இளவெயிலும் பனித்திரையும்

 

IMG_20171109_125718 (1)

மத்யப்பிரதேசம் சென்று வந்ததுமே அருண்மொழியுடன் எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. ஒரு சின்ன தேனிலவுப் பயணம். வழக்கமாக ஆண்டுக்கொருமுறை வெளிநாட்டுப்பயணம் ஒன்று அமையும். இம்முறை நிகழவில்லை என்பதனால் இது.

கிளம்புகிறோம் என்று போனில் கூப்பிட்ட போகனிடம் சொன்னேன். “தேனிலவிலாவது மனைவியை பேசவிடும் ஒருவழக்கம் உலகமெங்கும் உண்டு. பொதுவாகச் சொன்னேன்” என்றார். அதை நான் கேள்விப்பட்டதில்லை. சரி இருக்கட்டுமே என பேச்சை குறைத்தேன். ஆனால் “உன் நண்பர்களிடம் என்றால் வளவளவென்று பேசுவாய். என்னிடம் மட்டும் எப்ப பார் உம் சொல்லு சொல்லுதான்…” என அதற்கும் கோபம் வந்தது. போகனே அவ்வளவு ஒன்றும் இளைஞர் அல்ல என்பது அதன்பின்னரே உறைத்தது

கல்பற்றா நாராயணனின் இரண்டாவது மகனின் திருமணம். அதற்காக 5 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று கோழிக்கோடு சென்றோம். அங்கே அளகாபுரியில் தங்கினோம். கோழிக்கோடு இளமழையுடன் பழமை அதிகம் மாறாமல் இருந்தது. அளகாபுரி ஓரு பழைய ஓட்டல். அங்கேதான் அன்றெல்லாம் எழுத்தாளர்கள் கூடுவார்கள். பல குறிப்புகளில் அளகாபுரி வந்துகொண்டே இருக்கும். நகர்மையத்தில் விசாலமான முற்றமும் விரிவான அறைகளும் கொண்டது.

sk
எஸ்.கே பொற்றேக்காடு

 

Thikkodian
திக்கோடியன்

கோழிக்கோட்டின் எழுத்தாளர் என்றால் எஸ்.கே.பொற்றேக்காடுதான். அவருக்கு அங்கே ஒரு சிலை நிறுவப்பட்டு அந்த தெருவே அவர் பெயரில் அழைக்கப்படுகிறது. அங்கே வாகனங்கள் செல்வது தடைசெய்யப்படும் என்றார்கள். முழுக்க முழுக்க இலக்கிய அரட்டைக்கான ஒரு தெருமுனை. அவருடைய தோழர் திக்கொடியனை அவரிடமிருந்து பிரித்துப்பார்க்கமுடியாது.

எஸ்.கே.பொற்றேக்காட்டின் விஷகன்னி, ஒரு தெருவின் கதை, ஒரு கிராமத்தின் கதை ஆகிய நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஒரு கிராமத்தின் கதைக்காக ஞானபீடப் பரிசு பெற்றார். இடதுசாரி வேட்பாளராக வென்று பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். பயண இலக்கியத்தின் முன்னோடி. மிகக்குறைந்த செலவில் உலகம் முழுக்க சுற்றிவந்தவர்

மலையாளச் சிறுகதை முன்னோடி உறூப் என்னும் பி.சி.குட்டிக்கிருஷ்ணன் கோழிக்கோட்டுக்காரர். ஆனால் அங்கே தங்கியவர் அல்ல.என்.வி.கிருஷ்ண வாரியர் போன்றவர்களையும் கோழிக்கோட்டின் மைந்தர்கள் என்பார்கள். ஆனால் அவர்களும் கோழிக்கோடு ஜமாவைச் சேர்ந்தவர்கள் அல்ல.

np
என் பி முகம்மது

mt-vasudevan-nair

அடுத்த தலைமுறையில் என் .பி.முகம்மது, அவருடைய உடன்பிறவா சகோதரரான எம்.டி.வாசுதேவன் நாயர் [இருவரும் இணைந்தே ஒருநாவல் எழுதியிருக்கிறார்கள் -அரபிப்பொன்னு] நாடக ஆசிரியர் கே.டி.முகம்மது, திரைக்கதை ஆசிரியர் கே.தாமோதரன் [ஈநாடு புகழ்] என கோழிக்கோட்டின் முகங்கள் பல. கோழிக்கோட்டில் மூன்று நாளிதழ்களின் தலைமையகங்கள் உள்ளன. மாத்ருபூமி, சந்திரிகை, மாத்யமம். அதனால்தான் அது ஒரு இலக்கியத்தலைநகர் ஆக விளங்குகிறது.

எம்.டி கோழிக்கோட்டுக்காரர் அல்ல. அவருடைய ஊர் திரிச்சூர் அருகே உள்ள கூடல்லூர். ஆனால் மாத்ருபூமி நாளிதழில் பணிபுரிய கோழிக்கோட்டுக்கு வந்தவர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.  ஆனால் கோழிக்கோட்டின் நிலமோ வாழ்வோ எம்.டி.கதைகளில் இல்லை. அவருடைய நிலம் கூடல்லூர்தான்.

BASHEER
பஷீர்

 

punathil-kunjabdulla
புனத்தில்

பிரியத்திற்குரிய புனத்தில் இக்கா கோழிக்கோட்டின் சமகால [சிரிக்கும்] முகம். இன்று அவர் இல்லாத கோழிக்கோடு.வைக்கம்காரரான பஷீர் அளகாபுரியில் தங்கியிருந்தபோதுதான் சைத்தானை நேரில் பார்த்தார். ஆகவெ உரிய சிகிழ்ச்சைக்குப்பின்னர் எஸ்,கே,பொற்றேக்காடும் எம்.டி.வாசுதேவன்நாயரும் இணைந்து அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

கோழிக்கோடு அருகே போப்பூரில் அவர் இருந்தார். இப்போது அங்கே மகள் சாகினா வாழ்கிறார். நான் அவரை போப்பூர் சென்று பார்த்திருக்கிறேன். அவர் ‘நான் இங்கே ஒரு சுல்தானைப்போல வாழ்கிறேன்’ என எழுதிய பின்னர் போப்பூரின் சுல்தான் என அழைக்கப்பட்டார்

காலையில் திருமணத்திற்குச் சென்றோம். கே.சி.நாராயணன் வந்திருந்தார். அவருடைய மனைவி இறந்தபின்னர் அப்போதுதான் பார்க்கிறேன். தனிமையின் சுமையுடன் ஆனால் உற்சாகமாக இருந்தார். மலையாளக் கவிஞர்கள் வீரான் குட்டி,   பி.பி.ராமசந்திரன்ஆ,கியோர் வந்திருந்தனர். டி.பி.ராஜீவன் இப்போது நாவல், திரைக்கதை என சென்றுவிட்டார். [பாலேரிமாணிக்யம் புகழ்] எழுத்தாளர்கள் வி.ஆர்.சுதீஷ், அம்பிகாசுதன் மங்காடு, யூ.கே.குமாரன் என பலரை சந்தித்தேன்.

download (1)
கல்பற்றா நாரயணன்
கே.சி.நாராயணன்
கே.சி.நாராயணன்
06lr_rajeevan_jpg_380595e
டி.பி.ராஜீவன்

 மலையாளக் கவிஞர் ஓ.பி.சுரேஷ், சிறுகதையாசிரியர் ஜயன் சிவபுரம் ஆகியோருடன் மாலை போப்பூருக்குச் சென்றேன். போப்பூர்தான் பழைய கோழிக்கோடு. அங்கேதான் துறைமுகம் இருந்தது. வாஸ்கோட காமா வந்து இறங்கியதும் அங்கேதான். படிப்படியாக சாலியாற்றில் நீர் குறைந்து அழிமுகம் மணல்மேடாக ஆனபோது போப்பூர் புறநகராக மாறியது. இன்று அருமையான ஒரு கடற்கரை. நாங்கள் சென்றபோது தூண்டில்வளைவின் மேல் விளக்குநிரையுடன் ஏதோ வெளிநாடுபோலிருந்தது

 கோழிக்கோடு கடற்கரையில் குடும்பஸ்ரீ என்னும் அரசுநிதிபெறும் மகளிர்குழு நடத்திய உணவுத்திருவிழா. அதில் ஒருபகுதி இருபாலினத்தாருக்கு ஒதுக்கப்பட்டது. அற்புதமான கேரள உணவு. நெல்லிக்காய்ச் சாறு கலந்த சர்பத்.அதன்பின் மீனுடன் வெள்ளையப்பம், பத்திரி.

வீரான் குட்டி
வீரான் குட்டி
அம்பிகாசுதன் மங்காடு
அம்பிகாசுதன் மங்காடு

 

யூ கே குமாரன்

vr
வி.ஆர். சுதீஷ்

ஓ.பி.சுரேஷ் தேசாபிமானி இதழில் பணிபுரிகிறார். கேரளத்தின் இடதுசாரிக் கவிஞர்களில் ஒருவர். மலையாள மனோரமாவில் பணியாற்றும் ஜயன் சிவபுரம் சிறுகதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர். அவருடைய யாத்ர துடருந்நு ஒரு கவனிக்கப்பட்ட படம். லோகிததாஸின் சீடர்களில் ஒருவர்.

இந்நண்பர்களில் பாதிப்பேர் அருண்மொழிக்குத் தெரிந்தவர்கள். எஞ்சியவர்களுக்கு என் எழுத்துக்கள் வழியாக அருண்மொழி நல்ல அறிமுகம். அவள் கோழிக்கோடு செல்வது முதல்முறை. ஆகவே அங்கே ஒரு நட்சத்திரவரவேற்பை அவள்பெற்றாள்.

ஜயன் சிவபுரம்
ஜயன் சிவபுரம்
ஓ.பி.சுரேஷ்
ஓ.பி.சுரேஷ்

மறுநாள் விடிகாலையில் ரயிலேறி எர்ணாகுளம் வந்தோம். மழை நிறைந்த கேரளத்தைப் பார்த்தபடி பகல்ரயிலில் வந்தது இனிய காட்சியனுபவம். எர்ணாகுளத்திற்கு கார் வந்திருந்தது. அங்கிருந்து கட்டப்பனா சென்றோம். அங்கே அரசு கலைக்கல்லூரியில் ஓர் உரை

எர்ணாகுளம் கட்டப்பனா மலைச்சாலை மிக அழகியது.செங்குத்தான மலைவளைவுகளுக்குக் கீழே பசுமைக்கடலாக காடுகள். இடுக்கிக்கு நீர் அளிக்கும் – அணை. ஆறுகள் அருவிகளாக கொட்டிக்கொண்டிருந்தன. மலைகள் முழுக்க அருவிகள் பெருகிவழிந்தன

கட்டப்பனாவில் விடுதியில் தூறல்மழையில் ஓர் இரவு. கட்டப்பனையில் கூட விடுதிப்பணி வங்காளத்திலிருந்து வந்தவர்கள்தான். கேரளத்தில் மலைப்பகுதிகள் மிகச்செல்வ வளம் மிக்கவை. பங்களா அல்லாத வீடுகளே மிக அரிது. கட்டப்பனாவுக்கு அழைத்ததும் நான் அங்கே செல்ல முடிவெடுத்தமைக்குக் காரணம் ஒன்று உண்டு. அது என் நண்பர் ஷாஜியின் ஊர்.

ஷாஜி
ஷாஜி

ஷாஜி அருகே உள்ள செண்பகப்பாறை என்னும் ஊரில்தான் பிறந்தார். அவருடைய தம்பி பென்னி மறுநாள் காலை எங்களை வந்து அழைத்துச்சென்று அப்பகுதியைச் சுற்றிக்காட்டினார். பசுமைக்குன்றுகள். ஆனால் அனைத்துமே மாபெரும் கட்டிடங்களை சூடியிருந்தன. மிக விரைவாக கட்டிடங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு சுற்றுலாமையங்கள், கல்லூரிகள், உறைவிடப்பள்ளிகள்.

அடையாளப்பாறை என்னுமிடத்திற்கு பென்னி அழைத்துச்சென்றார் அது ஒரு தொன்மையான பெருங்கல். இருபத்தைந்தாயிரம் ஆண்டுகளாவது தொன்மை இருக்கும். அதை பத்ரகாளி என வழிபடத் தொடங்கி இப்போது ஆலயமே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஷாஜி படித்த பள்ளியைப் பார்த்தோம். 13 கிமீ தினமும் நடந்து வந்து படித்திருக்கிறார். உருப்படியாகப் படித்திருந்திருக்கலாம்.  இனிமேல் சொல்லிப்பயனில்லை

பென்னியின் வீட்டிற்குச் சென்று காலையில் மாட்டிறைச்சிப் பொரியல், சிக்கன் கறி, மீன்கறி, மீன்பொரியல், மரவள்ளிக்கிழங்கு, ஆப்பம் ஆகியவற்றுடன் ‘சிற்றுண்டி’ அருந்தினோம். ஷாஜியின் அம்மாவைப் பார்த்தோம். அவர் வீட்டருகே இப்போது பேருந்துகள் வருவதைப்பற்றி பெருமிதத்துடன் சொன்னார்.

எஸ்.கே.பொற்றேக்காட்டின் சிலை, கோழிக்கோட்டில்
எஸ்.கே.பொற்றேக்காட்டின் சிலை, கோழிக்கோட்டில்

பென்னி அபாரமான மனிதர். ஷாஜியிடம் பிறருக்கு அசௌகரியம் உண்டுபண்ணுமளவுக்கு ஒரு நேர்மை உண்டு. அது அவரிடமும் இருந்தது. பாகற்காய், ஏலக்காய் உட்பட அனைத்துமே அங்கே உச்சகட்ட விஷமிட்டே வளர்க்கப்படுகின்றன என்றார். விஷமிட்டு மனிதர்களுக்கு கொடுக்கலாகாதென்பதனால் அவர் அவற்றை விவசாயம் செய்வதில்லை. மரவள்ளிக்கிழங்குதான், ஆனால் இந்த ஆண்டு கிலோ ஐந்துரூபாய்க்கு கொள்முதல் செய்கிறார்கள். கொள்முதல்கூலிகூட கிடைப்பதில்லை, ஆகவே வயலில் கிழங்கை அப்படியே விட்டுவிட்டேன் என்றார்.

கட்டப்பனை கல்லூரியில் ஒரு சிற்றுரை. ‘இந்திய இலக்கியத்தின் காலகட்டங்கள்’.அது முடிந்ததும் நேராக பீர்மேடு. அங்கே கேரள அரசு நடத்தும் டாமரிண்ட் விடுதியில் தங்கினோம். வசதியான அறை, நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. வழக்கமாக நாங்கள் வந்தால் பீர்மேடு கிருஷ்ணன்கோயிலை ஒட்டிய அரசு விடுதியில் தங்குவோம். கிட்டத்தட்ட இலவசமாக.

aruna

மாலையில் பருந்துப்பாறைக்குச் சென்றோம். கேரளத்தின் உயரமான இடங்களில் ஒன்று. செங்குத்தான மலை உச்சி. அரபிக்கடலில் இருந்து மழைமுகில்கள் வந்து சூழும் இடம். குளிர், சூழ்ந்திருக்கும் பசுமை. பயணிகள் அதிகமில்லை. மழை இருக்கவேண்டும், ஆனால் இருக்கவில்லை. நாங்கள் கிளம்பியபின் மழை தொடங்கியது

மறுநாள் வாகைமண் சென்றோம். பேருந்திலேயே பயணம்,. மூன்று முறை பேருந்தில் இறங்கி ஏறி குட்டிக்கானம், ஏலப்பாறை வழியாக வாகமண் பத்தாண்டுகளுக்குமுன் நாங்கள் மழைப்பயணமாக வந்தபோது அது ஆளில்லா புல்வெளிப்பரப்பு. இப்போது சுற்றுலாமையமாக ஆகிவிட்டது. விடுமுறைநாட்களில் பெருங்கூட்டம் வரும் எனச் சொன்னார்கள்.

புல்வெளிகள் மௌன அலைகளாக விரிந்து கிடந்தன. அதில் ஆங்காங்கே அமர்ந்தும் நடந்தும் சுற்றிவந்தோம். பழைய நினைவுகள், அவற்றுடன் இணைந்த பழைய பாடல்கள். இளவெயில் தித்திப்பதை மலைப்பகுதிகளில்தான் பார்க்கவேண்டும்

ar

வாகமண்ணிலேயே மீன்சாப்பாடு.  அருண்மொழிக்கு மலையாள உணவு பிடிக்கும் என்பதனால் மொட்டையரிசிச்சோறும் மீன்குழம்பும் சாளைபொரித்ததும் அவளால் மிகவும் விரும்பி உண்ணப்பட்டன. மத்தி நன்றாகப் பொரிந்திருந்தது இளவெயிலுக்கு இனிமை சேர்த்தது என்பதைச் சொல்லியாகவேண்டும். ஆனால் நல்ல புளிக்கொட்டைச் சம்பா அரிசியில் செய்த ஒரு பிரியாணியை மட்டும் என்னதான் மல்லுப்பண்பாட்டில் ஊறியவன் என்றாலும் என்னால் சீரணிக்கமுடியவில்லை

திரும்பி வந்து சற்று இளைப்பாறியபின்னர் ஒரு மாலைநடை சென்றோம். இருட்டியபின் ஆட்டோவில் திரும்பி வந்தோம்.பீர்மேடு அந்தியிலேயே நள்ளிரவை போர்த்திக்கொள்கிறது. ஓர் அம்மணி ‘வீட்டிலேயே விளைந்த’ வாழைகுலையிலிருந்து பழம் விற்றாள். உண்மையில் இப்போதெல்லாம் ஒவ்வொன்றிலும் சுவையற்ற சக்கையைத்தான் உண்கிறோம் என்று அந்த அசல்சுவையும் மணமும் காட்டின

மறுநாள் காலை ஏழுமணிக்கே பருந்துப்பாறைக்குச் சென்றோம். காலைப்பனி மூடியிருந்த மலைமுடியில் நாங்கள் மட்டுமே இருந்தோம். இளவெயில் எழுந்து எங்கள் நிழலை பனித்திரையில் பேருருவாகக் காட்டுவது வரை அங்கிருந்தோம். ஒளி பனியில் விரிந்து வானிலிருக்கும் உணர்வை அளித்தது. பனிப்படுகையில் இறங்கி நடந்துவிடலாம் என்பதுபோல

பத்துமணிக்கெல்லாம் பேருந்தில் ஏறி கோட்டயம் கிளம்பினோம். நான் வழக்கமாக குமுளிவழியாக அங்கே வருவேன். அந்நினைவில் திரும்ப குமுளி வழி மதுரைவழியாக நாகர்கோயில் என திட்டமிட்டிருந்தேன். பீர்மேட்டில் சந்தித்த ஒருதமிழர், நாகர்கோயில் அஞ்சுகிராமம்காரர், கோட்டயம் வந்துவருவதே நல்லது என்றார்.

aru

கோட்டயம் வந்தபோது பன்னிரண்டரை மணி. மாலை மூன்றரைக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ். ஆகவே பொருட்களை ரயில்நிலையத்திலேயே வைத்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து நகருக்குள் சென்றோம். ஒரு திரைப்படவட்டு விற்பனை நிலையம் சென்று அருண்மொழி சமீபகால மலையாளப்படங்களை பொறுக்கிக் கொண்டாள். ஆயிரம் ரூபாய்க்கு எட்டு படம்.

பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி நல்ல மீன்கறி கிடைக்கும் ஓட்டலுக்கு கொண்டுசெல்ல அருண்மொழியே கேட்டுக்கொண்டாள். அவர் கொண்டுசென்ற ஓட்டல் உண்மையிலேயே நல்ல சுவையான மீன் உணவு அளிப்பது. மீன்கறி, இறால்பொரியலுடன் சாப்பிட்டுவிட்டு ரயில்நிலையம்.

IMG_20171108_100325
பென்னி தாமஸுடன்

பயணம் முழுக்க என் செல்பேசி அருண்மொழி கைவசம் இருந்தமையால் அனேகமாக எவர் ஃபோனையும் எடுக்கமுடியவில்லை. எதுவும் எழுதவில்லை. பொதுவாக எதைப்பற்றியும் சிந்திக்கவுமில்லை. வெறும் இளவெயில்…

பரசுராம் எக்ஸ்பிரஸ் பகல்ரயில். அமர்ந்துவரும் வசதிதான். ஆனால் நல்ல இருக்கைகள், குளிர்சாதனவசதி. அமர்ந்துகொண்டே நாகர்கோயில் வரை பயணம். பேச்சு கொஞ்சம் தூக்கம் மீண்டும் பேச்சு என. வெளியே மழைபெய்துகொண்டிருந்தது. நாகர்கோயிலும் மழையில் ஈரமாக இருந்தது.

முந்தைய கட்டுரைஅயினிப்புளிக்கறி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60