அயினிப்புளிக்கறி கடிதங்கள்

ayani

 

அன்புள்ள ஐயா

 

அயினிப்புளிகறி சிறுகதை வாசித்தேன்

 

நாவில் சுவைபடாவிட்டால் மண்டையில் அறைகிறது. வாழ்வில் மனம் எதிர்பார்க்கும் சுவை கிடைக்காதபோது,  ‘செரியா வரலை’ என்பது தான் முடிவான பதிலாகிறது

 

அம்மை வந்து ஆசானுடன் இணக்கமானதும், இருவரின் சித்தமும்  மூத்து கனிஞ்சு, இனிக்க ஆரம்பித்து  விடலாம். அல்லது இந்த இணைப்பு ஒரு மாபெரும் மெய் நிகர் கனவோ?

 

சுவை என்பது தான் என்ன மூளையின் ஒரு நரம்பு சொடுக்கன்றி ? ஐம்புலன் கருவிகளில் ஒளி, நிறம், ஒலிக்கு இருக்கும் அலகுகளும் இயற்பியல் அளவுகளும் சுவை மணத்திற்கு இல்லையே. சுவைப்பலனுக்கு ஆன்மா தனக்கென் ஒரு அலகை, காலம் முழுதும் மாறிக்கொண்டிருக்கும் அலகை வைத்திருக்கிறது. தான் என முந்தி நிற்கும் புளிக்கும் சுயநலம் உலகின் உப்பாக இருக்கும் அளவான உருகும் நெகிழ்வால் சமப்பட்டால், வாழ்வு சுவைக்கலாம். இனிப்பு மட்டும் மேலானதா என்ன? நாவின் கீழே பெரும் அவதிதான்.

 

குடும்ப , உலகியல் இணக்கம் எனும் சுவையைத் தேடித் தேடி, இறுதியில், தனிமையில் கண்டுகொள்கிறாரா ஆசான்? தன்னுள் இருக்கும் மாங்காய்ப் பாலை தியானம் மூலம் வடிக்கப் போகிறாரா? எத்தனையோ போராட்டங்கள் மூலம் இறுதியில், சித்த அலைகள் அமைதியுறுகின்றனவா?

 

நிலவு மனதை அலைவுறுத்துவது; சித்தத்தின் அதிகாரி.  தோட்டத் தனிமையில் நெருப்பு போன்ற தோற்றத்தின் நிலவு, குளிர்ச்சியைத் தந்து விட்ட்து. பின்னிரவின் வெண்ணிலவு பெரிதாய்த் தெரிந்து, நிழல்களின் நீட்டம் போல் வாழ்வின் அகல உயரங்கள் தெளிந்து விட்டன. ‘செரியா வரல’ என்று உணர்வது, சரியாக வருவதற்கான திருப்புதல்.

 

சுவை நாவில் உள்ளதா, மூளையிலா, மனதிலா, சித்த்த்தின்  தகவல் நிரையிலா,  அல்லது அதற்கும் உள்ளேயா? அயினியிலும் ஆச்சியிலும் தேடிய சுவை, தன்னுள்ளே கண்டுவிட்ட ஆசான், யாக்ஞவல்கியர் போல, அயினியையும் ஆச்சியையும் ஆன்மா மூலம் அறிந்து, சுவைத்து , கடந்து சென்று ‘, காலடி எடுத்து வைத்து விட்டார் ‘ என்றே படுகிறது

 

 

பணிவுடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை

 

 

அன்புள்ள ஜெ ,

 

ஆசான் ஆச்சியை பார்த்தபோ ‘இப்படி ஆயிட்டயேடி ‘ னு சொன்னதை அவங்க கஷ்ட்டதத்த பார்த்து சொல்றார் னு முதல்ல நினைச்சேன் ,அப்பறம் தான் புரிஞ்சது ஆச்சியோட வடிவம் குலைந்தத பார்த்து பீல் பண்ணியிருக்கார்னு :) அதான் ஆச்சி ‘ வயசாயிடுச்சுல்ல ‘ பதில் சொல்லியிருக்கு .

 

ஜெ இந்த கதை இரண்டு தலைமுறை இடைவெளியோட வித்யாசத்தை சொல்லுதுனு தோணிச்சு , ஆசான் அந்நேர சந்தோசத்தை கொண்டு வாழறவர் , எதிர்காலம் , சேமிப்பு சார்ந்த மனச்சிக்கல் எல்லாம் அவருக்கில்லை , ஒரு விஷயம் இருக்கற வரைக்கும் அத அனுபவிக்கனும் னு விரும்பறாரு , அந்த விஷயம் தானா உதிர்ந்து போவதுதான் முறை னு நினைக்கிற மனம் ,ஓரளவுக்கு காடு குட்டப்பன் பாத்திரத்திற்கு நெருக்கமானவர் .

 

இந்த இயல்பான வாழ்கை மாறுவதுதான் அயனிமரமும் மறைவது  , புளிக்கறியின் சுவையும் இதைத்தான் சொல்லுதுனு தோணுச்சு .ஆனா ஒரு கதையை அந்த கதை தாண்டி மேலதிகமா யோசிக்கறது தப்புதான் மன்னிக்க :)

 

அந்த ஆச்சி வேலி தாண்டினது செமயா இருந்தது .

 

நல்ல கதை , வாழ்த்துக்கள் :)

 

ராதாகிருஷ்ணன்

 

 

நம் மூளையில் நினைவுகள் பதிந்துவைத்திருக்கும் முறை  மிகவும் விந்தையானதுஇன்றைய நவீன அறிவியலுக்கு இன்னும் பிடிபடாதிருப்பதுநினைவுகள் ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்டதாக  பதிக்கப்பட்டிருக்கும்ஒன்றின் நினைவு ஏதோ ஒன்றின் நினைவை நம்முள் மீட்டெடுக்கும்பல சமயங்களில் நம்மால் அதை ஏன் எனப் புரிந்துகொள்ள முடியாதுஏதோ ஒரு பொருள் அதற்கு சற்றும் தொடர்பில்லாத இன்னொரு பொருளை நினைவுக்கு கொண்டுவரும்நம் மனம் நாமறியாமலேயே ஏதோ ஒரு தொடர்பை உருவாக்கிக்கொண்டிருக்கும்.   ஒரு நினைவு   மற்றொரு  நினைவு  எழுந்து விரியும்  படிமமாக இருப்பதுண்டு.

 

ஒரு விதையும் அது முளைத்தெழுந்து உருவாகும் மரமும் தொடர்பற்றவையாகத் தான் வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறதுமரம் என்பது  விதையின் நினைவு  விரித்தெழுந்து எழுவது.    மனித உள்ளத்தில் ஒரு அனுபவமும் இன்னொரு அனுபவத்தின் விதையென ஆகிறது.    ஒரு  அனுபவத்திலிருந்து இன்னொரு அனுபவத்தின் நினைவு விரிந்தெழுகிறது.

 


அனுபவம் என்பவையெல்லாம நாம் மனம் என்ற நாவினினால் சுவைத்தறிந்தவைசில நமக்கு பிடித்தமான சுவைகளாக இருக்கலாம். சில நமக்கு பிடிக்காதவையாக இருக்கலாம்.   நாம் உடல் கொண்டு அனுபவிக்கும் இரு இன்பங்கள்  உணவிலிருந்தும் காமத்திலிருந்தும் அடையப்பெறுகின்றனமற்ற இன்பங்கள்  மனதில்  நாம் பயின்று உணர்பவை.   ஆதாரமான இந்த இரு இன்பங்களையும்  நாம் உடலில் இருந்து மனதுக்கும் ஏற்றிக்கொள்கிறோம்உண்மையில் அனைத்தையும் சுவைப்பது மனமேமனமே நம் ஆன்மாவின் நாவென இருக்கிறது. காமத்தை மனதில் ஏற்றி அதன் சுவையை காதலென ஆக்கி   நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக்கொள்கிறோம்உணவின்பத்தை  பல்வேறு விதங்களில் சுவைகளைக் கலந்து அதையும் பெருக்கிக்கொள்கிறோம்இரு அடிப்படைச் சுவைகளும் உடலாலும் உள்ளத்தாலும் ஒரு சேர  அனுபவிக்கப்படுகின்றன. என்றாலும் காமச்சுவை  மனதில் அதிக நேரம் தங்குகிறது. உணவுச்சுவை அந்த அளவுக்கு சிந்தையில் நிற்பதில்லைஇருந்தாலும் பழக்கத்தின் காரணமாக சில சுவைகள் நமக்கு பிடித்தமானவையாக ஆகி மனதிலென்றும் தங்கி விடுகிறது.   சில உணவுச் சுவைகள்  அது கிடைத்த காலம் அல்லது கிடைத்த இடம் அல்லது அதை நமக்காகச் சமைத்து கொடுத்தவரின் காரணமாகக்கூட நம் மனதில் நிலைத்துவிடுவதுண்டு.   

 

காமத்தையும் நாம் சுவையெனவே அனுபவிக்கிறோம். அப்போது நம் முழு உடலுமே ஒரு நாவென ஆகி இன்னொரு உடலை சுவைக்கிறதுஉள்ளத்தில் அதுவும் ஒரு சுவையெனவே பதியப்படுகிறது. ஆகவே ஒரு உணவுச் சுவை காமத்திற்கும், ஒரு காம அனுபவம் ஒருஉணவுச் சுவைக்கும் படிமங்களாக, நினைவு படுத்துபவையாக மாறிப்போவது வியப்பில்லை என்றே தோன்றுகிறது.

 

 அயினிப்புளிக்கறியை நான் இதுவரை சுவைத்ததில்லைஆனால் இனி இது ஜெயமோகன் சிறுகதையென மனதில் அறியப்படுவதாக இருந்துவிடும்இக்கதையில்  ஆசான் பாலப்பன் தன் வீட்டில் இருக்கும் அயினி மரத்தை வெட்டி விற்பதற்கு  தன் மகன் முயல்வதை எதிர்க்கிறார்.   அந்த  மரத்தின் மீது  கொண்டிருக்கும்  வெறும் பற்று மட்டுமே காரணமல்ல என்பது நமக்கு கதை முடிவில் விளங்குகிறது.   அவர் மனதில் வளர்ந்தெழாமல் விதையென இருக்கிறது அவருடைய முதற்காதல். அது உண்மையில் முறிந்துபோகவில்லைதனக்கும் தான் விரும்பி மணந்த தன் முதல் மனைவிக்கும் ஒரு சிறு சண்டையினால் அவர்கள் பிரிந்துவிடுகின்றனர்.   தம்பதிகளின் மனங்கள்  ஒன்றை ஒன்று வென்றெடுக்கும் முயற்சிகள்  சண்டைளெனத்தான் வெளியில் தெரியும். ஆனால் அந்தச் சண்டைகளின் மூலமாகத்தான் அவர்களுக்கிடையேயான காதல் பிணைப்பு உறுதிப்படும்.   பாலப்பன் தன் முதல் மனைவியுடனான  இதைப்போன்ற  ஒரு பூசலில்   வீட்டு உறவினர்கள் உள்நுழைந்து  அவர்களைப் பிரித்துவிடுகின்றனர்.     அவர்கள் ஆழ்மனதில் அக்காதல் ஒரு விதையென உறங்கிக்கொண்டிருக்கிறதுஅவர்கள்  வேறு  துணைகளை மணந்து வாழ்க்கையில் விலகிப்போய்விட்டிருக்கின்றனர்வேகமாக ஓடும் வாழ்க்கை நதி முதுமை என்ற சமவெளியில் நிதானமடைகிறதுபிள்ளைகளுக்கு  தேவையற்ற சுமைகளென ஆகும்போது தேக்கமடைகிறதுஅதற்குள் இறப்பெனும் சமுத்திரத்தை அடைந்துவிட்டால் பரவாயில்லைஅப்படியில்லாமல்  வாழ்க்கை மேல் செல்ல இலக்கில்லாமல்   தேங்கி நிற்கும்போது  ஏதாவது ஒரு சிறு திறப்பின் வழியாக மீண்டும் ஓட முடியுமா என்று பார்க்கிறது.   பாலப்பன் மனம் தான் வாழ்வதற்கு  நோக்கமென ஏதாவது சுவையைத் தேடுகிறது. வீட்டைவிட்டு வெளியேறித்  தனிக்குடில் இட்டு தங்கியிருக்கும் அவருடைய  ஆழ்மனம் அயினிப்புளிக்கறிச்  சுவையினை நினைவுபடுத்துகிறதுஏனென்றால்  அயினிப்புளிக்கறிச்சுவை தன் முதல் மனைவியுடன் அவர் வாழ்ந்த வாழ்வின் படிமம். இந்நாள் வரை உறங்கியிருந்த காதல் மீண்டும் துளிர்க்கிறது.   அச்சுவையின் வழியாக அவர் தன் காதலைதன் காதலியை மீட்டெடுத்துக்கொள்கிறார்ஒரு இனிய காதல் கதையை படிக்கத்தந்த ஜெயமோகனுக்கு நன்றி.

 

தண்டபாணி துரைவேல்

முந்தைய கட்டுரைமுகங்களின் தேசம்பற்றி
அடுத்த கட்டுரைதூய்மை பாரதம்?