வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63

ஏழு : துளியிருள் – 17

fire-iconயௌதேயன் நொண்டியபடி ஓடி திகைப்புடன் தன்னை வந்து சூழ்ந்துகொண்ட காவலர்களிடம் “என்னை அஸ்தினபுரிக்கு கொண்டுசெல்லுங்கள்… ஒரு தேர் கொடுங்கள்!” என்று கூவினான். அங்கிருந்த காவலர்கள் ஓடிச்சென்று விழுந்துகிடந்த துர்மதனையும் துச்சலனையும் விருஷசேனனையும் தூக்கி அமரச்செய்து அருந்த நீரளித்தனர். சத்யசேனனும் சித்ரசேனனும் எழுந்து நின்றனர். சித்ரசேனன் இருமி குருதியை  துப்பினான்.

“தேர்கள்! தேர்கள் வருக!” என்று குரல்கள் எழுந்தன. “தேர்கள் இல்லை… வண்டிகள்தான் உள்ளன.” யௌதேயன் அருகே நின்ற ஒருவரின் தோளைப் பற்றியபடி “அவரிடம் என்னால் மட்டுமே பேசமுடியும்… என்னை அஸ்தினபுரிக்கு கொண்டுசெல்லுங்கள்” என்றான். “இளவரசே, புண்பட்டவர்களை கொண்டுசெல்வதற்கு மட்டுமே வண்டிகள் உள்ளன… தாங்கள் புரவியில்தான் செல்ல வேண்டும்” என்றான் முதன்மைக்காவலன். “நீர் நூற்றுவரா?” என்று யௌதேயன் கேட்டான். “ஆம், என் பெயர் சதயன்” என்றான் காவலர்தலைவன்.

“சதயரே, என்னை புரவியிலேற்றிச் செல்லுங்கள், என்னால் புரவி ஓட்டமுடியாது இப்போது” என்றான் யௌதேயன். சதயன் அவன் இடைபற்றி தூக்கிக்கொண்டு சென்று அங்கு நின்றிருந்த புரவியொன்றின்மேல் ஏற்றி அவன் பின்னால் தான் ஏறிக்கொண்டு கடிவாளத்தைப் பற்றினான். “நெஞ்சை புரவியின் முதுகின்மேல் அமர்த்தி படுத்துக்கொள்ளுங்கள், இளவரசே. அதிராமல் செல்ல முயல்கிறேன்” என்றான். யௌதேயன் “செல்க! செல்க!” என்று கூவினான். நெஞ்சு வலியில் விம்ம இருமி குருதி உமிழ்ந்தான். “செல்க… அவரை நாம் மறித்தாகவேண்டும்.”

புரவி அஸ்தினபுரிக்கான பாதையிலேறி விரையத் தொடங்கியது. யௌதேயன் அதன் ஒவ்வொரு குளம்படியும் தன் உடலில் கூரிய வலியொன்றை செலுத்துவதை உணர்ந்தான். பற்களைக் கடித்து உள்ளத்தை இறுக்கி அந்த வலியை உள்ளிருந்து செறுக்க முயன்றான். பலமுறை வலியலையால் அறைபட்டபின் அவ்வலிக்கெதிராக தான் அளிக்கும் எதிர்விசையே வலியைப் பெருக்குகிறது என்றுணர்ந்து உள்ளத்தை தளரவிட்டான். உடற்தசைகளும் மெல்ல தளர்ந்தன.

வலி எங்கோ ஒரு சவுக்குச் சொடுக்கல்போல நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் அதிலிருந்து பிரிந்தான். தொலைவில் எங்கோ செல்லும் வழியெங்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கியபடி முன்னேறும் பலராமரை உள்ளத்துள் கண்டான். எங்கோ ஓரிடத்தில் ஆற்றிடைக்குறையில் தன் எதிரே அமர்ந்திருந்த தளர்ந்த முதியவரை மறுமுனை உள்ளத்தால் பார்த்துக்கொண்டிருந்தான்.

மீண்டும் நினைவு வந்தபோது காவல்கோட்டமொன்று சிதைந்து கிடப்பதை கண்டான். ஏழு வீரர்கள் வெவ்வேறு வகையில் அடிபட்டு பிறரால் தூக்கி அமரவைக்கப்பட்டிருந்தனர். ஒருவனின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் குருதி கொட்டி மார்பு நனைந்திருந்தது. அவனைத் தூக்கியவனின் காது கிழிந்து தொங்கியது. இருவர் கைகளை தலைப்பாகை துணிகளால் தூளிகளாகக் கட்டி தொங்கவிட்டிருந்தனர். அவர்களில் ஒருவன் எழுந்து வந்து “மதுராவின் அரசர் வெறிகொண்டவர்போல் செல்கிறார்” என்றான். சதயன் “அரண்மனைக்கு செய்தி சென்றுவிட்டதா?” என்றான். “செய்திகள் பல முன்னரே சென்றுவிட்டன” என்றான் காவலன்.

அவர்கள் காவல்கோட்டத்தைக் கடந்து முன்னால் சென்றபோது வழியின் இருமருங்கும் காவலர்கள் விழுந்து கிடப்பதை கண்டனர். ஒரு களிறு அஞ்சி அலறிக்கொண்டிருந்தது. இரண்டு வேல்கள் வளைத்து வீசப்பட்டிருந்தன. மீண்டும் வலியை மிக அணுக்கமாக யௌதேயன் உணர்ந்தான். வாயில் குருதியின் சுவையை உணர்ந்து துப்பியபோது செங்கோழை காற்றில் சிதறி பின்னால் சென்றது. உள்ளிருந்து மீண்டும் மீண்டும் குருதி ஊறி வந்தது. கண்களுக்குள் சிவந்த குமிழிகளாக அது பறந்தது.

மீண்டும் களைத்த முதியவரின் நரைத்தாடி. அவர் தலையின் அந்த ஆறாத புண். அவர் விழிகளை மிக அண்மையில் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அருகே முகம் கொண்டுசென்று ஆடிப்பாவையை நோக்குவதைப்போல. அவர் துயர்கொண்டிருந்தார். ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். “அழிவின்மை… அழிவின்மை…” அவன் திகைத்தான். “பேரழிவல்லவா, மூத்தவரே?” என்றான். “பேரழிவில் திரண்டு எஞ்சும் அழிவின்மை…” அவன் அவர் விழிகளை நோக்கி சொல்லின்றி பதைத்து மீண்டும் உள்ளத்தை உந்தி “அழிவில் எழுவது எது?” என்றான். “அழியாத வலி… அணையாத துயர். நீங்காப் பெரும்பழி” என்றார் அவர்.

“அஸ்தினபுரி அணுகுகிறது, இளவரசே” என்று சதயன் சொன்னபோது “எங்கே?” என்றான் யௌதேயன். “நாம் நெருங்கிவிட்டோம்” என்றான் சதயன். “வழியெல்லாம் காவல்கோட்டங்களை நொறுக்கியபடி மதுராவின் அரசர் அதோ சென்றுகொண்டிருக்கிறார்.” யௌதேயன் அப்போதும் எதையும் புரிந்துகொள்ளாமல் “எங்கே?” என்றான். சதயன் “அதோ!” என்றான். யௌதேயன் கைகளை ஊன்றி உடலை மெல்லத் தூக்கி புரவியின் பிடரிமயிரைப் பற்றியபடி அப்பால் பார்த்தான்.

சாலையின் மறு எல்லையில் பலராமர் புரவியில் விரைவுநடையில் சென்றுகொண்டிருந்தார். இரு கைகளையும் விரித்து வெறியுடன் ஓலமிட்டபடி எதிர்கொண்ட அனைத்தையும் ஓங்கி உதைத்தபடி முன்னேறினார். “அவரை நம்மால் மறிக்கமுடியும், தடுக்கமுடியாது” என்று சதயன் சொன்னான். “ஆனால் கோட்டைவாயிலை மூட முடியும்.”

யௌதேயன் “ஒருபோதும் மூடமாட்டார்கள். தனியொரு மனிதனுக்காக அஸ்தினபுரியின் தொல்பெரும் கோட்டை மூடப்பட்டதென்றால் அது காலம்தோறும் நீளும் இளிவரல். அவரை படைத்திரள் கொண்டு எதிர்கொண்டால் அது மேலும் இழிவு. அவருக்கு நிகரான மல்லர் ஒருவர் வந்து எதிர்கொள்ளவேண்டும்” என்றான். “இன்று பிதாமகர் பீஷ்மரோ அங்கநாட்டரசர் கர்ணரோ மட்டுமே அதற்கு ஆற்றலுள்ளவர்கள்.” சதயன் “பிதாமகர் இங்கிருந்து முற்றிலும் உளம் அகன்றிருக்கிறார். அங்கநாட்டரசர் இப்போது சம்பாபுரியில் இருக்கிறார்” என்றான்.

அஸ்தினபுரியின் கோட்டையின் முகமுற்றம் நோக்கி பலராமரின் புரவி சென்றது. முன்னரே அவர் வருகையை அறிந்திருந்த காவல்வீரர்கள் இரு பக்கமும் விலகி வழிவிட்டனர். செல்லும் வழியெங்கும் இருந்த வணிகர்களும் தங்கள் வண்டிகளையும் அத்திரிகளையும் அவ்வாறே விட்டபடி அப்பால் ஓடினர். ஒரு மாட்டுவண்டியை ஓங்கி உதைத்து சரித்தபின் “எங்கே அவன்? அஸ்தினபுரியின் அரசன் எங்கே? இப்போது என் முன் வரச்சொல்க!” என்று கூச்சலிட்டபடி பலராமர் கோட்டைவாயில் நோக்கி சென்றார். “அவர்கள் அவரைத் தடுத்தால் இம்முற்றம் போர்க்களமாகும், பலர் உயிரிழப்பர்” என்றான் யௌதேயன். “ஆனால் அவர்களின் கடமை அது” என்று சதயன் சொன்னான்.

கோட்டைவாயில் காவலர்கள் தங்கள் படைக்கலங்களுடன் அசைவில்லாது நிற்பதை யௌதேயன் கண்டான். அவர்களின் அசைவின்மை ஏன் என்று புரிந்ததும் “அரசர்” என்றான். படைவீரர்களின் நடுவே அவையிலிருந்து முடிநீக்கி எழுந்துவந்த கோலத்தில் துரியோதனன் தோன்றினான். சதயன் கடிவாளத்தை இழுத்து “ஆம், அரசர்!” என்றான். அவன் புரவி முன்காலெடுத்து வைத்து தன்னை தான் மூன்று முறை சுழன்று நின்றது. கீழே விழாமலிருக்க அதன் பிடரியைப் பற்றியபடி உடல் குறுக்கி அமர்ந்திருந்த யௌதேயன் பெருமூச்சுவிட்டான்.

“அவரே வந்துள்ளார்” என்றான் சதயன். “அவரால் மாதுலரை எதிர்கொள்ள இயலாது” என்றான் யௌதேயன். “என்னை இறக்கிவிடுக! நான் சென்று அவரைப்பற்றி நிறுத்தவேண்டும். அவர்களிடையே போர் நிகழலாகாது.” சதயன் “அவர் போருக்கு வருபவர்போல் தோன்றவில்லை” என்றான். யௌதேயன் புரவியிலிருந்து நழுவியதுபோல் இறங்கி அவ்விசையில் நிலத்தில் விழுந்து கையூன்றி எழுந்து வலியுடன் முனகியபடி சதயனின் கைகளை பற்றிக்கொண்டு நிமிர்ந்து நின்று கண்மேல் கைவைத்து பார்த்தான்.

துரியோதனன் இரு கைகளையும் கூப்பியபடி கோட்டைக்கு வெளியே வந்து அசையாமல் நின்றான். கடிவாளத்தை பற்றிஇழுத்து புரவியை நிறுத்திய பலராமர் உரத்த குரலில் “மூடா! என் குலத்தான் கொண்ட பெண்ணை பிறிதொருவருக்கு மணம்செய்து கொடுக்கும் துணிவு உனக்கிருக்கிறதா? ஆண்மையும் தோளில் ஆற்றலும் இருந்தால் வந்து இக்களத்தில் என்னிடம் தோள்கோத்து நில்! நீ என்னை வெல்லவேண்டாம். அரைநாழிகைப் பொழுதுக்குமேல் நீ என்னுடன் நின்று போர்புரிந்தால் போதும், இங்கு இம்முற்றத்திலேயே சங்கறுத்து விழுந்து சாகிறேன். உன் விழைவு நிகழட்டும்” என்றார்.

துரியோதனன் “எதன்பொருட்டும் தங்களுடன் எதிர்நிற்க முயலமாட்டேன், ஆசிரியரே. அமைச்சர் கணிகரின் சொற்படியே இந்த மணத்தன்னேற்பு அமைக்கப்பட்டது. என்ன நிகழ்கிறதென்றே அறியாத சினவெறியில் நான் இருந்தேன். என் பிழை இது. தங்கள் ஆணை எதுவோ அதுவே என்னை ஆளும் முற்றிறுதிச் சொல். அது எதுவானாலும் என் தலைசூடும் அணி” என்றான். “அவள் என் குலத்து நிறைமகள். என் குலத்தான் முறைப்படி அவளை மணக்கவேண்டும்” என்றார் பலராமர். “ஆணை” என்றான் துரியோதனன்.

புரவியிலிருந்து தாவி இறங்கிய பலராமர் “இந்த நகரியில் அவர்கள் திருமணம் நிகழவேண்டும். நீ கைபற்றி அவளை அவனுக்கு அளிக்கவேண்டும்” என்றார். துரியோதனன் “ஆம், அதுவும் தங்கள் ஆணை எனில் என் நகரும் குடியும் அதை ஏற்கும்” என்றான். “என் குலத்து இளையோர் விடுதலை செய்யப்படவேண்டும். அவர்கள் அரசமுறைப்படி அவையமர்த்தப்படவேண்டும்” என்று பலராமர் சொன்னார். “அவ்வண்ணமே, ஆசிரியரே” என்று துரியோதனன் சொன்னான்.

இரு தோள்களும் மெல்ல தளர அதுவரை உந்திக்கொண்டுவந்த விசையனைத்தும் உடலிலிருந்து விலக பலராமர் “அஸ்தினபுரியின் அரசே, நான் உன் ஆசிரியன். நான் உனக்களித்த கல்விக்கு ஆசிரியக்கொடையென்றே இதை கோருகிறேன்” என்றார். “ஆசிரியரே, கொடையென தாங்கள் இந்நகரை, இந்நிலத்தை கோரலாம். என் கொடிவழிகள் முழுமையும் தங்களுக்கு அடிமையாக வேண்டுமென்றிருந்தால் அதையும் கோரலாம். எனது இம்மையையும் மறுமையையும்கூட கோரலாம். இதுவரை தாங்கள் சொன்னவை தங்கள் ஆணைகள், அவை முழுமையாக ஏற்கப்பட்டுவிட்டன. ஒரு தருணத்திலும் உங்கள் விழைவுக்கு அப்பால் என் எண்ணம் என்று ஒன்று அமையப்போவதில்லை” என்று துரியோதனன் சொன்னான்.

அவன் சொன்னவை உள்நுழையாதவர்போல பலராமர் தளர்ந்த கைகளுடன் நின்றார். பின்னர் உடல் அம்பு தைத்ததுபோல் அதிர மெல்லிய விம்மலோசை எழ இரு கைகளையும் விரித்தார். துரியோதனன் அவரை அணுகி அவர் காலடி தொட்டு தன் சென்னிசூடினான். குனிந்து அவனை அள்ளி தன் தோள்களுடன் அவர் அணைத்துக்கொண்டார். விம்மியழுதபடி “நீ விண்நிறைந்த என் ஆசிரியர்களின் மெய்த்தோற்றம்” என்றார். அவன் முதுகில் அவருடைய விழிநீர் வெம்மணிகள் உதிர்ந்தன.

கமறிவந்த தொண்டையுடன் “நான் எளியவன். உன்னை அறியும் விழியற்றவன்” என்றார். துரியோதனன் விழிநீர் வழிய “உங்கள் பேரன்பை அறிந்தவன் நான், ஆசிரியரே. அன்பின்பொருட்டு மதம்கொண்டு எழுவதனால்தான் நீங்கள் என் நல்லாசிரியர். இன்று பிறவிநிறைவடைந்தேன்” என்றான்.

fire-iconகோட்டையின் உள்முற்றத்தில் கைவிடுபடைகள் அமைந்த திடல் அருகே துரியோதனனின் அரசத்தேர் நின்றிருந்தது. அதன் அருகே துச்சாதனனும் சுபாகுவும் வணங்கி நின்றனர். துரியோதனன் “ஆசிரியரே, தாங்கள் என் அரண்மனைக்கு எழுந்தருள வேண்டும்” என்றான். சினம் தணியும்தோறும் தசைகள் தளர்ந்து, உடல் விசை அவிந்து, கண்ணிமைகள் சரிய மது உண்டவர்போல பலராமர் தள்ளாடினார். துரியோதனனின் தோள்களைப் பற்றியபடி “ஆம், வருகிறேன்” என்றார்.

அவன் அவரை மெல்ல நடத்தி தேரருகே கொண்டுவந்தான். துச்சாதனனும் சுபாகுவும் வந்து அவர் கால்களைப் பணிய சொல்லின்றி அவர்களின் தலைகளைத் தொட்டு வாழ்த்தினார். “ஏறிக்கொள்க, ஆசிரியரே!” என்றான் துரியோதனன். அவர் அதன் பொற்செதுக்குப்பணிகளை அப்போதுதான் விழிகொண்டு “இது உனது பட்டத்துத் தேரல்லவா?” என்றார். “ஆம், தங்கள் ஊர்தி. ஏறுக, நான் தங்கள் அருகே நின்றுகொள்கிறேன்” என்று துரியோதனன் சொன்னான்.

அவர் மேற்கொண்டு சித்தம் ஓடாமல் அதில் ஏறி அரியணையில் அமர்ந்தார். அப்போது அவர் தன் கால்களின் அமரும் விழைவை மட்டுமே அறிந்துகொண்டிருந்தார். அவர் அருகே துரியோதனன் நின்றான். துச்சாதனன் கைகாட்டியதும் புரவிகள் செருக்கடித்து மணிகள் குலுங்க கிளம்பின. தேர் வெண்கலக் குடத்திற்குள் அச்சு வெண்ணையில் என சுழல ஓசையில்லாது நீரில் மிதப்பதுபோல மென்புழுதியாலான அரசவீதியினூடாக அரண்மனை நோக்கி சென்றது.

அரசவீதியின் இருபுறமும் அஸ்தினபுரியின் வீரர்கள் திரண்டு “மதுராவின் அரசர் வாழ்க! அஸ்தினபுரி வேந்தர் வாழ்க! குருகுலம் வெல்க! யாதவகுலம் வெல்க!” என்று குரலெழுப்பினர். முற்றிலும் உள்ளம் அகன்று இரு கைகளையும் மடியில் வைத்து கண்களை மூடி தலையை பின்னுக்குச் சாய்த்து பலராமர் அமர்ந்திருந்தார். அவர் கைவிரல்கள் ஒவ்வொன்றாக விடுபடுவதையும் தாடை கீழிறங்கி வாய் திறப்பதையும் கால்கள் தளர்ந்து அகல்வதையும் துரியோதனன் பார்த்தான். மெல்லிய குறட்டை ஒலி ஒன்று அவரிடமிருந்து எழுந்தது.

வாழ்த்தொலிகள் சூழ தெருக்களினூடாக ஓடி அரண்மனைக் கோட்டையைக் கடந்து புஷ்பகோஷ்டத்தின் வாயிலில் தேர் சென்றுநின்றது. அவ்வோசை கேட்டு விழித்துக்கொண்ட பலராமர் “எங்கு வந்திருக்கிறோம், இளையவனே?” என்றார். “என் அவைக்கு, ஆசிரியரே” என்றான் துரியோதனன். “நீயா?” என வாயை துடைத்துக்கொண்ட அவர் “ஆம், நீ… இது அஸ்தினபுரி” என்றார். “தாங்கள் அவை நுழையவேண்டும், ஆசிரியரே” என்றான். “நான் களைத்திருக்கிறேன். என் உடலெங்கும் புழுதியும் மண்ணும் படர்ந்துள்ளது” என்றார். “அவ்வண்ணமே அவைக்கு வருக! அது தாங்கள் யாரென்று என் அவைக்கு காட்டும்” என்று துரியோதனன் சொன்னான்.

பலராமர் அதன் பின்னரே நிகழ்ந்த அனைத்தையும் உணர்ந்ததுபோல திடுக்கிட்டு எழுந்து “இளையோர் என்ன ஆயினர்? விருஷசேனன் எவ்வாறிருக்கிறான்?” என்றார். தேரிலிருந்து பாய்ந்திறங்க முயன்றவரை துரியோதனன் தோள்பற்றி தடுத்தான். சுபாகு “அவர்கள் நன்கு தாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆசிரியரே. ஆனால் அவையனைத்தும் தந்தையின் அடிகள்தான். பெரிய தீங்கென ஏதுமில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள்” என்றான்.

பிறிதொரு சிறிய தேர் கோட்டைக்குள் நுழைந்து நின்ற ஒலிகேட்டு பலராமர் திரும்பிப்பார்த்தார். “அது என் முறைமைந்தன் யௌதேயன். என்னுடன் தூதனாக வந்தான்” என்றார். துரியோதனன் “ஆம், மூத்த பாண்டவனின் அதே உருக்கொண்டவன். அவனை அவைக்கு அழைத்து வருக!” என்றான். யௌதேயன் தேரில் உடல்சுருண்டு முகம் தாழ்த்தி அமர்ந்திருந்தான். “அவனுக்கு என்ன ஆயிற்று?” என்று பலராமர் கேட்டார். “ஒன்றுமில்லை. களைப்பென எண்ணுகிறேன்” என்றான் துச்சாதனன்.

சுபாகு தேரிலிருந்து இறங்கிச்சென்று யௌதேயனை தோள்பற்றி கீழிறக்கினான். “அவனுக்கு என்ன ஆயிற்று? நோயுற்றிருக்கிறானா?” என்று பலராமர் கேட்டார். “ஒன்றுமில்லை. தங்கள் கைபட்டுவிட்டது. மற்போர் பயிற்சி இல்லாதவனாதலால் சற்று வலி மிகுந்துள்ளது. மருத்துவநிலை சென்று ஓய்வெடுத்தபின் அவைபுகமுடியும் என்று நினைக்கிறேன்” என்றான் சுபாகு. “மாலைக்குள் சீரடைந்துவிடுவான்” என்று துச்சாதனன் சொன்னான்.

“நன்று. அவைபுகுக, ஆசிரியரே!” என்று சொல்லி துரியோதனன் அவர் கைகளைப்பற்றி “வருக!” என்று அழைத்துச் சென்றான். பலராமர் நிமிர்ந்த தலையுடன் எடைமிக்க பெருந்தோளர்களுக்குரிய முறையில் கைகளை வீசி அவனுடன் தொடர்ந்து சென்றார். அவருக்குப் பின்னால் சுபாகுவும் துச்சாதனனும் சென்றனர். அஸ்தினபுரியின் அவை வாயிலில் நின்ற மங்கலச்சூதர்கள் நல்லிசை முழக்கினர். வீரர்கள் வாழ்த்தொலி கூவினர். “அவை நுழைக, அரசே” என்று சொல்லி துரியோதனன் பலராமரை வணங்கி அவைக்குள் அழைத்துச் சென்றான்.

பலராமர் அவையின் பெருங்கதவு திறந்ததும் மீண்டும் கால்கள் தளர்ந்தார். துரியோதனனின் தோளையும் துச்சாதனனின் தோளையும் பற்றிக்கொண்டு தயங்கி நின்றார். அவர்கள் மெல்ல நடக்க அவர் கால்கள் மரத்தரையில் உரச உடன் நடந்தார். அஸ்தினபுரியின் அவைக்குள் நுழைந்ததும் அங்கு எழுந்த வாழ்த்தொலிகளால் திடுக்கிட்டு நின்றார். அவையினர் அனைவரும் எழுந்து “மதுராவின் அரசர் வெல்க! யாதவக் குடித்தலைவர் வெல்க!” என வாழ்த்துரைத்தனர். அதன் பின்னரே அவர் நினைவு வந்து அவர்களை கைகூப்பி வணங்கினார்.

பலராமரின் தலை ஆடிக்கொண்டிருந்தது. கூப்பிய கைகளுடன் அவர் அவையில் அசையாமல் நின்றார். துச்சாதனன் “அவை முறைமைகள், ஆசிரியரே” என்றான். “என்ன?” என அவர் திடுக்கிட்டு கேட்டார். “அவை முறைமைகள் நிகழட்டும்” என்றான். “ஆம்” என்றபின் அவர் கூப்பிய கைகளுடன் தளர்நடையில் சென்று அவைமுகப்பில் இருந்த பீஷ்மரை அணுகி கால்தொட்டு சென்னிசூடினார்.

நீண்டு மெலிந்த உடலை ஒடித்து பக்கவாட்டில் சற்றே சாய்ந்து அரைத்துயிலில் பீஷ்மர் அமர்ந்திருந்தார். அணுகிவந்த அவருடைய எடைமிக்க காலடியோசையைக் கேட்டு திடுக்கிட்டவர்போல் விழித்து “யார்?” என கிழக்குரலில் கேட்டார். தொய்ந்த கண்வளைய மென்தசைகளுக்குள் சேற்றில் மணியென புதைந்திருந்த விழிகள் சற்று அலைபாய்ந்தன. “ஆ, நீ பீமனல்லவா?” என்றார். “அல்ல, நான் பலராமன். மூத்த யாதவன்” என்றார் பலராமர். “ஆம், நீ பலராமன்” என்ற பீஷ்மர் “பீமன் எங்கே?” என்றார். துச்சாதனன் “பிதாமகரே, மூத்த யாதவர் தங்கள் அருள்கோருகிறார்” என்றான்.

“ஆம்” என தன்னுணர்வுகொண்ட பீஷ்மர் பலராமரின் தோள்கள்மேல் கைவைத்து மெல்ல தடவி “பேருடல் கொண்டிருக்கிறாய்… மற்போர் பயின்றவனல்லவா?” என்றார். “ஆம், மூத்தவரே. ஒருமுறை தங்களுடனும் போர் புரிந்திருக்கிறேன்” என்றார் பலராமர். பீஷ்மர் மெல்ல புன்னகை விரிந்து முகம் அசைய “மறுமுறையும் நாம் போர் புரிவோம். தகுதியானவரிடம் போரிட்டு நெடுநாட்களாகின்றன” என்றார். “அப்பேறு வாய்க்கட்டும், பிதாமகரே” என்ற பலராமர் துரோணரையும் கிருபரையும் வணங்கிவிட்டு அவை மேடைக்கு வந்தார்.

துரியோதனன் “அமர்க, ஆசிரியரே” என்று தனது அரியணையை காட்டினான். பலராமர் “மூடா, இது குருகுலத்து அரியணை” என்றார். “ஆசிரியர் மாணவரின் இருக்கையில் அமரலாம் என நெறியுள்ளது. தாங்கள் இதில் அமர்வதும் நான் அருகே நிற்பதும் என் குடிக்கு பெருமை. அமர்க!” என்று துரியோதனன் சொன்னான். பலராமர் “ஆனால்…” என்று தயங்கினார். “அமர்ந்து எனக்கு அருள்க, ஆசிரியரே” என்றான் துரியோதனன். பலராமர் திரும்பி விதுரரை நோக்க விதுரர் “அமர்வதில் வழுவில்லை. தாங்கள் இங்கு ஆசிரியராக அவை புகுந்துள்ளீர்கள்” என்றார்.

“சிற்றரசர்களின் அரியணைகளில் சக்ரவர்த்திகள் அமர்ந்தருள்வதும் வழக்கமே” என்றான் துரியோதனன். “தாங்கள் யாதவ குலத்திற்கு முதல்வர் என்ற வகையிலும் இவ்வரியணையில் தாங்கள் அமர்வது குறித்து அஸ்தினபுரி பெருமிதமே கொள்கிறது.” தலைநடுங்க நெஞ்சுடன் சேர்த்து கைகூப்பியபடி பலராமர் அரியணையில் அமர்ந்தார். அவையினர் எழுந்து கைகளைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். “குருகுல மணிமுடி வெல்க! யாதவ முதல்வர் வெல்க!”

பலராமரின் இரு கால்களும் நடுங்கிக்கொண்டிருந்தன. அவரால் விழிகொண்டு அவையை நோக்க இயலவில்லை. அவர் அருகே உடைவாளை ஊன்றியபடி துரியோதனன் நின்றான். அவனுக்குப் பின்னால் அவன் தம்பியர் பன்னிருவர் நிரைகொண்டனர். மூன்று அமைச்சர்கள் அஸ்தினபுரியின் செங்கோலை கொண்டுவந்து பலராமரின் கையிலளிக்க அவர் அதை வாங்கி ஊன்றி உடல்நீட்டி தலைநிமிர்ந்து அமர்ந்தார். வாழ்த்தொலிகள் அமைந்ததும் “இந்த அவை தங்களுடையது. தாங்கள் விரும்பும் எந்த ஆணையையும் இங்கு பிறப்பிக்கலாம், ஆசிரியரே” என்றான் துரியோதனன்.

செங்கோலை கையிலேந்தி எழுந்த பலராமர் அவையை நோக்கி சொல்லில்லாமல் திகைத்து நின்றார். பெருமூச்சுகள் மட்டும் நெஞ்சுலைய அவரிடமிருந்து எழுந்துகொண்டிருந்தன. பின்னர் இருமுறை தொண்டையைக் கனைத்து “இந்த அவைக்கு முன் நான் உரைப்பது ஒன்றே. என் மைந்தனின் துணைவி பிறந்த நகர் இது. என் குடிக்கு அரியணைமுறைமை அளித்த அவை. இதன்பொருட்டு என் குடி என்றென்றும் கடன்பட்டிருக்கும்” என்றார்.

உடல் பதற, நடுங்கும் கைகளால் செங்கோலை மேலே தூக்கி “தெய்வங்கள் அறிக! நீத்தோர் கேட்கட்டும். மூதாதையர் வாழ்த்தட்டும். யாதவக்குடி எந்நிலையிலும் அஸ்தினபுரியின் காவலிலிருந்து மாறாது என நான் இதோ சொல்லளிக்கிறேன். படைகொண்டு களம் நிற்கவும், குருதிசிந்தி தலைகொடுக்கவும் யாதவர் அஸ்தினபுரியுடன் இருப்பர். அஸ்தினபுரியின் எதிரிகள் எவராயினும் யாதவக்குடிக்கும் எதிரிகளே. இது அழியாச் சொல்லுறுதி. என்னை என் குடியை என் கொடிவழிகளை இது ஆள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அஸ்தினபுரியின் அவை எழுந்து நின்று “ஆம்! ஆம்! ஆம்!” என அதை சொல்லேற்பு செய்தது. வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. அவைமுரசுகள் முழங்க அதைக் கேட்டு வெளியே பெருமுரசங்கள் உறுமத்தொடங்கின. நகரெங்கும் காவல்மாடங்களிலும் கோட்டைமுகப்புகளிலும் பெருமுரசுகள் பேரொலி எழுப்ப அஸ்தினபுரியே பெருமுரசென்றாயிற்று.

முந்தைய கட்டுரைஇலக்கிய விருதுகள்
அடுத்த கட்டுரைசுரேஷ் பிரதீப் பேட்டி