இந்த நாலைந்து நாட்களாக ஒரு சிந்தனை என்னுள் சுழல் விளக்காக சூழ்கிறது என்றால் அது உருவ மயக்கம் பற்றித் தான். நிதர்சனத்தில் ஒரே தோற்றம் கொண்ட மனிதர்களை பார்ப்பது அரிதிலும் அரிது. ஆனாலும் முதன் முதலில் நான் ரஜினி நடித்த இரட்டை வேட படத்தை பார்த்த போது எப்படி மனிதர்கள் இதை ஏற்கிறார்கள், ரசிக்கிறார்கள் என வியப்புற்றேன். அன்றில் இருந்து இந்த இரட்டை வேட படம் என்றாலே அது முட்டாள்களுக்குரியது என எண்ணினேன்.
ஆனால் இப்போது 40ஐ கடந்துவிட்டால் ஒன்று தோன்றுகிறது, நாம் அரிது என எண்ணும் சம்பவம் அப்படி ஒன்றும் அரிதல்ல, ஒரே மாதிரி தோன்றுபவர்களும் அப்படி ஒன்றும் அப்பூர்வமல்ல. பிரபலங்ளைப்போல தோற்றமளிப்பவர்கள் சாதாரணமாக காணக் கிடடைக்கிறார்கள், ஒரு பிரபலம் இன்னொருவர் போலவும் உள்ளார். த்ரிஷா முதலில் ஐஸ்வர்யா ராய் போல எனக்கு காணப் பட்டார். நான் காணும் ஒவ்வொரு மனிதனிலும் எனக்கு ஏற்கனவே தெரிந்த வேறொருவரின் அம்சம் உள்ளது. தொலைதூரத்தில், நடையில் , உடல் மொழியில், ஒரு கொணத்தில், நமது பக்கவாட்டுப் பார்வையில் உருவத்தில், முகத்தில் என.
இதுவரை நான் 2,3 இரட்டையரை மட்டுமே நேரில் பார்த்துள்ளேன், அவர்கள் அனைவரும் 12 வயதிற்கு கீழ். அவர்களை நாம் பிரித்தறிய பிரயத்தனப் படுகிறோம். ஆனால் பொதுவாக மனிதர்களைக் காணும் பொது இயல்பிலேயே ஒருவரை இன்னொருவராக பொருத்திக்கொள்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாகத் தான் நான் கவனித்தேன், எங்கள் அறை (வழக்கறிஞர் கூடம்) மற்றும் நீதிமன்றங்களில் நண்பர்கள் பொதுவாக பேசும் போது யாரையோ நோக்கி நீங்கள் இன்னார் மாதிரி இருக்கிறீர்கள் என சொல்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் அதில் பொருள் உள்ளது, என்னை செந்தில் என்கிற இன்னொரு வக்கீல் போல முகத் தோற்றம் கொண்டுள்ளீர்கள் என கூறினர், சிலரை நீங்கள் அந்த நீதிபதி போல உள்ளீர்கள் எனக் கூறுவதையும் சில நீதிபதிகளை அவர்கள் இன்னொரு நீதிபதி போல தோன்றுகிறார்கள் என சொல்வதையும் நான் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிய 2 ஜோடி வெவ்வேறு வக்கீல் குமாஸ்தாக்களை இன்னொருவர் போல இருப்பதாக பிழையக சொல்வர். முதலில் எனக்கும் எங்கள் அலுவலக குமாஸ்தா இன்னொரு குமாஸ்தா போல இருப்பதாக தோன்றியது. அவரும் அவ்வாறு சிலர் கூறுகிறார்கள் என கூறினார்.
இது எங்களிடையே சற்று அதீதம் என தோன்றுகிறது. கிட்ட தட்ட இந்த 15 ஆண்டுகளில் ஒரு பத்து முறையேனும் யாரோ யாரையோ பற்றி இப்படி சொல்வதை நான் கேட்டுள்ளேன். ஒருவேளை அனைவரும் சீருடை அணிவதால் இயல்பில் உள்ள வேறுபாடு சற்று மறைந்து அனைத்தும் ஒன்றுபோல தோன்றுகிறதா என தெரியவில்லை. எனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்வில் இதுபோன்று நான் அவ்வளவாக கேட்டதில்லை. பெண்களில் இதுபோன்று காணக் கிடைப்பதில்லை.
Tale of two cities இல் ஒரு நீதிமன்றக் காட்சி வரும், நாயகன் charles darney குற்றவாளிக் கூண்டில் , sydney carton ஒரு வழக்கறிஞர் அவருக்கு பதிலாக நின்று கண்ணுற்ற சாட்சி குழம்பி தவறாக அடையாளம் காட்டியதால் நாயகன் விடுவிக்கப் படுவார். இக்கட்சியினாலேயே இந்நாவலைப் பற்றி எனக்கொரு குறை மதிப்பீடு இருந்தது ஆனால் இப்போதில்லை.
கிருஷ்ணன்
***
அன்புள்ள கிருஷ்ணன்,
இந்தவகையான அன்றாட அற்புதங்களை ஆராயாமல் அனுபவிப்பதே வாழ்க்கையைச் சுவாரசியமாக்கும்.
திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்துநிலையத்தில் எப்போது நின்றிருந்தாலும் நான் என் அப்பாவின் சாயலில் எவரையாவது பார்க்காமலிருப்பதில்லை. ஏனென்றால் ஒரே சாதியினர் அதிகம் வாழும் இடம். நெடுங்காலமாக அகமணம் நிகழ்ந்த குடும்பங்கள் அதில் அதிகம்.
ஒரே தொழிற்சூழலில் ஒரே முகம் அமைகிறது. நான் பிஎஸ்என்எல்லில் வேலைபார்க்கையில் ஒருமுறை ஒரு தோழர் ஒரு காஞ்சீபுரம் நண்பரைப் பற்றிப் பேசுகையில் அவர் இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினர் அல்ல என்றார். எப்படித்தெரியும் என்றேன். பார்த்தாலே தெரிகிறதே என்றார். பார்த்தாலே தெரியும் என அனைவருமே ஒத்துக்கொண்டனர். இது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் உண்மையிலேயே தெரியும்.
நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும்போது அத்தனை சீனமுகங்களும் ஒன்றுபோல இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். எப்படி சொந்தப்பெண்டாட்டியை அடையாளம் காண்பார்கள் என திகைத்திருக்கிறேன்.
சிங்கப்பூரில் இரண்டுமாதம் இருந்தபோது முதலில் மாணவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. மிக விரைவிலேயே முகங்கள் தனித்தனியாகப் பிரிந்தன. நுட்பமான வேறுபாடுகள் கொண்டவையாக முகங்கள் மாறின. என்ன ஆச்சரியம் என்றால் முன்னர் பொதுமையே அம்முகங்களின் அடையாளமாக இருந்தது. அதன்பின்னர் தனித்தன்மையே அவற்றின் அடையாளமாக ஆகியது.
ராய் மாக்ஸம் தமிழகம் வந்தபோது அவருக்கிருந்த பெரிய மனக்குறை அத்தனைபேரும் ஒன்றாகவே தெரிகிறார்கள் என்பது. நினைவில் முகங்களை அடையாளம் வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். நான் அரங்கசாமி மாதிரி இருப்பதாகச் சொன்னதை நானும் துயரத்துடன் புரிந்துகொண்டேன்
ஜெ