இருண்ட சுழற்பாதை

சாமர்செட் மாஃம்
சாமர்செட் மாஃம்

1987, கேரளத்தில் இடைவெளியில்லாமல் மழை பெய்யும் ஜுன் மாதம், காசர்கோடு அருகே கும்பளா என்னும் சிற்றூரில் ஒரு பழைய வாடகை வீட்டில் நான் தங்கியிருந்தேன். முற்றத்தில் நின்றால் கடலை பார்க்கமுடியும் என்பது அந்த வீட்டின் மீது எனக்கு கவர்ச்சியை உருவாக்கியது. மிகப்பழைய மரச்சாமான்கள், அவற்றினூடாக இரவெல்லாம் ஓசையிட்டுக்கொண்டிருக்கும் எலிகள், எப்போதும் மாறாத இருட்டு என அதற்குள் வாழ்வதை ஒரு வகை தவம் என்று எனக்குக்காட்டிய பிற கவர்ச்சிகள் சில இருந்தன.

இன்று நோக்குகையில் ஆழ்ந்த உளச்சோர்வு நோயின் அறிகுறிகள் என்றே தோன்றுகின்றன அவை. ஒருவேளை உளச்சோர்வும் படைப்பூக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகக்கூட இருக்கலாம். சோர்வும் கொந்தளிப்பும் மாறி மாறி அலையடித்த அந்தக்காலத்தில்தான் வெறிகொண்டு படித்திருக்கிறேன். இரவும் பகலும் நகரில் சுற்றியலைந்திருக்கிறேன் பொருளற்றவையும் பொருள்மிக்கவைமாக எழுதிக்குவித்திருக்கிறேன். எழுத்தாளன் என்று என்னை உணரும் இடம் வரை வருவதற்கு அந்த இருண்ட சுழல்பாதை உதவியிருக்கிறது.

மழையைப் பார்த்தபடி திண்ணையில் அமர்ந்து அத்தொகுதியைப் புரட்டியபோது சாமர்ஸெட் மாஃம் எழுதிய The Rain என்னும் கதையைக் கண்டேன். ஒரு கீழைநாட்டுக் கடற்கரையில் கொள்ளைநோய் காரணமாக தடுத்துவைக்கப்பட்ட கப்பலில் கதை நிகழ்கிறது. கடும்நோன்பு கொண்ட பாதிரியார் ஒருவரின் கதை அவரைக் கூர்ந்து நோக்கும் சகபயணியின் விழிகளினூடாகச் சொல்லப்படுகிறது. அக்கப்பலில் வந்து தங்கும் ஒரு விபச்சாரியால் அவர் சீண்டப்படுகிறார். அவளை திருத்தமுயல்கிறார். இருண்ட புகை படிந்த அவள் ஆன்மாவை தன் பிரார்த்தனையால் தூய வெண்மை கொள்ளச்செய்தேன் என அவர் மகிழ்கிறார். ஆனால் சிலநாட்களில் அவர் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறந்தார். விபச்சாரி மீண்டும் பழையவளாக ஆனாள். சிரித்தபடி “ஆண்களாகிய நீங்கள் அனைவருமே ஒன்றுதான்” என்கிறாள்.

எலியட்
எலியட்

அந்த எளிய மனிதரின் நோன்பு காமத்தால், அதை தன் உள்ளங்கையில் ஏந்தி வந்த அகங்காரத்தால், முற்றிலும் தோற்கடிக்கப்படுவதன் கதை அது. நான் புனிதன் என்பவனை காமம் தீயாகச் சூழ்ந்துவிடுகிறது. பேயாகப் பிடறியில் ஏறி அமர்ந்துவிடுகிறது. நூலை அப்படியே ஈரத்தரையில் வீசிவிட்டு எழுந்து உடல் நடுங்க நின்றதை நினைவுகூர்கிறேன். பின்னர் மழையில் இறங்கி கடற்கரைக்குச் சென்றேன். ஐந்தடிக்கு அப்பால் எதுவும் தெரியாத மழையில் கொந்தளிக்கும் கடற்கரை மணலில் கால்புதைய கைகளைக் கட்டி தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன்.

மெல்ல அடங்கி உள்ளே ஒரு ஆழ்ந்த தத்தளிப்பாக இருந்து கொண்டிருந்தது அந்தக் கதை. பின்னர் டால்ஸ்டாயின் ஃபாதர் செர்ஜியஸ் என்ற கதையை படித்தபோது உள்ளிலிருந்து எழுந்து வந்து அதற்கிணையாக நின்றது. தி ரெயின் கதைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது ஃபாதர் செர்ஜியஸ். ஆனால் நாம் படிக்கும்போது எப்போதும் சமகாலத்திலிருந்து பின்னால் சென்று படிக்கிறோம். ஆகவே நமக்கு அருகே இருக்கும் எழுந்தாளர்களுக்கு அவர்களின் மூதாதையர்கள் பதில் சொல்வதாகவே வாசிப்பு அனுபவம் அமைகிறது.

.tolstoy1

ஃபாதர் செர்ஜியஸ் ஒரு சம்பிரதாயமான கதை. புலனொடுக்கத்துடன் தன்னந்தனிமையில் வாழும் ஃபாதர் செர்ஜியஸை தன் உடல் கவர்ச்சியால் வீழ்த்தி அவருடைய நோன்பை அழிக்கும்பொருட்டு பந்தயம் வைத்துக்கொண்டு தாசிஒருத்தி வருகிறாள். உள்ளிருந்து பெருகி தன்னை விழுங்க வந்த பூதங்களை குரூரமான சிறிய செயலொன்றினூடாக அவர் வெல்கிறார், தன் விரலொன்றை வெட்டி வீசுகிறார். ஒரு கிறித்தவ நீதிக்கதையைப்போன்றது இது. முதல் வாசிப்பில் இது மிக எளியதென்று தோன்றும். ஆனால் அடிப்படையான வினா ஒன்றிருக்கிறது. காமம் அத்தனை ஆழ்ந்தது, பேருருவம் உடையது என்றால் ஒரு வலியின் முன் அது எப்படி மறைய முடியும்? அத்தனை நுண்ணியதென்றால் பருவடிவமான  உடல் உறுப்பை வெட்டுவதனூடாக அதை எப்படி அகற்ற முடியும்?

பின்னர் நெடுநாட்களுக்குப்பின் மகாபாரதத்தில் காமஒறுப்புநோன்பு  கொண்டவர்களின்  கதைகளைப் படித்தேன். மீண்டும் மீண்டும் இறுதிக்கணத்தில் நழுவிச் சரிபவர்கள். மிகச்சிறந்த உதாரணம் மேனகையுடன் தோற்ற விசுவாமித்திரர். ஆனால் மகாபாரதத்தில் அது அவருடைய இழிந்த வீழ்ச்சி அல்ல. அவரைவிட பெரிய ஒன்றின் முன் அவர் பணிவதுதான் அது. இறுதி வெற்றி நோக்கி சென்றவருடைய பயணத்தில் இன்றியமையாத ஒருபடிதான். அதன் விளைவாக எழுபவள் அழகு கனிந்த சகுந்தலை.

சில ஆண்டுகளுக்குப்பின் தருமபுரியில் நானும் சில நண்பர்களும் வாரத்தில் இருமுறை கூடி டி.எஸ்.எலியட்டின் விமர்சனக்கட்டுரைகளை படித்தோம். வரிவரியாக வாசித்து விவாதித்து புரிந்து கொள்வது எங்கள் வழி. உலக இலக்கியத்தில் இலக்கிய விமர்சனங்கள் கொட்டிக்கிடக்கின்றன. விமர்சனரீதியாக படைப்புகளை அணுகுவதற்கு அவற்றைக் கற்பது இன்றியமையாதது. ஆனால் எந்த விமர்சகனும் ஒரு தலைமுறைக்கு மேல் பொருட்படுத்தக்கூடியவனாக இருக்க முடியாது. அவனுடைய வாசிப்புகள் கடந்து செல்லப்படும். அவனுடைய அவதானிப்புகள் மேலதிக அவதானிப்புக்களால் சிறிதாக்கப்படும். கோட்பாடுகள் மறுக்கப்படும். ஆகவே வாசிப்புக்கு எந்த இலக்கிய விமர்சகனும் இறுதித் தெளிவெதையும் தந்துவிட முடியாது. புகழ்பெற்ற விமர்சகர்கள் அந்தந்தக் காலத்தில் அத்தகைய மாயையை உருவாக்குவார்கள் என்றாலும்

ஆனால் முதன்மையான ஒரு விமர்சகனை எடுத்துக்கொண்டு அவனுடைய படைப்புகளை கூர்ந்து படிப்பது நாம் விமர்சனநோக்கு கொள்ள மிக உதவிகரமானது. அவனை நாம் முழுமையாக நிராகரித்தாலும்கூட அவன் நமக்கு விமர்சனம் செயல்படும் வழியைக் கற்பித்துவிடுவான். அன்று எலியட்டின் முப்பது கட்டுரைகளை நான் மொழிபெயர்த்தேன். நூலாக வெளிவர இருந்த அதன் கைப்பிரதி பதிப்பகத்தாரிடமிருந்து தொலைந்து போய்விட்டது. அந்த வாசிப்புதான் இலக்கியம் குறித்த என்னுடைய சொந்தக் கருத்துக்களை உருவாக்கியது. நான் எலியட்டை தொடர்பவன் அல்ல, எலியட்டிலிருந்து தொடங்கி எனது பாதையை உருவாக்கிக்கொண்டவன்.

ஆனால் அவ்வாறு நாம் வாசிப்பவர் கூல்ரிட்ஜ் போல, ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போல தன் வாழ்க்கைத்தேடலுக்கு இலக்கியத்தை கருவியாகக் கொண்ட விமர்சகனாக இருக்கவேண்டும் .ஒருபோதும் இலக்கிய வாசிப்பை பிறிதொரு தத்துவம் நோக்கி இட்டுச் செல்லக்கூடிய, இலக்கியத்திலிருந்து கோட்பாடுகளை சமைக்கும், இலக்கியத்தை கல்வித்துறை சார்ந்த பகுப்பாய்வுகளுக்கு ஆளாக்கும் அறிஞராக இருக்கலாகாது. அவர்கள் அடிப்படையில் இலக்கியமறுப்பாளர்கள். இலக்கியம் ஒரு நடனம், உடன் நடனமிடுபவர்களே அதற்குத் தேவை. நெஞ்சு நிமிர்த்தி விரைத்துநிற்கும் தூண்கள் அல்ல.

அன்று எலியட்டின் ஒருவரி சாமர்ச்ஸெட் மாஃமிலிருந்து வியாசன் வரை என்னைக்கொண்டு சென்றது. ”கலை வளர்வதில்லை அதன் பேசுபொருட்கள் தான் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன” .சில கருத்துக்கள் மின்னதிர்ச்சி போல் நம் சித்தத்தை துடிக்க வைக்கின்றன. சவுக்கென அறைந்து நாள் கணக்கில் துரத்துகின்றன. ஏனென்றால் அவை நீண்ட ஒரு பயணத்தின் விளைவாகக் கண்டடையப்பட்ட அகவயமான தரிசனங்கள். அவற்றை நிரூபிக்க முடியாது. ஒரு கவிதைவரி என மட்டுமே உளம்கொள்ள முடியும்

நம்மைச் சூழ்ந்துள்ள அறிவியக்கமென்பது ஒரு வளர்ச்சிப் போக்கென்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அறிவியல், அரசியல் போன்ற நடைமுறைச் சிந்தனைகள் முதலியவற்றில் அது உண்மையும் கூட. எனக்கு முந்தைய காலகட்டத்தின் பேரறிஞனை விட காலத்தால் பிந்தியவன் என்பதாலேயே மேலும் சற்று அறிந்திருப்பேன் . ஆனால் கம்பனை விட காலத்தால் பிந்தியவன் என்பதனாலேயே மேலும் கவிதையை எய்தியவன் அல்ல. இலக்கியத்திலும் கலையிலும் வளர்ச்சி என்பது இல்லை. அவை உருவான கணமே உச்சத்தை அடைந்துவிட்டவை

ஏனெனில் அவற்றின் சாரமாக இருப்பது ஆன்மீகம். அது மாறாதது, வினாவும் சரி விடைகளும் சரி என்றுமுள்ளவை. இலக்கியம் முன்வைப்பது ஒருவகை மாற்றுஆன்மிகத்தை என்று சொல்லத் தோன்றுகிறது. அது எதிர்கொள்வது எப்போதும் என்றுமுள்ள வினாக்களையும் உணர்வுகளையும்தான்.மீண்டும்மீண்டும் அது ஒன்றையே கேட்டுக்கொண்டிருக்கிறது. விடைகள் காலந்தோறும் மாறுபடுகின்றன என்று தோன்றுகிறது, ஆனால் உண்மையில் மாறுபடுகின்றனவா? எனக்கென்னவோ சாமர்செட் மாஃம்  தல்ஸ்தோய் வியாசன் மூவரும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது. நானும் எழுதியிருக்கிறேன், முற்றிலும் புதிய விடையை. பின்னர் கண்டுகொண்டிருக்கிறேன் , அது மிகத்தொன்மையான விடையே என.

விகடன் தடம் இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் நத்தையின் பாதை தொடரிலிருந்து

குருவியின் வால்

 

முந்தைய கட்டுரையானைடாக்டரும் யானை மந்திரிப்பாளரும்
அடுத்த கட்டுரைஒளிர்நிழல் பற்றி