வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52

ஏழு : துளியிருள் – 6

fire-iconஇளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்” என்றான். “சுதமர்…?” என்று கேட்டபடி இளைய யாதவர் வந்து பீடத்தில் அமர அவரைத் தொடர்ந்து வந்த ஏவலன் அவருடைய நீண்ட மேலாடையின் மடிப்புகளை அமர்வுக்குரிய முறையில் சீரமைத்தான். சத்யபாமை அவர் குழலில் கலைந்திருந்த ஒரு கீற்றை சீரமைத்தாள்.

“அவர் வெளியே கூடத்திலிருக்கிறார்” என்று அபிமன்யூ சொன்னான். “ஏன்? என்னிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாரா? இவர்கள் இருப்பதனால் தயங்குகிறாரா?” என்றார் இளைய யாதவர். “இல்லை… ஆம், சொல்ல விரும்புகிறார்…” என்று தடுமாறிய அபிமன்யூ “ஆனால் அதை நானே சொல்லிவிடுகிறேன், மாதுலரே” என்றான். “சொல்க!” என்று அவர் கையை காட்டியபின் ருக்மிணியிடம் அவள் வளையல் ஒன்று இன்னொன்றுடன் சிக்கியிருப்பதை சுட்டிக்காட்டினார். அவள் அதை சீரமைத்துக்கொண்டு புன்னகைத்தாள். நக்னஜித்தி அவர் கழுத்தணியின் பின்முடிச்சை இழுத்து சீரமைத்தாள். அவர்கள் சொல் எட்டா பிறிதொரு தொலைவிலிருப்பதாகத் தோன்றியது.

“எவ்வகையிலேனும் இன்றைய அவைகூடல் நிகழ்வை ஒத்திப்போட முடியுமா என்று அவர் கேட்க விரும்புகிறார்” என்றான் அபிமன்யூ. “ஏன்? அவை ஒருக்கங்கள் முடிய அவ்வளவு பொழுதாகுமா?” என்று இளைய யாதவர் கேட்டார். கண்ணுக்குத் தெரியாத காற்றுபோல அப்புன்னகை அவனை அறைந்து அவரை அணுக முடியாமலாக்கியது. பல்லாயிரம்பேரை அவரை நோக்கி இழுப்பதும் அவருக்குரியவர்கள் தாங்கள் என்று எண்ண வைப்பதும் அப்புன்னகைதான். அணுகியோர் மேலும் அணுகாமல் பல்லாயிரம் காதம் அகலே எழுந்த தனிமைப் பெருமலையென அவரை உணர வைப்பதும் அதுவே என்று அபிமன்யூ எண்ணிக்கொண்டான்.

“மாதுலரே, துவாரகையின் ஆற்றலின்மையை இன்றைய அவை அதன் எதிரிகளுக்கு காட்டிவிடக்கூடுமென்று தங்கள் தோழர்கள் எண்ணுகிறார்கள். முன்னரே இங்கு விசைகொண்டிருக்கும் பிரிவுப்போக்கு அதனால் மேலும் தூண்டிவிடப்படக்கூடும். தாங்கள் தனிமைப்பட்டிருக்கிறீர்கள் என்ற பொய்யை உலகுக்கு அறிவிக்கும் நிகழ்வாகவும் அது அமையலாம்” என்றான் அபிமன்யூ. “நான் எப்போதும் முற்றிலும் தனிமையில்தான் இருக்கிறேன், மைந்தா” என்று இளைய யாதவர் சொன்னார்.

மீண்டும் அருவியின் அறைதலால் என அப்புன்னகையால் நெடுந்தொலைவுக்கு அபிமன்யூ தூக்கி வீசப்பட்டான். “நான் அதை சொல்லவில்லை, இங்குள்ள அரசியல் சூழலை குறிப்பிட்டேன்” என்றான். “அரசே, யாதவக்குடிகளிலிருந்து பெரும்பாலும் குடித்தலைவர் எவருமே இந்த அவையில் இன்று வந்தமரப்போவதில்லை. அவைகூடலை முரசறைவித்து பன்னிரு நாழிகை கடந்துவிட்டது. இதுவரை யாதவப் பெருங்குலங்களிலிருந்து எந்தக் குலத்தலைவரும் அரண்மனை வளாகத்திற்குள் நுழையவில்லை என்றார்கள்.”

ஒருவேளை எவரேனும் வந்துள்ளார்களா என அவன் உள்ளம் ஐயுறவே குரல் தயங்கியது. ஆயினும் தன்னை தொகுத்துக்கொண்டு “தங்கள் மைந்தர்களும் முழுமையாகவே இந்த அவையை புறக்கணிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களிடம் நேரில் பேசினேன். அவர்கள் உறுதிகொண்டிருக்கிறார்கள். ஏனென்று தாங்களே அறிவீர்கள்.” இளைய யாதவர் சத்யபாமையை நோக்கிவிட்டு “மைந்தர்களிடம் அன்னையரை தூதனுப்பலாமா?” என்றார். அவள் அவருடைய புன்னகையை புன்னகையால் எதிர்கொண்டு “நீங்கள் எவரை வேண்டுமானாலும் தூதனுப்பலாம். யார் சென்றாலும் அது நீங்களே. மறுமொழி சொல்வதும் நீங்களே” என்றாள்.

அவர் ருக்மிணியிடம் “உங்கள் சொற்களை உங்கள் மைந்தர்கள் கேட்பதில்லையா?” என்றார். “உங்கள் சொற்கள் ஒவ்வொருவரையும் சென்று அடைந்துகொண்டுதான் இருக்கின்றன. சிலர் அண்மையில் இருக்கிறார்கள், சிலர் சேய்மையில்” என்று ருக்மிணி அதே புன்னகையுடன் சொன்னாள். அறையிலிருந்த ஆறு அரசியருமே ஒரே புன்னகை முகம் கொண்டிருப்பதை அபிமன்யூ கண்டான். அவருடன் இருக்கையில் அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்கிறார்கள். அவருடைய விழிகளையும் புன்னகையையும் தாங்களும் சூடியிருக்கிறார்கள். பிறர் அங்கிருப்பதையே அறியாமல் இருக்கிறார்கள். தான் அங்கிருப்பதையேகூட அவர்கள் உணரவில்லை.

அபிமன்யூ தன் உள்ளத்தை மேலும் குவித்துக்கொண்டு “மாதுலரே, எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். நான் சென்று பிரத்யும்னரை சந்தித்து இன்றைய அரசியல் சூழலை விளக்குகிறேன் அவர் வருவாரென்றால் பிறருக்கும் அதை தவிர்க்கமுடியாத நிலை ஏற்படும்” என்றான். “பிறரை சந்தித்துவிட்டாயல்லவா?” என்று இளைய யாதவர் கேட்டார். “ஆம், ஆனால் அவர்கள் அரசுசூழ்தல் அறியாதவர்கள். தங்கள் மைந்தர்களில் பிரத்யும்னர் மட்டுமே மெய்யாக இன்று பாரதவர்ஷத்தில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்தவர். இங்கு இன்றுவரை தங்களுக்கு அடுத்தபடியாக அரசராகத் திகழ்ந்தவரும் அவரே. அவரால் நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியும்” என்றான்.

அவர் சிரித்து “நீ சொல்வதை அனைவருமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நீ மறுமொழி சொல்லமுடியாத கூரிய தொகைக்கூற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். பிரத்யும்னனிடமும் அவ்வாறொன்று இருக்கும்” என்றார். திரும்பி ஏவலனிடம் “பொழுதாகிவிட்டது அல்லவா?” என்றார். “ஆம், கிளம்ப வேண்டியதுதான், அரசே” என்று அவன் சொன்னான். “பிற இருவரும் எங்கே? காட்டுமலர்கள் இன்றி எந்தக் கோதையும் முழுமை கொள்வதில்லை என்பார்கள் கவிஞர்” என்றார். சத்யபாமை சிரித்துக்கொண்டு “சற்று பிந்தி விரிபவை… வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

இளைய யாதவர் திரும்பி அபிமன்யூவிடம் “இன்றைய அவைக்கு வருபவர் எவரையும் தடுக்க வேண்டியதில்லை என்பது மட்டும் எனது ஆணை” என்றார். “அவ்வாறே” என்று அபிமன்யூ தலைவணங்கினான். “நான் அவையை சென்று பார்க்கவிருக்கிறேன், மாதுலரே” என்று அவன் திரும்ப அவர் “என் மைந்தனாக அவையில் இன்று முரளி அமர்ந்திருக்கட்டும்” என்றார். அபிமன்யூ திரும்பிப் பார்த்து “அவர்…” என்றபின் தலைவணங்கி “ஆணை” என்றான்.

கதவு திறந்து ஏவலன் உள்ளே வந்து “நிஷாத அரசியர் வருகை” என்று அறிவித்தான். “வரச்சொல்க!” என்று இளைய யாதவர் சொல்ல அவன் வெளியே சென்று கதவைத் திறக்க ஜாம்பவதியும் காளிந்தியும் முழுதணிக்கோலத்தில் கைகளைக் கூப்பியபடி உள்ளே நுழைந்தனர். இளைய யாதவர் “வருக! பிடியானை பட்டமணிந்து எழுந்த பின்னரே நிரை அணிநிறைவு கொள்கிறது” என்றார். ஜாம்பவதி புன்னகையுடன் அருகே வந்து சத்யபாமையின் கைகளை மெல்ல தொட்டாள். காளிந்தியை தோள் தொட்டழைத்த ருக்மிணி “பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் முழுதணிக்கோலம் கொள்கிறாள்” என்றாள்.

இளைய யாதவர் திரும்பிப் பார்க்க “ஆம், பதினான்கு ஆண்டுகளும் இங்கு அஷ்டமி ரோகிணி நன்னாளில் மட்டும் அரசியரென நாங்கள் மன்றமர்வதுண்டு. ஒவ்வொரு முறையும் மூன்று அணிக்குறைகளை வேண்டுமென்றே வைப்போம். தாங்கள் இங்கில்லாதபோது அணிநிறைவு கொள்ளலாகாது என்று. ஆனால் இவள் மட்டும் ஏழு அணிக்குறைகள் பூணுவாள்” என்றாள் பத்ரை. “ஏன்?” என்று இளைய யாதவர் கேட்டார். காளிந்தி இளமங்கையின் நாணத்துடன் “அறியேன். குறை மிகுந்தோறும் தாங்கள் வந்தமையும் இடம் மிகுகிறதென்று எண்ணம்” என்றாள்.

நக்னஜித்தி “மாறாக பூணும் அணியனைத்தும் தங்கள் விழிகளே என்று நான் எண்ணுவேன். பூணாத அணியொன்றை எடுத்து வைத்து இது தாங்கள் இன்னும் என்னை நோக்காத விழி எனக் கருதுவேன்” என்றாள். அவர்கள் தன்னை முற்றாகவே மறந்துவிட்டார்கள் என அபிமன்யூ உணர்ந்தான். தலைவணங்கி அவன் வெளியே சென்றதை அவர்கள் எவரும் நோக்கவுமில்லை.

fire-iconஇடைநாழியில் நின்றிருந்த சுதமர் அபிமன்யூவை நோக்கி ஓடிவந்து “என்ன நிகழ்கிறது?” என்றார். “அரசியரிடமோ அரசரிடமோ நாம் சொல்வதற்கொன்றுமில்லை” என்று அபிமன்யூ சொன்னான். “ஏவலர்கள் வந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சற்று முன்னர் ஸ்ரீதமரே நேரில் வந்தார். அவை முற்றொழிந்து கிடக்கிறது” என்றார் சுதமர். அபிமன்யூ “இன்னும்கூட அவர்கள் வரக்கூடுமென்றே தோன்றுகிறது” என்றான். “ஏதோ ஒன்றுக்காக அவர்கள் காத்திருக்கலாம். நம்மிடமிருந்தல்ல, அவரிடமிருந்து.”

“துவாரகையின் அவையைபற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசப்பேரவை அது. ஆறாயிரம் இருக்கைகள். வணிகர்கள், மாலுமிகள், அயல்தூதர்கள், குடித்தலைவர்கள், அந்தணர், முனிவர் என்று ஆறு பெரும்பிரிவுகள். ஒன்றிலும் இன்னமும் ஒருவர்கூட வந்தமரவில்லை” என்றார் சுதமர். அபிமன்யூ அதன்பின்னரே அதை முழுதுணர்ந்து “குடிகள் கூடவா?” என்றான். “எவருமே” என்றார் சுதமர். அத்தனை இருக்கைகளும் ஒழிந்துள்ளன. அந்தணரும் வணிகரும்கூட அவைபுகவில்லை.”

“முற்றொழிந்த அவையை நோக்கியா கிளம்பவிருக்கிறார்?” என்றான் அபிமன்யூ. “ஆம், அதனால்தான் பதறிக்கொண்டிருக்கிறோம். என்ன நிகழ்கிறதென்று அறிந்துவர ஸ்ரீதமர் நகர் எங்கும் ஒற்றர்களை அனுப்பியிருக்கிறார்.” அபிமன்யூ “அவையில் முரளி அவர் மைந்தனாக வந்து அமரவேண்டுமென்று ஆணை” என்றான். சுதமர் “பட்டத்து இளவரசராகவா?” என்றார். “தெரியவில்லை. ஆனால் இன்று அவர் மட்டுமே அரசமைந்தரென அவையிலிருப்பார்.” சுதமர் “சொல்லமுடியாது. அவருக்கே முடிசூட்டவும்கூடும்” என்றார்.

“அவருக்கு அரசர் முடிசூட்டுவார் என்றால் அவரே துவாரகையை ஆள்வார். பாரதவர்ஷத்தில் அவருக்கெதிராக படைகொண்டுவரும் திறனுள்ள எவரும் இல்லை. எந்தையரும் நானும் இருபுறமும் நின்று அவரை காப்போம். எங்கள் கொடிவழிகள் ஏந்தும் வில்லும் வாளும் அவருடன் இருக்கும்” என்று அபிமன்யூ சொன்னான். “ஆனால்…” என்றபின் “நன்று! அதுவே ஆணை என்றால் அது நம் கடமை” என்று சுதமர் சொன்னார்.

“அவைக்கு வரும் எவரையும் தடுக்க வேண்டியதில்லை என்று அரசரின் ஆணை” என்று சொன்னபடி அபிமன்யூ நடந்தான். “குடிகளையா?” என்றார் சுதமர். “எவரையும்” என்றபின் “சுதமரே, தாங்களே இங்கு நின்று அரசரை அழைத்து வருக! நான் பேரவைக்குச் செல்கிறேன்” என்று அபிமன்யூ நடந்தான். அவன் காலடிகள் ஓங்கி ஒலித்ததைக் கேட்டபோதுதான் அரண்மனை எத்தனை அமைதியாக இருக்கிறது என அவனுக்குத் தெரிந்தது.

அவனுடன் வந்த பிரலம்பன் “நான் சென்று பார்த்தேன். பேரவை ஒழிந்துகிடக்கிறது” என்றான். “இன்றல்ல, என்றும் அவருடைய அவை அவருக்குரியவர்களால் நிறைந்திருக்கும், பிரலம்பரே. இப்புவி உள்ளவரை அவரது அவை ஒழியாது” என்றான் அபிமன்யூ. “அங்கு அவரிடம் சொல்லாடிக் கொண்டிருக்கையில் அதை என்னால் உணரமுடியவில்லை. அறைவிட்டு வெளியே வந்ததுமே உள்ளே நான் கண்டதென்ன என்று என் உள்ளம் திடுக்கிட்டது. எட்டு மங்கலங்களுடன் கூடிய இறையுரு. பிறிதொன்றும் அல்ல.”

பிரலம்பன் “ஆம், நெஞ்சு திடுக்கிட அடிக்கடி நானும் எதையோ உணர்ந்து விலகுகிறேன்” என்றான். “இப்புவியில் மானுடநாடகம் ஒழியாது நடக்கிறதென்றால் மானுடம் இறையிலிருந்து ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு விசையில் விலக்கம் கொள்கிறது என்பதனாலேயே. ஆனால் முற்றிலும் இறையிலிருந்து விலக்கம் கொள்ள இங்கு எந்த அணுத்துளியாலும் இயலாது. ஒவ்வொன்றும் அதை நோக்கியே உள்ளன, அதனால் ஆட்டுவிக்கப்படுகின்றன. அண்மையும் ஈர்ப்பும் மட்டுமல்ல சேய்மையும் விலக்கும்கூட அதன் விளையாட்டு மட்டுமே” என்றான். அபிமன்யூ “வருக!” என்று அவன் தோளை தட்டிவிட்டு நடந்தான்.

அவர்கள் காலடிகள் விரைவொலிக்க துவாரகையின் அரண்மனையின் இடைநாழிகளினூடாகச் சென்றனர். மூச்சிரைக்க உடன் வந்த பிரலம்பன் “நெடுந்தொலைவு, அவை இருப்பது வேறு நகரில் என்றே தோன்றுகிறது” என்றான். “நம் உள்ளம் முன்னரே அங்கு சென்றுவிட்டிருப்பதனால் கால்கள் தொலைவை உணருகின்றன” என்று அபிமன்யூ சொன்னான். “இப்படி கருத்துகளாக மாற்றி எவராலும் தொலைவை சுருக்கிவிட முடியாது. அது பருவெளி, கருத்துகளுக்கு அப்பாற்பட்டது” என்று பிரலம்பன் சொன்னான். அபிமன்யூ “மூத்த தந்தையின் நோய் என்னிடமும் சற்று உள்ளது. வேங்கை எதிர்பட்டாலும் நூல்களை மேற்கோளாக்கி அதை பூனை என ஆக்கிவிட முயல்பவர் அவர்” என்றான்.

அரண்மனைக் காவலர் அனைவரும் தங்களை கூர்ந்துநோக்கி விழிவிலக்கிக் கொள்வதை அபிமன்யூ கண்டான். பிரலம்பன் “அவைக்கூடம் ஒழிந்திருப்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள் போலும்” என்றான். “ஆம், யாதவ நிலத்தின் பேரரசர் எழுந்தருளவிருக்கையில் துவாரகையின் பேரவை ஒழிந்திருக்குமென்றால் அதைவிட இவர்கள் பேசிக்கொள்ள பிறிது செய்தி ஏதுள்ளது?” என்று அபிமன்யூ சொன்னான். “அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிறைவு கொள்கிறது” என்றான் பிரலம்பன். “எது?” என்றான் அபிமன்யூ. “ஆணவம், கருவிலேயே உட்புகும் முதல் மலம்” என்றான் பிரலம்பன். “அதை எப்படி அறிந்தீர்?” என்றான் அபிமன்யூ. “நானும் மனிதனே என்பதனால்” என்று பிரலம்பன் சொன்னான். அபிமன்யூ வெறுமனே நோக்கிவிட்டு நடந்தான்.

பேரவையை நெருங்குவதற்குள்ளேயே அதன் இருபுறமும் சிறகுகள் போலமைந்த இணைக்கூடங்களில் வீரர்களும் ஏவலர்களும் குவிந்து பேசிக்கொண்டிருக்கும் ஓசையை அவர்கள் கேட்டனர். ஏவலன் வரவறிவிக்க வலப்பக்க இணைக்கூடத்திற்குள் அவர்கள் நுழைந்ததும் அங்கிருந்த வீரர்கள் அமைதியடைந்தனர். அவ்வமைதியைக் கண்டு அறிந்து திரும்பிப்பார்த்த ஸ்ரீதமர் அபிமன்யூவை நோக்கி விரைந்து வந்து “என்னாயிற்று?” என்றார். “அவையை நோக்கி வருபவர்களை தடுக்க வேண்டாம் என்பது ஆணை” என்று அபிமன்யூ சொன்னான்.

“என்ன நிகழ்கிறதென்று அரசர் முழுதறிந்திருக்கவில்லை” என்று ஸ்ரீதமர் சொன்னார். “யாதவக் குடித்தலைவர்கள் புறக்கணித்தாலும் குடிகள் வருவார்கள் என்றும் அவர்களில் ஒரு சிலரையே குடித்தலைவர்கள் என அமைத்து பட்டம்கட்டி அவை நடத்தலாமென்றும் எண்ணுகிறார். ஆனால் யாதவர்களின் ஐந்து குலத்தலைவர்களின் ஆணை நேற்றிரவே அத்தனை குடிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த அவையில் வந்து அமரும் எந்த யாதவனும் அவர்களின் குலத்திலிருந்து விலக்கப்படுவான் என்கிறது அந்த ஆணை. இப்போதுதான் ஒற்றர்செய்திகள் அதை வந்து தெரிவித்தன.”

“இங்கு வரக்கூடும் என்று நாம் எண்ணிய அனைவரும் தயங்கத் தொடங்கிவிட்டனர். முதன்மைக் குடிகள் சில தயங்கின. அவர்களை நோக்கியிருந்த பிறர் அதையே முன்காட்டாகக் கொண்டு நின்றுவிட்டனர். பின்னர் அத்தயக்கம் பரவியது. கூட்டாக அது ஆனபோது பேசிப்பேசி அதற்குரிய சொற்களை உருவாக்கினர். உணர்வுகளை உருவாக்கி பெருக்கிக் கொண்டனர். எவரும் குலத்திற்கு மேல் அல்ல, தெய்வங்களை அவர்களின் படைக்கலங்கள் மீறலாகாது என்று ஒருவர் சொன்னார் என ஒற்றன் சொன்னான்” என்றார் ஸ்ரீதமர்.

“அரசுப் பொறுப்புள்ளவர்களை நேரில் அனுப்பி எவரெவர் வரக்கூடுமென்று உசாவி அவர்களிடம் பேசி சிலரையாவது கூட்டிவரச் சொன்னேன். ஓரிருவர் வரத்தொடங்கினால்கூட அந்த வேலி உடையக்கூடும். ஆனால் அரண்மனைக்கு அணுக்கமான யாதவர்கள்கூட வருவதாக இல்லை. கருவூலப் பொறுப்பாளராகிய கூர்மர் நம் சிற்றமைச்சரிடம் கைகூப்பி கண்ணீருடன் இக்குடியில் பிறந்தேன் என்பதனாலேயே நான் யாதவன். குடிவிலக்கு செய்யப்படுவேனெனில் என் குழந்தைகளுடன் அடையாளமில்லாதவனாவேன். எந்தையர் எனக்களித்த அனைத்தையும் துறப்பது அது. என் மேல் முனியவேண்டாமென்று அரசரிடம் சொல்லுங்கள். என்னைப்போன்ற எளியவருக்கு குடியன்றி இப்புவியில் பெரிதென்று ஏதுமில்லை என்றார். மறுசொல் இன்றி அமைச்சர் திரும்பி வந்தார்” என்று ஸ்ரீதமர் சொன்னார்.

“இனி எவரிடமும் எதையும் கேட்க வேண்டியதில்லை” என்றான் அபிமன்யூ. “ஆம், எங்கும் ஆழ்ந்த அமைதியே உள்ளது. மறுசொல்லாட எவரேனும் வந்தால்கூட பேசமுடியும். கண்டதுமே கைகூப்பிவிடுபவர்களிடம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் ஸ்ரீதமர். அபிமன்யூ களைப்புடன் பீடத்தில் அமர்ந்து பெருமூச்சுவிட்டான். “இது இயல்பாக நிகழ்வதல்ல. பெரும் சூழ்ச்சி” என்றான். “ஆம், அவ்வாறே நான் எண்ணுகிறேன். இது பல நாட்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுள்ளது. துவாரகையின் முதன்மைக் குடித்தலைவர் அனைவரும் கிளம்பிச் சென்றனர். இரண்டாம் குடித்தலைவர்கள் அனைவரும் இங்கேயே இருந்தனர். அவர்கள் இங்கிருப்பது தயங்கியோ அஞ்சியோதான் என நினைத்தோம். இங்குள்ள எஞ்சிய யாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் சென்றவர்களின் ஆணைகளை முறையாக கொண்டுசென்று சேர்ப்பதற்காகவும் என்று இப்போது தெரிகிறது” என்றார் ஸ்ரீதமர்.

“இது நிகழுமென நாம் எண்ணியிருக்கவேண்டும்” என்றான் அபிமன்யூ. “ஏனென்றால் இதில் ஒரு நெறி உள்ளது. இங்குதான் இது வந்தாகவேண்டும்.” ஸ்ரீதமர் “மதுராவில் கூடிய குலத்தலைவர்களின் அவையில் இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. கோல்தூக்கி அனைவரும் ஏற்பொலி எழுப்பியிருக்கிறார்கள். இளைய யாதவர் எவ்வகையிலும் யாதவக் குடிகளுக்கு தலைவரல்ல என்று அங்கே சொல் திரண்டிருக்கிறது. அதை அவருக்கு அறிவிக்கும் தருணமாக இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அத்தனை யாதவக் குடிகளும் அதற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.

அறைக்குள் இருந்த அத்தனை காவலர்களும் பணியாட்களும் தங்கள் சொற்களை செவிகொள்வதை உணர்ந்த அபிமன்யூ பேச்சை நிறுத்திக்கொண்டான். அதை உணர்ந்த ஸ்ரீதமர் “இதில் மந்தணம் ஏதுமில்லை. பேருருக்கொண்ட ஒரு பழிச்சொல்போல அதோ ஒழிந்துகிடக்கிறது துவாரகையின் குடிப்பேரவை” என்றார். அபிமன்யூ எழுந்து கால்கள் தயங்க மெல்ல நடந்து நெடுஞ்சாலை என விரிந்த இடைநாழியினூடாக பெருவாயிலை அடைந்து அப்பால் திறந்துகிடந்த துவாரகையின் பேரவையை சென்றடைந்தான்.

நீள்வட்ட வடிவிலான பேரவையின் வெறுமை எடைமிக்க அடியென அவன்மேல் விழுந்து ஒருகணம் கால்தடுமாற வைத்தது. குளிர்ந்து எழுந்து நின்ற பளிங்குத் தூணை கைகளால் பற்றிக்கொண்டு அதை நோக்கி நின்றான். வெண்பட்டு விரிக்கப்பட்ட அந்தணர் பீடநிரைகளும், மறுபக்கம் செம்பட்டு விரிக்கப்பட்ட ஷத்ரியர் பீடங்களின் வரிசையும், பச்சைப் பட்டு விரிக்கப்பட்ட யாதவர் அணியும், மஞ்சள் பட்டு விரிக்கப்பட்ட வணிகர் பகுதியுமென விரிந்த பீதர் நாட்டு விசிறிபோல பேரவை தெரிந்தது. அதன் ஒவ்வொரு பீடமும் எதையோ இரக்க ஏந்திய கைபோல காத்திருந்தது.

ஒரு சில கணங்களுக்குமேல் நோக்க முடியாமல் அவன் திரும்பிக்கொண்டான். அவைக்கு மறுபக்கம் வாயிலினூடாக வந்த ஏவலன் ஏதோ எவரிடமோ சொல்ல ஒழிந்த பேரவைக்கூடம் எதிரொலி பெருக்கி அதை முழங்கியது. குவிந்த மாடக்கூரை அதன் கார்வையை அவையின் வெறுமைமேல் பொழிந்தது. வெறுமையில் மட்டுமே குடியேறும் இருள்தெய்வமொன்றின் குரல். அத்தனை ஒளியிருந்தும் இருண்டதென அவை விழிக்குக் காட்டிய மாயம் என்ன? மானுடரில்லா இடங்களை நிறைப்பது என்ன? அவர்களின் கனவுகளும் விழைவுகளும் அச்சங்களும் நுண்ணுருக்கொண்டு வந்து பரவியிருக்கின்றனவா?

அபிமன்யூ திரும்பி மீண்டும் கூடத்திற்குள் வந்தான். ஸ்ரீதமர் “ஆம், நோக்க இயலவில்லை” என்றார். “இங்கிருந்து தப்பி ஓடிவிடவேண்டுமென்று தோன்றுகிறது” என்று அபிமன்யூ சொன்னான். மீண்டும் பீடத்தில் அமர்ந்து களைப்புடன் கால்களை நீட்டிக்கொண்டு “என்ன நிகழும், அமைச்சரே?” என்றான் அபிமன்யூ. “அறியேன். அவரே அறிவார்” என்றார் ஸ்ரீதமர் தானும் அமர்ந்தபடி. அபிமன்யூ கண்களை மூடிக்கொண்டான். உடலில் இருந்து அனைத்து நீர்களும் வழிந்தோடி ஒழிய வெற்றுக்கூடென எடையின்மைகொண்டான். ஒரு சொல் எஞ்சாமல் ஒழிந்தது அகம்.

பிரலம்பன் மறுபக்க வாயிலினூடாக வந்து “இளவரசே, அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவன் எழுந்து தொலைவில் மங்கல இசையையும் வாழ்த்தொலிகளையும் கேட்டான். ஸ்ரீதமர் வாயில் வழியாக வெளியே நோக்கினார். “அவைநோக்கி வருகிறார். இங்கே அவை…” என்றபின் “என்ன செய்வது, இளவரசே?” என்று பிரலம்பன் கேட்டான். திரும்பாமல் “நாம் இயல்வதை இயற்றிவிட்டோம். இனி அவர் நடத்தட்டும்” என்று ஸ்ரீதமர் சொன்னார்.

அபிமன்யூ நெஞ்சை அழுத்திய எடையை மூச்சென மாற்றி வெளிவிட்டான். அது நிகழாதென அதுவரை தன் உள்ளம் எண்ணியிருந்ததை அறிந்தான். ஆனால் நிகழும், காலம்தோறும் இதுவே நிகழ்ந்துமிருக்கிறது போலும். ஆம், இதுவன்றி பிறிதேது நிகழக்கூடும்? மானுடம் என்று நிறையும் கலத்தை நீட்டியிருக்கிறது வான்கீழ்? அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டான். விழிநீர் மல்குமளவுக்கு உளம் நெகிழ்ந்தது. அங்கிருந்த ஏவலரும் காவலர்களும் அதே உணர்வை அடைந்தனர் என்று தோன்றியது. தங்கள் பணிகளை இறுதியாக ஒருமுறை சீரமைத்துவிட்டு ஆடைகளை இழுத்து ஒழுங்குபடுத்திக்கொண்டு சுவருடன் ஒன்றி அசையாமல் நின்றனர். அனைத்து முகங்களிலும் கசப்பும் துயரமும் நிறைந்திருந்தது.

அபிமன்யூ எழுந்து கூடத்தைவிட்டு வெளியே செல்ல ஸ்ரீதமர் “எங்கு செல்கிறீர்கள்?” என்றார். அபிமன்யூ “இத்தருணத்தில் நான் செய்யக்கூடியதொன்றே. அவர் வரும் பாதையின் ஓரத்தில் நின்று என் முழு உயிரையும் அடிவயிற்றிலிருந்து குரலென எழுப்பி வாழ்த்துக் கூவுவது. புவிக்கிறைவர், பாரதவர்ஷத்தின் முதன்மை அரசர், யாதவர்குலத் தந்தை வெல்க என்று கூவப்போகிறேன். இக்குரல் இவ்வொலியுடன் முற்றொழிந்து மறையினும்கூட அதன் பணியை நிறைவேற்றிவிட்டது என்று எண்ணுவேன்” என்றான்.

முந்தைய கட்டுரைஒரு கவிதை
அடுத்த கட்டுரைமையநிலப்பயணம் கடிதங்கள்