மையநிலப்பயணம் கடிதங்கள்

download (2)

அன்புள்ள ஜெ

மைய நில பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்தபடியே இருக்கிறேன். இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும் வெறியைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்கள் பயணக்கட்டுரைகளுக்கு நன்றி கடமைப்பட்டவனாகிறேன். தங்கள் ஹொய்சாலக் கலைவெளிப்பயணங்களை வாசித்து அந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அருகர்களின் பாதை வாசித்து அதிலே விஜயமங்கலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய சமணத்தலங்களைப் பற்றி் குறிப்பிட்டிருந்தை வைத்து தேடித்தேடி விஜயமங்கலம் நெட்டைக்கோபுரக் கோயிலுக்கு (சந்திரப்பிரபா தீர்த்தங்கரர் கோவில்) சென்றேன்.கன்னடம் கலந்த தமிழில் பேசும் கோயிலைப் பராமரிக்கும் குடும்பத்தார் சொன்னவை கேட்டு மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானேன். ஹொய்சாலப்பயணத்தில் கண்ட தலங்களில் ஒன்றான மெளரியகால காலத்து சரவணபெலகொலாவைக் கட்டிய சாமுண்டராயரின் தங்கையை இங்கே விஜயமங்கலத்து அரசருக்கு மணமுடித்துக்கொடுத்தார்களாம்.அப்போது ஆயிரங்குடும்பங்கள் இடம்பெயர்ந்து வந்தார்களாம். அந்த குடும்பங்கள் இன்று இடம்பெயர்ந்து தொகை குறைந்து இப்போது அருகிவருகிறார்கள் என்றார். சமீபத்தில் இந்த நூற்றாண்டில் இக்கோயிலுக்கு அருகில் ஒரு குன்றிலிருக்கும் சமண ஆலயம் கைப்பற்றப்பட்டு அம்மன்கோயிலாக்கப்பட்ட கதையையும் சொன்னார்கள். இந்த மதப்பூசல்கள் எதோ வரலாற்றுப்புத்தகத்தில் வாசிக்கக்கிடைப்பவை என்றே நினைத்திருந்தேன். எத்தனை தூரங்கள் தாண்டி இருக்கும் தொடர்பு. நிச்சயம் எளிதாக கவனிக்கத்தவறியிருக்கக் கூடிய தகவல். யாரும் குறிப்பிட்டுச்சொன்னாலொழிய கவனிக்கமுடியாத தகவல்கள். இன்னும் இதுபோல எத்தனை கண்ணிகளால் நம் வரலாறு பிணைக்கப்பட்டிருக்கின்றதோ? நினைத்துப்பார்க்க கண்களில் கனவுகளாக நிரம்புகின்றன. நான் என் பயணங்களில் இன்னும் கூர்மையாக இருக்கவேண்டுமென்பதை உணர்த்துகிறது.

மையநிலப்பயணத்தின் கடைசிக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த கருடன் சிலையைப் பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்று நினைத்தேன். போர்ஹேஸ் எழுதிய “The book of imaginery beings” புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தபுத்தகம் உலக தொன்மங்களில் இருக்கக்கூடிய அசாதாரண விலங்குகளை உயிரினங்களைப்பற்றிய தகவல் தொகுப்பு புத்தகந்தானென்றாலும் ஒரு புனைவு நம் மனதிற்குள் நிகழ்த்தக்கூடிய அளவிற்கு மிகப் பெரிய கற்பனைக்காட்சிகளை வழங்கியபடியே இருக்கும் புத்தகம். புத்தரின் பிறப்பை அறிவித்த யானை, மூன்று கால்களைக்கொண்ட கழுதை, நூறுதலை மீன், சொர்க்கத்து சேவல், இன்னும் இன்னும் என அசாதாரண உயிரினங்களாக வந்தபடி இருக்கும். கருடனை பற்றியும் எழுதியிருக்கிறார். அந்த பத்தியில் ஹோலியோடோரஸின் தூண் பற்றி வருகிறது. குவாலியருக்கு அருகில் என்று ஒரு குறிப்பு. அந்த தூணின் உச்சியில் கருடன் சிலை இருக்கின்றது என்று சொல்லியிருப்பார். என்னயிருந்தாலும் போர்ஹேஸ் மேல் ஒரு சந்தேகம் வந்து கிடைத்த குறிப்புகளைக்கொண்டு கூகுள், மேப்பில் தேடினேன். குவாலியருக்கு அருகில் விதிஷாவில் இந்த தூண் இருப்பதாக கண்டேன். போர்ஹேஸ்ஸின் துல்லியத்தின் மேல் மரியாதை ஏற்பட்டது. எவ்வளவு பெரிய உழைப்பு. இன்று இந்தப்பத்தியை வாசித்தபோது இதுதான் ஞாபகம் வந்தது.

நன்றி.

கே கே குமார்

***

IMG_5069

அன்புள்ள ஜெ.

வணக்கம். நலந்தானே.

உங்களின் வலைப்பதிவுகளை படிக்காமல் நாள் முடிவதில்லை.

அதுவும் பயணக்கட்டுரைகள் வரும் நாட்களில் காலையில் முதல் வேலையாக படித்துவிடுவேன்.

உங்கள் பயணங்கள் எங்களுக்கு பெரும் திறப்பாக இருப்பவை.

ஒவ்வொரு பயண முடிவிலும்

1.சுருக்கமான பயணத்திட்டம் (Itinery), இடங்களுக்கிடையேயான தூர விவரம் இணைத்தால் சிறப்பு.

2.பயணம் செய்த இடங்களை தேசப்படத்தில் (Map) காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

இவற்றால் தொகுப்பாக வரும் பயண நூல்கள் மேலும் செம்மையாகும்.

இதனை உடன்வரும் சக நண்பர்களே கூட செய்யலாம்.

நன்றி.

தங்கமணி மூக்கனூர்ப்பட்டி

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்