சார்,
எனக்கு எழுதும்போது பேச்சு நடைலயே எழுதனும் போல இருக்கு, எளிமையா எல்லாருக்கும் புரியற மாதிரி பேச்சு நடைலயே எழுதறது ஒண்ணும் தப்பு இல்லனு தோணுது. ஒருவேளை இதுதான் படிக்க சிரமமா இருக்கமோ அப்படீங்கற சந்தேகமும் இருக்கு. நான் ஈரோட்டுக்காரன் என் எழுத்த வேற மாவட்டத்துக்காரங்க புரிஞ்சுக்க கஷ்டப்படுவாங்களா, இல்ல தூய தமிழ்ல எழுதறதுதான் சரியா, நாவல் உள்பட எல்லாத்தையும்.
இதப்பத்தி பெரியாளுங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டுதான் செய்யனும்னு உங்கள கேக்கறேன். உங்க ஆலோசனை என்னைத் தெளிவுபடுத்தும்.
நன்றி
பாலாஜி குருசாமி
***
அன்புள்ள பாலாஜி
பேச்சுமொழியை அப்படியே எழுதுவதென்பது புனைவிலக்கியம் எழுதத் தொடங்கும்போது சிலரால் கையாளப்படும் உத்தியாகும். அது உரைநடை தனித்தன்மையுடன் உருவாகி வராதபோது செய்யப்படுவது.
தமிழில் உரைநடைக்கும் பேச்சுநடைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நானறிந்தவரை ஆங்கிலம் மலையாளம் போன்ற மொழிகளில் இவ்வேறுபாடு இல்லை. ஆகவேதான் இந்தக் கேள்வி எழுகிறது
முதல்வினா, நீங்கள் பேச்சுமொழியில் எழுதும்போது அது மிக அகவயமானதாக இருக்கும் என்பதே. அதாவது அது நீங்கள் பேசுவதுபோலவே ஒலிக்கும். பலசமயம் பொதுவான கருத்துக்களுக்கு அப்படி ஒரு தனிப்பட்டகுரல் இடையூறாகவே இருக்கும். இலக்கிய விமர்சனம், தத்துவம் எல்லாம் அப்படி ஒலிப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்.
பேச்சுமொழிக்கு வட்டார அடையாளம் உண்டு. பேச்சுமொழி என்றால் அது குமரித்தமிழ் அல்லது கோவைத்தமிழ் போல ஓர் அடையாளம் கொண்டதாகவே இருக்கும் இல்லையா? அத்தனை கருத்துக்களும் அப்படி ஒரு வட்டார வழக்கிலே வெளிப்படமுடியுமா? அப்படி ஒரு வட்டார அடையாளம் அனைத்துக் கருத்துக்களுக்கும் தேவையா? என்ன காரணத்துக்காக வானொலிச் செய்திகள் வட்டாரவழக்கில் சொல்லப்படுவதில்லை? அந்தக்காரணமே உரைநடை தேவை என்றாக்குகிறது.
ஆகவே பொதுவான உரைநடைதான் எழுத்துக்கு உகந்தது. அதில்தான் நாளிதழ்கள், செய்திகள் எல்லாம் அமைந்துள்ளன. அதில்தான் அரசுநிர்வாகம், சட்டம் அனைத்தும் செயல்படுகின்றன. அந்த உரைநடை பேச்சுநடைக்கு சமானமான ஒழுக்கு கொண்டதாகவும், இயல்பானதாகவும் இருந்தால் நன்று
ஜெ
***
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக உள்ளீர்களா? குடும்பத்தினர் நலமாக உள்ளார்களா.?
உங்கள் எழுத்தாளுமை பற்றி நன்கு அறிவேன், அது ஒரு தனி பாணி. தனி நடை. ஆனால் கிட்டத்தட்ட அதே நடையை வேறு சிலரும் பயன்படுத்துவதும் நான் அறிவேன். அது நிற்க.
என் ஐயம் என்னவெனில், பொதுவாகவே குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துக்களில் பல நவீன வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை காண்கிறேன். அதன் மூலம் அந்த எழுத்துக்கள் ஒரு வித கனத்தோடும், மாயமான ஆழத்தோடும் காணப்படுவதை அறிகிறேன். ஆனால் அது எதற்கு என்பது புரியவே இல்லை. உண்மையாகவே தெரிந்துகொள்வதற்காக தான் கேட்கிறேன்.
உதாரணமாக, திரு. சாரு நிவேதிதா-வின் எழுத்துக்கள். முழுக்க முழுக்க ஒரு வித மந்திரப்புகை. பக்கத்திற்கு நான்கு முறை வரும் “பின் நவீனத்துவம்”, “மறுத்தளித்தல்”, போன்ற வார்த்தைகள். இன்னும் பல இது போன்ற வார்த்தைகள் நினைவில் நிற்பதில்லை. அவரின் இந்த புத்தகங்களை படிக்கும் வாசகர்களெல்லாம் உண்மையில் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரிந்து தான் படிக்கிறார்களா. எனக்கு மட்டும் தான் ஞான சூன்யமா. உண்மையாக விளங்கவில்லை.
இதை தங்களிடம் கூற காரணம், தாங்களும் இது போன்ற ஒரு பாணியையே கையாள்வது தான். மேற்கண்ட வார்த்தைகளுக்கெல்லாம் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான மாற்று வார்த்தைகள் இல்லையா?
குறிப்பாக, எழுத்து என்பது எப்படி இருக்க வேண்டும். ஒரு ஆரம்பகால எழுத்தாளனுக்கு அறிவுரை சொல்வது போல எனக்கு கொஞ்சம் விளக்க முடியுமா.?
தங்கள் நலத்தின் மீது உண்மையான அக்கறையுடன்,
ஏ.ஜி.ஸ்ரீனிவாசன்
***
அன்புள்ள ஸ்ரீனிவாசன்,
மொழிநடை என்பது ஒவ்வொருவருக்கும் ஒன்று.ஆனால் ஒரு காலகட்டத்திற்கென ஒரு பொதுநடை உண்டு. ஐயமிருந்தால் ஐம்பதாண்டுக்கு முந்தைய நாளிதழ்களை எடுத்துப்பாருங்கள். அதேபோல ஒரு சூழலுக்கென ஒரு பொதுநடை உண்டு. தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலுக்கு அவ்வாறு ஒரு நடை உருவாகி வந்துள்ளது. தனிப்பட்ட நடை என்பது அந்தப் பொதுநடைக்குள் உருவாகிவருவதாகும்.
ஓர் உரைநடையை நாம் முதன்முதலாக அறிமுகம் செய்துகொள்ளும்போது புரிதலில் தடுமாற்றமும், ஒருவகை திகைப்பும், சிலசமயம் எரிச்சலும் ஏற்படும். அதைக்கொண்டு அந்த உரைநடையை நாம் நிராகரிக்கமுடியாது. நீங்கள் நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினால், அரசுத் துறைகளில் நுழைந்தால் அந்தத் தனிநடையைக் கற்றுக்கொள்ளவே கொஞ்சகாலம் ஆகும். அதைக் கற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அறிவுத்துறை நடைமட்டும் இயல்பாகவே தெரியவரவேண்டுமென ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
அறிவுத்துறையின் நடைக்கு சில தனித்தன்மைகள் உண்டு. அவை செறிவாக அமைந்தாகவேண்டும். ஒரு நாளிதழ்க்கட்டுரையில் பலபக்கங்களுக்குச் சொல்லப்படுவதை அவை சுருக்கி சொல்லமுயலும். அறிவுத்துறை நடையானது அதுவரை பேசியவற்றின் தொடர்ச்சியாகவே பேசும். நீங்கள் நடுவில் புகுந்து புரிந்துகொள்ள முயல்கிறீர்கள். ஆகவே அதை முன்னும்பின்னும் சென்று புரிந்துகொள்ள முயலவேண்டும். ஓர் இலக்கியக் கட்டுரையில் ‘எழுத்துகாலகட்டத்து இறுக்கதை கவிதைகள் வானம்பாடியினூடாகத் தளர்த்திக்கொண்டதற்கு அரசியல் ஒருகாரணம்’ என ஒரு வரி வந்தால் எழுத்து சி.சு.செல்லப்பா நடத்திய சிற்றிதழ் என்றும் அதன் கவிதைகள் இறுக்கமான நவீனக்கவிதைகள் என்றும் வானம்பாடி கவிதையை வெகுஜனமயமாக்கிய சிற்றிதழ் என்றும் தெரிந்திருக்கவேண்டும். தெரியாமல் நடைபுரியவில்லை என்று சொல்லமுடியாது.
அதேபோல கலைச்சொற்கள். ஒரு கருத்து, ஒரு கருதுகோள் ஒரு மொழியில் இருக்கவேண்டும் என்றால் அதற்கான கலைச்சொல்லுடன் மட்டுமே இருக்கமுடியும். சூழியல் என்னும் சொல் இல்லையேல் அந்தக் கருதுகோள் இங்கே இல்லை என்றுதான் பொருள். படிமம் என்ற சொல் இல்லையேல் அக்கருத்து இல்லையென்றே அர்த்தம். அச்சொல் நம் சூழலில் தெளிவாக வரையறைசெய்யப்பட்டுள்ளது. அச்சொல்லை ஒருவர் பயன்படுத்தினால் மட்டும்போது, அதனுடன் இணைந்த மொத்தக் கருத்துச்சூழலும் நம் நினைவுக்கு வரும்.
உதாரணம் சூழியல்.அச்சொல்லைத் தவிர்த்தால் ஒவ்வொரு முறையும் இயற்கைச்சூழலைச் சார்ந்த அறிவுகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட அறிவுத்துறை என சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். முன்பெல்லாம் கலைச்சொல் பெரிய சிக்கல்களை அளித்தது வாசிப்பில். இன்று இணையத்தில் கூகிளிட்டு தேடினாலே தெளிவாகப்பொருள் சிக்கி விடுகிறது. அதன்பின்னரும் முயலமாட்டேன் என்று சொல்லும்போது நாம் அறிவியக்கத்தை நிராகரிக்கிறோம்
மறைந்த சுந்தர ராமசாமி சொல்வதுண்டு, ஓர் எட்டாம்வகுப்பு அறிவியல்நூலைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உழைப்பிருந்தால் புரிந்துகொள்ள முடியாத மொழி அல்ல இலக்கியத்தில் உள்ளது என்று, அந்த உழைப்பை வழங்கலாமே
ஜெ