உலகமனிதன் -கடலூர் சீனு

jeyakanthan-l

 

இனிய ஜெயம்,

 

ஜெயகாந்தன் நீங்கிய பிறகான தினங்களில் , அவரது உருவம் குறித்து , அவர் உருவாக்கி இருந்த எழுத்துக்கள் வழியே மீண்டும் ,மீண்டும்  நினைவில் மீட்டிக்கொண்டு இருந்தேன் . ஏன் ஜெயகாந்தன் அவர்களை சென்று பார்க்க அவ்வளவு தயங்கினேன்?   இரண்டு முறை தூரத்தில் வைத்து பார்த்திருக்கிறேன் .   ஒரு முறை ஞானியார் மடத்தின் வெளியில் நின்று , முழங்கும் அவரது குரலைக் கேட்டிருக்கிறேன் . அந்த இரவுகள் ஒன்றினில் , பழைய டேப் ரிக்கார்டரில் , என் தாத்தா  என்னை நீசத்தனமாக திட்டுவதை அவர் அறியாமல் நான்  ரெகார்ட் செய்து வைத்திருந்ததை ஒலிக்கவிட்டு கேட்டேன்.  அக்கணம்தான் அறிந்தேன்,  ஜெயகாந்தன் உருவத்தாலும் ,குரலாலும் , மூர்க்கத்தாலும்  அப்படியே என் தாத்தாதான் .

 

என் தாத்தாவை அணுக எனக்கு இருந்த பயமே , என் தாத்தாவின் மேல் எனக்கிருந்த காதலே ,  ஜெயகாந்தனில் என்னை நிலைக்கவைத்தது என ஆச்சர்யத்துடன் அறிந்தேன் . கூட்டுக் குடும்பத்தில் அப்பா மூத்தவர் . தாத்தா அடிமுறை ஆசான் .  ஊரில் எவரையும்  சவால் விட்டு  மல்லுக்கட்ட அழைப்பார் .  சண்டை சேவல் ,சண்டை கிடா  எல்லாம் வளர்த்தார் . அதுபோலவே அவரும் இருந்தார் .  வீட்டில் யாரும் அவர் முகம் பார்த்து பேச தயங்குவர் .குறிப்பாக அப்பா . ஐயம்மாவை பார்த்து  ,அப்பா ஏதோ சொல்வார் .அதை கேட்டு அய்யம்மா தாத்தாவிடம் சொல்வார் , தாத்தா ஒரு உறுமலுடன் ,[எதிரே சுவர் ] நிமிர்ந்து பதில் சொல்வார் .  அப்பா தலைகுனிந்து கேட்பார் . எனக்கு அப்பா , தாத்தாவின் அப்பாவின் பெயரை இட்டுவிட்டார் . அதனால் என் தாத்தா இறுதிவரை என் பெயரை உச்சரித்ததே இல்லை .  நீசத்தனமான ஏச்சு விழும்  எந்த உணர்வு கொந்தளிப்பிலும் என் பெயரை மட்டும் அவர் சொன்னதே இல்லை .   பேய்த்தனமான ஆத்மா .  சொன்னசொல்லில்  என்நிலையிலும் பின்வாங்காமல் நிர்ப்பார் .அதை சொன்னவர் ”தான் ”எனும் ஒரே காரணத்தாலேயே . ” தாளி ..ரெத்தம் மாருனவம்தாம்ல  நாக்கு மாறுவான் ”  என்பார் .

 

சு ரா  விலகி  நீண்ட நாளுக்குப் பிறகே ,அவரது குரல் ,மற்றும் உடல் மொழியை ஒரு ஆவணப்பதிவில் கண்டேன் .  உண்மையில் அன்றிரவு தலையணையில் முகத்தை குப்புறப் புதைத்து வைத்து  விம்மினேன் . சே ஒரே ஒரு முறை அவரை சென்று பார்த்திருக்கலாம் ,எனும் ஒரே எண்ணமே ,துயரக் கடுப்பாய் குரல்வளையை நெரித்தது. அவர் போலவே ஜெயகாந்தனின் எந்த ஒரு சிறிய அசைபடத்தையும் அவர் விலகிய காலத்துக்கு பின்னாலும் நான் பார்த்ததில்லை .   என் இளையராஜாவின் குரல்வழியே சிலமாதம் முன்  அந்த பொக்கிஷத்தை நான் அடைந்தேன்.

 

இளையராஜாவின் இசையில் வெளியான பாரதியார் கவிதைகளை தேடிக்கொன்டிருக்கயில் , பாரதியார் கலைமகள் குறித்து இயற்றிய , எங்கணம் சென்றிருந்தீர் எனது இன்னுயிரே , எந்தன் இசையமுதே  , எனும் இளையராஜா இசையமைப்பில் வெளியான கவிதை கேட்க கிடைத்தது .    அந்த இசைக்கோவை இடம்பெற்ற புதையலும் கிடைத்தது .

 

இளையராஜா இசைக்கும்  எனக்குமான தொடர்பு  ஒரு மாதிரி பித்து நிலை கொண்டது . அந்த கொட்டகையின் முதலாளி பொடி போடுவார் .ஆகவே எங்கள் வாடிக்கையாளர் .அப்போது அப்பாவின் தொழிலில் ,அவரது பிள்ளைகளைப் போல பதினாலு வேலையாட்கள் உண்டு . அதில் சந்தியாகு என்பவருக்கு கடையை இரவு அடைக்கும் வேலை . இரவு பத்தே காலுக்குள் கடையை சாத்திவிட்டு சரியாக பத்து முப்பத்துக்கு கொட்டகைக்குள் இருப்பார் , இளையராஜாவின்   குரல் ஹம்மிங் எழும்போதே அரங்குக்குள் ஆர்ப்பரிப்பு துவங்கி விடும் .  எனக்கு ஆறு வயது . சந்தியாகுவின் தோள்களில் இருபக்கமும் கால்கள் போட்டு அமர்ந்து ,அவரது தலைமுடியை இறுக பற்றி இருப்பேன் . காட்டு வழி போற பொண்ணே பாடல் துவங்கி முடியும் வரை ,திரை முன்னால், நின்று ஆடுபவர்களுடன் இணைந்து குதித்து குதித்து ஆடுவார் .  இப்படி ஒரு நாள் ,இரண்டு நாள் இல்லை ,மூன்று மாதங்கள் ,நாள் தவறாமல் ஆடி இருக்கிறோம் ,அப்படி எனக்குள் இறங்கியவர்தான் இளையராஜா .

 

கொப்போலா இயக்கிய காட்பாதர்  படம் குறித்து  அதை இன்னும் அணுகி அறிய  ,பல நூல்கள் உண்டு.  அதன் ஒளிப்பதிவு மீதான ரசனை விமர்சன காணொளிகள் பல கண்டிருக்கிறேன் ,அதன் ஷாட் கம்போசிஷன் , பிளேஸ்மன்ட் என்று சொல்லப்படும் ,பாத்திரங்கள்  எவ்வாறு ,எங்கெங்கே சட்டகத்துக்குள் அமையவேண்டும் ,என்பது குறித்தெல்லாம் விரிவான ரசனை ஆய்வுகள் கிடடைகின்றன.குறிப்பாக இசை குறித்து . குட் பாட் அக்லி இசை குறித்து , இசை விமர்சகர்களின் ரசனை விமர்சனம் அடங்கிய ஒன்றரை மணிநேர ஆவணம் கண்டிருக்கிறேன் .   ஒரு உணர்வு சூழல் ,ஒரு நிலப்பின்னணி இங்கே , ஏன் இந்த வாத்தியம் தேர்வு செய்ய படுகிறது , இங்கே ஏன் பின்னணி மௌனம் காக்கிறது ,என விரிவான ஆய்வு ஆவணம் .  இதில் நூறில் ஒரு பங்கு இங்கே ராஜாவுக்கு நிகழ்ந்திருக்கிறதா?

 

ராஜா இசையில் ஒரு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் . படத்தின் நாயகன் நாத்திகன் ,கடவுளை மறுத்து ஏதோ பன்ச் டயலாக் பேசிக்கொண்டு இருக்கிறான் . அதை உயர்த்தும் பின்னணி இசைக்கோவை .அருகே என்னுடன் இருந்த இசையறிந்த நண்பர் சொன்னார் , ராஜா, புரந்தரதாசரின் கீர்த்தனையை வயலின்ல் பின்னணி இசையாக எழுதுகிறார் என்றார் .  இந்தப் புள்ளியில் துவங்கி , எனக்கு  இந்த  அறிவுத்துறை  மறுத்த இளையராஜா  இசை குறித்த பரிமாணங்கள் எத்தனை  என நான் அறியேன்.  ராஜாவின் ரசிகன் நான் என்று நான் சொன்னால் ,உனக்கு ராஜா இசை குறித்து என்ன தெரியும்  என்ற  கேள்வியே  அறிவித் துறை இல் இருந்து வரக்கூடாது .  ராஜா இசை மேதை என்று சொல்லும் தகுதி ,எதையும் கற்றுத் தராத உங்களுக்கும் இல்லை என அறிவுத் துறைக்கு சொல்வேன் . இந்த சிற்றறிவில் நின்று சொல்கிறேன் ,ராஜா இசமைப்பு  அதன் சிகரங்களை தொட்ட   படங்களில் ஒன்று ,ரவி சுப்ரமண்யன் இயக்கிய ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்  ஆவணப்படம் .

 

கலைமகளை தனது சொல்லால் ஆராதிக்கும்  பாரதி ,தனது குரலால் இசையால் ஆராதிக்கும் ராஜா , ஆவணத்தின் துவக்கமே  உன்னதம் .  ஜெயகாந்தனின் குரலில் பாரதி எழுகிறான் .  சொல்லி முடித்து , கெச்,கெச்,கெச் என்றொரு சிரிப்பு . வாழ்வில் முதல் முறையாக ஜெயகாந்தனின் சிரிப்பைக் கேட்கிறேன் .  சித்தனின் சிரிப்பு ,கண்டு கடந்தவனின் சிரிப்பு .  அதில் துவங்கி  ஜெயகாந்தனின் பிறப்பு முதல் அவர் பெரும் ஞான பீடம் விருதுவரை ,அவரது வாழ்வையும் பணியையும் ,ஜெயகாந்தன் பின்னால் சென்று சுருங்க உரைக்கும் ஆவணம் .

 

பாரதியார் கவிதையில் துவங்கும் ராஜா , ஆவணத்தின் நிறைவு வரை அற்ப்புதம் நிகழ்த்தி இருக்கிறார் . காந்தி , ஜீவா , பாரதி , ஜெயகாந்தனின் இளமைக்கால புகைப்பட வரிசை , ஜெயகாந்தன் ஓவிய வரிசை , என ஒவ்வொன்றும் எழுந்து வருகையில் அவர் அளித்திருக்கும் பின்னணி இசைக்கோலம்  இந்த ஆவணத்தையே வேறு உயரத்துக்கு நகர்த்துகிறது .  குறிப்பாக இரண்டு இடம்  .ஜெயகாந்தன்  ஐயம் எ ட்ரீமர்  என்று என்று தன்னை பிரகடனம் செய்யும் இடம் . அங்கே  பின்னணியில் எழும் ராஜாவின் வயலின் தீற்றல் .  இறுதில் ஜே கே  நாம் அசோகர்களை உருவாக்குகிறோம் அலெக்சாண்டர்களை அல்ல என்று முழங்குகையில் , எழுந்து வரும் ஆலாபனைக் குரல் .  நமது பண்பாட்டின் சிகரமுகங்கள் இரண்டும் அதன் முழு வீர்யத்துடன் எழுந்து வரும் காட்சி .  எந்த கலைப்படத்தையும் விஞ்சும் ,ஆவணம் மட்டுமே அருளக்கூடிய உன்னத தருணம் .

 

செழியன் .  ஆவணத்தின் மதிப்பு மிக்க காத்திரமான,  பங்களிப்புக்கு சொந்தக்காரர் .இப்படத்தின் ஒளிப்பதிவாளர் .  கூர்ந்து பார்க்கும் பூனை ,  கோலம் ,  மாடி சபை வாசலில் எரியும் விளக்கு ,  டேபிளின் கஞ்சா சிலுப்பி , வந்து அமர்ந்து வால் துடிக்கும் குருவி , மெல்லத் திரும்பும் நடராஜர் சிலை , புன்னகைக்கும் எமோஜி, என விதவிதமான ,இயல்பை மீறாத கவித்துவ சித்திரங்களை அள்ளி இறைத்திருக்கிறார் . அனைத்தையும் விட முதன்மையானது ,இயக்குனருடன் இணைந்து அவர் சிறிதும் குன்றாமல் அப்படியே ஆவணத்துக்குள் அள்ளிக்கொண்டு   கொண்டுவந்திருக்கும் ஜெயகாந்தன்  எனும் வெளிப்பாடு . முன்வைத்தல் .இருப்பு.

 

கேமிரா யாருடைய கோணத்தில் நின்று நகர்கிறது  என்று பாருங்கள்  என்கிறார் கொப்போலா .  இதில் கேமிரா யாருடைய கோணத்தில் நிற்கிறது?  முழுக்க முழுக்க தனது ஆதர்ச எழுத்தாளுமை மீது மாறாத காதல் கொண்ட வாசகனின் கோணத்தில் நிற்கிறது . பிரிய வாசகன் ,தனது ஆதர்சத்தை எங்கெங்கு இருந்து ,எவ்வாறெல்லாம் நோக்க விழைவானோ, எங்கு எல்லாம் ஒரு வாசகன் நின்று  பிரியத்துடன் நோக்க சாத்தியமோ , அங்கெல்லாம் கேமெரா சென்று நின்றிருக்கிறது .

 

முதல் ஷாட்டிலேயே அந்த மாயம் துவங்கி விடுகிறது .  நான் பின் சீட்டில் அமர்ந்திருப்பேன் .நீங்கள் பேசிக்கொண்டே வருவீர்கள் . அப்போது என்ன காண்பேனோ ,உங்களை எப்படி காண்பேனோ அப்படியே இங்கு ஜெயகாந்தனையும் காண்கிறேன்.  குறிப்பாக  ஜெயகாந்தனின் சபையில் வைத்து ,அவரை எழுந்தருள வைத்திருக்கும் காட்சிகள் . அந்த சபைக்குள் எங்கெங்கெல்லாம் இருந்து ஜெயகாந்தனை பார்க்க விரும்புவேனோ , அங்கெல்லாம் நின்று  ஜெயகாந்தனை அள்ளி அள்ளி உள்ளே நிறைத்திருக்கிறார் .  ஜெயகாந்தன் பேசிக்கொண்டு இருக்கிறார் ,பின்னால் அவர் பின்னால் ,யாரோ ஒருவர் எதையும் கவனிக்காமல் குத்தவைத்து அமர்ந்து ,இடது உள்ளங்கையில் எதையோ வைத்து வலது கையால் கசிக்கிக்கொண்டு இருக்கிறார் . ஜெயகாந்தனின் இடதுபுற கேலண்டர் ,பின்புற விவேகானந்தர் படம் , என என்னை அங்கேயே வாழவைத்து விட்டார் செழியன்.

 

நாளை உங்களை குறித்து நான் எழுதுகையில் , அருண்மொழி அக்காவோ ,அஜிதனோ கூட அறியாத உங்களின் உடல்மொழி ஒன்றினை என்னால் சுட்டிக்காட்டி விட ,இயலக்கூடும் . வாசகனை மட்டுமே வந்து தீண்டும் தனித்தன்மை அது.  ஜெயகாந்தனில் நிகழும் அந்த  தனித்தன்மையை மிக கவனமாக ,கிட்டத்தட்ட எதையும் விட்டுவிடாமல் ஆவணம் செய்திருக்கிறார் செழியன் . இசை கேட்கையில் ஜெயகாந்தனின் விரல்கள் , மேடையில் பேசுகையில் அவரது உடல்மொழி , ஒவ்வொரு உணர்வின் போதும் அவர் உடல் கொள்ளும்  மொழிகளில் நிகழும் வண்ண பேதம் , அனைத்தும் கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் செழியன்.  என் ஜெயகாந்தனை ,இத்தனை அணுக்கமாக எனக்கு காட்டியதற்காகவே , செழியனை கட்டி ,இறுக்கி ,கன்னம் வீங்க பல நூறு முத்தம் அளிக்கவேண்டும் போல உன்மத்தம் எழுகிறது .

 

ஜெயகாந்தன் . என்ன சொல்ல .அக்கணம்  அதுவாகி  அங்கே நிகழ்கிறார். குறிப்பாக கலைஞரின் நட்பு குறித்து கேள்வி எழுகையில் அவரது எதிர்வினை .

 

இரு கரங்களும் விரிந்து மேஜையில் படிந்து கிடக்கிறது , வலதுபுறம் திரும்பி  எங்கோ பார்த்தவண்ணம் அமைதியில் அமிழ்கிறார். மெல்ல தனக்குள் என பேசுகிறார் ,

 

”அன்பு ஈனும் …”  இடைவெளி   ஆர்வம் உடைமை  [குரல் சற்றே உயர]  அது ஈனும் நன்பெனும் நாடா சிறப்பு ”

 

அவரை உருவாக்கிய வள்ளுவனும் ,கம்பனும் ,பாரதியும்  அவர்கள் எவ்வாறு நம்மால் உள்வாங்கப் படவேண்டுமோ  அந்த நிலையில் ஜெயகாந்தனின் குரலில் எழுந்து வருகிறார்கள் .

 

தம்தமது தனித்தன்மையை பேணிக்கொண்டு ,சேர்ந்து வாழ்வது எப்படி என்பதற்கு உதாரணமாகவே இந்தியா என்றும் இருக்கிறது .

 

சொல்லும் ஜெயகாந்தனை கேள்வியாளர் மறுக்கிறார் ”யதார்த்தம் அப்டி இல்லையே ஜே கே . நீங்கதான் ஓருலகம், ஒன்றுபட்ட இந்தியா , தனித்தன்மை அப்டில்லாம் சொல்றீங்க ,பக்கத்தல கர்னாடகாவ பாருங்க . அங்க தமிழ் இருக்ககூடாதுன்னு சொல்றாங்களே ”

 

அதற்க்கு ஜெயகாந்தனின் பதில் , இன்று குழறிக்கொண்டு இருக்கும் அத்தனை தமிழ்தேசிய தவளைகளும்  அறியவேண்டிய ஒன்று .

 

”சோ வாட் . அதனால என்ன . தனித்தன்மையை பேனவேண்டுமே அன்றி தனியாகப் போய்விடக் கூடாது . பாத்தாலே தெரியல தே ஆர் இம் மெச்சூர்ட் . இத சொல்ல அறிவாளி வரணுமோ .உனக்கா தெரியவேணாம் ? இங்க எல்லோரையும் கன்னடம் படிக்க சொல்லு , அவன்கிட்ட இல்லாத பெருந்தன்மைய நீ கத்து குடு .நீ தமிழன்தானே ”

 

மனோஜ் . ஒரு வாக்கியம் உரைக்கப்படும் போது, அதில் விழும் சொற்களுக்கு நிகரான காட்சிகளை , அந்த உரையின் வேகத்துக்கு ஒப்பவே தொகுத்திருக்கிறார் .அது காட்சி அனுபவத்துக்கு உறுத்தாத வகையில் அமைந்திருப்பதே .எடிட்டர் மனோஜ் அவர்களின் அழகான பங்களிப்பு .

 

இத்த கூட்டணியில் சற்றே பலவீனமான தூண் ரவி சுப்ரமண்யன் .  மிக சம்பிரதாயமான ,அறிமுகம் ,பொதுவான கேள்விகள் , சராசரியான   பின்னணி உரையாடல் .[ கேட்பார் பிணிக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்]   அப்படியே எடுத்து ,கருணாநிதி ,வைரமுத்து யாருக்கும் உபயோகிக்கலாம் . ஆவணத்தில் ஜெயகாந்தன் மீண்டும் மீண்டும் சொல்கிறார் . என்னோட ரோல நான் பண்றேன்.  அவர் ரோல் என்ன?  காலமாற்றத்தின் யுகசந்தியின் தனித்துவத்தின் சங்கநாதம் ஜெயகாந்தன் .இந்த ஒரு வரி  இடம்பெறாத அந்த பின்னணி உரையாடலுக்கு ,இந்த ஆவணத்துக்குள் எந்த மதிப்பும் இல்லை .

 

பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் அவரை வாசித்தார்கள் எனும் பின்னணி குரலுக்கான காட்சி அமெசூரின் உச்சம் . ஒரு அம்மாள் ஜெயகாந்தன் நூலை பிரித்து வைத்து வாசிக்கிறார் ,ஒரு தாத்தா [நெற்றியில் நீண்ட நாமம் அது முக்கியம் ] அவரும் ஜெயகாந்தனை வாசிக்கிறார் .அதாவது இருவருமே வாய்விட்டு வாசிக்கிறார்கள் .

 

ஜெயகாந்தனை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய ஞானியார் மடம்,வள்ளலாரின் சபை ,இரண்டை குறித்து ஒரு புகைப்படம் கூட இடம்பெறவில்லை . ஜெயகாந்தன் குறித்த பட காட்சிகளும் எங்கும் காண கிடைக்கும் படங்கள்தான் .ஜெயகாந்தன் வெற்று உடம்புடன் கைத்தட்டி பாட்டு பாடுகிறார் , தோளில் ஒரு துண்டு மட்டும் போட்டு நடனம் ஆடுகிறார் .இப்படி பட்ட படங்கள் இணைக்கப்பட்டு இருந்தால் ஆவணத்தின் பலம் கூடி இருக்கும்.

 

ஆவணத்தில் கெடிலம் நதி காட்டப்படவில்லை . காரணம் அதை காட்ட முடியாத அளவு சாக்கடை . காட்டப்படும் பெண்ணை ஆறு பொய் .அது பிச்சாவரத்தில் எடுக்கப்பட்ட துண்டு காட்சி.  உள்ளதை உள்ளபடி காட்டினால் தானே அது ஆவணம்?

 

ஒரு இயக்குனராக ரவி  வென்றது இரண்டு இடங்களில் .ஒன்று ஏதோ ஒரு கோவிலில் அர்ச்சகர் ஜெயகாந்தனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் சித்திரம், தன்னியல்பாக அமைந்த தருணம் என பார்த்தாலே தெரிகிறது ,அந்த தற்செயல் மீது உயர்ந்து வரும் மேன்மையை ,அழகாக உள்ளே கொண்டுவந்து இருக்கிறார் . இரண்டு ”நாம் அசோகர்களை உருவாக்குவோம் ” என்று ஜே கே  முழங்கி ஓய்ந்தபின் , வரும் ஜே கே வின் இரண்டு துண்டு காட்சிகள் . முதல் காட்சி எதையோ ஆழ்ந்து வாசிக்கும் ஜே கேவின் இடது கண்ணின் அண்மைக்காட்சி .இரண்டாம் காட்சி    ஜன்னல் வழியே தொடுவானை வெறித்து நிற்கும் ஜே கேவின் சித்திரம் .

 

இதில் வரும் ஜெயகாந்தனில் இரண்டு   எனக்கு முற்றிலும் புதிய முகம் .ஒன்று அவரது சிரிப்பு .  செல்லக் கிழவா என கொஞ்சி மீசையை பிடித்து இழுக்க தோன்றுகிறது . அப்படி ஒரு சிரிப்பு .    அவர் நாடகத்தில் நடித்த காட்சி ஒன்றை விவரிக்கிறார் .  தளர்ந்து விழுந்து சிரித்தேன் .  [குத்துறதுன்னு முடிவாகிப்போச்சி அப்புறம் மூஞ்சி என்ன ..முதுகு  என்ன ..விட்டேன் ஒரு குத்து ]  அப்படி ,கண்டு கடந்து  கனிந்த சிரிப்பே இதில் வெளிப்படுவது .

 

கடலூர் சோனாங்குப்பம் கடற்கரையில் சிறுவர்களுடன் அவர் நிகழ்த்தும் சம்பாஷனை

‘என் பேர்  ஜெயகாந்தன் ..ஞாபகம் இருக்குமா ?   ரஜினிகாந்த் நெனப்பு வர வைங்க என் பேர் நினைவுக்கு வந்திரும் ”  ஆசான் அவர் என் நிலையிலும் ஆசான் .  உப்பு எனும் சொல்லின் வழியேதான் என்னால் உபப்பிலவ்யம்  பெயரை  நினைவில் எழ வைக்க முடியும் . ஒரு சிறுவன் அவர் தோள் மேல் கைபோட்டு அவருடன் பேசியபடி வருகிறான் .

 

ஜெயகாந்தன் வாழ்வும் பணியும் ஒரு புறம் .இந்த ஆவணம் மறுபுறம் .  துலாமுள் சமநிலையில் நிற்கும் .  காரணம் இதில் ஜெயகாந்தன் வழியே ,ஜெயகாந்தனை ஊடகமாகக்கொண்டு எழுந்து வரும் ஒன்று .

 

ஜே கே  சொல்கிறார் .

 

உன் புலம் என்ன ?

 

பூமி

 

இந்த பூமி முழுமையும் உனது புலம்.

 

நீயார் ?

 

உலகமனிதன் ….

 

ஆம் இதை ஜேகே சொல்லவில்லை . இந்த சொல்லுக்கு  தனது உடல் ,மொழி ,மனம் ,ஆன்மா ,அனைத்தையும் ஒப்புக்கொடுக்கிறார் ஜே கே .

 

அவரை ஆகுதியாக்கி  நின்றெழும் பண்பாட்டின் சொல்

 

உலகமனிதன் .

 

அந்த வெளிப்பாட்டின் ஆவணம் எனும் வகையில் , இது தமிழ் நிலம் உலகுக்கு வழங்கும், தன்னிகரற்ற , தனிப்பெரும் கொடை  என்றாகிறது .

 

 

 

முந்தைய கட்டுரைஅயினிப்புளிக்கறி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமையநிலப் பயணம் – 11