வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72

எட்டு : குருதிவிதை – 3

fire-iconஉபப்பிலாவ்யத்தின் முகமுற்றத்தில் ஒருங்கி நின்றிருந்த பயணநிரையின் முன்னால் முகப்புத்தேரின் அருகே நின்றிருந்த சதானீகனை அணுகிய நிர்மித்ரன் குரல்தாழ்த்தி “கிளம்புவதற்கான நற்பொழுது முடியப்போகிறது, மூத்தவரே. சிற்றமைச்சர் தருணர் இதை தங்களிடம் கூறும்படி சொன்னார்” என்றான். சதானீகன் வெறுமனே தலையை மட்டும் அசைத்தான். “இத்தனை பொழுது அங்கு என்ன செய்கிறார்கள்?” என்று  நிர்மித்ரன் சொல்ல சதானீகன் அது தன்னுள் ஓடிய சொல்தான் என உணர்ந்து எரிச்சல் கொண்டு, அதை வென்றான்.

“இது முற்றுறுதியுடன் கிளம்பும் பயணம் அல்ல, இளையோனே. முதலில் இப்பயணம் தேவையா என்பதே மூத்த தந்தைக்கு ஐயமாக உள்ளது. நேற்று அவை நீங்கி தன்னறைக்குச் சென்றதுமே அவர் குழப்பம்கொள்ளத் தொடங்கிவிட்டார். அஸ்தினபுரியின் குடிப்பேரவையில் மதுராவின் அரசர் முறையாக அறிவித்த பின்னர் நாம் படைத்துணை கோரி தூது செல்வதில் ஓர் இழிவு உள்ளது. மட்டுமல்ல, நமது ஆற்றல் குறைவை அது அறிவிப்பதும் கூட. யாதவர்களை சென்று பணிந்து உதவி கோருகிறோம் என்ற செய்தியையே நம்மைச் சார்ந்திருக்கும் அரசர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் நமக்கு வேறு வழியுமில்லை” என்றான் சதானீகன்.

உள்ளிருந்து நிமித்திகனின் சங்கொலி கேட்டது. சதானீகன் நிர்மித்ரனிடம் “தேர்நிரை ஒருங்கட்டும்” என்றான். நிர்மித்ரன் தலைவணங்கி விலகிச்சென்று இரு கைகளையும் ஆட்ட அவனை நோக்கி நின்றிருந்த காவலர்தலைவர்கள் மூவர் தங்கள் கைகளை ஆட்டி ஆணையிட்டனர். தேர்ப்பீடங்களில் தேரோட்டிகள் ஏறி அமர்ந்தனர். கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் முன்னும் பின்னும் காலெடுத்து வைத்து அசைய தேர்கள் குலுங்கி குடத்தில் அச்சு மோதும் ஒலியும் மணியோசைகளும் எழுந்தன. உள்ளிருந்து நிமித்திகன் வெளிவந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வருகை” என அறிவித்தான். முற்றத்தில் நின்றவர்கள் முறைமைப்படி நிமிர்ந்து நேர்நோக்கி நின்றனர்.

நிமித்திகன் விலகி நிற்க அர்ஜுனனின் தோளில் கைவைத்து தலைகுனிந்து யுதிஷ்டிரர் நடந்து வந்தார். அவருடைய குழல்கற்றைகள் பிரிந்து நெற்றியிலும் தோளிலுமாக பரவியிருந்தன. நீண்ட தாடி வலப்பக்கம் இருந்து வீசிய காற்றில் மெல்ல உலைந்து எழுந்து பறந்தது. அர்ஜுனன் தலைகுனிந்து விழிகள் தாழ்த்தி அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு வந்தான். அவர்களுக்குப் பின்னால் நகுல சகதேவர்கள் வர தொடர்ந்து முழு வாயிலையும் தன்னுருவத்தால் மூடியபடி பீமன் வெளிவந்தான். சதானீகன் முன்னால் சென்று தலைவணங்கி “புரவிகளும் தேர்களும் நெடுநேரமாக சித்தமாக உள்ளன, அரசே” என்றான்.

யுதிஷ்டிரர் அவனை நோக்கின்றி விழிதொட்டு தலையசைத்துவிட்டு அர்ஜுனனிடம் “சொன்னவற்றை நினைவில் கொள். எங்கோ ஒரு புள்ளியில் இணைத்தோழன் என்ற நிலையிலிருந்து இறங்கிவிட்டாய். நிகர்நின்று பேசுவதும் கோருவதும் அடியவன் என்ற நிலையில் ஆகாமல் போகலாம். நமக்கு இன்று தேவை உன் தோளுடன் நின்று போரிடும் ஒருவர்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “எண்ணி எண்ணி தயங்க ஏராளமாக உள்ளன என்பதை நானும் அறிவேன். அவன் நம்முடன் வந்தால் தன் குடியினரையே கொன்று குவிக்க படைக்கலன் ஏந்தவேண்டியிருக்கும். நீ அவனிடம் கோரப்போவது அதுதான். ஆயினும் இந்த மாபெரும் களமாடலில் எவருக்கும் வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தெரிவின் உச்சப்புள்ளியில்தான் நின்றிருக்கிறார்கள்” என்றபின் “நமக்கு மட்டுமல்ல, அவனுக்கும் இது குருதிப்போர்” என்றார்.

பீமன் “பலமுறை இதையெல்லாம் கூறிவிட்டீர்கள், மூத்தவரே. திரும்பத் திரும்ப அதை பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. கிளம்பும் பொழுது அணைந்துவிட்டது அவர்களுக்கு. விடை கொடுங்கள்” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், சென்று வருக!” என்றார். அர்ஜுனன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்க தலையில் கைவைத்து “வெற்றியுடன் மீள்க! ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்வனவற்றை எனக்கு செய்தியாக அனுப்புக! இங்கு ஒவ்வொரு நாழிகையுமென நான் காத்திருப்பேன்” என்றார். அர்ஜுனன் பீமனிடம் “சென்று வருகிறேன், மூத்தவரே” என்றான். பீமன் கைநீட்டி மெல்ல அவன் தோளை அடித்து புன்னகைத்தான்.

இரு கைகளாலும் நகுல சகதேவன் தோள்களை தொட்டபின் அர்ஜுனன் நடந்து வந்து செல்கையிலேயே சதானீகனிடம் தலையசைத்துவிட்டு தேருக்குள் ஏறி அமர்ந்தான். சதானீகன் சென்று அரசரையும் பீமனையும் தந்தையரையும் வணங்கி வாழ்த்து பெற்றுச் சென்று தனது தேரில் ஏறிக்கொண்டான். நிர்மித்ரன் சற்று அப்பால் சிற்றமைச்சர்களுக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். சதானீகன் தேரில் ஏறுவதைக் கண்ட பின்னர்தான் தன்னிலை உணர்ந்து அங்கிருந்து ஓடி வந்து மூச்சிரைக்க யுதிஷ்டிரரையும் பீமனையும் நகுலசகதேவர்களையும் வணங்கி வாழ்த்து பெற்று சதானீகனுடன் ஏறிக்கொண்டான். எவர் மேலாவது எரிச்சல் கொள்ளவேண்டியிருந்தது சதானீகனுக்கு. “இறுதிக்கணம் வரை இடவேண்டிய ஆணைகள் இங்குள்ளனவா?” என்று கேட்டான். “நாம் நெடுந்தொலைவு போகிறோம். இது அரசமுறைத் தூது. ஆகவே பரிசில்களும் பொருட்களும் கொண்டு செல்கிறோம்” என்றான் நிர்மித்ரன். “செல்லும் பாதையில் உள்ள அரசர்கள் அனைவருக்கும் நம் பயண வழியையும் நாட்களையும் முன்னரே அறிவித்துவிட்டோம். இது உடனடியாக எடுத்த முடிவு என்பதனால் அங்கிருந்து ஒப்புதல் ஓலைகள் முழுமையாக இன்னும் வரவில்லை.” சதானீகன் எரிச்சல் மேலும் மிக “மாளவத்திலிருந்து மட்டும் நமக்கு ஓலை வந்தால் போதும். பிற ஓலைகளை செல்லும் வழியிலேயே பெற்றுக்கொள்ளலாம்” என்றான்.

அதை உணராமல் “ஆம். மாளவத்திலிருந்து ஓலை வந்துவிட்டது” என்று சொல்லி நிர்மித்ரன் கால்களை நீட்டி உடலை தளர்த்தியபின் “ஒரு சிறு பணி. ஆனால் எத்தனை ஓலைகள்! எத்தனை சொற்கள்! அரசுசூழ்தல் என்பதே பொருளற்ற சொற்களை அளாவிக்கொண்டிருத்தல்தான் போலும்” என்றான். அவன் மேற்கொள்ளும் முதற்பயணம் என்பதனால் மிகையூக்கம் கொண்டு தேவையின்றியே செயலாற்றி விரைவிலேயே களைப்படைந்துவிட்டிருந்தான். திரும்பி அவனைப் பார்த்தபின் சதானீகன் உள்ளத்தை இறுக்கமவிழ்த்து எளிதாக்கிக்கொண்டான்.

தேர்நிரைக்கு முகப்பில் தலைவீரன் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியுடன் கொம்பு முழக்கியபடி கிளம்ப அவனைத் தொடர்ந்து கவசமணிந்த சிறிய அணிப்படை கிளம்பியது. அவர்களின் தலைக்கு மேல் எழுந்து நின்ற வேல்முனைகள்  முன்புலரியின் அரையிருளில் நீரலைகள்போல் ஒளிவிட்டன. வில்லவர் பன்னிருவர் இரு நிரைகளாக தொடர்ந்து சென்றனர். முதல் நிரை அரண்மனை முற்றத்திலிருந்து மையச்சாலைக்கு ஏறியதும் தேர்கள் அசைவுகொண்டன. அர்ஜுனனின் தேரைத்தொடர்ந்து அவர்களின் தேர் சென்றது. அதைத் தொடர்ந்து சிற்றமைச்சர் தருணரும் அவருடைய அலுவல்துணைவரும் ஏறிய தேர்கள் வந்தன.

நிரையின் பின்பக்கம் வரிசைப்பொருட்களை ஏந்திய மூன்று பொதிவண்டிகள் அத்திரிகளால் இழுக்கப்பட்டு மணியோசையுடன் தொடர்ந்தன. அதற்குப்பின்னர் வழிச்செலவுக்கான உணவுப்பொருட்களை ஏந்திய வண்டிகளும் யானைத்தோல் கூடாரங்கள் சுருட்டி அடுக்கி வைக்கப்பட்ட மூன்று வண்டிகளும் அவற்றுக்குப் பின்னால் ஏவலர்களும் வந்தனர். இறுதியாக மீண்டும் நாணிழுத்த விற்களுடன் காவலர் படை. உபப்பிலாவ்யத்தின் தெருக்களினூடாக அந்தச் சிறிய படைநிரை சென்றபோது மாளிகை முகப்புகளிலும் தெருமுனைகளிலும் அங்காடி முற்றங்களிலும் சிறு குழுக்களாக கூடிய மக்கள் சொற்கள் இன்றி வெறும் விழிகளுடன் அவர்களை நோக்கினர். படைவீரர்களின் காவல் ஒலிகளன்றி குடிகளின் வாழ்த்தொலிகள் ஏதும் எழவில்லை.

அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை முந்தைய நாளே நகரம் அறிந்திருந்தது. அவர்களின் முகங்களை மாறி மாறி நோக்கிவந்த சதானீகன் உள்ளில் எண்ணமென எழுந்ததை நிர்மித்ரன் கூறினான் “அவர்கள் எவருக்கும் நமது தூது வெல்லும் எனும் எண்ணமில்லை போலும்.” தன் எண்ணம் அவனில் சொல்லாவதை முன்பும் உணர்ந்திருந்தமையால் சதானீகன் சிறு சலிப்புடன் “நம்முடைய நம்பிக்கையின்மை அவர்களுக்கு தொற்றுகிறது. நம்பிக்கையின்மையும் அச்சமும் எளிதில் பரவும் தன்மை கொண்டவை” என்றான்.

அவர்களின் படைநிரை உபப்பிலாவ்யத்தின் சிறிய வாயிலினூடாக வெளியேறியபோது கோட்டைக்கு மேல் பறந்த அர்ஜுனனின் குரங்குக்கொடி முறைப்படி கொம்புகள் முழங்க மெல்ல கீழிறக்கப்பட்டது. தேரிலிருந்து திரும்பி பின்சாளரம் வழியாக அதை நோக்கிய நிர்மித்ரன் “கோட்டை விடைகொடுக்கிறது” என்றான். சதானீகன் பேசாமல் பக்கவாட்டில் கடந்துசென்ற மரங்களை பார்த்துக்கொண்டிருந்தான். மேலும் நன்றாக திரும்பி கோட்டையைப் பார்த்த நிர்மித்ரன் “பாம்புக் குஞ்சொன்று முட்டையுடைத்து வெளிவருகிறது போலுள்ளது, மூத்தவரே” என்றான்.

கட்டுப்படுத்திய எரிச்சல் மேலெழ அவனை நோக்கி திரும்பாமலேயே சதானீகன் “இளமையில் சூதர்களைப்போல பேசுவது ஒரு பெருமை. ஓர் ஒப்புமை நாவிலமையுமென்றால் உயரிய எண்ணமொன்றை அடைந்ததுபோல் தன்மயக்கம். உள்ளஎழுச்சியை சீரிய எண்ணம் என்று கொள்வதின் பொய்மை கலையாமல் இளமையை கடக்கமுடியாது” என்றான். நிர்மித்ரன் திரும்பி “ஓர் ஒப்புமை எந்நிலையிலும் பொருட்படுத்தத் தக்கதே. ஏனெனில் அது தன் வல்லமையால் தனித்து நிற்கும் ஒரு கருத்து. புதிய ஒப்புமை புதிய கருத்தேயாகும். நூல் கற்றவர், எண்ணம் சூழ்பவர் ஒருபோதும் ஒப்புமைகளை புறந்தள்ளுவதில்லை” என்றான்.

அவனும் எரிச்சலை பெற்றுக்கொண்டதை உணர்ந்தபோது சதானீகன் தணிந்து இயல்பானான். ஆகவே அந்தக் கருத்தில் அவன் உள்ளம் சென்றது. அதை மிக இளையவனாகிய அவன் சொன்னது வியப்பும் அளித்தது. “ஆம், ஒப்புமை புறஉலகையும் அகஉலகையும் இணைக்கிறது. புறத்தை அகத்தாலும் அகத்தை புறத்தாலும் அறிவதற்கான வழி அது. நேர்க்காட்சி, உய்த்தல், முன்கூற்று என்னும் மூவகை அறிவடிப்படைகளில் சிக்காது எஞ்சுவதை அறிவதற்கானது அது என்று நுண்சிறப்பு தத்துவத்தோர் கூறுவார்கள்” என்றான். “ஆனால் மிகவும் ஏமாற்றக்கூடியது அது. நமது உள்ளம் நமக்கு எதிராக நாற்களத்தில் அமர்ந்து கருக்கள் பரப்பி விளையாடுவது ஒப்புமையின் வழியாகத்தான்.”

நிர்மித்ரனும் அவ்வெண்ணத்தின் புதுமையால் எரிச்சலைக் கடந்து இயல்பானான். “ஏன்?” என்றான். “ஏனெனில் மிக அரிதாகவே புதிய ஒப்புமைகள் மானுட உள்ளத்தில் எழுகின்றன. நாம் அடையும் பெரும்பாலான ஒப்புமைகள் முன்னரே இருந்த முதன்மையான ஓர் ஒப்புமையின் அச்சுவடிவங்களாகவே நம்மில் தோன்றுகின்றன” என்றான் சதானீகன். “முட்டை உடைத்து எழும் அரவுக்குழவி என்றாய். சரி, ஏன் சரிந்த கலத்திலிருந்து வழியும் நீரென்று சொல்லலாம் அல்லவா?” நிர்மித்ரன் “ஆம்” என்று சொன்னான். “புற உலகை அகம் சந்திக்கும்போது முற்றறியாத ஒன்றை அங்கு எதிர்கொள்ளுமென்றால் உள்ளூர ஒரு திடுக்கிடல் நிகழவேண்டும். ஆழத்து இருளொன்று அதிர்வொளி கொள்ளவேண்டும். சொல்லின்மையின் தருணம் அது.”

“அச்சொல்லின்மை அளிக்கும் அச்சத்தை வெல்லும் பொருட்டு தவித்தலையும் சித்தம் மூழ்குபவன் கண்டடைந்த கொடியென ஓர் ஒப்புமையை பற்றிக்கொள்ளுமென்றால் மட்டுமே அது புதியது. அதற்கு மட்டுமே கருத்து என்னும் தகுதி உண்டு. அது அழியாது, ஒரு நாவிலிருந்து எழுந்து மொழியில் விழுந்து என்றும் அங்கிருக்கும். ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக மானுடம்  ஒப்புமைகளைத்தான் பொறுக்கி சேர்த்துக்கொண்டிருக்கிறது என்றால் அது பிழையல்ல. நூல்களும் கலைகளும் வெறும் ஒப்புமைகளின் திரள்களே என்றாலும் பொருத்தமே” என்று சதானீகன் தொடர்ந்தான்.

“ஆனால் ஒருபோதும் ஒப்புமைகளை தானே உருவாக்கும் கைவிடுபொறியொன்று நம் உள்ளத்தில் உருவாகிவிடக்கூடாது. பின்னர் நம்மை மீறி அதுவே ஒப்புமைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கும். அதில் ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஓர் ஒப்புமை சிறப்பாக இருக்கவும் கூடும். ஏனென்றால் சித்தம் சென்றுமுட்டும் ஆழத்துப் பாறைகளை அலைபுரளும் மேற்பரப்பில் நாம் அறியவே முடியாது. எண்ணம்சூழும் அறிஞன் தவளை முட்டைகளை அல்ல, களிற்றுக் குழவியையே ஈன வேண்டும். நெடுங்கரு, பிறிதொன்றிலாத பிறப்பு, நின்று மெல்ல வளரும் உறுதி, அடிமரக் காலூன்றி இங்கு நிலமளக்கும் ஆற்றல், மலைப்பாறையென நின்றிருக்கும் பீடு, நீடுவாழும் பெருநிலை” என்றான் சதானீகன். நிர்மித்ரன் சிலகணங்களுக்குப்பின் “உண்மைதான், மூத்தவரே” என்றான்.

இருபுறமும் சென்ற காட்டை பார்த்தபடி நெடுநேரம் இருவரும் சொல்லற்று அமர்ந்திருந்தனர். பின்னர் நிர்மித்ரன் “ஆனால் நாம் கற்பதனைத்தும் நம்முள் அலையடித்துக்கொண்டே இருக்கின்றன அல்லவா? இவற்றை அள்ளிக்குவித்து கலைத்து மீண்டும் இணைத்து சலிக்க சலிக்க விளையாடிக்கொண்டேதானே இருக்கிறோம்?” என்றான். “அது ஒரு பருவம், இளையோனே. எங்கோ ஒரு கட்டத்தில் கற்றவற்றின் மீது ஆர்வம் குறையத்தொடங்குகிறது. நூல்களைக் குறிப்பிடுவதில் சலிப்பு தோன்றுகிறது. அங்குதான் உண்மையான எண்ணம்சூழ்தல் எழுகிறது” என்றான் சதானீகன்.

“நேற்று வரையிலான பேரறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தையும் அவ்வாறு புறந்தள்ளி நாம் நம்மிலிருந்து எழமுடியுமா என்ன?” என்று நிர்மித்ரன் கேட்டான். “அது வீணனின் ஆணவம். ஆனால் அது நிகழாமல் நமக்கென்று இருக்கும் அறிதல் நிகழ்வதில்லை. நாம் இந்த உடல் கொண்டிருப்பதனாலேயே, இந்த கால இடத்தில் உளம்திகழ்வதனாலேயே, பிறிதொன்றிலாத ஒன்றை அறியவும் சொல்லவும் வாய்ப்புள்ளவர்களாகிறோம். தன் சொந்த வாழ்வறிதலைக்கொண்டு அதுவரை கற்றவற்றை பொருள்நிறையுடன் ஒருவன் மறுதலிப்பானேயானால் அங்கிருந்தே அவன் தொடங்குகிறான்.”

நிர்மித்ரன் சற்று அயர்ந்துவிட்டான் என்பது அவனுடைய திகைத்த விழிகளிலிருந்து தெரிந்தது. “ஆனால் கிளையிலிருந்து எழும் பறவையைப்போல அவன் மீண்டும் அங்கு வந்துகொண்டுதான் இருப்பான். அங்குதான் தன் கூட்டை அவன் கட்டுவான். ஆயினும் வானம் எப்போதும் அவனை இழுத்தபடி இருக்கும்” என்றான் சதானீகன். “அறிவுச்செயல்பாடு என்பது வானும் கிளையுமென நம்மை வீசிப் பந்தாடும் பிறிதொன்றின் களியாட்டு.” அந்த எண்ணங்களை அதற்குமுன் தான் அடைந்ததே இல்லை என அவன் உணர்ந்தான். சொல்லப்பட்டதுமே பருவடிவுகொண்டு முன்னெழுந்து நின்றிருந்தன. மீண்டும் அதே வல்லமையுடன் எழும் சொற்களால் மட்டுமே மறுக்கப்படமுடியும் என்பதுபோல.

நிர்மித்ரன் பெருமூச்சுவிட்டு “மெய்தான், மூத்தவரே. அதை என்னால் இப்போதும் வகுத்துக்கொள்ள முடியவில்லை. நான் கற்ற அனைத்துக்கும் முன் எளியவனாக நின்றிருக்கிறேன். கற்றவற்றின் மீதான வழிபாட்டுணர்வால்தான் பெருமிதம் கொண்டிருக்கிறேன். கற்றவன் என்றேதான் பேசவும் எண்ணவும் பழகியிருக்கிறேன். கடந்து உதறி திரும்பி நோக்கினேன் என்றால் என்னில் என்ன எஞ்சுமென்று இப்போது தெரியவில்லை. ஆனால் ஒருதுளியேனும் எஞ்சுமென்று என் உள்ளுணர்வு சொல்கிறது” என்றான். சதானீகன் “அந்தத் துளி முளைக்கட்டும்” என்றான்.

நிர்மித்ரன் “மாளவத்தின் அரசர் மூத்த தந்தை துரியோதனருக்கு அணுக்கமானவர் என்கிறார்கள். விராடத்துடன் அவருக்கு நெடுங்காலப் பூசல் உள்ளது. நமது தூதுப்பயணத்தை அவருடைய ஒற்றர்கள் கூர்ந்து நோக்குவார்கள். நாம் இந்நாட்டின் எல்லை கடப்பதற்குள் அஸ்தினபுரிக்கு செய்தி சென்றுவிடும்” என்றான். அவன் விலக விழைகிறான் என உணர்ந்த சதானீகன் “நேற்று மூத்தவர் அவையில் முடிவெடுக்கையிலேயே செய்தி சென்றிருக்கும்” என்றான். “எப்படி?” என திகைப்புடன் நிர்மித்ரன் கேட்டான். “அதை மட்டும் எத்தனை நுணுகி அறிந்தாலும் அரசர்களால் உணரமுடிவதில்லை. அரசுசூழ்தலில் எப்படி மேலும் மேலுமென நாம் கூர்மை கொண்டபடி செல்கிறோமோ அதேபோல ஒற்றர்கள் தங்கள் தொழிலில் கூர்மை கொண்டபடி செல்கிறார்க்ள்” என்றான் சதானீகன்.

“அப்படியென்றால் பாரதவர்ஷத்தில் மந்தணமென ஏதுமில்லையா?” என்றான் நிர்மித்ரன். “இருக்கலாம். கணிகரிடம், இளைய யாதவரிடம், சகுனியிடம், மூத்த பேரரசி குந்தியிடம், நம் அன்னையிடம். அவர்கள் ஒருபோதும் சொல்லென எடுக்காதவை அவை. உணர்வென்றுகூட வெளிவராதவை. அவர்கள்கூட முழுதறியாதவை. சொல்லப்பட்டவை அறியவும்படும். ஒருவர் அறிந்தவை பிற அனைவருக்கும் எப்படியேனும் சென்று சேரும். உண்மையில் இத்தனை அரசுசூழ்ச்சிகள் நாற்களக் கணக்குகள் அனைத்திற்கும் அப்பால் இன்று பாரதவர்ஷத்தை இயற்றுவிப்பது வெளிப்படாதமைந்த அவர்களின் உள்ளங்கள்தான்.”

நிர்மித்ரன் “ஆம், மூத்த அன்னையிடமிருக்கும் அந்த ஆழ்ந்த அமைதியை எப்போதும் நான் பார்த்திருக்கிறேன். ஆலயத்தில் அமர்ந்த கரிய கொற்றவைச் சிலைகளில் கூடுவது அது. புலரியில் வெற்றுக் கல்லுருவாகத் தெரிகையில் வெளிப்படும் அந்த அமைதி பொன்னும் மணிகளும் பட்டுமணிந்து, மலர் சூடி, பந்தங்களும் விளக்குகளும் பொலிய, இசையும் குரவையும் சூழ, அமைந்திருக்கும்போதும் துளிகூட கலையாமல் அப்படியே எஞ்சுகிறது” என்றான். “மீண்டும் சூதர் மொழி” என்று சதானீகன் சிரித்தான்.

fire-iconமதுராவுக்கு ஒருநாள் தொலைவு எஞ்சியிருக்கையிலேயே அந்நகரில் இளைய யாதவர் இல்லை என்ற செய்தி அவர்களுக்கு வந்து சேர்ந்தது. அப்போது யமுனையின் கரையில் கோதவனம் என்னும் சிற்றூரில் படகுகள் வருவதற்காகக் காத்து அவர்கள் தங்கியிருந்தனர். ஊருக்கு வெளியே இருந்த பொதுச்சோலையில் ஊர்த்தலைவரால் அவர்களுக்கு தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விராடபுரியில் இருந்து விந்தியமலை மடிப்புகளினூடாக சிற்றோடைகளையும் ஆறுகளையும் கடந்துசென்ற மாளவத்தின் வணிகச்சாலை வழியாக சேதிநாட்டுக்குள் நுழைந்து கடந்து மச்சநாட்டுக்குள் புகுந்து யமுனைக்கரையை அடைய முப்பத்தெட்டு நாட்களாயின. வழியிலெங்கும் குடிகள் அவர்களுடன் உரையாடுவது தடைசெய்யப்பட்டிருந்தது. அந்தந்த நாடுகளின் காவல்படைகள் அவர்களை காத்து எல்லை கடத்தின.

யானைத்தோல் கூடாரங்கள் நீர்ப்பரப்பிலிருந்து எழுந்துவந்த காற்றில் மூச்சுவிடும் எருமைகள்போல் எழுந்தமைந்துகொண்டிருந்தன. கூடாரக் கழிகளின்மேல் கட்டப்பட்டிருந்த கொடிகள் சிறகோசையுடன் பறந்துகொண்டிருந்தன. யமுனைக்கரையின் நாணல்பரப்புகளில் புரவிகளை நீராட்டிக் கொண்டுவந்து இலைகளைக்கொண்டு உடல் உருவிக்கொண்டிருந்தனர் சூதர்கள். சற்று அப்பால் அடுமனையாளர்கள் பெருங்கலம் ஏற்றி உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அத்தனை மரத்தடிகளிலும் காவல் வீரர்கள் அமர்ந்தும் படுத்தும் மெல்லிய குரலில் உரையாடிக்கொண்டிருந்தனர். உயர்ந்த மரங்களின் மீது முழவுடனும் கொம்புடனும் ஏறி அமர்ந்திருந்த காவலர்கள் நெடுந்தொலைவை காவல்நோக்கினர்.

சதானீகன் பறவைச்செய்தியை இருமுறை வாசித்தபின் புறாவை திரும்ப ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு ஓலைச்சுருளுடன் சென்று தன் கூடாரத்திற்கு முன்னால் சால மரத்தடியில் இலைத் தழைப்பின் மீது படுத்து கண்களை மூடியிருந்த அர்ஜுனனை அணுகினான். தொலைவிலேயே அவன் காலடிகளைக்கேட்டு புரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் விழி திறக்காமலேயே “கூறுக!” என்றான். “இளைய யாதவர் மதுராவில் இல்லை. இன்னமும் அங்கே சென்று சேரவில்லை” என்று சதானீகன் சொன்னான். “ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு பறவைச்செய்தி அமைப்பு அர்ஜுனனுக்கு மட்டுமாக இருப்பதை முன்னரே சதானீகன் உணர்ந்திருந்தான்.

“அஸ்தினபுரியிலிருந்து மூத்த தந்தை துரியோதனர் நாளை காலை கிளம்புகிறார். அவருக்கு மதுராவில் இளைய யாதவர் இல்லை என்று தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. நாம் மதுராவுக்குப் போவதனால்தான் அவரும் மதுராவுக்கு வருகிறார் என எண்ணுகிறேன்” என்றான் சதானீகன். “இளைய யாதவர் எங்கு சென்றார் என்பது எவருக்கும் தெரியவில்லை. சாத்யகியுடனும் அறுபது படைவீரர்களுடனும் தனியாக துவாரகையிலிருந்து படகு வழியாக வந்திருக்கிறார். அதே படகில் திரும்பிச் சென்று வாரணவதம் அருகே கரையிறங்கியிருக்கிறார். படகு சிந்து வழியாக துவாரகைக்கு திரும்பியிருக்கிறது. அவரும் சாத்யகியும் மட்டும் காட்டுக்குள் மறைந்துவிட்டார்கள்.”

அர்ஜுனன் “பார்ப்போம்” என்றான். “தந்தையே, அஸ்தினபுரியின் அரசரின் திட்டம் என்னவாக இருக்கும்?” என்றான் சதானீகன். அர்ஜுனன் “நாம் பலராமரிடம் பேசும்போது அவரும் அங்கிருக்க எண்ணுகிறார்” என்றான். “நம்முடனா?” என்றான் சதானீகன். “இல்லை, நாம் எத்தனை மந்தணமாக அங்கு சொல்லாடினாலும் அந்நகரில் அவரும் இருக்கிறார் என்பதே மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்” என்றான் அர்ஜுனன். சதானீகன் “பலராமரிடம் நாம் இனி என்ன பேசுவதற்குள்ளது?” என்றான். “எப்போதும் எங்கும் ஒரு சொல் பேசுமளவுக்கு இடைவெளி இருக்குமென்பது அரசுசூழ்தல் நெறிகளில் ஒன்று, மைந்தா” என்ற அர்ஜுனன் கையூன்றி எழுந்து அமர்ந்து புன்னகைத்தான்.

“அங்கு அவர் மட்டுமல்ல, யாதவ மூத்தவராகிய வசுதேவர் இருக்கிறார். அவருடைய இரு அரசிகள் அங்குதான் இருக்கிறார்கள். ஏன், பலராமரின் அரசி ரேவதி அங்குதான் இருக்கிறார்” என்றான் அர்ஜுன்ன். சதானீகன் சினத்துடன் “இவையனைத்துக்கும் குக்குட குலத்து அரசிதான் தொடக்கம் என்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “ஆம், துவாரகையில் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இப்போது தன் உருவை விரித்துக்காட்ட விரும்பலாம்” என்றான். “ஆனால் நாம் எவரும் அவரை நேரில் சந்திக்கவில்லை. எப்போதுமே நம்முடைய உளஉருவகங்கள் நேர்சந்திப்பில் திகைப்பூட்டும்படி பிறிதொன்றாக இருப்பதைத்தான் உணர்கிறோம்.”

“எப்படியாயினும் குக்குட குலத்து அரசியின் உள்ளத்தை மாற்றும் வாய்ப்பு நமக்கு அமையப்போவதில்லை” என்று சதானீகன் சொன்னான். “இப்போதே அதை நான் முடிவு செய்யவில்லை. எப்போதும் ஒரு தருணத்துக்கு முன்னால் வெவ்வேறு கோணங்களில் அதை எண்ணிப்பார்க்கும் வழக்கம் எனக்கில்லை. அதனூடாக எதையும் நான் புதிதாக அறிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அறிய முடிவதனைத்தும் மதுராவில்தான் உள்ளன. மதுராவில் நம் கால் சென்று படுவது வரை நம்முடன் இருப்பவை நம்முடைய ஐயங்கள், அச்சங்கள், குழப்பங்கள். அவற்றை எண்ணி எண்ணி பெருக்கிக்கொள்வதில் என்ன பயன்? எது செயல்களமோ அங்கு சென்று இறங்குவதுவரை நாம் எண்ணுவது செயலைப்பற்றி அல்ல, நம்மைப்பற்றித்தான்.”

சதானீகன் தலைவணங்கி “அவ்வாறே ஆகுக, தந்தையே” என்றான். “நாளை காலை மதுராவை நாம் சென்றடைவோம். உச்சிப்பொழுதில் அரசர் வசுதேவர் நமக்கு சந்திப்பு அருளியிருக்கிறார். மாலையில் குடியவை கூடுகிறது. அதில் முறைப்படி நம்முடைய செய்தியை நாம் யாதவ குலத்தலைவர்களுக்கு அறிவிக்கிறோம். மாலை விருந்தில் இரு அரசியரை சந்திக்கமுடியும். அப்போது குக்குட குலத்து அரசியையும் சந்திக்கவேண்டியிருக்கும்.” அர்ஜுனன் “ஆம், நலமே நிகழ்க!” என்றான்.

சதானீகன் “நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், தந்தையே? மதுராவுக்கு இளைய யாதவர் வராமல் ஒழிவாரா?” என்றான். “அதற்கும் வாய்ப்பிருக்கிறது. மதுரா அவருக்கு என்றுமே ஒவ்வாத நகராகவே இருந்துள்ளது. அதை அவர் வென்றாலும்கூட நெடிதுநாள் ஆளவில்லை. அங்குள்ள நினைவுகள் அவரை இடர்ப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். இறந்த குழந்தைகளின் எழாச் சொற்களால் அங்குள்ள இலைகள் அதிர்கின்றன என்று ஒரு சூதர் பாடலுண்டு. ஒருமுறை அதை ஒரு சூதன் பாடி அவர் கேட்கையில் அவர் அணிகள் ஓசையிடக்கேட்டு நான் திரும்பிப்பார்த்தேன். மடியிலிருந்த கையை எடுத்து பீடத்தின் கைப்பிடிமேல் வைத்தார். அச்சிறிய அசைவிலேயே அவர் உள்ளம் நலுங்குவதை நான் உணர்ந்துகொண்டேன்.”

“அவரில் அலைகள் எழுவது மிக அரிது. உறைந்த பெருங்கடல். மிகச் சிறிய அலையென்றாலும் மலைகளை புரட்டிப்போடும் பெருங்காற்றால் மட்டுமே அதை உருவாக்க இயலும்” என்று அர்ஜுனன் சொன்னான். “மைந்தா, காலம் இத்தனை கடந்துவிட்டது. இன்னமும் இளைய யாதவர் மதுராவையும் மக்களையும் முற்றிலும் பொறுத்தருளவில்லை. அந்த மண்ணை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவரால் ஒருபோதும் அது இயலாது.”

சதானீகன் சிலகணங்கள் அவனை நோக்கி நின்றபின் புன்னகைத்து “உங்களால் அவரை எந்த அளவு அணுகமுடியும் என்று எண்ணுகிறீர்கள்?” என்றான். அர்ஜுனன் நகைத்து “நான் என்ன சொல்வேன் என்று நீ எண்ணுகிறாய்?” என்றான். சதானீகன் “அணுகவே இயலாது” என்றான். “அருகிருப்பதும் அணுகமுடியாததுமான ஒன்றே வானம் என்கிறது கவிக்கூற்று.” அர்ஜுனன் கண்களில் புன்னகையுடன் “ஆம், ஆனால் அணுகவேண்டிய தேவையில்லை. பருவுருக்கொண்ட அனைத்தும் வானத்திலேயே அமைந்துள்ளன. வானமின்றி ஒன்றும் இங்கில்லை” என்றான். “அவரை அணுகவேண்டுமென்று நான் தவித்தலைந்த இளமையை இன்று எண்ணும்போது நகைப்பூட்டுகிறது. இன்று அறிகிறேன், நான் அவரை அகன்றதே இல்லை. அகல்வது இயல்வதும் அல்ல.”

சதானீகன் புன்னகையுடன் “இதை என்றேனும் நானும் என் சொல்லென உணரவேண்டும், தந்தையே” என்றான். நிர்மித்ரன் சற்று அப்பால் வந்து நின்றான். “என்ன?” என்று சதானீகன் கேட்டான். “படகுகள் அணுகிவிட்டன. கிளம்பவேண்டிய பொழுதணைகிறது. இப்போது யமுனையில் பாய்கள் விரிக்கப்படுமென்றால் நள்ளிரவுக்குள் மதுராவின் துறைமேடையை அணுகுவோம்” என்றான். “கிளம்புக!” என்றபடி அர்ஜுனன் சுருள்வில் என எழுந்தான். தானும் எழுந்த சதானீகன் அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். அர்ஜுனன் தனக்குப் பின்னால் இருந்த யானைத்தோல் கூடாரத்திற்குள் நுழைய நிர்மித்ரன் “நானும் அதையேதான் எண்ணினேன், மூத்தவரே. சிறுவன் போலிருக்கிறார்” என்றான். சதானீகன் “அவர் விழிகளுக்கு அகவையே இல்லை. முதுமை நுழையும் வாயில்கள் விழிகளே” என்றான்.

“அவர் துயில்வதேயில்லை” என்றான் நிர்மித்ரன். “நான் அதை பலமுறை நோக்கினேன். எப்போதும் விழித்தே இருக்கிறார்…” சதானீகன் “ஆம், அவர் விழிகள் ஒளிகொண்ட முதல் நாளில் காலமில்லாது அமைந்துவிட்டவை. முதுமையன்னை ஜரை தன் தங்கை நித்ரையைத்தான் முதலில் அனுப்புகிறாள். அவள் அவரிடம் அணுகியதேயில்லை” என்றான். நிர்மித்ரன் உள எழுச்சியால் முகம் சிவக்க உதடுகளைக் கடித்தபடி கண்களை திருப்பிக்கொண்டான். அவனுடைய இளைய தோள்கள் எழுந்தமைந்தன. குரல்வளை அசைந்தது. சதானீகன் அவனை நோக்கி புன்னகைத்தபின் முன்னால் நடந்தான்.

யமுனையில் அவர்கள் அமர்த்தியிருந்த படகுகள் ஒன்றின்மேல் ஒன்றென பாய்விரித்து கரைநோக்கி வந்தன. அவற்றின் முகப்பில் நின்றிருந்த அமரக்காரன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊத, கரையிலிருந்து அவர்களின் படைத்தலைவன் மறுகொம்போசை எழுப்பினான். படகுகள் பாய்களை சுருக்கி விரைவழிந்து மெல்ல நீர்கிழித்து வந்து கரை தேர்ந்தன. அவற்றின் அடிக்குவை ஆழ்ந்திருந்தமையால் சேறுபடிந்த கரையை அணுகாமல் மையப்பெருக்கிலேயே நின்று நங்கூரமிட்டன. அங்கிருந்து சிறிய தக்கைப் படகுகள் நீரில் இறக்கப்பட்டன. அவை ஒன்றுக்கு அப்பால் ஒன்று என நீரில் இறக்கப்பட்டு மேலே மூங்கில் கழிகள் பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டன. அக்கழிகளின்மேல் பலகைகள் விரிக்கப்பட்டு பாதை போடப்பட்டது. நீரில் நெளிந்தாடும் நடைபாலம் ஒன்று உருவாகி யமுனையின் கரைச்சேறு வரை வந்தது. கரையில் அறையப்பட்ட இரண்டு தறிகளில் அப்பாலத்தை இழுத்துக் கட்டி நிறுத்தினர். பின்னர் வண்டிகளை அதில் ஏற்றி மெல்ல தள்ளிக்கொண்டு சென்று படகை அடைந்தனர்.

அத்திரிகள் படகில் மெல்ல காலெடுத்து வைத்து தயங்கி மூச்சுவிட்டு பிடரி குலைத்து வண்டிகளை இழுத்து படகுக்கு கொண்டுசென்றன. புரவிகள் நின்ற இடத்திலேயே நடனமென வால்குலைத்து நடந்து பாகன்கள் தட்டி ஊக்க மெல்ல நடந்து தாவி படகுக்குள் சென்றன. கூடாரங்கள் அவிழ்த்துச் சுருட்டப்பட்டு படகுகளில் ஏற்றப்பட்டன. அர்ஜுனன் அரசப்படகில் ஏறிக்கொண்டதும் அமரக்காரன் முகப்பில் ஏறி நின்று கொம்பொலி எழுப்பினான். படகு பிளிறலோசை எழுப்பி பாய்களை ஒன்றன்பின் ஒன்றாக விரிக்கத் தொடங்கியது.

முந்தைய கட்டுரைதோற்ற மயக்கம்
அடுத்த கட்டுரைதமிழ்- கடிதங்கள்