கேசவமணியின் விமர்சனங்கள்

kesavamani

 

என் படைப்புகள் பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்,

கேசவமணி எழுதிய உங்கள் படைப்புகள் மீதான விமர்சனங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவருவதில் எனக்குநிலைதடுமாறி விழுந்து எழும்பும் அளவுக்குக் கட்டற்ற சந்தோஷம். விமர்சனங்கள் என்ற பெயரில் கதையைச் சுருக்கிச் சொல்வதேஇப்போது இணையம் எங்கும் பெருகிவழிந்து சிற்றிதழ் வட்டத்தையும் அது எட்டிய நிலையில், கேசவமணி வெவ்வேறு படைப்புகள்மீது கூர்மையான தன் பார்வையைச் செலுத்தி தன் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதும் அணுகுமுறை மிகுந்த பரவசத்தைத்தருகின்றது. எளிமையாகப் பன்முகத்தன்மையுடன் விளக்கி எழுதுகிறார். இத்தனை கூர்மையாக ஒரு கதையைப் படிக்க முடியுமாஎன்று வியக்கவைக்கின்றது. இலக்கிய வாசிப்புக்குள் நுழையும் புதிய வாசகர்கள் ஆரம்பப் பரபரப்பில் முகநூல் இலக்கியக்கொஷ்டிகளில் சிக்குண்டு கொண்டாட வைக்கும் எழுத்துகளை (Text of pleasure) மட்டுமே இலக்கியம் என்று நம்பிக் குறுகிய ஒருவாசிப்புகள் சிக்கியிருக்கும்போது கேசவமணியின் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டி வாசி என்று சொல்லி ஒரு புரிதலை அளிக்கமுடிகிறது. மெல்ல மெல்ல ஒரு படைப்பை படிக்கும் முறையை அதனூடாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

தற்போதையச் சூழலில் ஒரு சிறுகதையை வாசித்துவிட்டு அதில் ஒரு கருத்தை தேடிப்பார்கிறார்கள். அது என்னவகையானஅரசியலைப் பேசுகின்றது என்று மண்டையைக் குடைந்து கண்டுபிடித்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் கம்பு சுற்றுகிறார்கள். அதுவும் நான் இருக்கும் இலங்கை சூழலில் புலி ஆதரவா இல்லையா என்பதைக் கணித்துவிட்டு உடனே இரண்டு வரி விமர்சனத்தோடுமிகப்பெரிய வாசிப்பு சாதனையைச் செய்துவிட்டதாகத் திருப்தியடைகிறார்கள். மற்றொரு பக்கம் பெண்ணிய விமர்சகர்கள்“இக்கதையில் அப்பா வருகிறார் என்று எழுத்தாளர் எழுதியிருக்கிறார் ஆனால், அம்மாவை வருகிறாள் என்று ஒருமையில்எழுதியிருக்கிறார்..இந்த எழுத்தாளர் ஆண் தடித்தனம் மிக்கவர்” என்று கூட்டம் போட்டுத் திட்டிவிட்டு எப்படி நமது கண்டுபிடிப்புஎன்று தம்மக்குள் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.

இன்னுமொரு தரப்பினர் புனைவின் உத்தியைக் கண்டு வியப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். “வாவ்…நான்-லீனியரில் எப்படிநம்மைக் குழப்பிவிட்டுக் கடைசியில் எல்லாத்தையும் புத்திசாலித்தனமாகச் சேர்த்துவிட்டிருக்கான்…” என்று வியந்து சிலாகித்துக்கொள்கிறார்கள்.

இத்தகைய இலக்கியச் சூழலில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குக் கேசவமணியின் மதிப்பீடுகள், விமர்சனங்களே மிகுந்த உற்சாகம் தருகின்றன. அதபோல ஏ.வி மணிகண்டனின் விமர்சனங்களும், மதிப்பீடுகளும் மிகுந்த ஆழமான புரிதலைத் தருகின்றன. உங்கள் தளம் வழியாக அறிந்த இவ்விருவரும் என் இலக்கியத்தின் மீதான புரிதலை வேறொரு கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். இணையம் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றது. படைப்புகலம் சார்ந்த நுண்மையான அவதானங்களைக் கோடிட்டுக்காட்டி, அழகியல் விமர்சனத்தை முன்வைக்கும் இவர்களின் எழுத்துகள் மேலும்மேலும் பரவலாக்கம் அடையவேண்டும் என்றேஇலக்கியத்தின் மீது பற்றுள்ளவன் என்ற ரீதியில் எண்ணத் தோன்றுகின்றது.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்அ


அன்புள்ள அனோஜன்
ஒருமுறை கேரள இலக்கியக்கூட்டம் ஒன்றில் இடதுசாரி விமர்சகர்கள் இருவர் ஓ.வி.விஜயனின் படைப்பில் உள்ள ’பிற்போக்கு’ அம்சங்களைப்பற்றி வசைபாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் முற்போக்குக் கருத்தைச் சொல்லாத இலக்கியத்தான் பயனில்லை என்றார்.
\
நான் பேசும்போது என் கருத்தை கேட்டார்கள். இலக்கியத்தில் முற்போக்குக் கருத்துக்கள், சமூகமாற்ற எண்ணங்கள், அரசியல் சரிநிலைகள் ஆகியவற்றுக்கான இடம் என்ன என்று. நான் ஒரு நிகழ்வைச் சொன்னேன்.

காசியில் நான் இருக்கையில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு யோகி ஆண்குறியில் இரண்டு செங்கற்களைக் கட்டித் தொங்கவிட்டுக் காட்டுவதாகச் சொன்னார். ‘அதற்கு இன்னும் இனிமையான படைப்பூக்கம் கொண்ட வேறுபணிகள் உள்ளன. அது செங்கல் தூக்கும்பொருட்டு படைக்கப்படவில்லை” என்று நான் சொன்னேன்

நம்மூர் ஆட்களுக்குச் செங்கல் தூக்குவதைக் கண்டு கைதட்டியே பழக்கம். உண்மையில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இலக்கியத்தையும் இலக்கியத்தைப்புரிந்துகொள்ள வாழ்க்கையையும் பயன்படுத்துவதென்பது எளிதல்ல. அதற்கு நுண்ணுணர்வு தேவை. சலிக்காமல் அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அது அரிதாகவே உள்ளது

ஜெ.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60
அடுத்த கட்டுரைமாலை விருந்தில்…