அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்ட அமுலாக்கம் 2017
கடந்த ஒருமாதமாக எம் எல்லோரையும் குழப்பிக்கொண்டிருந்த இப் பிரச்னை இப்போது பாராளுமன்றத்தில் விவாதத்துக்குபகிரங்க மாக வரவிருக்கிறது. சமீபத்திய தபால் வாக்கெடுப்பின்படி, 60 வீதமானோர் ஆதரவு தெரிவித்தும், 40 வீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தும் இச்சட்டப் பிரேரணையை பாராளுமன்றம் வரை கொண்டு செலுத்தியுள்ளனர்.
வளர்முக நாடுகளில் ஒருபாலின உறவு முறைகள் இலைமறை காயாகவே உள்ளன. ஆனால், வளர்ச்சி பெற்ற நாடுகளான அமெரிக்கா, கனடா,சுவிட்சலாந்து மற்றும் ஜெர்மனியில் ஓரேபாலினத்திருமணங்கள் சட்ட பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளன. இதுபற்றி குடும்பங்களுக்கிடையே, குறிப்பாக பல பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள மனக்கிலேசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இச்சூழ்நிலையில், இத்திருமணச்சட்டம் அமுல் படுத்தப்படுமேயானால், வளரும் சிறுவர்கள் பெரிதும் மனக்குழப்பத்துக்கு உ்ள்ளாக்கூடுமென சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
திருமணமான எத்தம்பதியும் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம்.இதன்படி, ஒரே பாலினத் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட சிறுவர்கள் வேறொரு தளத்தில் பாலின அசமத்துவத்தை அங்கீகரிக்கக்கூடும். மேலும்,இச்சிறுவர்களுக்கு தாய், தந்தை என்னும் இருபாலாரில் ஒருவரே அமைவார்கள். இது குழந்தைகளது அடிப்படை உரிமைக்கு எதிராகும்.
இங்கு ஏற்படக்கூடிய இன்னொரு சிக்கல் என்னவென்றால், எந்த ஒரு மதமும் இதை ஆதரிப்பதில்லை. ஒருபாலினத் தம்பதிகள் மதச்சடங்குகளை நடத்தித் தருமாறு எந்த ஒரு மதகுருவை வேண்டினாலும், அவர்கள் தெரிவிக்கும் மறுப்பு சட்டத்திற்கு எதிர் என இவர்கள் வழக்குப் போடலாம். இங்கு மத சுதந்திரம் பாதிக்கப்படு்ம் அபாயம் இருப்பதாக பல மதகுருக்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
இந்தப்பிரச்சினையை சமூகக்கண்ணோட்டத்துடன் அணுகி அபிப்பிராயம் தெரிவிக்குமாறு உங்களது இணையதள வாசகர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
மைத்ரேயி.
***
அன்புள்ள மைத்ரேயி,
உண்மையில் இந்தப்பிரச்சினையை இந்தியச்சூழலில் கூர்ந்து விவாதிக்க முடியாது. ஏனென்றால் இங்கே இன்னமும் இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஆகவில்லை. பல்வேறு தரப்புகள் முன்வைக்கப்பட்டு பலகோணங்களில் விவாதங்களும் எழவில்லை. என்னுடைய பார்வையில் ஓரினச்சேர்க்கை உணர்வு என்பது இயற்கையானது, உடலியங்கியல் சார்ந்தது. அந்நிலையில் அதை ஒறுப்பது அடக்குமுறை. அதற்கு உரிமையளிப்பது இயல்பான ஒரு சமூகப்பரிணாம வளர்ச்சி மட்டுமே
ஆனால் சில மருத்துவ நண்பர்கள் ஓரினச்சேர்க்கை இயல்பு என்பது அத்தனை உயிர்களிலும், அனைத்து மானுடரிலும் ஓரளவு இருந்துகொண்டிருப்பது என்றும், அதை பெரும்பாலானவர்கள் கட்டுப்படுத்திக் கடந்துசெல்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதை ஒரு இயல்பான சமூக வழக்கமாக அங்கீகரித்தால் இன்று பிற பாலியல் இயல்புகள் விளம்பரம் மூலம், கலைகள் மற்றும் கேளிக்கைகள் மூலம் பெருக்கப்படுவதுபோல அதுவும் பெருக்கப்படும் என்றும் அது அவ்வழக்கம் மேலும் வளரவே வழிவகுக்கும் என்றும் வாதிடுகிறார்கள்.
அவ்வழக்கம் ஏன் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றால் அது மையஇயல்பானது அல்ல, எப்போதுமே அது விளிம்புநிலைப்போக்காகவே இருக்க இயலும், ஆகவே அதில் உணர்வுக்கொந்தளிப்புகள், வன்முறை ஆகியவற்றைத் தவிர்க்கமுடியாது என்பதனால்தான் என அவர்கள் வாதிடுகிறார்கள். உயிரியல்பில் பலவற்றைக் கட்டுப்படுத்தித்தான் கலாச்சாரமும், சமூக ஒழுங்கும் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். மானுடனின் இயல்பான வன்முறைக்கேளிக்கையும், கட்டற்ற காமமும், சோம்பலும் நாகரீகச் சமூகங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்
என் வரையில் என் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மட்டுமே இன்று இது உள்ளது. நண்பர்கள் எழுதலாம்
ஜெ
***