நத்தையின் பாதையில்… கடிதங்கள்

vc1

குருவியின் வால்

 

ஜெமோ,

இதுவரை மரபுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு தளங்களில் சுட்டிக்காட்டி வந்த நத்தையின் பாதை மெல்ல மெல்ல எழுத்தாளர்களை நோக்கி பயணப்படுவதை உணரமுடிகிறது.மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவர்களில், மிக முக்கியமானவர்களும் அவர்களே.

 

பெரும்பாலான எழுத்தாளர்கள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் (JK)கவரப்படுவது ஆச்சரியமளிக்கிறது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் ஸ்டெல்லா ப்ரூஸுக்கு JK விடமிருந்த ஈர்ப்பு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இக்கட்டுரையில் சுந்தர ராமசாமி.

 

சுவடுகளற்ற கலைஞனென நினைவு கூறப்படவேண்டும் எனறு சுரா எண்ணியிருப்பார் என்ற நுண்பகடி இரசிக்க வைத்தது. “எளிமையான ஆடம்பரம்” என்ற oxymoron சொற்றொடர் போல.

 

தன் சுவடுகளைப் பதிக்க விரும்பாத அறிவுஜீவிகளே கிடையாது. அதுதான் இயல்பும் கூட. நீங்கள் அடிக்கடி கூறுவதைப் போல தன்முனைப்பென்ற அகங்காரமின்றி எந்த ஆக்கமும் சாத்தியப் படுவதில்லை.

 

இச்சுவடுகளைப் பதிப்பதில் தவறேதுமில்லை; ஆனால் அச்சுவடுகளை காலம் முழுக்க தூக்கிச் சுமப்பது தான் தவறென்கிறாரா JK? என்னைப் பொறுத்தவரை நீங்கள் அவற்றை சுமப்பவரல்ல. விஷ்ணுபுரம் என்ற செவ்வியல் படைப்போடு நீங்கள் தேங்கவில்லை. அதற்கப்புறம் பின்தொடரும் குரலின் நிழல் என நீண்டு வெண்முரசாய் அதிர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்.

 

தன்னையே மத்தாக்கி கடைந்தெடுத்தவை தான் உங்களைப் போன்ற எழுத்தாளர்களின், கலைஞர்களின் மற்றும் பிறதுறை அறிவுஜீவிகளின் படைப்புகளும் ஆக்கங்களும்.

 

தன்னையே எரியூட்டி நெருப்பின் தழலை நிலைநிறுத்தி, அறியாமைக் கடலின் கலங்கரை விளக்கமாக திகழ்வதும்   அறிவுஜீவிகளே.

 

அன்புடன்

முத்து

 

 

அன்புள்ள ஜெ

 

நத்தையின் பாதை இன்றைய அத்தியாயம் மிகவும் சிந்திக்க வைத்தது. அனேகமாக எல்லா இலக்கியச்சிற்றிதழ்சார் சந்திப்புகளிலும் இலக்கியவாதிகள் தன்னடக்கத்துடன் ‘நான் எழுதறது நிலைக்கணும்னு நினைக்கலை. எனக்கு அப்டி காலத்திலே இருக்கணும்னு ஆசை இல்லை. ஏதோ எழுதறேன்’ என்று சொல்லவேண்டும் என நம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் சலிக்காமல் அதைச் சொல்லவும் செய்கிறார்கள்

 

ஆனால் காலம் என்னும் ஒன்றை உருவாக்குவதே எழுத்துதான். ஆகவே காலத்தில் நிலைப்பதே எழுத்தாளனின் முதல்வேலை. அவன் சவாலே அதுதான் என்று வாசித்தபோது ஒரு பெரிய தெளிவு கிடைத்தது. இலக்கியம் என்பதே ஒரு வரிசையை தொடர்ச்சியை ஒரு பெரிய கட்டுமனாத்தை உருவாக்குவதுதான்.

 

முக்கியமான கட்டுரை

 

ஜெயராமன்

 

 

நத்தையின் பாதை 1

காட்டைப்படைக்கும் இசை

தொல்காடுகளின் பாடல்

தன்னை அழிக்கும் கலை

இந்த மாபெரும் சிதல்புற்று

 

 

முந்தைய கட்டுரைவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…
அடுத்த கட்டுரைஇலக்கிய விருதுகள்