமும், சிறுநீரும் கழிக்கும் அவசரத்தில் ஒருவன் வாதம் செய்வான். மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று கட்டண கழிப்பிடத்தில் வாங்க மறுத்த போது பலர் அவசரத்திலும் வாதம் செய்ததை நேரிலேயே கண்டேன். “வயிறு நிரம்பியன் வாதம் செய்கிறான்” – இல்லை மதிய வேளையாக இருப்பின் பலரும் உறங்கிவிடுகிறார்கள் என்பதே யதார்த்தம்.
“உயிர் வாழ்வதற்கான அடிப்படை வாழ்க்கைவியக்கச் செயல்பாடுகளிலிருந்து, தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டவர்கள் தான், பொழுதுகழிய புனைந்தார்கள்.” – ஆம் அவர்களே மொழி உண்டாக்கினார்கள், இலக்கணம், இலக்கியம் உண்டாக்கினார்கள். புவி ஈர்ப்பு விசையிலிருந்து இத்தனை கண்டுபிடிப்புகளையும் அறிவியல்களையும் உருவாக்கி விட்டார்கள். தேவையில்லாமல் கற்கருவி, ஈட்டி, வில்-அம்பு என்று புறப்பொருட்களையும் தங்கள் கற்பனையும் இணைத்து ஏராளமானவற்றை உருவாக்கத் தலைப்பட்டார்கள். உயிர் வாழ்வதற்கான அடிப்படை வாழ்க்கைவியக்கச் செயல்பாடாக வலிமை மிக்கவன் விலங்குகோடு மற்போர் செய்து அதை தன் உணவாக்கியும் வலிமை அற்றபோது விலங்குகளுக்கு உணவாகியும் ஒரு இயற்கை சமநிலை நிலவியது. புனைந்து புனைந்து புனைவை உலகின் நிஜமாக்கி விடும் மானுட கற்பனைத்திறம் தவறல்லவா?
அதுவே உயர்ந்தது என்று எப்படி நம்ப வைக்கலாம்? வாழ்க்கை இயக்கச் செயல்பாடுகளிலிருந்து சற்றேனும் தங்களைத் துண்டித்துக் கொள்வது அச்செயல்பாடுகளை எளிமையாக்க அறிவின் இயக்கத்தைத் தரும் என்பதை அன்றாட வயிற்றுக்கு அல்லாடுபவர்கள் சிந்திப்பது மருட்செயல் என்று எண்ணுபவர்கள் இலக்கியம் அருட்செயல் என்று எப்படி புரிந்து கொள்ள முடியும்?
கல்வியும் கற்பனையும், அறிவின் அனைத்து செயல்பாடுகளும் முற்றும் அழிக்கபட்டு மற்ற உயிரினம்போல் “வயிறும், பாடும்” தான் வாழ்க்கை என்று வாழ்க்கை மிகவும் கடினமாக ஆக்கப்பட்டால், “வயிறும், பாடும்” உலகில் தோன்றிய ஒவ்வொருவரும் சார்பின்றி செய்ய வேண்டிய நிபந்தனை என்று இருந்தால் இலக்கியம் ஏது? கலைகள் ஏது? அறிவியல் ஏது? அதில் உங்களுக்கு இடம் ஏது? என் இடம் ஏது? மண்ணேது ? விண்ணேது ? உயர்வேது? தாழ்வேது? – அற்புதமான ஒரு இடம் அத்துவான வெப்பமண்டல முள்மரக் காட்டில் அத்வைதமும் மாவோயிஸமும் இணையும் மகத்தான புள்ளி. ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும் மாவோயிடுகளிடமும் பெற்ற வேதாந்த-சித்தாந்த கலவை.
இலக்கியம் ‘நேற்றைய’ என்பதை மட்டுமே வலியுறுத்துகிறது. இலக்கியவாதி நேற்றில் வாழ்ந்து நினைவு கூறப்பட வேண்டும் என்று நாளைக்குத் தாவி விடுகிறார். அதனால் அவருக்கு இன்று என்பது இல்லை. இலக்கியம் இடைஞ்சல்களை களைய வேண்டும், முடியாவிட்டால் இலக்கியவாதிகள் களையப்பட வேண்டும்.
நேற்றை வரலாறு என விரிந்த கண்கொண்டு கண்டு நாளை பொன்னுலகென கனவு காணும் இலக்கியவாதிகளே ! இன்று என்பதில் இருந்து உங்களுக்கு எதுவும் வேண்டாமா ? லெக் பீஸ் வேண்டும் என்று சொல்….இல்லை இன்று எதுவும் வேண்டாம் என்றால் வதை முகாம் செல் உதைபடு சாகு ! இன்று நின்று தின்று விளையாடும் எங்கள் விளையாட்டுக்குத் தேவைப்படும் போது துணை நிற்க மட்டும் தான் நீங்கள் வேண்டும் ! உங்கள் நேற்றும் நாளையும் எங்களுக்கு கிடையாது.
“உலகில் பிறந்தது முதல் இன்றுவரை, எந்த மாற்றமும் அடையாமல் வாழ்கின்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்கின்றனர். அவர்களுக்கு எந்த இலக்கியமும் தேவைப்படவில்லை; எந்த அடையாளமும் தேவைப்படவில்லை; அப்படித்தான் இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனுக்கும்.”
ஆம். உலகில் பிறந்தது முதல் இன்றுவரை, எந்த மாற்றமும் அடையாமல் வாழ்கின்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்கின்றனர். அவர்களுக்கும் கலைகளும், தொல்கதைகளும் இருக்கக் கூடும். இருந்தாலும் அதெல்லாம் இல்லை என்றே கொள்வோம். அவர்களுக்கு எந்த இலக்கியமும் தேவைப்படவில்லை என்று கருதுவோம். அப்படித்தான் இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் விலங்கு மட்டுமே என்றே கருதுவோம்.
நிறைவாக,
“இந்த உலகை புத்திசாலிகள் ஆள நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் கோழைகள். அவர்கள் நேரடியாக இந்த உலகிற்கு தங்களை அறிவித்துக் கொள்ளும் திராணியற்றவர்கள். தங்கள் ஆளுகையை மறைவாக ஆட்சி அதிகாரத்தின் வழியாகச் செய்பவர்கள். செய்ய நினைப்பவர்கள்.. அறிவியல் விஞ்ஞானியாக, கணித மேதையாக, தத்துவ வழிகாட்டலாக…….
அந்தக் குரூரம் தான் இன்று உலகை ஆள்கிறதே தவிர, ஆட்சியில் இருக்கும் அதிகார வர்க்கமல்ல”
இந்த பொய்யைச் சொன்ன பேரறிவாளன் வாழ்க!
அதிகார வர்க்கதால் எத்தனை இலக்கியவாதிகள் அசச்சுறுத்தப்பட்டாலும் வதைக்கப்பட்டாலும் கொல்லவேபட்டாலும் அதையெல்லாம் கண்ட பின்னரும் இலக்கியவாதிகளிடம் ஒரு குசும்பும் திமிரும் இருக்கவே செய்யும் போல. “நாங்கள் தான் உலகை ஆள்கிறோமே தவிர ஆட்சியில் இருக்கும் அதிகாரமான வர்க்கமான நீங்கள் அல்ல” என்று சீண்டுவது. உலகை ஆட்டிப்படைப்பதாக கருதி இருக்கும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை “நீ அல்ல நான் தான்” என்று சொல்லி சீண்டும் குருவியின் குசும்பு. சந்தேகமே இல்லை கடவுள் குருவியின் பக்கமே இருக்கிறார், அதன் ஆணவம் நிஜம் அல்ல என்றும் அது கொஞ்சூண்டு வைத்து விளையாடுகிறது என்றும் ஆபத்து அற்றது என்றும் அறிந்தே இருக்கிறார். அவர் வீழ்த்தக் கருதும் அகங்காரங்கள் வேறு.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
அன்புள்ள விக்ரம்
இத்தனை எழுதவேண்டுமா என்ன? பாவம் நல்ல மனிதர், சிந்திக்க முயன்றிருக்கிறார். முதல்முயற்சியில் முற்போக்காக இருக்கவேண்டும் என்பது ஒரு தொல்மரபு அல்லவா?
ஜெ
***
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
காலையிலேயே ‘மண்டை காய வைத்துவிட்டார்’ தங்களின் “குருவியின் வால்” கட்டுரைக்கு எதிர் வினை செய்த ப.பிரபாகரன் அவர்கள்!.
அவரின் கட்டுரையில் நீங்கள் செய்யும் ‘துருசுகளுக்கு உடனாக’ கடவுளை அழைத்துக் கொள்ளும் கோழைகள்தானே நாம்!என்றொரு சொற்றொடர் வருகிறது{சற்று சமீபத்திய கமல்ஹாசத்தனமாகவும் இது எனக்குத் தோன்றுகிறது- :‑) }இதில் வரும் ‘துருசுகளுக்கு‘என்ன பொருள் என்று தெரியவில்லை.இதை ‘வலையில்’தேடினால் இலங்கைத் தமிழில் குளத்திலிருந்து ‘நீர் திறந்துவிடப் பயன்படும் இடம்’என்ற குறிப்பு கிடைத்தது.
‘துருசுகளுக்கு’ என்று தமிழ் அகராதியில் தேடினால் ‘துருசுகளுக்கு என்ற சொல் அகராதியில் இல்லை‘ என்று தெரிவிக்கிறது. தங்களுக்கு நேரமிருப்பின் விளக்கவும்.
அன்புடன்,
அ .சேஷகிரி.
***
அன்புள்ள சேஷமிரி
துருசு என்றால் திரிசமன் என்பதன் மரூ என நினைக்கிறேன். மண்ணின் மைந்தரின் சிந்தனைகள்! அல்லது புதியகலாச்சாரம், வினவு நிறைய வாசிக்கிறார்
ஜெ