எடிசன் நூலகம்

libraries

அன்பின் ஜெமோ ,

நலமா? . வெகு நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறேன். கடந்த 3 மாதங்களாக   நியூ ஜெர்சி ,எடிசனில்  வாழ்ந்துவருகிறேன் . மனைவி இங்கு வேலை செய்வதால் இந்தியாவில் செய்த வேலையை விட்டு இங்கு வந்தேன். இன்னும் வேலை தேடும் படலம் போய்க்கொண்டிருக்கிறது. எடிசன் இந்தியா மக்கள் நிறையபேர் வசிக்கும் இடமும் கூட. பெருவாரியான நேரம் எடிசன் பொது  நூலகத்திலேயே  இருக்கிறேன். அருமையான நூலகம் .  ஆங்கிலத்திலும்  புத்தகங்களை வாசிக்கப் பழகிக்கொண்டிருக்கிறேன்.  இந்நூலகத்தில் எனது அனுபவத்தைக் கண்டு மனது  அங்கு நமது ஊரின் நூலகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

உலகின்  முக்கியமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. ஒருவர் எத்தனைப் புத்தகங்கள் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். கூடவே உலக கிளாசிக் படங்களும் இங்கு கிடைக்கின்றன. படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இங்குள்ள நூலகங்கள் பொக்கிஷங்கள் என்றே கூறுவேன். நூலகர்களும் எந்நேரத்திலும் உதவ தயாராகவே இருக்கிறார்கள்.  அட்ரஸ் புரூப் மட்டும் காட்டினால் உடனே நீங்களும் நூலகத்தில் உறுப்பினர். நாகர்கோயில் நூலகத்தில்   உறுப்பினராக “பச்சை மை”யினை தேடி ஓடியதையும் , நூலகர்களின் பேரன்பும், பெருங்கருணையையும், மனம் இயல்பாக நினைவுகூற, எனக்குள்ளேயே  நகைத்துக்கொள்கிறேன்.

நான் பார்த்த வரையில் இங்கு இந்தியர்கள் பெரும்பாலும்  தேர்வுக்காக தங்களை தயார் செய்வதற்காகவும், இலவச இணையவசதிக்காகவும் மட்டுமே  இந்நூலகத்தை பயன் படுத்துகிறார்கள் .  இதுவரை( 3 மாதத்தில்) இலக்கிய புத்தகத்தைப் படிக்கும் ஓர் இந்தியரை கூட பார்க்கவில்லை. பார்ப்பேன் என்று நம்புகிறேன்.   இந்திய எழுத்தாளர்கள் என்று இங்கு வைத்திருக்கும் புத்தகங்கள் சேத்தன் பகத் வகை . எழுத்தாளர் அ முத்துலிங்கம் கூறிய “அகில் சர்மா ” புத்தகங்கள் இருக்கின்றன. மத்தபடி இந்தியா வின் மிக சிறந்த புத்தகங்கள் என்று நாம் சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு புத்தகமும் இல்லை. ஆங்கில புத்தகங்கள் போக இங்கு மற்ற மொழி புத்தகங்களுக்காக சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலும் சீன புத்தகங்கள்(200 புத்தகங்களுக்கு மேல்), ஸ்பானிஷ் புத்தகங்கள்(80 புத்தகங்களுக்கு மேல் ) இருக்கின்றன. இந்தியா மொழி புத்தங்கங்கள் மொத்தம் ஒரு 30 முதல் 40 புத்தகங்கள் இருக்கும் . அதிலும் தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. இவ்வளவுக்கும் இங்கு நிறைய தமிழர்கள் வசிக்கிறார்கள். ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லாதது சற்று வருத்தம் கொள்ளச்செய்தது. நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின்  நிலை இன்னும் கொடுமையாக உள்ளது.

நூலகரிடம் தமிழ் புத்தகங்கள் அந்நூலகத்தில் வைப்பதைப்  பற்றி விசாரித்தேன் . நான் சில புத்தகளைக் கொண்டு வைக்கலாமா என்ற எண்ணத்தில் தான் .  நூலகருக்கு தமிழ் மொழியை பற்றி தெரிந்திருக்கிறது. ஏதேனும் சிறந்த பதிப்பாளர்கள் இருந்தால் தமிழ் புத்தகங்களை வாங்க தயாராய் இருப்பதாக கூறினார். நமது விருப்பத்தின் பேரில் அங்கு புத்தகங்களை இங்கு வைக்க முடியாது என்றும், நூலகத்திற்கு தேவையான  ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றிய தகவல்களை பதிப்பாளர்களே அளிக்க முடியும் என்றும் கூறினார்..

மேலும்  காகிதத்தின் தரமும் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அங்கு வாங்க பல இந்தியா புத்தகங்கள் சரியான தரத்தில் இல்லாததால் சில வருடங்களிலேயே நீக்க வேண்டிவந்ததாகக் கூறினார்.   இப்போதைக்கு எந்த பதிப்பகங்களை அணுகினால்  புத்தகத்தை  தேவையான தகவல்களோடு அளிப்பார்கள் என்று இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். தங்களது  புத்தகங்களை இங்குள்ள  நூலகங்களில் வைக்க விரும்பினால் யாரை அணுக வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறேன் .

இப்படிக்கு,

பிரவின் சி

***

அன்புள்ள பிரவீன்,

நான் பலவகையான குடியேற்றக்காரர்களைச் சந்தித்திருக்கிறேன். தோட்டப்பகுதிகளில் பிழைப்புக்காகச் சென்றுகுடியேறுபவர்கள், மலைப்பகுதிகளில் நிலம்பெற்றுச் செல்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் பண்பாட்டுநிலை ஒன்றே. பிழைப்புநோக்கு, அதுசார்ந்த பக்தி, தின்பதும் குடிப்பதுமான கேளிக்கை. வேறு எதிலும் ஈடுபாடே இருப்பதில்லை. மூர்க்கமான உழைப்பு, சிறுகச்சிறுக சேமிப்பது, சென்ற இடத்தில் காலூன்றி எழுந்துவிடவேண்டும் என்னும் கனவு.

ஆகவே அவர்கள் தங்கள் பிறந்த இடத்தின் கலாச்சாரக்கூறுகளை முழுமையாகவே கைவிட்டுவிடுவார்கள். சென்ற இடத்தின் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ளமாட்டார்கள். வெறும் கைகால்களின் திரளாகவே அங்கே இருப்பார்கள். ஒரு சில தலைமுறைகளுக்குப்பின்னரே சற்றேனும் கலையிலக்கிய ஆர்வம் எழக்கூடும். பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளின் தமிழர்கள் உதாரணம்.சாஸ்திரி-பண்டாரநாயகே உடன்படிக்கையின்படி தமிழக மலைகளில் குடியேறிய இலங்கை மலையக மக்கள் உதாரணம்.

அமெரிக்கவாழ் தமிழ்மக்களும் இதே நிலையில் இருப்பவர்களே. அவர்கள் நல்ல கல்விநிலையங்களில் படித்து டாலரில் சம்பளம்பெறுவதோ நல்ல கார்களையும் பங்களாக்களையும் வைத்திருப்பதோ ஆங்கிலச்சூழலோ அவர்களை பண்பாட்டுத்தரத்தில் எவ்வகையிலும் மேம்படுத்துவதில்லை. தங்கிவாழ்வதற்கான போராட்டம் அன்றி ஏதுமறியாதவர்கள். தெலுங்கர்களும் பட்டேல்களும் மலையாளிகளும் கூட அங்கே அப்படித்தான் இருக்கிறார்கள்.

என்னிடம் அயல்நாட்டு எழுத்தாளர் சிலர் லட்சக்கணக்கான தமிழர்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் எங்கும் இருக்கிறார்கள், தமிழிலக்கியத்தின் சிறு துளிகூட உலகளவில் ஏன் அறிமுகமாகாமல் இருக்கிறது என கேட்பதுண்டு. கிடைத்த துண்டுகளிலிருந்து தமிழிலக்கியத்தின் நுட்பத்தையும் தனித்தன்மையையும் உணர்ந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது. அம்மக்கள் ஒருவகை குடியேற்றக்குடிகள். அவர்களின் உள்ளத்தரம் பழங்குடிகளுக்குச் சமானமானது.

இச்சூழலில் ஒரு நூலகத்தில் தமிழ்நூல்கள் இருப்பதனால் என்ன ஆகப்போகிறதென எனக்குப்புரியவில்லை. உங்களுக்கு அவை அங்கிருப்பது ஒரு கௌரவம் என தோன்றினால் முயலலாம்.  ஆனால் அமெரிக்க நூலகங்கள் நூல்களை எவரும் எடுத்துப்படிக்கவில்லை என்றால், நூல்கள்சற்று பழைமையாக ஆனால் வைத்திருப்பதில்லை. ஆகவே அம்முயற்சி வீணாகவே முடியும் என நினைக்கிறேன்

உங்கள் ஆர்வத்துக்காக வேண்டுமென்றால் தமிழகத்தின் பதிப்பகங்களைத் தொடர்புகொண்டு கேட்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரை“பனைமரச் சாலை – புத்தகம் முன்பதிவு திட்டம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76