«

»


Print this Post

கடிதங்கள்


IMG_20171101_153223_HDR

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்!.

 

“ஒன்ற நாளுக்கு எதுக்கு இவ்ளோ டிரஸ் திணிச்சிகிட்டு வற?”. சுரைக்காய் வடிவமாகிவிட்ட தோள்பையை பார்த்தபடியே கேட்ட அப்பாவுக்கு சொன்ன பதில் சற்று இறுக்கமாய் இருந்த புறப்பாட்டு சூழ்நிலையை இலகுவாக்கியது.

 

” அவம்பாட்டுக்கு பிரிச்சிவச்சிகிட்டு உக்காந்திருப்பான்.. டீ எதும் வேணுமுண்ணா பேசாம படுத்திருக்காத, அவன்ட்ட சொல்லி வாங்கிட்டுவரச்சொல்லு. செல்லு, காசெல்லாம் பத்திரம், ஆபரேசன் முடிஞ்சதும் அவனவிட்டு போன் பண்ண சொல்லு….”

 

அப்பாவிடம் கட்டளைகளை பிறப்பித்து காரை எடுக்கச்சொல்லி என்னிடம் கைகாட்டினான் தம்பி.

 

அப்பாவின் கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஒன்றரை நாள் மருத்துவமனை வாசம். துணைக்கு துணையாக கன்னியாகுமரி,காடு,அனல் காற்று.

 

அந்த ஆஸ்பத்திரியில் செவிலியர் ஓய்வறை ஒன்று உண்டு.விசாலமான அறை, பெரும்பாலும் அரவமற்று இருக்கும். எப்போதேனும் நுழைபவர்களும்  ஸ்டிக்கர்பொட்டு சரியாயிருக்கிறதா என்று அவசரகதியில் பார்த்துவிட்டு வெளியேறிவிடுவார்கள்.

 

மறுதினம் மதியம் திரும்புகையில் விமலா கன்னியாகுமரியிலிருந்து கிளம்பிவிட்டிருந்தாள். காட்டை மறந்து

கல்வெர்ட் வேலையை கவனித்தபடி ரெசாலம் மேஸிரியின் தோளுக்கும், அயனிமரத்தின் கிளைக்கும் சகஜமாய் மாற ஆரம்பித்திருந்தது தேவாங்கு.

 

வீடு சேர்ந்த இரு தினங்களில் அனல்காற்றும் வீசி அடங்கிவிட்டது.

 

புதுவாசிப்புக்கும், மறுவாசிப்புக்குமாய் தற்செயலாய் தேர்ந்தெடுத்த புத்தகங்கள். வேறுபட்ட கதைகளங்களாயினும் மெல்லியசரடாய் மனக்கண்ணில் மையம் கொண்டு நிற்கும் விமலா,நீலி மற்றும் சுசி.

 

மூன்று மனசாட்சிகள் முக்காலியில் அமர்ந்து உரையாடும் உணர்வை தரும் ரவி,விமலா,பெத்தேல்புரம் ஸ்டீபன் இடையேயான சந்திப்பு.

 

ரவி என்ன செய்வான் என்பதை நன்குணரும் அகபிம்பமாய் பிரவீணா.

வாய்ப்புக்கும், வாழ்க்கைக்கும் இடையே தத்தளிக்கும் ஸ்டீபன்.

 

குட்டப்பன் – கிரியின் வழி சென்ற வாசிப்பனுபவத்தை மாற்றி காட்டை முழுமையாய் கைக்கொண்டவன்.

 

எதிரெதிர் திசைகளில் முறுக்கிக்கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நெகிழ்த்தும் குளிர்காற்றாய் மாறி அடங்கும் அனல் காற்று.

 

வெண்முரசில் காந்தார படைகள் அஸ்தினபுரி நகர் நுழைகையில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி

புராணகங்கையில் தன்னொழுக்கில் சென்று நிலைபெறும்.தங்களின் ஒவ்வொரு  படைப்பும் அவ்வாறே தமிழிலக்கிய படைப்புகடலில் தன்னிச்சையாய்

நங்கூரமிட்டுக்கொள்கிறது.

 

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

 

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

தற்செயலாக திருக்குறள் புத்தகத்தைத் திறந்தபோது கண்ணில் பட்ட இந்த குறள் ஆழமற்ற நதி சிறுகதையை நினைவுபடுத்தியது.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

உங்கள் பல சிறுகதைகளை இதுபோல் குறட்பாக்களுடன் பொருந்துவது கொண்டு திருக்குறள் கதைகள் என்றே தனியாக தொகுத்துவிடலாம் போல் உள்ளதே.

அன்புடன்
விக்ரம்
கோவை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/103564