ஒரு கவிதை
அன்புள்ள ஜெ
போகனின் கவிதை சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை ஏன் அத்தனை சிறந்தது என்கிறீர்கள்? சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. நானெல்லாம் கவிதையை புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருப்பவன். அதற்கு உதவும் என்பதனால் கேட்கிறேன்
எஸ்.சேதுராமன்
***
அன்புள்ள சேதுராமன்,
கவிதை ரசனை மிக அகவயமானது. ஆகவே ஒருவர் உணர்வை ஒருவர் அறிவதும் பகிர்வதும் கடினம். ஆனால் ஆச்சரியமாக மதிப்பீடுகள் எப்படியோ மிகப்புறவயமானவையும் கூட. நல்ல கவிதை நல்ல கவிதையே. எல்லா இடத்துக்கும், காலத்திற்கும், மானுடருக்கும்.
என் வரையறைகளைச் சொல்கிறேன்.
*
அ. கவிதைக்கு ஓர் ஆன்மிகம் உள்ளது. அது மதம்சார்ந்த, மரபார்ந்த ஆன்மிகம் அல்ல. அது ஒருவகை ‘இணை ஆன்மிகம்’ எனலாம். இங்கிருக்கும் உலகியல் அனைத்தையும் தனக்கே உரிய உலகியல்சாராத முழுமைநோக்கு ஒன்றைக்கொண்டு அது மதிப்பிடுகிறது. அந்த ஆன்மிகம் கருத்தாக அன்றி உணர்வாக வெளிப்படுவது நல்ல கவிதை. இக்கவிதையின் பேசுபொருள் அதுவே.
ஆ. நல்லகவிதையின் வடிவம் கைதேர்ந்த வாள்வீச்சு போல மிக இயல்பாக, விரைவாக, குழந்தைவிளையாட்டுபோல, நிகழ்ந்திருக்கும். மிக இயல்பாக நிகழும் கவிதைவெளிப்பாடு பலசமயம் தேய்வழக்காக அமையும். அப்படி அமையாமல் வீச்சுகொண்டால் அது நல்ல கவிதை இக்கவிதையின் வடிவம் எளிமையானது, ஆனால் இயல்பான கூர்மைகொண்டது
இ நேற்றின் ஆழம் முதல் இன்றுவரை வந்துசேர்ந்திருக்கும் குறியீடுகளின், ஆழ்படிமங்களின், மொழிபுகளின் ஒரு ரகசியத்தொடர்ச்சி கவிதையில் இருக்கும். சட்டென்று ஏதோ வர்ம முடிச்சில் தொட்டு ஒரு வலியை, உவகையை விம்மி எழச்செய்யும் அது. இக்கவிதையில் உள்ள பைபிள் நினைவூட்டலைச் சொல்லலாம்
*
எந்த மாகவிஞனுக்கானாலும் கவிதை அதுவாக வாய்ப்பதே. பலதருணங்களில் பல நல்ல கவிதைகளின் தோள்மேல் ஏறித்தான் அடுத்த உச்சம் அடையப்படுகிறது. போகன் எழுதிய சமீபத்தைய ஆறு கவிதைகளை நண்பர் அனுப்பியிருந்தார். ஆறுமே நல்ல கவிதைகள்தான். இது அதன் உச்சம்
பறவைக்கு இலக்கணம் என்ன? அதற்குச் சிறகுகள் இருக்கும். முட்டை போடும். முக்கியமாக- பறக்கும்.
ஜெ
அனீஷ்கிருஷ்ணன் நாயர் போன்ற வைணவ அடிப்படைவாதிகள் வேதசகாயகுமார் போன்ற இலக்கிய தற்கொலைப்படைகள் ஆகியோருடன் சுற்றிக்கொண்டே ஒருவர் நல்லகவிதை எழுதுவது ஒருவகை சாதனைதான்.