இருளில் அலைதல் -கணேஷ்

DSC_4932

சீ.முத்துசாமி குறுநாவல்கள் பிரசுரம்
இணையத்தில் நூல்கள்– சீ.முத்துசாமியின் நூல்களை வாங்க

இருளில் அலையும் குரல்கள்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா” நாவல் இப்படித் துவங்கும்:  “மகிழ்ச்சிகரமான குடும்பங்கள் யாவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. துயரப்படும் குடும்பங்கள்தாம் அதனதன் வழியில் துயருறுகின்றன”. இந்த நாவலில் காட்டப்படும் குடும்பமும் கூட தனக்குரிய வழியில் துன்பப்படும் குடும்பம்தான்.

இந்தக் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய ஒளியைத் தேடிச் செல்கிறார்கள். ஆனாலும் அவரவர் வழியில் துயருற்று முடிவில் இருளில் புதைகிறார்கள். ஒளியைக் கனவு கண்டு, ஒளிக்கான தேடல் நிறைந்த நீண்ட பிரயாணத்தின் முடிவில் அவர்கள் காணுவது இருளின் விராட வடிவத்தைத்தான்.

நிராசையின் ருசியைச் சுவைப்பவர்களாகவே எஞ்சிவிடும் ஒரு குடும்பத்தின் கதைத்தான் “இருளில் அலையும் குரல்கள்”.

இக்குறுநாவலின் பெரும்பகுதி, சிவகாமியின் பார்வையில் விரிகிறது. அவளது அந்தரங்கமான மனவோட்டத்தின் வேகத்திலேயே நெடுந்தூரத்தைக் கடந்துவிடுகிறது இக்குறுநாவல்.

“ஒரே படுக்கையில் படுக்கிறோம், வெவ்வேறு கனவுகள் காணுகிறோம்” என்ற கவிதையைத்தான் நினைவுபடுத்துகிறது இக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கதையும். திசைக்கொன்றாய் சிதறிப் போகும் இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் இணைத்து நாவலாக்கியிருக்கிறார் ஆசிரியர். முடிவில் இவர்கள் ஒவ்வொருவரையும் இணைப்பது இருள்தான். இவர்களின் குரல்கள் இருளுக்குள் அலைந்து இருளிலேயே புதைகின்றன.

நியாயமாக ஆசைப்படும் எதுவுமே ஒருவனுக்குக் கிடைக்கவில்லையெனில் அவனுக்கு எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட ஒருவர்தான் இக்குடும்பத் தலைவர். தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்து, கல்வியறிவற்று தான்தோன்றியாகத் திரியும் வாழ்க்கை. ஒருகட்டத்தில், குடும்பத்தினரிடம் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு இரவாக ரயிலேறி சென்னை செல்கிறார். பட்டணம் சென்று பிழைத்து முன்னேறி விடும் ஆசைதான். அங்கே ஒருவனிடம் தன் கைப்பணத்தை இழக்கிறார். அதன் பின் மலேயாவுக்கு கூலி வேலை செய்ய ஆள்பிடிக்கும் கங்காணியின் ஆசை வார்த்தையில் மயங்கி, மலேயா செல்கிறார். அங்கு கிடைக்கும் வருமானத்தில் சீக்கிரமே ஊரில் வீட்டை சீர்ப்படுத்தி, குடும்பத்தை முன்னேற்றிவிடக்கூடிய கனவில் வருபவருக்கு மலேயாவின் சுயரூபம் வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துவிடுகிறது. தான் தேர்ந்து கொண்டது ஒன்றும் ராஜபாட்டையில்லை என அறிந்துகொள்கையில் வாழ்வு கசக்கத் துவங்குகிறது. வாழ்க்கை அவரைச் சயாம் ரயில் பாதை போடும் குழுவோடு இணைக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, உள்காடுகளுக்கேயுரிய மலேரியா போன்ற கொடும் நோய்களுக்குத் தப்பி, உயிரைத் தக்கவைத்துக் கொண்டு, வாழ்வை ஓட்டுகிறார். ஊரிலிருக்கும் அம்மாவின் நினைவு அவரைத் துன்புறுத்தியபடியே இருக்கிறது. எப்படியாவது ஊருக்குப் போய் கிராமத்திலிருக்கும் அம்மாவைப் பார்த்துவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருப்பவரிடம், ஊரில் இருந்து வரும் ஒருவர், அம்மா இறந்து போன தகவலைத் தருகிறார். அம்மாவைப் பார்க்கும் எளிய ஆசைகூட நிறைவேறவில்லை. கிராமத்தில் வீட்டைவிட்டுப் பிரிந்த அந்த இரவில், தன் தங்கையை அணைத்தவாறு உறங்கிய அம்மாவின் முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்கிறார். குறைந்த ஒளியில் தெரிந்த அம்மாவின் அந்த முகம் அவரை வெகு காலம் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது.

அவராக மலேயாவில் அமைத்துக் கொண்ட குடும்பமும் சிலாகிக்கும்படியாக இல்லை. மனைவிக்கு சித்த பிரமை, மகள் தானாகத் தேடிய கணவனை மரணத்திற்குத் தந்துவிட்டு வீட்டோடு இருக்கிறாள், பெரிய மகன் அவன் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமலும், ஆசைப்பட்ட பெண்ணும் கிடைக்காமலும், பிழைப்பிற்காக மனதிற்கு பிடிக்காத ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறான். சின்ன மகன், தவறான சகவாசத்தால், போதையிலும் வன்முறையிலும் பாதை தவறிவிட்டான். இன்னொரு மகன், ஆற்றில் குளிக்கையில், அடித்துச் செல்லப்பட்டுவிட்டான்.

இப்படித் தன்னைச் சுற்றிலும் கசப்பும் இருட்டும் நிறைந்த மனிதர். வாழ்வு ஒருமுறைகூட அவரது விருப்பத்தை நிறைவேற்றித் தரவில்லை.

அவரது மகள் சிவகாமியும் வாழ்க்கையால் கைவிடப்பட்டவள்தான். வீட்டாரின் விருப்பத்திற்கு மாறாக, அவள் காதலித்தவனோடு போகிறாள். கல்யாணமான சில ஆண்டுகளில் அவன் இறந்துபோகிறான். மீண்டும் வீட்டிற்கே திரும்பிவிடுகிறாள். தம்பிக்கும் அப்பாவுக்கும் ஆகவில்லை. தம்பி வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். போதைக்கு அடிமையாகி கடைசியில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் படுத்துவிடுகிறான். மனநோயாளியான அம்மாவையும், சிவகாமிதான் பார்த்துக்கொள்ளவேண்டும். போதையடிமையான தம்பியையும் அவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும், அப்பாவையும் அவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி அவள் தனது கடந்துபோன வாழ்வை அசைப்போட்டபடியே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு மீண்டும் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. ஆண் துணையல்ல. ஆத்மார்த்தமான ஒரு ஆதரவு, அவளுக்கேயுரிய கொழுகொம்பு. வெகு நாட்களாக அவளைப் பின்தொடரும் ஒருவன் மெல்ல அவள் மனதில் இடம் பிடிக்கிறான். ஒருகட்டத்தில் அவளைத் தனியாகச் சந்திக்கிறான். விரலோடு விரல் பிணைத்தபடி அவனிடம் “என்னைக் கல்யாணம் செய்து கொள்வீர்களா?” என்று கேட்கிறாள். அவனோ சிரித்தபடியே, “கல்யாணமா? நீ என்ன கன்னி கழியாத சின்னப் பெண்ணா?” என்று நக்கலாகக் கேட்கிறான். மீண்டும் ஒரு நம்பிக்கை வறட்சி. அவனிடமிருந்து தெறித்து ஓடுகிறாள். வாழ்வு எப்போதுமே அவளுக்கு கானல் நீர்தான். தூரத்தில் ஈரம் இருப்பதுபோல் காட்டி, நம்பச் செய்து ஏமாற்றிவிடுகிறது.

அவளது அண்ணனின் கதையும் வாழ்வினால் கைவிடப்பட்டவனின் கதைதான். ஒரு கணம் இவர்கள் யாவரும் ஒளிக்கு ஏங்கி விளக்கில் மாயும் விட்டில் பூச்சிகளாகவும் மறுகணம் இருள் என்ற மாபெரும் காந்தத்தில் ஒட்டியிருக்கும் இரும்புத் துணுக்குகளாகவும் தெரிகின்றனர். இருள் என்ற புள்ளியில்தான் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். அவரவருக்கு அவரவர் இருள். நாவலின் இன்னொரு நுட்பமான அம்சம், பச்சை நிறம் கூட இருளின் குறியீடாகத்தான் வருகிறது. வெயில் புகமுடியாத அடர்ந்த மலேயாவின் காடுகளின் பசுமைகூட இருளைத்தான் கொண்டுவருகிறது.

இவர்கள் யாவரும் பெரிய கனவுகளும் லட்சியங்களும் கொண்டவர்கள் அல்லர். மாறாக, மிக எளிய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டவர்கள்தாம். அதைக் கூட அவர்களால் அடையமுடியவில்லை. ஒரு கட்டத்தில் இருள்தான் தங்களுக்குரிய உலகம் போலும் என்று நினைத்து அவர்கள் தங்களையே சமாதானப்படுத்திக் கொள்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. சிவகாமியின் மாமன் மகன் அவளை விரும்பித் தன் தந்தை மூலமாக மணத்தூது அனுப்புகிறான். அவள் அதை நிராகரிப்பதுடன் நாவல் முடிகிறது. வெகு காலம் கழித்து, தனக்கான ஒரு சிறிய ஒளிக்கீற்றை வாழ்வு பரிசளிக்கும் தருணத்தில் அவள் தன் குடும்பத்திற்காக அதையும் நிராகரித்து விடுகிறாள். ஆனால் தனக்கு ஆதரவான பதிலை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவளுடைய மாமன் மகனுக்கும் கூட தன்னுடைய இருளின் ஒரு துளியைத்தான் தரப்போகிறாள் என நினைக்கும்போது சிவகாமிக்கு கண்கள் கலங்கிச் சிவக்கத்தான் செய்கிறது.

நாவலில் அவரவரும் அவரவருக்குரிய அந்தரங்கமான உலகில் தகைவு கொள்கிறார்கள். பெரும்பாலும் நினைவுகளிலேயே நாவல் பயணிக்கிறது. “வெறும் நினைவுகளே வாழ்க்கையாகிப் போவது எத்துணை மகத்தான பேரிழப்பு” என்ற வரியொன்று இந்நாவலில் வருகிறது. ஒருவகையில் நினைவுகளிலேயே வாழ்பவர்கள்தான் இந்நாவலின் கதைமாந்தர்கள்.

அந்தரங்கமான மனப்பதிவுகள் மட்டுமே ஆக்ரமித்திருக்கும் நாவலில், ஆங்காங்கே சமூகத்தை நோக்கிய சாட்டையடிகளும் இருக்கின்றன. பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சமூகத்தைச் சீரழிக்கும் பத்திரிக்கைகள், அற உணர்வற்ற அரசியல்வாதிகள் என காட்டமான விமர்சனமும் நாவலுக்குள் இருக்கிறது. ஆனாலும், இது அதற்கான களம் இல்லை என்பதை உணர்ந்து அவற்றை அளவோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

இக்குறுநாவலோடு விளிம்பு என்ற குறுநாவலும், அகதிகள் என்ற குறுநாவலும் இந்நூலில் இருக்கின்றன. அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது இருளில் அலையும் குரல்தான். விளிம்பு நாவலில் மலேயாவின் தோட்டங்களில் “லயம்” வீடுகளில் பிழைப்பு நடத்தும் தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டிருக்கிறது. சீ. முத்துசாமியின் பலமாக நான் நினைப்பது, அவர் காட்டும் இடம் மற்றும் சூழல் விவரணை. விளிம்பு நாவலின் முதல் சில பக்கங்களிலேயே தோட்டத்து லயம் வீடுகளையும் அந்த சூழலையும் அவசரமில்லாமல் படிப்படியாகவும் அதே சமயம் கூர்மையாகவும் சொல்லிச் செல்கிறார். கதைக்கு முக்கியம் தராமல் அந்த மனிதர்களையும் அவர்களது சுகதுக்கங்களையுமே சீ.முத்துசாமி சொல்லிச் செல்கிறார். அவையும் கதைகளே, ஆனாலும் அவை முழுமையான கதைகளுமல்ல. ஆயினும், முத்துசாமியின் மொழியின் அடர்த்தியைப் பின்தொடர்ந்து செல்லும் வாசகனுக்கு ஒருகட்டத்தில் தனக்கு கதை கூட தேவையில்லை, அவரது மொழியின் வாலைப் பிடித்து கற்பனைக்குள் பறந்துகொண்டேயிருந்தாலே போதும் என்று தோன்றச் செய்வதுதான் அவரது பலம்.

தங்கமீன் பதிப்பகம் மிக நேர்த்தியாக இந்நாவலை வெளியிட்டிருக்கிறது. இதிலுள்ள வட்டாரச் சொற்களை (உதாரணம்: ரோத்தான், பெர்ஹத்தியன்)  மலேசியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள உதவக்கூடிய வகையில் நூலின் பின்னிணைப்பாக அச்சொற்களின் பொருளை அளித்திருக்கலாம். இருளில் அலையும் குரல்கள் வெகு நாட்களுக்கு வாசகன் மனதிலும் அலையும் என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி

சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்

சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்

சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்

முந்தைய கட்டுரைசுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்-நரோபா
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67