ஆதலின் அணுகுமுறைகள்

@session

காளி தான் முதலில் இப்படி ஒரு தத்துவ வகுப்பு நடைபெறப் போவதைப் பற்றி தெரிவித்தார். மூன்று நாட்கள், நாளொன்றுக்கு நான்கு மணி நேரமாக நமது குருஜி சௌந்தரின் வடபழனி ஆசிரமத்தில் அக்டோபர் 20, 21 மற்றும் 22 தினங்களில் நடைபெற்றது. ரிஷிகேஷ் சிவாந்த சரஸ்வதி சுவாமிகளின் குருமரபில், அவரது நேரடி சீடரான சுவாமி கிருஷ்ணானந்தரின் சீடரான சுவாமி பரம்ப்ரியானந்த சரஸ்வதி இந்நிகழ்விற்காக ஹரித்வாரில் இருந்து வந்து இருந்தார். குரு பரம்ப்ரியானந்தா ஒரிசாவில் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது குருவைக் கண்டடைந்த பிறகு ஆசிரமத்திலேயே தீட்ஷை பெற்று அதன் கல்வி நிலையில் யோக வேதாந்த தத்துவக் கல்வியைப் போதிக்கும் இரு ஆசிரியர்களில் ஒருவராக மேலை தத்துவத்தையும், யோகத்தையும் போதிக்கிறார். சென்னைக்கு நமது விஷ்ணுபுர குழுமத்தின் சார்பாக சௌந்தரின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். இங்கே யோகா மாணவர்களுக்காக இரு அமர்வுகளும், நமக்காக மூன்று அமர்வுகளும் ஒருங்கு செய்யப்பட்டிருந்தன. தனது குருவிடம் தான் அடைந்த ஞானத்தை முடிந்த அளவுக்கு வழங்க வேண்டும் என்னும் சேவை எண்ணமே அவரை இங்கே வரச் செய்திருக்கிறது. இந்த கூடலுக்கென அவர் எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை.

எங்களில் பலருக்கும் இப்படி ஒரு குருமுகமான வகுப்பு முற்றிலும் புதிது. விஷ்ணுபுர மற்றும் வெண்முரசு இலக்கிய கூட்டங்களில் பங்கெடுத்திருந்ததால் தொடர்ச்சியான செறிவான உரையை உள்வாங்குவது அவ்வளவு சிரமமான ஒன்றாக இல்லை. ஆயினும் ஒரு70 வயதைக் கடந்த ஒரு சந்நியாசி குருவின் முன்னிலையில் அமைந்த இந்த வகுப்பில் அமர்வது முதற்கொண்டு, கேள்விகள் எழுப்பிக் கொள்வது வரை எங்களில் பலருக்கும் சில சிரமங்கள், தடைகள் இருக்கத்தான் செய்தன. அவரை எப்படி அணுகுவது, எப்படி அவரது தொடர்ச்சியான உரையை தொகுத்துக் கொள்வது என தடுமாறினோம். முதல் நாளின் இறுதியில் அவரவர் அவரவருக்குப் பொருத்தமான ஒரு வழியைக் கண்டடைந்திருந்தோம். முதன் முதலாக இப்படி ஒரு செறிவான வகுப்புக்கு வந்திருந்த என் மனைவி மிக எளிதாக இந்த உரைக்கு தன்னை முழுமையாகக் கொடுத்துவிட்டிருந்தார். கடந்த இரு நாட்களாக குருவின் கூற்றுகள் வெவ்வேறு சமயங்களில் அவளிடம் இருந்து வந்ததைக் கவனித்த போது குருவின் வார்த்தைகளின் வீச்சு புரிந்தது.

வகுப்பில் குரு கூறிய பெரும்பாலான தத்துவங்கள் வெண்முரசின் தொடர் வாசகர்களுக்கு புதிதாக இருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக சொல்வளர்காடு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. மணி 4:30 க்கு வகுப்பு துவங்கியவுடன் எங்கிருந்தோ எடுத்து கொட்டுவது போல பேசத் துவங்குவார். ஓடும் நீரில் எவ்வளவு அள்ள முடியுமோ, அள்ளிக் கொள்ள வேண்டியது தான். முற்றிலும் செறிவாக இருந்தாலும் தெளிவான திட்டமிடலுடன் அமைக்கப் பட்ட உங்களது உரைகளோடு இயல்பாக மனது ஒப்பிடத் துவங்கியது தான் நான் செய்த பிழை (பிறகு பேசிய போது நண்பர்கள் பலரும் அதைச் செய்திருந்தனர்). நல்ல வேளையாக அப்பிழையைத் தொடரவில்லை. மீண்டும் வெண்முரசு தான் கைகொடுத்தது. வண்ணக்கடலில் துரோணருக்கும் அர்ச்சுனனுக்குமான உரையாடல்களை நினைவூட்டியது அவரது அணுகுமுறை. குரு மனதில் தோன்றும் அனைத்தையும் பேசத் துவங்குகிறார். சீடர்களே அவரைத் தொடர்ந்து செல்ல வேண்டும்.

 group foto

பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களின் “Facets of Indian Culture என்ற புத்தகத்தின்

Science is curiosity about life

Philosophy is an attitude towards life

Art is a wonder of life

Religion is the reverence for life என்ற மேற்கோளோடு துவங்கிய வகுப்பு மூன்று நாட்களும் மேலை தத்துவத்தின் முக்கிய ஆளுமைகளாக குரு கருதுபவர்களின் பங்களிப்புகளைப் பற்றியதாக அமைந்திருந்தது. அவரது உரை முழுமையாகவே ஒரு ஆளுமையின் தத்துவ கோட்பாடு, அதனுடன் இணைந்த, தொடர்புடைய அல்லது முரண்படும் கணித, இயற்பியல், மருத்துவம் சார் கண்டடைதல்கள், அக்கோட்பாடுடன் இணையும் இந்திய தத்துவ கருதுகோள்கள், அக்கோட்பாடுகளின் போதாமைகள், அவற்றை இந்திய வேதாந்தம் கடந்து செல்லும் வழிகள் என்பதாக அமைந்திருந்தது.

உதாரணத்திற்கு ஸ்பினோசா வின் ‘Substance and Modes’ பற்றி பேசுகையில் second law of thermos dynamics – entropy என்னும் கருதுகோள் எவ்வாறு அவரது கோட்பாடுகளை உடைக்கிறது என்பதைப் பற்றி பேசினார். பொதுவாக மேலைத் தத்துவங்கள் அறிதலின் எல்லைக்குள், தர்க்கத்தைக் கருவியாகப் பயன்படுத்துபவையாகவே இருக்கின்றன என்பதே அவரது பார்வையாக இருந்தது. நமது பஞ்ச கோஷங்களில் விஞ்ஞான மய கோசம் வரை அவர்களால் வர இயன்றுள்ளது. அதற்கு மேல் அவர்களால் செல்ல இயலவில்லை எனக் கூறினார்.

பொதுவாக மேலைத் தத்துவவாதிகளை அனுபவவாதிகள்(Empiricist) , சிந்தனாவாதிகள் (Rationalist) என இரு வகையாகப் பிரிக்கலாம் எனத் துவங்கி சாக்ரடிஸ், பிளாடோ, பிளாடினஸ், இமானுவேல் கான்ட், ஸ்பினோசா, தெகார்த்தே, ஹெகல் வரை பேசினார். கான்ட் மற்றும் ஹெகல் சற்று விரிவாகவே அறிமுகப்படுத்தப் பட்டனர். விரிவாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும். அவரது உரையில் பக்தி மார்க்கத்தை தன்னைக் கண்டடைதலுக்கு உகந்த வழியாக முன்வைத்தார். கடவுள் என்பதைக் கூறுகையிலேயே அதைக் கண்டடைந்து கடந்து செல்வதே முழு மெய்மை என்பதையும் மீண்டும் மீண்டும் கூறினார். ஒவ்வொன்றுக்கும் தெய்வங்களை வைத்து, அதைத் தாண்டிச் சென்ற மானுடர்களின் வீர வரலாறைக் கூறும் வெண்முரசு மீண்டும் உதவிக்கு வந்தது. கிராதமும், காண்டீபமும், நீலமும் அவரது இப்பகுதி உரைகளைப் புரிந்து கொள்ள உதவின. மானுடர்க்கு நன்மையைச் செய்யவே போதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தீயவை ஒரு எல்லையில் நின்று விடும். நன்மை அப்படி அல்ல, அதற்கு முடிவில்லை. முடிவில்லாததே முடிவின்மையை அறிய உகந்த வழி என அவர் கூறிய போது, நீலத்தில் கம்சனிடம் எஞ்சிய நீலக் குருவி தான் நினைவுக்கு வந்தது. ஆம், எல்லையற்ற தீமையை மானுடத்தால் கைக்கொள்ள இயலாது அல்லவா!!

அவர் எங்களையெல்லாம் இணைக்கும் சக்தியான ஜெ வின் படைப்புலகை தனக்கு அறிமுகப் படுத்தும் படி கேட்டார். உடனடியாக கையில் கிராதம் தான் இருந்தது. அவருக்கு தமிழ் தெரியாது. வகுப்புகளும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் இருந்தன. இருப்பினும் ஜெ வின் படைப்பின் ஒரு பகுதியை தமிழில் வாசித்து, பின்னர் மொழி பெயர்த்துச் சொல்லச் சொன்னார். கிராதத்தில் இந்திரகீல மலையுச்சியில் அர்ச்சுனன் தவம் செய்யும் குகையின் விவரணத்தைப் பற்றிய பாராவை காளி வாசித்தார். “வெண்சுண்ணத்தால் ஆனது அர்ஜுனன் தவம் செய்துகொண்டிருந்த குகை. அதன் மேல்வளைவிலிருந்து பன்றியின் முலைக்கொத்துபோல் தொங்கிய சுண்ணக் குவைகளில் நீர் ஊறித்துளித்து சொட்டிக் கொண்டிருந்தது. குகையின் ஊழ்கநுண்சொல் என அது தாளம் கொண்டிருந்தது” – இவ்வரிகளின் இறுதியில் வரும் பகுதியை, ‘The cave is meditating on the sound of the water droplet as its mantra’ என மொழி பெயர்த்தேன்.  அவர் இது உயர் கவித்துவம் – This is high poetry. This is Pathetic Fallacy – (Pathetic Fallacy –ஆங்கில இலக்கிய உத்திகளில் ஒன்று. மானுட உணர்வுகளை இயற்கையின் பகுதியாக விவரிப்பது.)  எனக் கூறினார். எனக்குத் தேவையான ஒரு சோறு பதம் கிடைத்து விட்டது என்றார். இதை இவ்வளவு பேர், அதுவும் பெண்களும் சேர்ந்து வாசிக்கிறார்கள் என்பது அவருக்கு வியப்பளித்தது. உண்மையில் அவர் ஜெ வின் படைப்புலகின் முக்கியமாக ஒரு இலக்கிய உத்தியை இவ்வளவு நெருக்கமாக ஒரே ஓர் வரியில் புரிந்து கொண்டது மிகவும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

அனைவருக்கும் ஆசி வழங்கிய பின் அவரும் ஞாயிறு இரவு விசாகபட்டினம் கிளம்பினார். மிக நிறைவான மூன்று நாட்களை கழித்த அனுபவம் அனைவருக்கும் கிட்டியதற்கு  சௌந்தருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50
அடுத்த கட்டுரைமையநிலப்பயணம் -கடிதங்கள்