வாழும் தமிழ்
கொஞ்சுதமிழ் குமரி
வணக்கம் சார்
மலையாளம் தமிழ் மொழிகளுக்கிடையேயான வேறுபாடுகளைக்குறித்த இந்தக்கட்டுரையை வழக்கம் போலவே சிரித்துக்கொண்டேவாசித்தேன். அதுவும் அந்தக் கடைசி தொன்மையான கல்வெட்டினைக்குறித்த பத்தி முற்றுப்புள்ளியெ இல்லாமல் சரளமாக சொல்லிக்கோண்டே போனதை ரசித்து பலமுறை வாசித்தேன்.
இதுபோல இவ்விரு மொழிகள் சார்ந்த பல சிரமங்களுக்கு நானும் திருமணமாகி கொங்கு நாட்டிலிருந்து அபுதாபிக்கு சென்றதும் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பதைப்போல தமிழ் ஆட்கள் இல்லை சுற்றிலும் மலையாளிகளே .எனக்கு பேசவும் யாரும் இன்றி அவர்கள் பேசுவதும் புரியாமல் ஒரே கலவரமாக இருந்தது முதல் 6 மாதங்கள்.
’’எந்தா சேச்சி கண்ணடை இட்டிருக்குனு? காழ்ச்சி கொறவுண்டா? , பாங்கு விளிக்குன்ன சப்தம் கேட்டோ?’’ என்றெல்லாம் வேக வேகமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டிருந்தேன் வெயிலடிக்கும் பொழுதுகளில் ’’நல்ல பனி குட்டிக்கு’’ என்பதைக்கேட்டு குழம்பி இருக்கிறேன். பனிபிடிப்பது என்றால் காய்ச்சலென்று தெரிய வெகு நாட்களாகியது
’’இன்னலே’’ என்றால் நான் இன்றைக்கு என்று பலநாட்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் அதற்கு ‘’நேற்று’’ என்று அர்த்தம என்பதே பல மாதங்கள் கழித்துத்தான் தெரியவந்தது.
சமையலும் கற்றுக்கொண்ட காலங்கள் அது என்பதால் புதியதாய் வாங்கிய இட்லிச்சட்டியில் ’’இன்னும் கொறைச்சு வெள்ளம் வைக்கணும்’’ என்று என்னிடம் சொல்லப்பட்டதை நான் இன்னும் குறைவாக என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு மிகக்குறைவாக தண்ணீர் வைத்து பாத்திரம் கரிப்பிடித்த கதையெல்லாம் நடந்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டேன்
காரியமாக தினம் ஏசியானெட்டும் கைரளியுமாகப் பார்த்து பேப்பரும் பேனாவுமாய் களம் இறங்கி 5 வருடங்களில் சரளமாக மலையாளம் பேசவும், மனசிலாக்கவும் முடிந்தது, (ஆசான் சுரேஷ் கோபியின் கற்பித்தலில் பல மலையாளக்கெட்டவாரத்தைகளும் கூட கற்றுக்கொண்டேன்)
இப்போது இங்கு கல்லூரியில் கேரளாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை என்றால் கூப்பிடு லோகமாதேவியை என்னுமளவிற்கு மலையாளம் அத்துப்படி
கேரளாவிலிருந்து வருபவரகளிடம் ‘’ஒண்ணு வேகம் போய் ஃபிஸ் அடைக்கணும் கேட்டோ, நமக்கு கோர்ஸினைக்குறிச்சு பின்ன சம்சாரிக்காம் ‘’ என்பேன் அவர்களும் உடன் பணம் கட்டிவிடுவார்கள்
எனவே நான் என்னவோ 2 வரி சொன்னதும் ஃபீஸ் கட்டிவிடுகிறார்கள் என்பதால் இப்போது கல்லூரி நிர்வாகம் என்னை கேரளா அட்மிஷனுக்கென்றே பிரத்யேக ஆசிரியையாக நியமிக்காத குறைதான்
ஆனால் சார் மலையாளம் அத்தனை இனிமையான மொழி.தமிழைவிட இப்போது நான் அதிகம் பேசுவதும் விரும்புவதும் மலையாளமே. பல வருடங்களுக்கு முன்பான நினைவுகளையெல்லாம் உங்களின் பதிவை வாசித்ததும் மீண்டும் நினைத்துப்பார்த்து மகிழ்ந்தேன்
நன்றிகளுடன்
லோகமாதேவி
பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் ‘திராவிடத்தனமான’ வாழும் தமிழ் உரையைக்கேட்டு உள்ளபடியே இறும்பூதெய்கிறேன்!!.காலம் பல கடந்தாலும் அதன் கன்னித்தன்மை சற்றும் குறையாமல் இன்றும் மேடைகளில் தவறாமல் வரிக்கு வரி மாறாமல் ஒலிப்பதைக்கண்டு இந்தத் தமிழின் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து போன்றுகின்றேன்!!.இந்த ‘மேடைத்தமிழ் வார்ப்புருவை’ எந்த திராவிடக்கட்சியும் என்றும் தயங்காமல் பயன்படுத்தலாம் என்பதை இந்த பொருள் பொதிந்த சிற்றுரைக்கு கிடைத்த ‘11 கைதட்டல்களே’ சாட்சி!.மேலும் இந்த உரையில் கிடைக்கப் பெற்ற நல்முத்துக்களின் பட்டியலையும் கீழே கொடுத்துள்ளேன்!.
1) ஆருயிர் அண்ணன் – 14
2) சிறப்பாக – 13
3) அருமைத்தலைவர் – 10
4) பொறுப்பு எம்ஜியார் – 9
5) அருமையான – 9
6) அவர்களின் – 9
7) மிகவும் – 9
8) இங்கே – 6
9) இன்றைய தினம் – 5
10) மாலை நேரத்திலே – 5
11) அருமையானதொரு – 5
12) அவர்களே – 5
அன்புடன்,
அ .சேஷகிரி.