பணமதிப்புநீக்கம் பற்றி இன்று…

modi

அன்புள்ள ஜெ

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெயராமன்,

என் மதிப்பீடுகள் இப்படி உள்ளன.

பணமதிப்புநீக்க நடவடிக்கை ஊழல் அல்லது மோசடி நோக்கம் கொண்டது அல்ல என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் அது ஊழல்நடவடிக்கை என்றால் முட்டாள்தனமானது, பயனற்றது. அதை எவரும் செய்யமாட்டார்கள்.ஆகவே அந்நோக்கம் உண்மையானது. ஆகவே மிகத்துணிச்சலானது. அரசியல் லாபக்கணக்குகள் இல்லாமல் செய்யப்பட்டது. ஆகவே வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

ஊழலுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. முந்தைய ஆட்சியாளர்கள் செய்து வழிகாட்டிய ராஜபாட்டைகள். அவர்கள் எவருக்கும் ஊழல் அல்லது கறுப்புப்பண ஒழிப்பு பற்றி ஒரு சொல் பேச தகுதி இல்லை. இன்றுள்ள ஊழலும் கறுப்புப்பணமும் அவர்கள் ஆட்சிகளின் மூலம் உருவாகி குப்பைமலைகள் போல நம்மைச்சுற்றி திரண்டிருப்பவை. உலகிலேயே ஊழல்மிக்க நாடாக, உலகிலேயே கறுப்புப்பணம் மிக்க நாடாக நம்மை ஆக்கியவர்கள் அவர்கள். அவர்கள் விமர்சிப்பதும் சரி கொக்கரிப்பதும் சரி ஒற்றைச் சொல்லில் சொல்லப்போனால் அயோக்கியத்தனம்

ஆகவே பணமதிப்பு நீக்கம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று. அன்று மக்களில் அனேகமாக பெரும்பான்மையினர் அதை ஆதரித்தது இந்த எதிர்பார்ப்பினால்தான். இன்றும்கூட எளியமக்கலில் பெரும்பான்மையினர் அதை ஆதரிக்கவே செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன். என் உளப்பதிவு சரியா என வரும் தேர்தல்களில் பார்க்கவேண்டும்.

ஆகவே அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே, மறுகணத்திலிருந்தே, அதை முத்திரைகுத்தி, வசைபாடி, வதந்திகளை உருவாக்கி, அச்சங்களை பெருக்கி தோற்கடிக்க முயன்ற தரப்புகள் நியாயமான நிலைபாடுகளை எடுக்கவில்லை, அவர்கள் கறுப்புப்பணத்துக்கே ஆதவளித்தனர் என்றே நினைக்கிறேன்.

இன்று அவர்கள் அன்று உருவாக்கிய அச்சங்களைத் திரும்பிச் சென்று வாசித்துப்பாருங்கள். அவர்கள் இந்தியப்பொருளாதாரம் முழுமையாக அழியும் என எழுதியிருக்கிறார்கள். மாபெரும் அராஜகநிலை வரப்போகிறது என்றார்கள். இந்தியா அனைத்துத்துறைகளிலும் சீரழியும் என அச்சுறுத்தினார்கள்.

அந்தக்கட்டுரைகளை எழுதிய அறிவுஜீவிகள் எவரும் அக்கட்டுரைகளுக்காக இன்று வருத்தம் தெரிவிக்கவில்லை. தங்கள் கணிப்பு என்ன ஆயிற்று என்று ஆராயவும் இல்லை. அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு அடுத்த வசைபாடல், அச்சுறுத்தலுக்கு வந்து பணமதிப்பு நீக்கத்தின் ‘நீண்டகால’ இழப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் பணமதிப்புநீக்க நடவடிக்கையை வரவேற்றேன். ஓரளவு அதனால் நன்மை விளையக்கூடும் என்றும் அதுவேகூட நல்லதுதான் என்றும் எழுதினேன். ஆனால் நடைமுறையில் இந்தியசமூகத்தின் ஒட்டுமொத்த ஊழலால் அத்திட்டம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது என இன்று நினைக்கிறேன். அந்த ஒட்டுமொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியும் அடக்கம். அது ஆளும்கட்சி என்பதனால் அதுவே முதன்மைப்பங்கு

எதிர்பார்த்தமைக்காக நான் வருந்தவில்லை. நாம் அனைவருமே அத்தனை அரசியல்வாதிகளிடமும் எதிர்பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். எதிர்பார்ப்புகள் பொய்த்தமைக்காக வருந்துகிறேன். அதன்பொருட்டு பாரதிய ஜனதாவை, அதன் தலைவரான நரேந்திரமோடியை கடுமையாகவே கண்டிக்கிறேன்.

அத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுமே வசைபாடி அச்சமூட்டி வதந்திபரப்பி அதை முழுமையாகத் தோற்கடிக்கமுயன்றவர்களை இன்றும் கசப்புடனேயே எதிர்கொள்கிறேன். அவர்கள் கறுப்புப்பண ஆதரவுநிலைபாடுதான் அன்றும் இன்று எடுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அதுவே அவர்களின் அரசியலின் வேர்.

அத்திட்டம் தோற்றதன் காரணம் என நான் நினைப்பவை

1 மையப்படுத்தப்பட்ட நிர்வாகம். டெல்லியில் சிலர் அமர்ந்து அதிகாரிகளுக்கு ‘ஆணையிட்டு’ திட்டங்களை நிறைவேற்றலாம் என நினைக்கிறார்கள். அந்த அதிகாரியமைப்பு சென்ற அறுபதாண்டுகளாக இங்கே இருப்பது, நேற்றைய ஊழல் முழுக்க அதனால் உருவாக்கப்பட்டது. அதைக்கொண்டு அறிக்கைகளை மட்டுமே பெறமுடியும் என அவர்கள் இன்னமும் கூட அறியவில்லை

2 நிபுணர்களை கலந்தாலோசித்து இத்திட்டத்தின் ஓட்டைகளை முன்னரே அடைத்திருக்கவேண்டும். அது செய்யப்படவில்லை. இந்திய வங்கியமைப்பு,குறிப்பாக அன்னியவங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும், இணைந்து இத்திட்டத்தை தோற்கடித்தது. அதை முன்னரே ஊகிக்க முடியவில்லை

3 ஏற்கனவே உள்ள ஊழல்மிக்க அமைப்பை எவ்வகையிலும் பகைத்துக்கொள்ளாத அரசியல் மொண்ணைத்தனம். இத்திட்டம் நடைமுறைத் தோல்வி. ஆனால் இதனால் என்ன நிகழ்ந்தது? இதில் ஊழல்செய்த எவரை தண்டித்திருக்கிறார்கள்?

ஆனால் இத்திட்டம் பேரழிவு மட்டுமே என இன்று கூச்சலிடுபவர்கள் வெறும் அரசியல்காழ்ப்பையே வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய கூச்சல்களால் அரசியலில் இழப்பே ஏற்படும் என அவர்களே பட்டு உணர்வார்கள்.இத்தகைய மூர்க்கமான கொக்கரிப்புகளால் ஃபெஸ்புக் லைக்குகளை மட்டுமே வாங்கமுடியும், ஓட்டுகளை அல்ல

இத்திட்டத்தால் சில மெல்லிய லாபங்கள் உள்ளன. ஒன்று உண்மையிலேயே வீடுகட்டவோ வேளாண்மைக்கோ நிலம்வாங்குபவர்களுக்கு இது நல்ல காலம். நேரடி அனுபவம் இது. நிலவணிகத்தில் இருந்த வீக்கம் அழிந்துள்ளது

பலதுறைகளில் உண்மையாகவே வணிகர்கள் வரிகட்ட தொடங்கியிருக்கிறார்கள். சென்ற பல ஆண்டுகளாக சிறுவணிகம், நடுத்தரவணிகத்தில் வணிகர்கள் வரிகட்டுவதென்ற வழக்கமே இல்லாமல் இருந்தது. விற்பனைவரியை அரசுக்குக் கட்டும் வழக்கமே இல்லை, தாங்கள் கட்டினால் வரிகட்டாத போட்டியாளர்களைச் சமாளிக்கமுடியாது என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. வரிவசூல் மெய்யாகவே நிகழத் தொடங்கியிருக்கிறது

ஆனால் திரும்பவும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், அனைத்தையும் தன்னைச்சார்ந்து குவித்துக்கொள்ளும் ஆணவம், நிபுணர்களின் பங்கேற்பின்மை, விளம்பரம்மூலமே வென்றுவிடலாமென்னும் கணக்கு ஆகியவற்றினூடாக திட்டங்கள் எவையுமே முழுமையாக வென்று நடைமுறை பயனைக் காட்டவில்லை.

ஜெ

***

பணமதிப்பு நீக்கம், வரி, மோதி

முந்தைய கட்டுரைகொஞ்சுதமிழ் குமரி
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57